தாலி பல்கோணப் பகுத்தாய்வு (3)
ம.பொ.சி.க்கு கண்ணதாசன் மறுப்பு
– மஞ்சை வசந்தன்
சோழன் கரிகாற் பெருவளத்தான் உயிர் நீத்தகாலை, அவன் பிரிவாற்றாது வருந்திய கருங்குளவாதனார் என்னும் புலவர் அவனைப் பற்றிப் பாடிய பாடல் ஒன்று, புறநானூற்றில் 224_வது பாடலாக நிற்கிறது. அதில், கரிகாற் பெருவளத்தான் இறந்ததும் அவனது உரிமை மகளிர் நின்ற கோலத்தைப் புலவர் கூறுகிறார்.
பூவாட் கோவலர் பூவுடனுதிரக் கொய் கட்டதுழித்த வேங்கையின் மெல்லியன் மகளிரும் இழைகளைந்தனரே!,
_ அதாவது, ஆடு மாடுகளுக்கு இரைபோடுவான வேண்டி, மேய்ப்போர், வேங்கை மரத்தின் இலைகளைக் கொய்து விடுகிறார்கள். அந்த மரம் மொட்டையாக நிற்கின்றது. அதுபோன்று மங்கையரும் எல்லா அணிகளையும் களைந்துவிட்டு நிற்கின்றனர்… _இதுதான் பொருள். இதில் இழை களைத்னர் என்பதற்கு ஒவை துரைசாமி பிள்ளை சொல்லும் பொருள். அருங்கலஅணி முதலாய அணிகளை ஒழித்தனர் என்பதாகும்.
இதில் அருங்கலம் என்பதற்கு, ஆபரணம், அழகு செய்யும் பொருள் என்ற இரண்டு பொருள்கள் உண்டு. அதைத் தவிர தாலி என்கிற பொருள் கிடையவே கிடையாது.
ஆகவே, அழகு செய்யும் ஆபரணங்களோட நகைகளோடு, மற்ற அணிகளையும் _ அதாவது அழகுகளையும் (தொய்யில்எழுதல் போன்ற அழகுகள் _ அலங்காரங்கள்) துறந்தனர் என்பதே பொருள். இதிலும், மங்கல அணி _தாலி _ வரவே இல்லை! மரத்திலிருந்து சகலஇலைகளையும் பறித்துப் போட்ட மாதிரி சகல நகைகளையும் பறித்துப் போட்டு, மொட்டை மரம் மாதிரி _ எவ்விதச் செயற்கை அழகும் அணியும், அலங்காரமும் இன்றியிருந்தார்கள் என்பதே பொருள். இதிலும், இழை வந்திருக்கிறது, பொதுப்பொருளில்! _ தாலி என்கிற ஸ்பெஷல் பொருளில் அல்ல! ஆகவே, ஈகையரிய இழையணி என்பதற்கு விலையுயர்ந்த _ கொடுக்க முடியாத _ நகைகள் என்ற பொதுப் பொருள் கொள்ளலாமே அன்றி தாலி என்று தனிப் பொருள் கொள்வது இமய மலையளவு மடமையாகும்.
224வது பாட்டில், இழை களைந்தனர் என்று வருகிறதே தவிர கழற்றினர் என்று வரவில்லை. தாலி அந்நாளில் இருந்திருந்தால், கணவனை இழந்த பெண்கள்பற்றிக் கூறும்போது அதக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. மேலும் வெறும் நகை பற்றி மட்டுமே கருங்குளவாதனார் கூறியிருந்தால், துறந்தனர் என்றோ, கழற்றினர் என்றோ கூறியிருக்கலாம். இலக்கணம் தப்பாமலேயே இவ்வார்த்தைகளில் ஒன்றைப் போட்டிருக்க முடியும். களைந்தனர் என்று வருவதால், எல்லா அலங்காரங்களையும் அணிகளையும் களைந்தனர் என்பதே பொருள். ஆகவே புறப்பாட்டின் 400 பாடல்களிலும் ஒரு இடத்தில்கூட தாலி (மங்கல அணி!) குறிப்பிடப்படவில்லை.
வேண்டுமானால், நான்கு கால் இருப்பதால் ஆடு; ஒரு வாலிருப்பதால் மாடு என்கிற மாதிரி, வாதத்துக்காக வலிந்து பொருள் கொள்ளலாம். அது, ஆராய்ச்சியாளர்களுக்கு இருக்க வேண்டிய அறிவுடமைக்கு எடுத்துக்காட்டாக முடியாது.
இவற்றை நோக்குமிடத்து சில உண்மைகள் புலனாகும். சிவஞானம் எடுத்துச் சொன்ன சங்க காலப் பாடல்களில் எங்கும் மங்கல அணி, இழையணி, என்று அணி அணி, இழையணி என்று அணி அணியாக வருகிறதே அன்றி, தாலி என்கிற பதத்தைக் காணோம். அப்படியானால் தாலி என்கிற பதமே சங்க காலத்தில் இல்லையா? இருந்தது! அப்படியானால் அதை ஏன் ஒரு இலக்கிய கர்த்தனும் தொடவே இல்லை. எல்லோரும், தாலியை அணி என்றே அழைக்க வேண்டிய அவசியம் என்ன வந்தது? ஒரு இடத்தில் ஒரு கவிஞனாவது தாலிஎன்கிற பதத்தை, உபயோகித்திருக்க வேண்டாமா? மங்கலஅணி தாலிதான் என்றால், ஒருவன்கூட அதை அப்பெயரிட்டே அழைக்காதது ஏன்? உண்மை இதுதான்; மங்கல அணிக்கு தாலி என்ற பொருளே அந்நாளில் கிடையாது.
சங்க காலத்தில் தாலி என்று வரும் வார்த்தை, மணமகன் மணமகளுக்குச் சூடிய மாங்கல்ய சூத்திரமாக வரவில்லை. உதாரணமாக புறநானூற்றில் காணப்படும் 374வது பாடலில், உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் என்ற புலவர், ஆய் அண்டிரன் என்ற வேளைப்பற்றிப் பாடியதாக உள்ள பூவை நிலைப்பாட்டில், ஒன்பதாவது வரியில்.
புலிப் பற்றாலிப் புற்றலைச் சிறா அர்…
என்று வருகிறது. அதாவது, சிறுவர்களுக்கு புலிப் பல்லாற் கோர்க்கப்பட்ட தாலி அணிதலைக் குறிக்கிறது. மணமகளுக்கு மணமகன் சூட்டியது! அது தான் தாலி என்று அழைக்கப்படுகிறது. (இதில் ஐம்படைத் தாலி, முப்படைத் தாலி எனப் பலவகை உண்டு.) இந்தப் பாடலில், சிவஞானம் கருதுகிற தாலியின் பொருள் சுக்கு நூறாக உடைபட்டுப் போகிறது.
புலிப்பல் கொண்டுவந்து திருமணம் செய்து கொள்வது கூட இலக்கிய வழக்காக இல்லை. வெறும் சமீபகால வாய் வழக்காகவேதான் இருக்கிறது. ஆகவே தாலி அணிதல் _ மணமகன் மணமகளுக்குப் புனிதச் சின்னமாக அணிதல் _தமிழ்ப் பண்பாட்டில்அறவே இல்லை எனத் துணிந்து கூறலாம். திருமணமான பிறகு, வேட்டைக்குப் போகும் கணவன், புலியைக் கொன்று அதை மாலையாக்கி தன் பெருமையை மனைவிக்குக் காட்டி மனைவியின் கழுத்தில் ஜம்மென்று வேடிக்கையாகப் போட்டிருக்கிறான். அதாவது திருமணமெல்லாம் முடிந்து, எல்லாம் ஆன பிறகு!
ஆகவே, அறுதியிட்டு உறுதியாக தமிழ்ப் பண்பாட்டில் _ சங்க இலக்கியத்தில் _ திருமணத்தில் தாலி அணிதல் இல்லவே இல்லை என்று கூறலாம்.
மற்றுமொரு கருத்தைக் கூறுகிறார் சிவஞானம். இதில்தான் மடமையின் சிகரத்துக்கு ஏறிவிடுகிறார்! ஆண்டாள் பாடல்களில் நாச்சியார் திருமொழியில் _ திருமண சம்பந்தமாக வருகிற வாரணம் ஆயிரம் என்ற பாடலில், கோபி உடுத்தி மணமாலை சூட்டக் கனாக் கண்டேன் தோழி நான் என்று வருகிறது. இதில் மணமாலை என்பது தாலிதான் என்று உடும்புப் பிடியாகப் பிடிக்கிறார்! மண என்பதற்கு நேரடியாக தாலி என்ற பொருள் எந்த அகராதியிலும் இல்லை! இப்படி யாரும் கூறிவிடுவார்களே என்ற பயத்தில், மணமாலை என்ற சொல்லில் தாலியைக் குறிப்பிடுவது இன்றளவும் வழக்கமாகவும் இருந்திருக்கிறது என்கிறார். ஆமாம்; வழக்கமாக இருந்திருக்கிறது என்றுதான் கூறுகிறார். அந்தப் பொருள் வெறும் வாய் வழக்கு என்பதைத்தான் குறிப்பிடுகிறார்.
வாய் வழக்கை வைத்து இலக்கியச் சொற்களை எடைபோடுவது என்ன ஆராச்சியோ நமக்குப் புரியவில்லை! பொருள் காணமுடியாத பதங்களுக்கு, வழக்குத் தேடுவதுதான் அறிவுடையோர் வழக்கம்! மணமாலை என்ற பதத்துக்கு மணம் தரும் பூமாலை என்கிற பொருள் அழகாக _ தெளிவாக இருக்கிறது! அப்படிப் பொருள் உள்ள சொல்லை வாய் வழக்கை வைத்துக்கொண்டு ஆராய்வது, மடமையை வெளிப்படுத்திக் கொள்வதாகும்! இதிலிருந்து ஆண்டாளின் மண மாலைத் தாலியும் சிவஞானத்தைக் கைவிடுகிற பரிதாபத்தைப் பார்க்கிறோம். மணமாலை என்ற சொல்லுக்கு மலர்மாலை என்ற பொருளே, சரியாக அழகாக நிற்பதைக் காண்கிறோம். அங்கே, தாலி இல்லவே இல்லை என்பதையும் புரிந்து கொள்கிறோம்.
இப்படி எல்லா இலக்கியங்களிலும் நுனிப்புல் மேய்ந்து, தனக்குப் புரியாததைப் போட்டுக் குழப்புகிறார், சிவஞானம். இதன் மூலம், டாக்டர் ராசமாணிக்கனாரோடு, தி.மு.கழகத்தின் கருத்தையும் ஆராய்ச்சியையும், வெற்றிகரமாக நொறுக்கி விட்டதாகப் பகல்கனவு கண்டு தன் கதையை முடிக்கிறார்.
புறநானூற்றுப் பாடல் (127) கூறும், ஈகையரிய இழையணி என்பதற்கு உரையாசிரியர் இருவர் (உ.வே.சாமிநாதையர், ஔவை சு.துரைசாமி பிள்ளை) மாங்கல்ய சூத்திரம் என்றே பொருள் கூறியுள்ளனர். இந்த உரைகளில் ஒன்றைத்தான் தோழர் சிவஞானம் தன் முடிவுக்கு ஆதாரமாக்கியுள்ளார். இந்த உரையாசிரியர்கள் புறநானூற்றுப் பாடல் தாலியைத்தான் குறிக்கிறது என வலிந்துபொருள் கொண்டுள்ளனர். அதாவது, கொடுத்ததற்கரிய இழையணி என்று வருவதால் அது தாலியாகத்தான் இருக்க முடியும் என்று யூகித்துப் பொருள் கூறியுள்ளனர். ஆமாம்; வெறும் யூகத்தையே இவர்கள் உரையாக்கி முடிவு கட்டியுள்ளனர். மறுக்க முடியாத உரையாக அதைக் கொள்ள நியாயமே இல்லை. கொடுத்தற்கரியது தாலி மட்டும்தான் என்பது என்ன முடிவோ தெரியவில்லை! (மங்கையர் தம் இடையணியாம் மேகலை கூட ஈகையரியதுதான்!) ஈகையரிய இழையணி என்பதற்கு, கற்பு என்று பொருள் கொள்கிறார் மற்றொரு புலவர். இது சரியாக இருக்க முடியும். சிவஞானம் விரும்புவதாகச் சொல்லிக்கொள்ளும் தமிழன் பண்பாட்டுக்கு அது மிகவும் பொருந்த முடியும். அத்தனையும் பாடல் வல்ல பாணருக்குக் கொடுத்த பின், ஈகையறிய கற்பினொடுங் கூடிய மாதரோடு, ஆய் கோயில் இருந்ததெனவும் கொள்ள முடியும். சென்ற இதழில் நான் கூறியதுபோல, விலையுயர்ந்த ஆபரணங்கள் என்றோ, கற்பு என்றோ கொள்ளல் சாலும். ஏணிச்சேரி முடமோசியாரே பாடியதாக உள்ள அந்தப் பாடலில், களிறு அனைத்தையும் கொடுத்த பின் என்று வருகிறதே தவிர, நகைகள் அணிகள் பற்றிய பேச்சே இல்லை. அப்படியிருந்தாற்றான், மற்ற நகைகளை _ அணிகளை ஈந்து, ஈகையறிய இழையணியோடிருந்த மாதர் என்று கொள்ள முடியும், அப்போது, மற்ற நகைகளிலிருந்து இதற்கு தனி மதிப்பு ஏற்படுவதால் இது தாலியாக இருக்கலாம் என்கிற யூகம் புலப்படும். இப்போது, பாடல் காட்டும் முடிவு, அது தாலி என்பதற்குச் சிறிதுகூட உதவவில்லை. ஔவைப் பிள்ளை, சாமிநாதையரின் முறையிலேயே அப்பொருளைக் கூறியுள்ளார். இதனைப் பொருந்தா உரை என சுலபமாகக் கூறிவிடலாம்.
புறம் 374_வது பாடலில் தாலி என்கிற பதத்தை உபயோகித்திருக்கும் முடமோசியார், (குறச்சிறுவர்க்கு அணியப்படும் தாலி) நமக்குத், தாலிஅன்றையத் தமிழகத்தில் எந்த நோக்கத்தோடு இருந்தது என்பதை அறிய வசதி தந்துள்ளார்.
முடிவாக, சங்ககால இலக்கியங்களைக் கொண்டு, தாலி இருந்தது என்பதற்கு ஆதாரம் தேடுகிறவர்கள், இழையணி, மங்கல அணி, மண்ணாங்கட்டி அணி தெருப்புழுதி அணி என்றெல்லாம் வார்த்தைகளைக் கண்டு தாலி என்று மயங்குகிறார்களே தவிர, அசல் தாலி எனும் பதம் தனித்தமிழ்ப் பதமாக இருந்தும், அதுநேரடியாக ஒரு இடத்தில்கூட தாலி என்றே வரவில்லை. அதாவது திருமணத்தில் கட்டப்படும் புனிதப் பொருளில்!
ஆகவே, சுலபத்தில் சங்ககாலத்தில் தாலி கட்டப்படும் பழக்கம் இல்லையெனும் முடிவுக்கு வரலாம். அது தமிழ் வழக்கம் அல்ல என்பதுதான் உண்மையாகவும் இருக்க முடியும்.
பிறகு ஒரு பெரிய ஆதாரத்தைத் தோழர் சிவஞானம் காட்டுகிறார். அதாவது கம்பன் தாலி பற்றிக் குறிப்பிட்டிருப்பதாகக் கூறுகிறார். இதை ஒப்புக்கொள்ள நமக்குத் தடை இல்லை! கம்பன் காலம் மிகவும் பிற்பட்ட காலம்! அதாவது 12-ஆம் நூற்றாண்டு-_ சுமார் எழுநூறு ஆண்டுகட்கு முன்புதான் கம்பன் வாழ்ந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் கூறுகினறனர்! அந்த நாளில் தாலி கட்டும் வழக்கம் புகுத்தப்பட்டிருக்கலாம். ஆரியம், கோயில் கோயிலாக உருவான காலம் கம்பன் காலம். தாலி பற்றிக் கம்பன் கூறியதாகக் கூறுவது, முந்தா நாள் முத்தைய செட்டி வீட்டில் தாலி கட்டினார்கள் என்று ஆதாரம் காட்டுவது போலாகும்! சங்க காலத்தில் உண்டா? என்று கேள்வி, இல்லை என்கிற பதிலோடு முடிகிறது.
(தொடரும்)