சென்னை லூகாஸ் மேம்பாலத்தை ஒட்டிய சாலையில் தினமும் பயணிக்கும் பெரும்பாலான மக்கள் அதைக் கவனித்திருப்பார்கள்.
இன்னும் ஆறு மாதங்களுக்குப் பிறகு வரக்கூடிய தன் தலைவனின் பிறந்தநாளுக்கு வாழ்த்துத் தெரிவித்த ஏதோவொரு லெட்டர்பேடு கட்சியின் விளம்பரம் எழுதப்பட்ட அந்த மேம்பாலத்தினடியில், வெகுநாட்களாக டேரா போட்டிருந்தது ஒரு நரிக்குறவர் கூட்டம்.
அடித்தட்டு மக்கள் என்பதற்கேற்ப இந்த நாடோடிகள் எந்த ஊருக்கு இடப்பெயர்ச்சி செய்தாலும் டேரா போடுவது மேம்பாலங்களின் அடியில்தான். வழக்கமான காயா போய பேச்சுவழக்கு, கண்களை உறுத்திடும் பாசிமணி மாலை, அரை டவுசர், அரைக்கால் கவுன் கூட்டத்திற்கிடையே வித்தியாசமாய் ஒரு கறுப்புப் பூனை.
முழுக்க முழுக்க கறுப்பு நிறம். கல்பதித்த மோதிரம் போல் பளிச்சிடும் துருதுரு கண்கள். கழுத்தில் சிவப்பு நிறத்தில் பட்டையும் அதே நிறத்தில் கயிறும். அக்கயிற்றின் மறுமுனை ஒரு செங்கல்லில் கட்டப்பட்டிருந்தது. அந்த பூனையோடு எந்நேரமும் கொஞ்சி விளையாடியபடி ஒரு சிறுமி.
ஏ பக்கி ஒரு கனத்த பெண்மணி குரல் கொடுக்க, அச்சிறுமி விளையாட்டை நிறுத்தி திரும்பிப் பார்த்தாள். பக்கி என்பது அச்சிறுமியின் பெயராகவோ, செல்லப் பெயராகவோ அல்லது செல்லத் திட்டாகவோகூட இருக்கலாம். அப்பெண் சிறுமியின் அம்மாவாக இருக்கக்கூடும். தொடர்ந்து அப்பெண்மணி, கக்கரே புக்கரே யென அவர்களுக்குப் புரிந்த மொழியில் ஏதோ சொல்ல, சிறுமி பூனையின் கயிற்றை அவிழ்த்து ஒரு முனையை கையில் பிடித்துக் கொண்டாள். கொஞ்ச நேரத்தில் மொத்தக் கூட்டமும் அன்றாட வேலைக்கு ஆயத்தமாகி பாலத்தினடியிலிருந்து வெளிவந்தது.
அந்த நரிக்குறவர் இனக் கூட்டத்திற்கு எனது ஆங்கிலம் புரியாதென்று நான் கர்வப்பட்டால் அவர்களது மொழி எனக்குப் புரியவில்லையேயென நான் வெட்கித் தலைகுனிந்தாக வேண்டும். ஆக ஒரு மொழியை வைத்து ஒருவனை அறிவாளியெனத் தீர்மானிப்பது எத்தனை தவறென்று அவர்களைப் பார்க்கும்போதெல்லாம் உள்மனசு சொல்லும்.
திசைக்கிருவராக அவர்கள் பிரிந்து செல்ல, அச்சிறுமியும் அவளது அம்மாவும் அண்ணா நகரின் ஏதோவொரு நிழற்சாலையில் கையில் காந்தக்கம்பியுடன் நடந்தனர். அச்சிறுமி, ஒரு கையில் பூனையின் கயிறு, மறுகையில் கம்பியுடன் பின்தொடர்ந்தாள். பூனை எதையெதையோ முகர்ந்தபடி ஆங்காங்கே நின்று நின்று வர, கருப்பூ, கருப்பூ என அடிக்கடி விளித்தபடியே அதனை இழுத்துக்கொண்டு நடந்தாள். கருப்பூ என்பது பூனையின் காரணப்பெயராகத்தான் இருக்கக்கூடும். கண்டிப்பாக ஜாதகம் பார்த்து வைத்திருக்க மாட்டார்கள். எண்ணை காணாத செம்பட்டைத்தலை மனிதர்களிடையே கருகருவென்ற கருமை நிற மயிர்களோடிருந்த கருப்பூவை அழகனாகத்தான் எல்லோருமே பார்த்தார்கள்.
கருப்பூவோடு இவர்கள் செல்லுமிடமெல்லாம் அழையா விருந்தாளியாக அந்தந்த ஏரியா நாய்க்கூட்டம் துரத்தத் தவறுவதில்லை. வித்தியாசமான கெட்டப்பிலிருக்கும் நரிக்குறவர் கூட்டத்தை நாய் துரத்தும் வழக்கமான செயல், அச்சிறுமிக்கு மட்டும் வேறுவிதமாகப்பட்டது. ஏதோ, தன்னுடைய கருப்பூவைத்தான் நாய்கள் துரத்துவதாக எண்ணி அதனைப் பாதுகாப்பாகவும், சற்று கர்வமாகவும் இழுத்தபடி நடப்பாள்.
இப்படியாக அலைந்து, தெருவின் மூலையெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் காலி மதுப்பாட்டில்கள், பால்பாக்கெட் கவர்கள், கழிவு பிளாஸ்டிக்குகள், தகர டப்பாக்களென சேகரித்து அங்கிருக்கும் பழைய காகிதக்கடையில் எடைக்குப்போட்டு பெற்ற பணத்தில்; ஒரு குவாட்டரையும் வாங்கியபடி அந்த பாலத்தினடியே வந்துசேருவது இவர்கள் வாடிக்கை. போதை தலைக்கேறவும் பழைய எம்.ஜி.யார் பாடல்களைப் பாடுவதும், ஆடுவதுமாக பெரிய ரகளை செய்து அவ்வப்போது அடிதடிகளும் நடத்தியபின் தூங்கிச் சரிவது இவர்களின் வாடிக்கை. போதையில் கருப்பூவைச் சீண்டிப் பார்ப்பதும், அச்சிறுமி அழுவ
தும், சிறுமிக்காக அவளது அம்மா சண்டை பிடிப்பதுமாக பல இரவுகள் கழியும்.
சிறுமியும் பூனையும் தங்கள் அன்பை பரிமாறிக்கொள்ளும் விதமே அலாதியானது. மழைநேரங்களில் வெளியே செல்லமுடியாமல் பாலத்தினடியில் ஒதுங்கியிருக்கும்போது பூனைக்கு பலத்த அலங்காரம் நடக்கும். தங்களிடமுள்ள பாசிமணிகளை ஒவ்வொன்றாக பூனையின் கழுத்தில் மாட்டி அழகுபார்ப்பாள். குரங்காட்டியைப்போல் கருப்பூவை புரட்டிப்போட்டு பல்டியடிக்க வைப்பாள். தன்னோடு படுக்கவைத்து பூனையை இவள் வருட, பதிலுக்கு அதுவும் ஆர்வமாக இவளைப் பிராண்டி வைக்கும்.
ஊருக்குள் எத்தனை பூனைகள் திரிந்தாலும் கறுப்பூவின் குரல் மட்டும் அச்சிறுமிக்கு தெளிவாகப் புரியும். ஒருமுறை கருப்பு திடீரெனக் காணாமல் போனது. அவளது அம்மாவுடன் சேர்ந்து அழுதபடியே நாலாப்புறமும் தேடியலைந்து களைத்ததுதான் மிச்சம். அங்கிருந்த பெட்டிக் கடையோரமாக நிழலுக்கு ஒதுங்க, எங்கிருந்தோ மெல்லிதாய் ஒரு பூனைச் சத்தம் கேட்காமல் கேட்டது. சிறுமிக்கு உடம்பு முழுக்க பரவசம். அது கருப்பூவின் குரலே தான். குரல் வந்த திசைநோக்கி பெட்டிக்கடை ஓரத்தில் கைவிட்டுத் துழாவ கருப்பூ மாட்டிக்கொண்டது.
அதுநாள் முதல், கருப்பூ அவ்வப்போது காணாமல் போவதும், திரும்பக் கிடைப்பதும் வாடிக்கையானது. ஒவ்வொரு முறை திரும்பக் கிடைக்கும்போதும் கருப்பூ மேல் சிறுமி வைத்துள்ள அன்பு அதிகமாகிக்கொண்டே தான் இருந்தது. ஆண்மை விருத்திக்கு கறுப்புப்பூனையின் ரத்தத்தை சூப் வைத்துக் குடித்தால் நல்லதென்று ஏதோவொரு மிட்நைட் தொலைக்காட்சி மருத்துவர் சொன்ன குறிப்பைக் கேட்டு, அந்த கருப்பூவை விலைக்கு கேட்டு பக்கத்து தெருவிலிருந்து ஒரு பெரியவர் வந்தபோது, பெரும்பணத்திற்கு ஆசைப்பட்டு அங்கிருந்த ஒருவன், அச்சிறுமியில்லாத பொழுதில், விலைக்கு விற்று விட்டான்.
செய்தியறிந்து அச்சிறுமி பெருங்களேபரம் செய்ய, விற்றவனே அந்த பூனையை திரும்ப மீட்டு வந்தான். அதிலிருந்து அவன் மீது இச்சிறுமிக்கு தீராத கோபம். அவனைத் தவிர்த்த மொத்த கூட்டத்திற்கும் திரும்பக் கிடைத்த கருப்பூ, செல்லப்பிள்ளையாகி விட்டது. கழிவு பொறுக்கச்செல்லாமல் பாலத்தினடியில் சுருண்டு ஓய்வெடுப்பவர்களுக்கு கறுப்பூ தான் பொழுதுபோக்கு! துரத்தும் நாய்களுக்குப் பயந்து பாலத்தை விட்டு வெளியேறாமல் விளையாடப் பழகி விட்டது.
பூனைகள் உணவு உண்ணாமல் பதிமூன்று நாட்கள்வரை தாக்குப்பிடிக்குமாம். எனவே நகரத்து பூனைகள், உணவின்று உயிரிழப்பது அரிது. பெரும்பாலும் விபத்துகளில் தான் அவற்றை மரணம் நெருங்குகிறது.
இதோ, வழக்கம்போல் கருப்பூவைத் தன்னோடு அணைத்தபடி அச்சிறுமி தூங்குகிறாள். நள்ளிரவில் திடீரென விழித்துக்கொண்ட கருப்பூ விபரீதம் புரியாமல் மெல்ல கயிற்றிலிருந்து நழுவி பாலத்திற்கு வெளியே வருகிறது. கும்மிருட்டில் தூரத்தில் ஏதோ அசைவது கண்டு துரத்தியபடி திசைதெரியாமல் ஓடுகிறது. இடம்மாறி வெகுதூரம் வந்ததை உணர்ந்து, வந்த வழியே திரும்ப, எங்கிருந்தோ வந்த வெண்ணிற சொகுசு வாகனம், கருப்பூவின்மேல் ஏறி இறங்கியதுகூட தெரியாமல் ஓடி மறைகிறது. சத்தமேயில்லாமல் பூனையின் உயிர் அடங்கிவிட்டது.
காலையில் எழுந்த சிறுமிக்கு வெறும் சிகப்புக் கயிறை மட்டும் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது. கருப்பூ, கருப்பூ எனக் கத்தியபடி பாலத்தின் மறுமுனை வரை சென்று பார்த்தாள். அவளது சத்தம் கேட்டு விழித்த அம்மாவும் சுற்றுமுற்றும் கருப்பூவைத் தேடத் தொடங்கினாள். இம்முறை இருவரும் எங்கெங்கோ தேடியும் கருப்பூவைக் காணவில்லை. நல்லவேளை, கருப்பூ அடிபட்ட சாலைப் பக்கமாக இவர்கள் இறுதிவரை செல்லவேயில்லை.
அழுதழுது அச்சிறுமியும் ஓய்ந்துவிட்டாள். கருப்பூ எங்கிருந்தாவது திரும்பக்கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கையில் காந்தக்கம்பியுடன் வயிற்றுப்பசி போக்க, கழிவுகளைப் பொறுக்கக் கிளம்பிவிட்டாள். இதோ இன்றும் இவளைச் சுற்றி நாய்கள் கூட்டம் குலைத்தபடி பின்தொடர்கின்றன. பாவம், இதுங்களும் நம்ம கருப்பூவை நெனைச்சுக்கிட்டே என் பின்னால சுத்துதுங்க! என மனதிற்குள் நினைத்துக்கொண்டே நடந்த அவள், அருகில் ஒரு கார் வந்து நின்றது. பசியால் வாடிய ஒரு கைக்குழந்தையுடன் கையேச்சிய தாயைப் பார்த்து காரிலிருந்து இறங்கியவர், போம்மா!, டிஸ்டர்ப் பண்ணிணாதே…! என்றபடி விரைந்து உணவு விடுதிக்குச் சென்றார்.
சிறுமியின் காதுகளில் கருப்பூவின் குரல் மெல்லியதாய் கேட்பதுபோல் தோன்றியது… அவள் கண்களில் கண்ணீர் கசிந்தது!
– வத்திராயிருப்பு தெ.சு.கவுதமன்