உலகில் எந்தத் தலைவருக்கும் கிடைக்காத ஒப்பற்ற வாசகங்களை பாராட்டுரையில் கொண்ட விருது; ஒப்பற்ற ஏற்பளிப்பு. உலகில் வேறு யாருக்கும் இந்த பெருமை கிடைத்ததில்லை. இவ்விருது 27.06.1970 அன்று மத்திய அமைச்சர் திரிகுணசென் அவர்கள் தலைமையில் அன்றைய தமிழக முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்கள் பங்கேற்ற விழாவில் வழங்கப்பட்டது. தந்தை பெரியார் என்றால் பார்ப்பானைத் திட்டுவார்; கடவுள் இல்லையென்பார் என்று குறுகிய வட்டத்திற்குள் அவரை குறைத்து குறுக்கிக் காட்டும் குள்ளநரிக் கூட்டத்திற்கு இவ்விருது ஒரு பதிலடி!
ஆரிய பார்ப்பனக் கூட்டம் அய்யாவை எவ்வளவு மறைக்க முயன்றாலும் அய்யா ஆதவன்போல் அறிவு பரப்பி வெளிப்படுவார் என்பதன் அடையாளம் இவ்விருது. “
Periyar – The Prophet of the New age;
The Socrates of South East Asia;
Father of the Social reform movement;
and Arch enemy of ignorance, superstitions,
meaningless customs and base manners”.
– UNESCO (27.06.1970)
இதன் தமிழாக்கம்: பெரியார் _ புதிய உலகின் தொலைநோக்காளர்; தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்; சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை; அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி அண்ணா அவர்கள் (தமிழக முதல்வர்) அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற நிலையில் 10.10.1968இல் தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதத்தில், தங்கள் பணி, மகத்தான விழிப்புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத்திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வகையில், இத்தனை மகத்தான வெற்றி வேறு எந்த சமூக சீர்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை, அதுவும் நமது நாட்டில் என்று குறிப்பிட்டு பெருமைப்படுத்தினார். தந்தை பெரியார் ஒப்பாரில்லா உலகத் தலைவர் என்பதை இந்த விருது வெளிச்சம் போட்டுக் காட்டியதோடு, அவரைக் கொச்சைப்படுத்த, புரட்டு, திரிபுவாதங்கள், அபாண்ட குற்றச்சாட்டுகள் கூறும் குறுமதியாளர்களின், மோசடிப் பேர்வழிகளின் அயோக்கியர்களின் முகத்திரையையும் கிழித்தெறிந்தது. புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்கள் கூறிய மண்டைச் சுரப்பை உலகு தொழும்! என்ற வரிகளின் ஏற்பளிப்பாகவும் இது அமைந்தது! தந்தை பெரியாரின் இனிவரும் உலகம் என்ற நூல் அவர் ஓர் தொலைநோக்காளர் என்பதை உறுதிசெய்தது.
அதையும் இவ்விருது ஏற்பளிப்புச் செய்தது! வாழ்க பெரியார் பெருமை!
குறிப்பு: இந்த விருது பற்றி, தமிழர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள், ஒரு நாளைக்கு ஒரு வரியை எடுத்துக்கொண்டு நான்கு நாள்கள் ஆற்றிய உரை (23.09.2014 முதல் 26.09.2014 வரை) விரைவில் நூலாக வந்து, அய்யாவின் பெருமையின் அழியாச் சின்னமாக நிலைக்கவுள்ளது என்பதை அறிவித்து மகிழ்கிறோம்.