இடஒதுக்கீடு பார்ப்பனர்களுக்கு அநீதியா?

பிப்ரவரி 01-15

பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா? -2

இடஒதுக்கீடு பார்ப்பனர்களுக்கு அநீதியா?


மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் தெரிந்திருக்க வேண்டும் என்ற நிலை இருந்தது. இதைப் படிப்பவர்கள் நன்றாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஆங்கில மருத்துவப் படிப்பிற்கும் சமஸ்கிருதத்திற்கும் என்ன தொடர்பு? எந்தத் தொடர்புமில்லாத நிலையில் ஏன் அப்படி ஒரு நிலை இருந்தது? யாரால் அந்த நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கும்? என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

சமஸ்கிருத மொழி தெரியாத பார்ப்பனரல்லாத திராவிட மக்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படிக்கும் வாய்ப்பைப் பறிக்கும் சதி இதில் அப்பட்டமாகத் தெரிகிறதா இல்லையா?. ஆங்கிலேயர் ஆண்ட போதே இந்த நிலை என்பதைப் பார்க்கும் போது, ஆங்கிலேயரிடம் பார்ப்பனர்களுக்கு இருந்த செல்வாக்கு தெரிகிறதா இல்லையா? சிறிதளவு ஆட்சி அதிகாரம் பார்ப்பனரல்லாத இயக்கமான நீதிக் கட்சியின் கைகளுக்குச் சென்றபோது, மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு சமஸ்கிருதம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தகுதியை நீக்கி, அனைவரும் மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கு வாய்ப்பளித்தார்கள். இது தவறா? இதனால் பார்ப்பனர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரியில் அதிக இடம் கிடைக்கும் என்ற நிலை மாறிவிட்டதே என்று புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

1918ஆம் ஆண்டில் சென்னைப் பல்கலைக்கழக ஆட்சிக் குழு வித்வான் தேர்வுக்கு சமஸ்கிருதத்தைக் கட்டாயப் பாடமாக்க முடிவு செய்தது. சமஸ்கிருத அறிவு இல்லாத ஒருவரை திராவிட மொழிப் புலமை இருப்பவராக ஏற்றுக்கொள்ள முடியாது என்று வாதிட்டார்கள். பல்கலைக்கழகத் திட்டப்படி, இரண்டு திராவிட மொழிகளைத் தெரிவு செய்து படிக்கலாம் என்ற விதி இருந்தும், ஒரு திராவிட மொழியும் சமஸ்கிருதமும் சேர்த்துப் படிக்க மட்டுமே வசதிகள் செய்யப்பட்டிருந்தன. திராவிட மொழிப் படிப்பைத் தெரிவு செய்த குற்றத்துக்காக திராவிட மாணவர்கள் சமஸ்கிருதம் பயில வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த நிலையெல்லாம் மாறி பார்ப்பனரல்லாதவர்கள் கல்வி பெற வாய்ப்பளித்தது திராவிடர்களின் இயக்கமான நீதிக் கட்சி. இதில் என்ன தவறு இருக்கிறது? மூன்றரை சதவிகிதம் உள்ள பார்ப்பனர்கள் மட்டுமே படித்து அறிவு பெற அதிகம் வாய்ப்பிருந்த நிலை மாறிவிட்டது குறித்துப் புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது?

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு குறித்துப் புலம்பியிருக்கிறார் பத்ரி சேஷாத்திரி. எனவே, பலரும் புரிந்துகொள்ளும் வண்ணம் சில ஆதாரங்களை அட்டவணை 1இல் காணலாம். இதுதான் 1901ஆம் ஆண்டின் நிலை. இந்நிலையை மாற்றி அனைவருக்கும் கல்வி கிடைக்க வழிவகை செய்தது நீதிக்கட்சி.  கல்வியில் இந்த நிலை என்றால், வேலைவாய்ப்பு எப்படி இருந்தது என்பதற்கான ஆதாரம் அட்டவணை 2இல் தரப்பட்டுள்ளது.

சுமார் மூன்றரை சதவிகிதம் இருந்த பார்ப் பனர்கள், கல்வியையும், அரசுப் பணிகளையும் மொத்தக் குத்தகை எடுத்தது போல இருந்த நிலையை மாற்றி அனைவருக்கும் சமமான வாய்ப்பை திராவிடர் இயக்கமாம் ஜஸ்டிஸ் கட்சி எப்படி வழங்கியது என்பதற்குச் சான்று,  ஜஸ்டிஸ் மந்திரிகள் வந்த பிறகு நமது மாகாணத்தில் இலவசக் கல்வியும், கட்டாயக் கல்வியும் ஏற்பாடு செய்து அநேக இடங்களில் அமலில் கொண்டுவந்து இருக்கிறார்கள். 5 வயது முதல் 12வயது வரை ஒவ்வொரு குழந்தையையும் கண்டிப்பாய்ப் படிக்க வைக்க வேண்டும். இல்லா விட்டால் பெற்றோருக்குத் தண்டனை என்று சட்டமும் செய்து இருக்கிறார்கள். அதன் மூலம் படிக்கும் இலட்சக்கணக்கான பிள்ளைகளில் 100க்கு  99 பேர் பார்ப்பனர் அல்லாதோர் என்று குடிஅரசில் (26.10.1926) செய்தி வந்துள்ளது. மேற்கண்ட செய்தி பல தகவல்களை நமக்குத் தருகிறது. இன்றைக்கு வரலாறு தெரியாமல் திராவிட இயக்கம் என்ன செய்தது? என்று கேள்வி கேட்கும் பார்ப்பனரல்லாத இளைய தலைமுறை யின் கேள்விக்குமான பதிலும் இதில் அடங்கி யிருக்கிறது. தமிழ்நாட்டில் இருந்து வெளியேறிப் போய் வேலை செய்யும் நிலை வந்துவிட்டதே,  இதற்கெல்லாம் காரணம் திராவிட இயக்கங்கள் தானே என்று புலம்புகிறார் பத்ரி சேஷாத்திரி. இது உண்மையா?

இரண்டாம் உலகப் போரின்போது, ஜெர் மனியின் கை ஓங்கியிருந்த போது, ஜெர்மனி தான் வெல்லும் என்ற நிலை இருந்தபோது, தமிழ் நாட்டுப் பார்ப்பனர்கள் ஜெர்மன் மொழியைக் கற்றார்கள் என்பதுதானே வரலாற்றில் பதிவாகி யிருக்கும் செய்தி. ஜெர்மன் மொழியைக் கற்றுக் கொள்ளச் சொல்லி திராவிட இயக்கமா வலியுறுத்தியது?

சுயநலம், சந்தர்ப்பவாதம் நிரம்பிய பார்ப் பனர்கள் தங்கள் வசதிக்காக, உயர்வுக்காக இடம் மாறிச் சென்று பிழைப்பது இன்று நேற்றா நடக் கிறது? இந்தியா முழுவதும் பார்ப்பனர்கள் வசிப் பதில் இருந்தே தெரிந்துகொள்ளலாமே பிழைப் பதற்காக இடம் பெயரும் அவர்களின் இயல்பான குணத்தை. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நடைபெற்றுவரும் இந்த இடப் பெயர்வை ஏதோ எழுபதுகளில்தான் முதன்முதலில் நடந்தது போல நீலிக் கண்ணீர் வடிப்பது நியாயமா?

பார்ப்பனர்களைத் தவிர்த்து வேறு ஜாதியைச் சேர்ந்த யாரும் தமிழ்நாட்டை விட்டு வெளியேறி வேறு மாநிலங்களில், வேறு நாடுகளில் பணிபுரியாமலா இருக்கிறார்கள்?

பார்ப்பனர்கள் பஞ்சம் பிழைக்கவா இடம் பெயர்ந்து சென்றனர்? இல்லையே. தங்கள் வசதிக்காகச் சென்றனர்.

பத்ரி சேஷாத்திரி மற்றும் அவரைப் போன்ற சிந்தனை கொண்டுள்ள பலருக்குமான கேள்விகள் பின்வருமாறு :

  • மாதச் சம்பளம் வாங்காத பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?
  • மாதச் சம்பளம் வாங்காத மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
  • தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?
  • தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளில் உள்ள மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
  • ஏசி அறையில் வேலை பார்க்கும் பார்ப்பனர் கள் எத்தனை சதவிகிதம்?
  • ஏசி அறையில் வேலை பார்க்கும் மற்ற சமூ கத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
  • உடல் உழைப்பில் ஈடுபடும் பார்ப்பனர்கள் எத்தனை சதவிகிதம்?
  • உடல் உழைப்பில் ஈடுபடும் மற்ற சமூகத்தைச் சேர்ந்தவர்கள் எத்தனை சதவிகிதம்?
  • மூட்டை தூக்கியாவது சம்பாதிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களே மற்ற ஜாதியைச் சேர்ந்தவர்கள். அவர்களைப் போல கூலித் தொழில் செய்யும் பார்ப்பனர்களை எங்காவது கண்டதுண்டா?

இவற்றுக்குப் பதில் சொல்ல முடியுமா?

இவற்றிற்கான பதில்களில் அடங்கியிருக்கிறது புலம்பல்களில் உள்ள நியாயமற்ற தன்மை. நாற்று நட்டாயா? களை பறித்தாயா? என்று வீரபாண்டிய கட்டபொம்மன் திரைப்பட வசனம் போல பாரப்பனரல்லாதவர்கள் கேள்வி கள் கேட்டால், தலை குனிந்து நிற்க வேண்டி யிருக்கும் பார்ப்பனர்கள்.

வண்டி இழுக்காமல், வயலில் வேலை செய்யாமல், கல் உடைக்காமல், மண் சுமக்காமல், சிரைக்காமல், தைக்காமல், லாரி ஓட்டாமல், தெருப் பெருக்காமல், மலம் அல்லாமல், மரம் ஏறாமல், மீன் பிடிக்காமல், விறகு வெட்டாமல், மூட்டை தூக்காமல், அப்படி இல்லாமல், இப்படி இல்லாமல், மொத்தத்தில் உடல் நோவாமல், அழுக்குப் படியாமல், இத்தனை ஆண்டுகள் தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கும் சாமர்த்தியம் உள்ள பார்ப்பனர்கள், முட்டி மோதி முன்னேற முயற்சிக்கும் மற்ற ஜாதி மக்களைப் பார்த்துப் பொறாமை கொள்வது எந்த விதத்தில் நியாயம்? நேர்மையாகச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

இடஒதுக்கீடு என்பது வாய்ப்பு மறுக்கப் பட்டவர்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு. இடஒதுக்கீடு என்பது போடப்படும் பிச்சை அல்ல, பெறப்படும் உரிமை. இடஒதுக்கீடு என்ற முறை இல்லையென்றால், சமூகத்தில் ஏற்றத்தாழ்வுகள் அதிகரிக்கும். ஏற்றத் தாழ்வுகள் அதிகரித்தால் குற்றங்கள் பெருகும், சட்டம் ஒழுங்கு சீர் கெடும். ஒரு நாள் பிரச்சினைகள் முற்றும், புரட்சி வெடிக்கும். புரட்சி வெடித்தால், சுரண்டிக் கொழுப்பவர்களின் தலைகள் கொய்து எறியப்படும், ஆதிக்கம் புரிபவர்கள் அழித்தொழிக்கப்-படுவார்கள். நாடே சிதறுண்டு போகும்.

இது வெறும் கருத்தல்ல, இடஒதுக்கீட்டு முறைக்கு எதிரானவர்களுக்கான எச்சரிக்கை! மத்திய அரசு சமஸ்கிருதத்தை வளர்க்க முயன்றால், அது பார்ப்பனர்களின் சதியா? என்று கேட்கிறார் பத்ரி சேஷாத்திரி. பார்ப்பனர்களின் சமஸ்கிருதத் திணிப்பு குறித்து தனியாக நீண்டதொரு கட்டுரையே எழுதக் கூடிய அளவிற்கு வரலாற்றுச் செய்திகளும் ஆதாரங்களும் நிறையவே இருக்கின்றன. அது ஒருபுறம் இருக்க, எங்கும் பேச்சுவழக்கில் இல்லாத சமஸ்கிருத மொழியை, அந்த மொழிக்குத் தொடர்பே இல்லாத திராவிட மொழியான தமிழ் மொழியைப் பேசும் மக்கள் மீது திணித்தால், அதை எப்படி எடுத்துக் கொள்வார்கள்?

சமஸ்கிருதம் சீனர்களின் மொழியென்றால், அதைச் சீனர்களின் சதி என்றழைக்கலாம், அது பார்ப்பனர்களின் மொழி என்பதால், அதைப் பார்ப்பனர்களின் சதி என்றுதானே சொல்லு வார்கள். பார்ப்பனர்களைத் தவிர வேறு யாராவது அவர்கள் மொழியை மற்றவர்கள் மீது திணிப்பார்களா? அப்படித் திணிப்பதால் அவர்களுக்கு என்ன லாபம்? எனவே அதைப் பார்ப்பனர்களின் சதி என்று கருதுவதில் எந்தத் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

சமஸ் கிருதம் பார்ப்பனர்களின் மொழியல்ல, அது இந்தியர்களின் மொழி, கடவுளின் மொழி என்றெல்லாம் சொல்லி பத்ரி சேஷாத்திரி தப்பிக்க முடியாது. காரணம், கட்டுரையின் இறுதிப் பகுதியில் பார்ப்பனர்களும் மற்றவர்களைப் போல தங்கள் மொழியைப் பாதுகாக்கும் நிலை வேண்டும்   என்று விருப்பத்தைத் தெரிவித்துள் ளார். உங்கள் மொழியை உங்கள் வீட்டிற்குள் நீங்கள் பேசிக்கொள்ளுங்கள், அதை யாரும் தடுக்கவில்லை. ஆனால், உங்கள் மொழியை மற்றவர்கள் மீது திணிக்காதீர்கள் என்றுதானே சொல்லுகிறார்கள். இதில் என்ன தவறிருக்கிறது?

– திராவிடப்புரட்சி

 

பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா? -1

பார்ப்பனர்களின் புலம்பலில் நியாயம் இருக்கிறதா? -3

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *