மேலே இருப்பவர்களுக்குப் போர் தெரியாது

செப்டம்பர் 01-15

கடல் மட்டத்திற்கு இருபத்தைந்தாயிரம் அடி உயரத்தில் ஒரே சீரான வேகத்தில் பறந்து கொண்டிருந்த சிறீலங்கா விமானமான யூ.எல்.130இல் குடும்பத்துடன் பயணித்துக் கொண்டிருந்தேன். விமானத்தின் உள்ளே நிலவிய அமைதியைத் தடுத்து பயண அறிவிப்பு ஒலிக்கலாயிற்று.

டியர் பாசஞ்சர்ஸ், திஸ்சிஸ் க்ரு கேப்டன் ராம் முத்துக்கிருஷ்ணன், தௌ வி ஆர் கெட்டிங் ரெடி பார் லாண்டிங் இன் பிரேமதாச இன்டர்நேனஷல் ஏர்போர்ட் கொழும்பு. திருச்சியிலிருந்து புறப்பட்டு அரை மணி நேரம்கூட ஆகியிருக்காது.

கொழும்புவின் கடற்பரப்பின் மேல் விமானம் மெல்ல வளைந்து திரும்பி இறங்கி பறக்கத் தொடங்கியது. விமானத்தின் கண்ணாடிச் சாளரத்தின் ஊடாக வெளியே உற்றுப்பார்த்த என் பெண், அப்பா! கொழும்போட கடற்கரை நல்லா தெளிவாக தெரியுது பாரு என்றாள். எனக்கு வெளியே எட்டிப் பார்க்க மனம் வரவில்லை.

நான் தமிழகத்தில் வெள்ளைத்தாள் நோட்டுப் புத்தகங்கள், அவ்வப்போது சில அச்சிட்ட புத்தகங்களையும் மொத்த விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளேன். இங்கே கொழும்பினில் என்னையொத்த வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள தமிழரான வீரசிங்கத்தை வியாபார நிமித்தமாக சந்திக்கவே பயணப்பட்டுள்ளேன்.

தற்போது தமிழீழத்தின் மீதான இலங்கைப் படையின் தாக்குதல் தீவிரமடைந்துள்ள நிலையில் நான் இங்கு பயணப்படவே விரும்பவில்லை. வீரசிங்கத்தின் வற்புறுத்தலாலேயே இதனை நான் மேற்கொள்ள வேண்டியதாயிற்று.

இலங்கையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள காலமிது. இலங்கை ராணுவம் மூர்க்கத்தனமான வெறியுடன் தமிழர் பகுதிகளைத் தாக்குவது பற்றி அன்றாடம் செய்திகள் வந்தவண்ணம் இருந்தன. எல்.டி.டி.ஈ._யினரின் எதிர்த் தாக்குதல்கள் பற்றி வந்த முரண்பாடான செய்திகள் எல்லோரைப் போல என்னையும் கவலைக்குள்ளாக்கியது.

எனவே, வீரசிங்கத்திடம் இந்தப் பயணத்தைத் தள்ளிப் போடலாமா என வினவினேன். பாதுகாப்புப் பிரச்சினைகளன்றி இங்கொன்றும் (கொழும்பு) பிரச்சினை ஏதுமிருக்காது, நீங்களொன்றும் பயப்படத் தேவையில்லை எனத் தைரியமூட்டினாலும், என் மனைவி என்னைத் தனியாக அனுப்பி வைக்க முன்வரவில்லை.

இந்த நேரத்தில் நீங்க அங்க தனியா போறது நல்லதில்லை. அப்படி நீங்க போறதா இருந்தா நாங்களும் உங்க கூட வர்றோம். நாம சேர்ந்தே போகலாம் என்றாள். வீரசிங்கத்திடன் இதுபற்றிப் பேசியபோது இதுவும் நல்ல விடமாகத்தான் எனக்குப்படுது. தனியா வந்தா ராணுவக்காரண்ட கெடுபிடித் தொல்லைகள் வரலாம், குடும்பத்தோட வந்தியன்னா அவனும் சந்தேகப்பட மாட்டான்தானே! என்றார்.

க்ருவின் கேப்டன் மிகத் திறமையானவராக இருக்க வேண்டும், சற்றும், அலுங்கல் குலுக்கல் இல்லாமல் விமானத்தைத் தரையிறக்கினார். விமானம் தரையிறங்கியதும், வெளிப்பாடு பகுதியை அடைந்து வழமையான கடமைகளை முடித்தோம். விமான நிலையமெங்கும் கடுமையான பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இரண்டொரு நாட்களுக்கு முன்னர்தான் கொழும்பின் சர்வதேச பயணிகள் விமான நிலையத்தின் அருகிலுள்ள கட்டுநாயகா இராணுவ விமானத்தளத்தின் மீது புலிகள் வான் படைத் தாக்குதல் நடத்தியிருந்தது. புலிகளை தமிழர்கள் பொடியன்கள் என அழைப்பதுண்டு. மிகச் சிறிய வயதிலேயே துவக்குகளை ஏந்தித் திரிபவர்களைப் பார்க்க நேர்ந்ததாலேயே அவர்களுக்கு அக்காரணப் பெயர் ஏற்பட்டிருக்கலாம்.

ஆனால் இங்கே இலங்கை ராணுவத்தின் சார்பில் காவலுக்கு நின்றிருக்கும் இராணுவ வீரர்கள் பலருக்கும் பதினைந்து வயதுகூட இருக்காது போலிருந்தது. பலருக்கும் மீசைகூட முளைக்கவில்லை. ஆனால் வெகு சாதாரணமாக கைகளில் ஏகே 47 வகையிலான இயந்திரத் துப்பாக்கிகளுடன் திரிந்து கொண்டிருந்தனர். சிறுவர்களை புலிப்படையில் சேர்ப்பதாக குறைகூறும் சர்வதேச மனித உரிமைக் கண்காணிகளின் கண்களில் இவர்கள் தென்படவில்லை போலும்.

விமான நிலையத்தின் வெளிவாயிலை அடைந்தபோது பிரதான சாலை வரை பத்தடிக்கு ஓர் இராணுவ வீரன் என்ற வகையில் காவல் போடப்பட்டிருந்தது. அவர்கள் உருவத்திற்கும் அவர்கள் கைகளிலுள்ள ஆயுதத்திற்கும் உள்ள வேற்றுமை என் மனைவியை அச்சப்படுத்தியிருக்க வேண்டும்.

அவள் என் காதருகில் வந்து, என்னப்பா இவங்களெல்லாம் இவ்வளவு சின்னப் பசங்களா இருக்காங்க என்றாள். அதற்குள் என் மகள் இடைமறித்து சின்னப் பசங்கதான், ஆனா அவனுங்க கையில வச்சிருக்கறது பயங்கரமான மிஷன் கன்னுங்க. அதான்டி எனக்குப் பயமாயிருக்கு சின்னப் பசங்களா இருக்குறதுனால பொசுக்குன்னு லேசா கோபம் வந்தாகூட சுட்டுட்டாங்கன்னா என்ன பண்றது? சும்மா பயப்படாதேம்மா வாயமூடு என அவளை என் மகள் எச்சரித்தாள்.

விமான நிலையத்திலிருந்த ஒரு பயணிகள் வாகனமே எங்களுக்குப் பயணிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் எங்களை எங்கள் விடுதிக்கு அழைத்துச் செல்ல சிங்களவர் ஒருவரும் உடன் வந்தார். அவருடன் நாங்கள் அவ்வாகனத்தில் ஏறினோம். அவர் என்னைப் பார்த்து என் பெயர் திசநாயக, நான் கார்ல்டன் ஹோட்டலில் பணியிலிருக்கிறேன். நீங்கள் திருச்சியா? என்றார்.

நான், ஆம் என்றவாறு தலையாட்டினேன். வியாபார நிமித்தமாக கொழும்பு வந்துள்ளீர்களா? என தமிழிலேயே வினவினார். அதற்கும் ஆம் என்றே பதிலளித்துத் தலையாட்டினேன். என் தயக்கத்தைப் புரிந்துகொண்ட அவர் எங்கிட்ட நீங்க தாராளமாகப் பேசலாம், இப்போ நீங்க எங்க விருந்தினர்கள். உங்களை மரியாதையாக நடத்தி பத்திரமாக அனுப்ப வேண்டியது எங்களது கடமை என அவர் கூறினாலும், அவருடைய முகம் அதே மகிழ்ச்சியை வெளிப்படுத்தியதாக எனக்குத் தோன்றவில்லை.

நாங்கள் பயணிக்கும் வாகனம் மெல்ல நகர ஆரம்பித்தது. ஒரு சில நிமிடங்களுக்குள்ளாகவே ஓர் ராணுவ வீரரால் எங்கள் வாகனம் மறிக்கப்பட்டு தடுத்து நிறுத்தப்பட்டது. திசநாயக எங்கள் வாகனத்தின் கண்ணாடிகளை இறக்கியவாறு சிங்களத்தில் ஏதோ கதைத்தார். எங்களை உற்றுப் பார்த்த அந்த ராணுவ வீரர் எங்களது உடைமைகள் இருந்த பெட்டிகளை மட்டும் பரிசோதித்துவிட்டு போகலாம் என்ற பாணியில் தலையாட்டினார்.

எங்கள் வாகனம் மீண்டும் நகர ஆரம்பித்தது. நகரெங்கும் ஒருவித பயமும், சோகமும் கவ்வியிருந்ததை அவதானிக்க முடிந்தது. கார்ல்டன் ஹோட்டல் எங்க இருக்கு என நான் வினவினேன். திசநாயக அதற்குப் பதிலளிப்பதற்குள் என் பெண் இடைமறித்து, அது நீர்கொழும்புவில் இருக்கு, நான் ஏர்போர்ட் வரைபடத்தில் பார்த்தேன்  என்றாள். ஆமாம், அது சரிதான்.

ஆனால் நாங்க அவ்விடத்தை நி கொம்பு என்றுதான் கூறுவோம் என்றார் அவர். எங்கள் வாகனம் கடற்கரையையொட்டிய சாலைகளில் பயணிப்பதை அறிந்தவுடன் நான் எவ்வளவு அழகாக பெயர் வைத்திருக்கிறார்கள். தமிழில், கொழும்புவின் கடலையொட்டி நீர் சார்ந்த பரப்பு என்பதால்தான் இதனை நீர் கொழும்பு என அழைத்திருக்க வேண்டும் என்றேன் பெருமூச்சுடன்.

நாங்கள் அனைவரும் வீதியின் இரு மருங்கிலும் உள்ள வியாபாரத் தலங்களை உற்றுப் பார்த்தபடியே பேசாமல் பயணிக்கலானோம். இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையங்கள் கொழும்புவிற்குள்ளும் வியாபித்திருந்தது. டி.வி.எஸ். நிறுவன விளம்பரங்களும், வாகன விற்பனை நிலையங்களும் இடையிடையே தென்பட்டன.

எது நடந்தாலும், இவர்களுக்கு வியாபாரம் நடந்துகொண்டுதான் இருக்கிறது என்று எண்ணியவாறு ஏதோ சொல்ல நினைக்கையில், அங்கே பார் என என் பெண் என் கைகளை அழுத்தி கண்களால் ஜாடை காட்டினாள்.

அதனைப் பார்த்தபோது எனக்கும் ஆச்சர்யமாகத்தான் இருந்தது. அந்தச் சாலையில் புயூனரல் ஷாப் எனும் விளம்பரப் பதாகையுடன் ஒரு நிறுவனம் செயல்பட்டுக் கொண்டிருப்பது தெரிய வந்தது. என்ன வகை வியாபாரமாக இருக்கும் என யோசித்துக் கொண்டிருக்கையில், மற்ற சாலைகளிலும், அதே பெயருடன் மேலும் பல நிறுவனங்களைக் காணமுடிந்தது.

நான் திசநாயகவிடம் திரும்பி, அதென்ன புயூனரல் ஷாப் புதுசா இருக்கே என்றேன். அவருடைய முகம் லேசாக இறுகி சோகத்தை வெளிப்படுத்தியது. இராணுவத்தின் ஆதரவின் பேரில்தான் இந்தக் கடைகள் செயல்படுகின்றன. ஏன் தெரியுமா? புலிகளுக்கும், இராணுவத்திற்கும் இடையில் போர் ஆரம்பித்த நாளிலிருந்தே பெரும் கஷ்டத்திற்கு உள்ளாவது வெகுமக்கள்தான், கட்டாயமாக இராணுவப் பணியில் சேர்க்கப்படுபவர்கள் அதிகமாயிருக்க, சண்டையிலும், குண்டு வெடிப்புகளிலும் திடீர் திடீரென இராணுவத்தினரும், மக்களும் மரித்துப் போகிறார்கள்.

இத்தகைய மரணங்கள் வெகுமக்களிடம் பெரிய பீதியை உண்டுபண்ணியிருக்கு. இராணுவத்தில் சேர்ந்த இளவயதினர் வீட்டுக்கொரு பிள்ளையராயிருந்த போதும், மரித்தால் பாதிக்கப்படுவது அவர்களது உறவினர்கள் மட்டுமல்ல, இராணுவமும்தான். சற்று நிறுத்தி புரியவில்லையா? அடிக்கடி ராணுவத்திலுள்ள இளவயதினர் மரணமடைந்தால் எப்படி பெற்றவர்கள் தங்கள் பிள்ளைமார்களை இராணுவத்துக்கு அனுப்புவார்கள். அப்ப இராணுவத்திற்கு நஷ்டம்தானே.

மரணம் நேர்ந்தால் அதன் துக்கம் நீடிக்கவிடாமல் இருக்க மரணம் அறிவிக்கப்பட்டதும், இந்தக் கடைகளுக்கும் செய்தி அனுப்பப்படும். ஒரு சில மணி நேரத்திற்குள் எல்லாம் முடிவுக்கு வந்தால் பொதுமக்களிடம் பெரும்பீதி பரவாதுதானே. பின்னர் ஆழ்ந்த பெருமூச்சு விட்டு, இதில் இன்னும் ஒரு வேதனையும் உண்டு. பெரும்பாலும், சண்டையில் விழும் பிணங்கள் சிதைந்துபோய் இருப்பதால் அது பார்ப்பவர்களுக்குப் பெரும் வேதனையையும், துயரத்தையும் தரும்.

அடையாளக் குறிகள் தவிர்த்து வெறும் பிணப் பொதிகளை நெடு நேரம் வைத்திருந்து என்ன செய்ய, இதுதான் இந்தக் கடைகளின் ஆரம்பம். வெகுநேரம் ஒருவராலும் பேச முடியவில்லை. போர் என்பது பொதுமக்களைப் பொருத்தவரையில் பெரும் துயரமே என்பதை எல்லோரும் புரிந்து கொள்வது எப்போது?

– டாக்டர் அய்.எஸ்.ஜெயசேகர்

(தொடரும்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *