கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு
– கி.தளபதிராஜ்
அண்மையில் சிம்ம வாகனி என்பவர் தனது முகநூலில் ஒரு மகமதிய சாமியாரை பெரியாரோடு தொடர்பு படுத்தி “பெரியாரே ஏற்றுக் கொண்ட ஆண்டவர்தான் சாலை ஆண்டவர் போல.. அல்லது திருப்பி அடிக்காதவர்களை தாக்குவது தான் பெரியாரின் வீரம் போல.”.என்று குறிப்பிட்டு வழக்கம் போல பெரியாரை கொச்சைப்படுத்த முனைந்திருந்தார். 1930 ல் இராமநாதபுரத்திற்கடுத்த திருப்பாலைக்குடியில் பிரபலமாகியிருந்த இந்த சாமியாரை பற்றி பெரியாரின் குடியரசு ஏட்டில் வெளிவந்த கட்டுரையை படியுங்கள்!
“அதிசயச்சாமியாரும் நம் பாமரமக்களும்”
இராமநாதபுரத்திற்கடுத்த திருப்பாலைக்குடி என்னும் ஊரில் ஓர் சாமியார் இருக்கிறார்.அவர் மகமது சாமியாராம். அவர் வெளிவந்து நான்கு மாதம் ஆகிற்றாம். மூன்று மாதங்களுக்கு முன் அவர் பூமிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டாராம்!. மூன்று மாதகாலமாய் உள்ளேயே இருந்து பின் வெளிவந்து அந்த திருப்பாலைக்குடிக்குச் சென்று அங்குள்ள ஒரு வறண்ட குளத்திலே போய் அவர் கை வைத்த மாத்திரத்தில் தண்ணீர் பெருகிவிட்டதாம்!.
அவரிடம் வரம் கேட்க போகின்றவர்களுக்கு அந்த குளத்து தண்ணீரை எடுத்துவரச்சொல்லி கொடுக்கின்றாராம். அதைச்சாப்பிட்ட மாத்திரத்தில் சகல நோய்களும் நிவர்த்தியாகின்றதாம். ஆகா! என்ன ஆச்சரியம்? இவ்விருபதாம் நூற்றாண்டிலும் கடவுள் என்ற ஒன்று அரூபி என்று சொல்லுவதற்கும் ஆதாரமில்லாமல் தத்தளிக்கும் பொழுது, ஒரு மனிதன் கடவுளும் செய்யொனாத காரியங்கள் செய்வதென்றால் பகுத்தறிவுள்ள எவரும் நம்ப ஏதும் உண்டா?
நிற்க. இன்னுமோர் அதிசயமாம். குழந்தையில்லாதவர்களுக்கு அந்தக் குளத்துத் தண்ணீரைச் சாப்பிட்ட மாத்திரத்தில் கர்ப்பம் உற்பத்தியாகின்றதாம்!.
முன் தேவர்களுடைய கலிதமான இந்திரியத்தைச் சாப்பிட்ட பின் குழந்தைகளோ மிருகங்களோ உற்பத்தியானதாகப் புராணங்கள் புளுகின. இப்பொழுதோ குளத்து தண்ணீரை குடித்த மாத்திரத்தில் குழந்தை உற்பத்தியாகின்றதென்றால் ஆண் பிள்ளைகளுக்கு இனி அது சம்மந்தப்பட்ட வேலை இல்லை என்றே நினைக்கிறேன்.
இந்த சாமியாரிடம் வரம் கேட்க நூறு மைல் சுற்றுப்புறமிருந்து நம் சகோதர சகோதரிகள் வந்து குவிந்து ஒரு செம்பு தண்ணீர் கொண்டு போகிறார்கள். எவ்வளவு பணம் விரயமாகிறது. கூடிய சீக்கிரம் அவ்வூரில் ஜனநெருக்கடி மிகுதியால் காலரா போன்ற வியாதிகள் நிச்சயமாக வரும் போலிருக்கின்றபடியால் சுகாதார உத்தியோகஸ்தர்கள் அதை உடனே நிறுத்தி நிவர்த்தி செய்ய வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுகொள்கிறேன்.
– குடிஅரசு கட்டுரை (12.7.1931)