அவன் யாரென இவர்கள் துழாவிக் கொண்டிருந்தார்கள்.
நாம் யாரெனக் கண்டறிந்து தந்தான் அவன்.
அவன் மொழி எதுவென
இவர்கள் தேடிக் கொண்டிருந்தார்கள்.
நம் மொழியை புதைசேற்றிலிருந்து
மீட்டுத் தந்தான் அவன்.
அவன் இனம் பற்றி
இவர்கள் ஆய்வு செய்கையில்
நம் இனத்தை
அடையாளம் காட்டியவன் அவன்.
ஆத்திரச் செருப்பெடுத்து
அவன் மீது வீசிவிட்டு
வீழ்த்திவிட்டதாய் சுய மோகம் கொள்கின்றனர் குருட்டு மூடர்கள்.
கோபப்படமாட்டான்
கொள்கையாய் வாழும் பெருங்கிழவன்.
இன்னும் தன் பணி
இங்கே நிறைவடையவில்லை என்றே
பகுத்தறிவு விளக்கைக் கையிலேந்தி
காலத்திசை காட்டிடுவான்.
மூத்திர சட்டி சுமந்தபோதும்
நம் சூத்திரப் பட்டம் ஒழித்தவன் அவன்.
கல்லடியையும் சொல்லடியையும்
காலிக் கூட்டத்தின்
கலவரச் சேட்டைகளையும்
வாழும் காலத்திலேயே நேர்கொண்டு நின்றவன்
நெருப்பாறுகள் கடந்து
எதிர்ப்புகளை வென்றவன்.
வசவாளர்களை மீறி
வரலாறாய் நிற்பான்
இலட்சிய நிமிர்வுடன்
இன்னும் பல நூற்றாண்டுகள்… …
– கோவி.லெனின்