ஈரோட்டுச் சூரியன்
அம்மையும் அப்பனும்
வெங்கட (நாயக்கர்)
நல்ல காளை;
செய்ததென்னவோ
தச்சனுக்கு கையாள் வேலை;
சின்னத்தாயம்மைக்கு
கல் சுமக்கும் வேலை;
அம்மைக்கு ஓரணா
அவருக்கு ஈரணா
இதுதான் கூலி;
இருவரும் யோசித்தனர்
ஓர் நாழி;
சேர்த்த செல்வத்தில்
மாட்டுவண்டி வாங்கினர்…
மாடுகள் வாங்கி பூட்டினர்;
வாடகைக்கு ஓட்டினர்;
வருவாய் உயர்ந்தது…
இருவாய் மலர்ந்தது;
இன்னுமோர் விடியல்
புலர்ந்தது;
மாடுகளை விற்றனர்;
மளிகைக் கடை பெற்றனர்;
ஆள் வைத்து நெல் குத்தி
அரிசிக் கடை ஆரம்பம்;
அக்கடை கொடுத்தது
பேரின்பம்;
உழைத்ததை
உள்ளூர் வாரச்சந்தைக்கு
கொண்டுபோய் சேர்க்க
உழைப்பு இவர்களை
செல்வத்திடம்
கொண்டு போய் சேர்த்தது;
தாயம்மை
சுத்தமாக பொருளைச் செய்ய
நாயக்கர்
மொத்தமாக விற்பனை செய்ய
மளிகைக் கடை
மண்டிக்கடையானது..
தினக்கூலி
வண்டிக்காரனாகி
மளிகைக் கடைத் திறந்து
பின்னதைத் துறந்து
மண்டிக்கடைத் தொடங்க,
செல்வம் நீராய் ஊறின;
இருவர் தம் வாழ்க்கை
மாறின;
உழைப்பாலே
உயர்ந்தோம் என்று
உணராமல்
திருமாலே உயர்த்தினார்
என்றுதான் நம்பினர்…
வைணவ பக்தி
இருவரையும் ஆட்கொண்டது…
திருமாலிடம் உருகினர்;
பக்தியைப் பருகினர்;
இருவருக்கும் எழுந்தது
அறம் புரியும் எண்ணம்;
தினம் புரியும் வண்ணம்;
திருப் பணியெனக் கருதி
ஒரு பணியென செய்தனர்..
தாயம்மை தாயானார்..
குழந்தைகள்
இரண்டு பிறந்தன;
இடைவெளி விட்டு
இரண்டும் இறந்தன;
இன்பத்தைத்
தொலைத்தனர்;
துன்பத்தில்
திளைத்தனர்;
பத்துவருட காலம்
வாரிசுக்கான வாசல்
திறந்திடவில்லை;
மனமது வருத்தப்பட
மறந்திடவில்லை;
இருவர் தம் மனதில்
எழுந்தன துயரம்;அது
ஏழு பனை மர உயரம்;
பாகவதர்களுக்கு
பணிவிடை செய்தும் பலனில்லை;
ராமாயணங்கேட்டும் பயனில்லை;
திருமாலை
திருநாளாய்க் கொண்டாடியும்
தினமும் விரதமிருந்தும்
தாயம்மை தாயாகவில்லை..
இறைவனிடம் வேண்டினால்
குழந்தை பிறக்கும் என்பது
மூடத்தனமென்று எடுத்துச் சொல்ல
அப்போது அங்கே யாருமில்லை..
தாயம்மை என்பது
பேருக்கு மட்டும்தானா..
உண்மையாகாதா..
ஏக்கம் அவரை
அரவணைத்தது..
துன்பம் துணைக்கு வந்தது..
அடுத்த ஆண்டிலேயே
அழகிய ஆண் குழந்தையை
தாயம்மை ஈன்றெடுக்க
ஈரோடே இனித்துப் போனது;
அக் குழந்தையின் பெயர்
கிருஷ்ணசாமி என்று ஆனது;
(ஈரோட்டு சூரியன் உதிக்கும்…
– மதுமதி-