புண்ணிய பூமியாம் பாரத பூமி – பெண்களைத் தாயாக மதிக்கும் நாடு; மண், மொழி, நதி, கடவுள் என்று அனைத்தை யும் பெண் வடிவத்தில் காணும் நாடு என்றெல்லாம் பலர் வாயளப் பதைப் பார்த்திருப்போம்.
பெண்களைத் தாயாகப் பார்க்கிறோம் என்பது பெருமைப்படுத்துவதற்கு என்பதைவிட பதுக்கி வைப் பதற்கே!
தாயென்றால் கட்டுப்பெட்டியாக, தந்தைக்கு(ஆணுக்கு) அடங்கி நடக்க வேண்டும். அதிலும் முந்தைய தலைமுறைத் தாய்மார் எல்லோரையும் உதாரண மாகக் காட்டலாம். ஒன்றல்ல.. இரண்டல்ல.. பெண்களின் பதிவிரதத் தன்மைக்கும், அதற்கான பலன்களுக்கும் பக்கம் பக்கமாக இருக்கின்றன புராணங்கள், கதைகள், இத்தியாதி, இத்தியாதி!
பெண்ணென்று பிறந்தாயா? பிறந்தது முதல் தந்தை, சகோதரன், கணவன், மகன், பேரன் என்று முழுக்க ஆண்களைச் சார்ந்தே வாழப் பழகிக்கொள். ஆசை என்று உனக்கு எதுவும் இருக்கக் கூடாது. ஆசைப்படவும், ஆண்டு அனுபவிக்கவும் ஆண் மட்டுமே உரிமை படைத்தவன். அவனுக்குப் பயன்படவே உனக்குத் தகுதியும் உரிமையும் உண்டு. இதை நீ கடைசி வரைக்கும் ஃபாலோ பண்ணியின்னா.. பீச்சுக்குப் பக்கத்தில கண்ணகி சிலை இருக்கு பாத்தியா.. அங்க என் பொண்டாட்டியும் பத்தினின்னு உனக்கொரு சிலை வைப்பேன்ங்கிற வடிவேலு வசனம் மாதிரிதான் பெண்களை வைத்திருக்கிறது மனுதர்ம சமூகம். பெண்கள் புகைபிடிப்பது போலவும், கல்லூரி மாணவிகள் மது அருந்துவது போலவும் படங்களை எடுத்துப் போட்டு, அந்தக் காலத்தில் பெண்கள் வீடுகூட்டுவது போன்ற படங் களையும் போட்டு, பாருங்கள் இப்போது காலம் கெட்டுப் போச்சு என்று கூப்பாடு போடும் பதிவுகள் இணையத்தில் ஏராளமாய்க் கிடைக்கின்றன. புகைப்பிடிப்பதும், மது அருந்துவதும் யார் செய்தாலும் அது வரவேற்கத்தக்கதல்ல என்பது ஒருபுறம் இருக்கட்டும். போதைப் பழக்கத்துக்கும், வீடு கூட்டுவதற்கும் என்ன தொடர்பு? அவர்களுடைய நோக்கம் போதைப் பழக்கம் தவறு என்பதல்ல; அப்படிக் கருதுவார் களேயாயின் ஆண்களின் போதைப் பழக்கத்தையும் அல்லவா கண்டித்திருக்க வேண்டும்? பெண்கள் என்றால் வீட்டு வேலைக்காரர்களாக இருக்க வேண்டும் என்பது தான் அவர்கள் சொல்லவருவது! நேரடியாக பெண்கள் படிக்கிறார்கள் முன்னேறுகிறார்கள் என்று போட்டு வயிற்றெரிச்சல் பட முடியாது அல்லவா? அதனால் தான் பொம்மனாட்டிங்க எல்லாம் தண்ணியடிக்கிறார்கள், தம்மடிக் கிறார்கள், கலிகாலம் என்று புலம்புவது!
இப்படிப்பட்ட புலம்பல்களால் ஒன்றும் பிரச்சினையில்லை என்று சும்மாவிடமுடியாது. காரணம், இதனுடைய நீட்சி தான் கடந்த ஜூலை மாதம் 9-ஆம் நாள் அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்வு! தன் ஆண், பெண் நண்பர்களுடன் மது அருந்த பாருக்கு வந்தாராம் ஒரு பெண். அவர்களில் சிலர் சென்றுவிட, தனித்துவிடப்பட்ட பெண்ணைத் தொட்டு, சீண்டி, கேலிசெய்து, வன்முறையில் ஈடுபட்டு, வதை செய்து, ஊடகங்கள் படம் பிடிக்கப் பிடிக்க, எதைப் பற்றியும் கவலை யில்லாமல் ஒரு பாலியல் வன்கொடுமையே அரங்கேறியிருக்கிறது. உள்ளூர் தொலைக் காட்சிகளில் செய்தி வெளியாகி, இணையதளங் களுக்கு வந்தபிறகு சுதாரித்துக் கொண்ட வட இந்திய ஊடகங்கள் இதுகுறித்து பல்வேறு செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டன. பெண் எப்படி மது அருந்த பாருக்குப் போகலாம்? அரைகுறை ஆடை அணிந்திருந்தால் அப்படித்தான்! பெண்ணே இப்படி இருந்தால் ஆண்கள் எப்படி இருப்பார்கள்? என்ற தொனி யில் தான் முதலில் இப்பிரச்சினை அணுகப்பட் டது. பின்னர் இது குறித்த விரிவான விவாதங்கள் எழுந்தன. மகளிர் அமைப்புகள், முற்போக்கு சக்திகள், மனித உரிமை அமைப்பினர் குரல் கொடுத்ததன் விளைவாக இதன்மீது அனை வருக்கும் கவனம் திரும்பியது. வன்கொடுமையில் ஈடுபட்டவர்கள் வீடியோ காட்சிகளின் வழியாகக் கண்டுபிடிக்கப்பட்டு, கைது செய்யப்பட்டனர். அந்தப் பெண் கொடுமை செய்யப்பட்டபோது தடுக்க முயலாமல் அதைப் படமெடுத்ததோடு மட்டுமல்லாமல், ஊக்கு விக்கவும் செய்தனர் என்று ஊடகத்தினர் மேலும் புகார் எழுந்து விவாதத்திற்குள்ளானது. விவாதிக்கப்படவேண்டியதும் கூட.
இந்த வன்கொடுமைக்கு மறைமுகமாக சப்பைக் கட்டுகட்டிய தினமணி போன்ற ஏடுகள், அந்தப் பெண் ஏன் மது அருந்த வந்தாள்? என்பது பற்றி ஏன் யாரும் கேட்கவில்லை என்று கேள்வி எழுப்புகிறது. மது அருந்துவது என்று முடிவெடுத்த பின் ஆண் என்ன? பெண் என்ன? ஏன் பெண்ணுக்கு மட்டும் அதீத ஒழுக்கக் கட்டுப்பாடுகள் வைக்கப் பட்டுள்ளன என்று கேட்க வைத்தியநாத அய்யருக்குக் கை வரவில்லை. அப்படிக் கேட்டு விட்டால், மதுவிருந்துகளில் புகுந்து ரகளை செய்யும் இந்துத்துவக் கும்பலையும் கண்டிக்க வேண்டுமல்லவா? அது ஏன் பெண்கள் குடித் தால் மட்டும் வீடு புகுந்து அடிப்பது? என்று கேள்விகேட்க வேண்டியிருக்கும் அல்லவா?
பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிவாரணம் வழங்குதல், சட்ட ரீதியாக அணுகுதல் என்று தொடர்ந்து உதவிகள் நடந்துவருகின்றன என்பது வேறு செய்தி. இதையொட்டி எழுகிற வாதம் என்னவென் றால், ஆண்கள் வழிதவறி நடக்க பெண்களே காரணம் என்பது தான்! பெண்கள் அணியும் உடை தான் ஆண்களின் மனம் பிறழக் காரண மாக இருக்கிறது என்று பல அறிவுஜீவிகள் கருத்துகளை உதிர்த்தார்கள். அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மத்தியப் பிரதேச பாரதிய ஜனதா அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா. இந்திய கலாசாரத்தின்படி பெண்கள் உடை அணிய வேண்டும். ஆண்களின் உணர்வுகளைத் தூண்டும் வகையில் பெண்கள் ஆடை அணியக் கூடாது. நெறிதவறிய நடத்தை, அருவருப்பான ஆடைகளை அணிந்து கொள்ளுதல், நாகரீக மற்ற வாழ்க்கை முறை, பழக்கங்கள் ஆகியன சமுதாயத்தில் குழப்பங்களை அதிகரித்து விடும் என்று திருவாய் மலர்ந்தார் இந்தக் காவித் துண்டுக்காரர்.
இந்தக் கூற்றில் நியாயம் இருக்குமோ என்ற மயக்கம் பலருக்கும் இருக்கக்கூடும். ஒரு வேளை பெண்கள் அரைகுறையாக ஆடை அணிவதால் தான் ஆண்கள் சலனப்பட்டுவிடுகிறார்களோ என்று! ஆனால் அதற்கும் பதில் ஜூலை மாதத்தின் நடுப் பகுதியிலேயே அசாமில் இருந்தே வந்தது. ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்கு உட்பட்டுத்த முனைந்து உதை வாங்கிவந்தார் ஓர் இந்திய இராணுவ வீரர்(?!). உ.பி.யில் யாரோ மூவரால் கடத்தப்பட்ட பெண்ணை மீட்ட காவல்துறையைச் சேர்ந்த காவலர் ஒருவர், அப்பெண்ணைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு அவரும், மற்றொரு தனியார் காவலாளி ஒருவருமாக சேர்ந்து தொடர் பாலியல் வல்லுறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர் அந்தப் பெண் மீட்கப்பட்டு அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதே போன்ற நிகழ்வுகள் காவல்துறையால் மறைக்கப்படுவதாகக் கூறி நீதிமன்றமே வழக்கைத் தானாக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதம் இருளர் இனப் பெண்கள் காவல்துறையினரால் பாலியல் வல்லுறவுக்கு ஆளாக்கப்பட்டனர். இங்கெல்லாம் பெண்கள் அணிந்திருந்த உடை ஆபாசமான தல்ல; அரைகுறையானதல்ல; ஆண்களுக்கு உணர்ச்சியைத் தூண்டுவதல்ல. ஆனாலும் வன்கொடுமைகள் நடந்துள்ளனவே காரணம் என்ன? இன்னும் ஆயிரமாயிரம் எடுத்துக் காட்டுகளைக் காட்டலாமே! இந்தியாவில் தான் 54 நிமிடங்களுக்கொரு பாலியல் வல்லுறவு நடக்கிறதே! 26 நிமிடங்களுக்கொரு பாலியல் வன்சீண்டல், துன்புறுத்தல் நடக்கிறது! பெண் களுக்கெதிரான குற்றம் 7 நிமிடங்களுக்கொரு முறை நடக்கிறது. இவையெல்லாம் பதிவு செய்யப்படும் குற்றங்கள் மட்டுமே என்பதுதான் கூடுதல் குறிப்பு!
ஆக, இவ்வாறான பாலியல் கொடுமைகளுக் கும், பெண்களின் உடைகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று நிறுவமுடிகிறதா? இது ஒரு பக்கம். எப்படி உடுத்த வேண்டும் என்று எனக்குச் சொல்லாதே; அவனை பாலியல் வன்கொடுமை செய்யாமல் இருக்கச் சொல் என்ற குரல் தானே நியாயமானது. மேற்கு வங்காளத்தில் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கோபர்டங்கா என்ற ஒரு கிராமமே தொடர் பாலியல் வன்புணர்வு களுக்கு இலக்காகி இருந்தது என்பதும், அதனை எதிர்த்து மக்களைத் திரட்டி, உணர்வூட்டி, அத்தகைய குழு பாலியல் வல்லுறவுகளைத் தடுத்த பருண் பிஸ்வாஸ் என்ற இளைஞர் அண்மையில் வன்முறையாளர்களால் சுடப் பட்டு இறந்தார் என்ற செய்தியையும் கேட்கிறபோது, இது சுதந்திர நாடா? இல்லை சுடுகாடா? என்ற கேள்வி எழுவதைத் தடுக்கமுடியவில்லையே! பாலியல் வல்லுறவுக்கு மறுத்த சோனாலி முகர்ஜி என்ற பெண் ஆசிட் ஊற்றி கொடுமைப்படுத்தப்பட்ட செய்திகள் இந்நாட்டில் தான்!
இந்தூர் நகரில் தன் மனைவியின் மறைவிடங் களைப் (உறுப்புகளை) பூட்டி, சாவியை வேலைக்குப் போகும் போது எடுத்துக் கொண்டு போன ஒரு மெக்கானிக் பற்றிய செய்தி என்ன சொல்கிறது? தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இவ்வாறு செய்து தன் மனைவி தன்னிடம் ஒழுக்கமாக(!) இருப்பதை உறுதி செய்து கொண்ட கணவனைக் குறித்துக் கேள்விப்பட் டீர்களா? கணவனின் தொடர் தொல்லையால் மனமுடைந்த அந்தப் பெண் தற்கொலைக்கு முயன்ற பிறகுதான் இந்த செய்தி வெளியில் வந்துள்ளது. இது இன்று நேற்றல்ல… ஒன்றிரண்டல்ல… காலம்காலமாக தொடர்ந்து நடந்துவருகிறதாம். நாம் வாழ்வது காட்டு மிராண்டிக் காலத்திலா என்ற சந்தேகம் எழுகிறதா இல்லையா?
இந்த லட்சணத்தில் தான் சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளை நிறைவு செய்துவிட்டதாகக் கொண்டாடு கிறார்கள் இந்தியத் தாய்த் திருநாட்டுமக்கள்! பெண்களைப் பதுமைகளாகவும், அடிமை களாகவும், பிள்ளைப் பெறும் இயந்திரங் களாகவும், பாலியல் பொம்மைகளாகவும் பார்க்கும் இந்த்ச் சமூகத்தில் பெரியாரின் கருத்துகளை, பெண்ணுரிமைச் சிந்தனையை இன்னும் வேகமாக எடுத்துச் செல்லவேண்டிய தன் தேவையை இந்த நிகழ்ச்சிகள் இன்னும் எடுத்துக் காட்டிக் கொண்டே இருக்கின்றன. நாம் முன்பே சொன்னதைப் போல, பெண்ணைத் தாயாக மதிக்கிறோம்… நாடாக மதிக்கிறோம் போன்ற சால்ஜாப்புகளை எல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, பெண்ணைப் பெண்ணாகவும், சக மனித உயிராகவும் பார்க்கும் மனப்பான்மையை அடுத்த தலைமுறையிடம் வளர்க்காவிட்டால் 21-ஆம் நூற்றாண்டென்ன இன்னும் 20 நூற்றாண்டுகள் வந்தாலும் பாலியல் சமத்துவம் மட்டுமல்ல.. அடிப்படை மனிதநேயம் கூட மலராது!
-சமா.இளவரசன்–