– புலவர் குறளன்பன்
- எழுச்சிப் பெரியாரின் இனமானப் பணியில் முழுநேரத் தொண்டனாகத் தன்னை இணைத்துக் கொண்ட ஆசிரியர் வீரமணி எடுத்து வைத்த ஒவ்வோர் அடியும் விடுதலைக்கும் – இயக்கத்திற்கும் ஏற்றம் தந்தது.
- விடுதலை _இதழின் ஆசிரியர் பொறுப்பேற்றதும் ஆசிரியர் வீரமணி அவர்கள் முதல்வேலையாக முகவர்களிடமிருந்து விடுதலைக்கு வந்து சேரவேண்டிய நிலுவைத் தொகைகளைக் கேட்டு வழக்கு எச்சரிக்கை அறிக்கை வழி மீள வழிவகுத்தார்.
- நிருவாக ஓட்டைகளை அடைத்து சிக்கனத்தை அறிவுறுத்தி நிமிர்த்தினார்.
- தந்தை பெரியார் பிறந்தநாள் விழா மலர்களை 1963ஆம் ஆண்டு முதல் பளபளக்கும் பலவண்ணங்களில் அச்சிட்டுப் பலரும் வரவேற்கும்படிச் செய்தார்.
- விடுதலை நாள்காட்டி _ விடுதலை நாள் குறிப்புச் சுவடி போன்றவற்றை வெளியிட்டுப் ஒவ்வொரு நாளும் பெரியார் கருத்துப் பரப்பும் நாளாக வித்திட்டார்.
- மறுபடி வெளிவராத தமிழர் தலைவர் (சாமி சிதம்பரனார், ஜாதியை ஒழிக்க வழி (அம்பேத்கார்), தந்தை பெரியாருக்குப் பிடித்தமான அவருடைய சித்திரபுத்திரனின் கல்வியின் ரகசியம், ஞானசூரியன் முதலிய நூல்களையும், தந்தை பெரியாரின் திருச்சி வழக்கு மன்றத் தீர்ப்பைத் தானே மொழிபெயர்த்து நீதி கெட்டது யாரால்? _ போன்ற பல நூல்களையும் புதிய கோணத்தில் பதிப்பித்து கொள்கை வளர்த்தார்.
- விடுதலை _ இதழ், பெரியார் தன்மதிப்புப் பரப்புரை நிறுவன நூல்கள், திராவிடர் கழக வெளியீடுகள் தடையின்றி வெளிவர விடுதலை மறுதோன்றி (ஆப்செட்) அச்சகத்தை ஏற்படுத்தி முறுக்கேற்றினார்.
- விடுதலை அலுவலகப் புதிய பணிமனைக் கட்டுமானத்தில் ஒப்பந்தக்காரர் உண்டாக்கிய சிக்கல்களை உடைத்து உடனடியாகக் கட்டி முடித்தார்.
- விடுதலை இதழ் வாசகர்கள் பெருகும் வகையில் வாழ்வியல் சிந்தனைகள், செய்திச் சிதறல்கள், வரலாற்றுச் சுவடுகள், பகுத்தறிவு அரங்கம், இளைஞர் அரங்கம், மகளிர் அரங்கம், அறிவியல் அரங்கம், மருத்துவத் தகவல்கள் _ என்று அவரவர் தேவைக்கு ஏற்ப அளித்து விடுதலை நாளிதழ் வெற்றிமுகடு நோக்கி விரைந்து மேலோங்கி வளர வழிகாட்டிய மேலாண்மை மறவர் தோழர் வீரமணி என்றால் அது முற்றிலும் உண்மை. வெறும் புகழ்ச்சியில்லை.
- ஒருவருடைய இல்லம் தமிழர் இல்லம் என்பதற்கு அடையாளம் அங்கு விடுதலை வருவதே _என்று விடுதலை இதழின் புதிய பணிமனைத் திறப்பு விழாவில் தவத்திரு குன்றக்குடி அடிகளார் உரையாற்றினார்.
- குன்றக்குடியாரின் மனமொழி வெளிவருவதற்கு முன்னமே குன்றக்குடியாராகத் தமிழர் வாழும் பொருட்டுத் தந்தை பெரியார் தொடங்கிய விடுதலை இதழிற்கு ஆசிரியர் பொறுப்பேற்ற தோழர் வீரமணி விடுதலை உறுப்பினர் (1000) சேர்ப்பு இயக்கத்தைத் தஞ்சை மாவட்டத்தில் தொடங்கி முன்னோடி வழிகாட்டியாகிப் பெரியாரின் மனத்தைக் குளிர்வித்துவிட்டார்.
- நான் இறந்தாலும் ஏனைய திராவிடத் தோழர்கள் ஏமாந்து விடமாட்டார்கள்.
- எனது வேலையை அப்படியே விட்டுவிட மாட்டார்கள்.
- தொடர்ந்து போராடி வெற்றி பெறுவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டுவிட்டது. ]
குடிஅரசு – 05.06.1948தந்தை பெரியார் அவர்களின் நம்பிக்கைக்கு ஏற்ப விடுதலை ஆசிரியர் வீரமணி அவர்கள் தொடர்ந்து உழைத்து வருகிறார் (அய்ம்பதாம் ஆண்டாய்) என்பதற்கு விடுதலை வளர்ச்சியே விடிவெள்ளி சான்றாகும்.