விடுதலை ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய பல தொகுப்புகள், கட்டுரைகள் நூல்களாக வெளிவந்து பல்லாயிரக் கணக்கில் விற்றுத்தீர்ந்துள்ளன. இன்றளவும் ஆய்வுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் படிக்கப்படுகின்றன. அவற்றில் சில பற்றி இக்கட்டுரையாளர் விளக்குகின்றார்.
***
சக்தி வழிபாடு என்ற நூல் மெக்காலிஸ்டர் எழுதிய ‘A Century of Excavation in Palestine’,, இல்லஸ்டிரேட்டட் வீக்லி இதழில் குஷ்வந்த சிங் எழுதிய, தாந்தீரகக் கலையும் அதன் குறிகளும் ஏ.வி.ஜெயச்சந்திரன் எழுதிய சக்தி ஆகிய நூல்களை அடிப்படையாகக் கொண்டு கி.வீரமணி இந்நூலினை எழுதியுள்ளார்.
தி.மு.க. ஆட்சியின் சாதனைகள் நூல் 1977ஆம் ஆண்டு வெளிவந்தது. தி.மு.க. ஆட்சியில் கல்வி, தொழில், விவசாயம், மின்சாரம் முதலிய துறைகள் பெற்ற வளர்ச்சியினை இந்நூலில் புள்ளி விவரத்தோடு கி.வீரமணி வெளியிட்டிருக்கின்றார். தி.மு.க. ஆட்சியில் உத்தியோக மண்டலத்தில் தமிழர்கள் பெரும் பங்கு பெற்றதையும், சமூக நீதி கிடைக்கப் பெற்றதையும் அரசு ஊழியர்கள் பலன் பெற்றதையும் இந்நூல் விளக்குவது குறிப்பிடத்தக்கதாகும்.
கோயில்கள் தோன்றியது ஏன்? 1972இல் வெளிவந்த இந்நூல். மனுநீதி, ஆகமங்கள் தோன்றுவதற்கு முன்பே சாணக்கியரால் எழுதப்பட்ட அர்த்த சாஸ்திரம் கொண்டு கோயில்கள் தோன்றிய வரலாற்றை விளக்குகின்றார் கி.வீரமணி. எந்தப் புரட்டைக் செய்தாவது வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதே சாணக்கியர் வகுத்த அரசியலாகும். இதன் அடிப்ப்டையில் அரசனுக்கு வருவாய் வழிக்காக உருவாக்கப்பட்டதுதான் கடவுள் என்கின்றார் பிரெஞ்சு அறிஞர் ஆபே டூபே, ஜெர்மானிய ஆராய்ச்சியாளர் மாக்ஸ்முல்லர், வங்கதேசத்து சட்ட நிபுணர் ஜெ.சி.கோஷ், காந்தியடிகள், பி.டி.சீனிவாச அய்யங்கார் முதலியோர்களின் கருத்துக்களை இந்நூலில் தமக்கு ஆதாரமாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார் கி.வீரமணி.
வருவாய்க்கு ஆக கோயில்கள் கட்டப்பட்டதால் மக்களை வசீகரிக்கப் பல ஏற்பாடுகளையும் அரசன் செய்ய முனைந்தான். திரைப்படம் எடுப்பவர்கள் வசூல் கண்ணோட்டத்தில் பல மட்டரக ரசனைக் காட்சி களையும், பால் உணர்ச்சி களைத் தூண்டக்கூடிய காட்சிகளையும் எப்படி எடுத்து வசூல் சாதனையை ஏற்படுத்திக காட்டுகிறார் களோ அதுபோன்றே அந்தக் காலத்தில் பிறரை வசீகரப் படுத்த, கவர்ந்து இழுக்க நடனத்தையும், சங்கீதத்தையும் கோயிலுக்குள் நுழைந்தார்கள்! என்று கோயிலுக்குக் கூட்டம் சேர்க்க கையாண்ட வழிமுறை களையும் இந்நூலினுள் விளக்குகின்றார்.
கோயிலுக்குள் பார்ப்ப னர்கள் நுழைந்த விதத்தை அக்னியை வணங்க வேண்டிய பிராமணர்கள் கோயில் களுக்குச் சென்று விக்கிரகங் களை வழிபட்ட காரணத்தால் அவர்கள் சாதப் பிரஷ்டம் செய்யப்பட்டார்கள். புறக்கணிக்கப்பட்ட பார்ப்பனர் களின் சவுகரியங்களுக்காகச் சொத்துக்களும், அடிமைப் பெண்களும், தாசிகளும், சங்கீதமும், வேலையாள்களும் மற்றும் பொருட்களும் கொடுக்க வேண்டியதாயிற்று. பிராமணன் வராத கோயி லுக்குக் கவுரமில்லை என்ற எண்ணம் பல பார்ப்பன ரல்லாதாருக்கு உண்டு. அமந்த கவுரவத்தை உண்டு பண்ணும் பொருட்டே பார்ப்பனருக்கு இவ்வளவு சவுகரியங்களையும் செய்து கோவிலுக்குள் அழைத்து வந்திருக்கக் கூடும் என்று ஜெ.சி.கோஷ் என்னும் ஆய்வாளர் கருத்தை எடுத்துரைத்து ஆதரிக்கிறார்.
மனுதர்மம் என்பது சாணக்கியரின் அர்த்த சாஸ்திரத்திற்குப் பின் எழுதப்பட்டது என்பதும், அர்த்த சாஸ்திரத்தில் உள்ள பார்ப்பனரின் சூழ்ச்சியையும், மோசடியையும் நம் மக்கள் படித்து விளங்கிக் கொண் டால், ஆரிய சூழ்ச்சியை வெகு எளிதில் அவர்கள் அடையாளம் கண்டு கொள்ளுவார்கள் என்பதாலேயே மனுதர்மத்தின் நாலாவது அத்தியாகத்தின் 10ஆவது சுலோகத்தில் சூத்திரனுக்கு இம்மைக்கு உபயோகமான அர்த்த சாஸ்திரத்தைச் சொல்லி வைக்கலாகாது என்றே குறிப்பிடப்பட்டிருக்கிறது! என்றுரைக்கும் கி.வீரமணி, பார்ப்பனர்கள் கோயிலில் நுழைந்து, அவர்களுக்குத் தேவையான சாப்பாடு உண்டு, தாசிகளைக் காமக்கிழத்திகளாக்கிக் கொண்டு வாழ்ந்த நிலை _ இவை போன்றவற்றால் கோயில்கள் மூலம் அரசனுக்கும், அவனது கஜானாவுக்கும் மட்டுமே செல்ல வேண்டிய கோயில் வருமானம் பிறகு கோயில் சொத்துக்களாக்கப்பட்டு, அதற்கென ஒரு தனி ஸ்தாபனமாக்கப்படும் நிலை ஏற்பட்டது என்று விளக்குகின்றார்.
காமராஜர் ஆட்சியின் சாதனைகள் என்னும் நூல் 1961ஆம் ஆண்டு விடுதலை வெளியீடாக வெளிவந்தது. கி.வீரமணியால் எழுதப்பட்ட அந்நூல் அவர் பெயரின்றி வெளியிடப்பட்டது. அந்நூல் உருவான வரலாற்றை காமராசர் அவர்கள் முதல் அமைச்சராக இருந்த காலக்கட்டம் அது. தந்தை பெரியார் அவர்கள் காமராசரைத் தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வருவார். கல்விக் கண் திறந்த காமராசர், தமிழ்நாட்டின் இரட்சகர் காமராசர், பச்சைத் தமிழர் காமராசர் என்றெல்லாம் பொதுமேடைகளில் காமராசரின் ஆட்சியை உயர்த்திப் பேசுவார் அய்யா! அவருக்கு முன்பு பேசிய நான், அதற்கேற்ற ஆதாரங்களையெல்லாம் செய்தித் தாள் நறுக்குள் எழுதிய பலவற்றைக் காட்டிப் பல புள்ளி விவரங்களுடன் பேசியதைக் கேட்ட அய்யா ஒருமுறை கவனித்து, அந்த விவரங்களைச் சிறு நூலாக்கலாம் என்றார். காமராசர் ஆட்சியின் சாதனைகள் என்று தலைப்பிட்டு ஏற்பாடு செய்தோம்.
தந்தை பெரியார் அவர்கள் தாம் பேசும் கூட்டங்களில் பேச்சைத் தொடங்கிப் பேசும்போது கூட்டத்தில் விற்கப்படும் புத்தகங்களைப் பற்றிச் சிறப்பாக அறிமுக உரை நிகழ்த்தி அதைக் கூட்டத்திலுள்ள மக்கள் வாங்கும்படி ஆவலைத் தூண்டிப் பேசுவ வழமையாகும். அப்படிச் சொல்லும்போது அய்யா அவர்கள் காமராசர் ஆட்சியின் சாதனைகள் பற்றி அறிமுகம் செய்கையில் ஒரு கூட்டத்தில் திடீரென்று அதை நண்பர் கி.வீரமணி அவர்கள் மெத்தச் சிரமப்பட்டு கடினமாக உழைத்து மிக அருமையாகத் தொகுத்தறித்துள்ளார். விலை நான்கு அணாதான். நீங்கள் அனைவரும் வாங்கிப் படிக்க வேண்டும் என்று கூறினார் என்று கி.வீரமணி தம் சுயசரிதையில் தெளிவுபடுத்துகிறார்.
நீதி கெட்டது யாரால்? எனும் நூல் தந்தை பெரியார் பெயரில் 1957இல் வெளியானது. உயர்ஜாதி நீதிபதிகள் தவறான ஜாதிக் கண்ணோட்டத்தோடு தந்த மூன்று தீர்ப்புகளை ஆதாரமாகக் கொண்டு நீதி கெட்டது யாரால்? என்ற தலைப்பில் கி.வீரமணி எழுதிய கட்டுரையைப் படித்த தந்தை பெரியார், இவ்வுளவு நல்ல ஆதாரங்களைக் கொண்டதாக இக்கட்டுரை அமைந்துள்ளது. இதனை உங்கள் பெயரில் வெளியிடுவதால் உங்கள் மீது வழக்கு சட்டப்படி ‘Contempt of court’ வர வாய்ப்பு உண்டு. ஆகவே, எனது பெயரிலேயே வெளியிடுகிறேன். உங்கள் பெயரைவிட என் பெயரில் வெளிவந்தால் அதற்கு வெயிட் அதிகம் வரும். அரசு, நீதிமன்றத்தின் அதிக கவனத்தையும் அது ஈர்க்க வாய்ப்புண்டு என்றார். வேலூர் கழகத் தோழர்கள் பெரியாரிடம், கட்டுரையைப் பிரமாதமாக எழுதியுள்ளீர்கள் என்று பாராட்டிப் புகழ்ந்தபோது, அக்கட்டுரையை எழுதியது உண்மையில் நான் அல்ல. நம்ம தோழர் வீரமணிதான் அதை எழுதினார். அவர் மீது ஏதும் நடவடிக்கை வந்துவிடக் கூடாதே என்பதற்காகத்தான் எனது பெயரில் என் கையொப்பத்துடன் நானே வெளியிடுமாறு செய்தேன் என்றார்
ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் என்னும் நூல் தந்தை பெரியார் பெயரில் 1963இல் வெளியானது. ராஜாஜி ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற பள்ளி மூடல்கள், குலக்கல்வித் திட்டத் திணிப்பு, இந்தி திணிப்புப் பற்றிப் பொதுக்கூட்டங்களில் பெரியார் ஆற்றிய உரையைக் கேட்ட கி.வீரமணி, ஆச்சாரியார் ஆட்சியின் கொடுமைகள் என்னும் தலைப்பில் நூலினைத் தயாரித்தார். குடிஅரசு, விடுதலை, லிபரேட்டர் இதழ்களின் செய்திகளை ஆதாரமாக்கி, ராஜகோபாலாச்சாரியாரின் 1938 மற்றும் 1953 ஆட்சியின்போது நிகழ்ந்த கொடுமைகளைப் பட்டியலிட்டு, சட்டமன்ற நடவடிக்கைகளையும் உள்ளடக்கி கி.வீரமணி இப்புத்தகத்தை உருவாக்கினார். நூலில் பெரியார் பெயர் இருந்தாலும் அது வீரமணி தொகுத்தது என்றே பெரியார் தயக்கமின்றிக் கூறுவார் என்று கி.வீரமணி தெரிவிக்கின்றார்.
சிறந்த பேச்சாளராகத் திகழ்கின்ற வீரமணி நல்ல எழுத்தாளராகவும் இருக்கிறார் என்பதற்கு அவரெழுதிய நூல்களே சாட்சியம் கூறுகின்றன
– கி.வீரமணி வாழ்வும் பணியும் முனைவர் பட்ட ஆய்வேட்டிலிருந்து…