– மஞ்சை வசந்தன்
வியப்பின் மறுபெயர் வீரமணி என்று நான் ஒரு நூல் எழுதி முடிக்கவிருக்கிறேன். அவர் வாழ்வில் சாதித்தவை, நிகழ்த்தியவை, எல்லாமே வியப்பிற்குரியவையே! அவற்றுள் ஒன்றுதான் ஒரு பத்திரிகை ஆசிரியராய் தொடர்ந்து ஒரே பத்திரிகைக்கு 50 ஆண்டுகள் நிறைவு செய்வது என்பது. அதுவும் ஒரு புரட்சிப் பத்திரிகையை, வெகுஜனங்களின் நம்பிக்கைக்கு எதிரான ஆனால் உண்மையான செய்திகளை வெளியிடும் ஒரு பத்திரிகையை ஆசிரியராய் இருந்து நடத்தி சாதிப்பது என்பது வியப்பினும் வியப்பாகும். ஆம் உலகில் வேறு எவரும் இச்சாதனையை நிகழ்த்தியிருப்பார்களா? இல்லை என்றே நினைக்கிறோம். ஆம். எனில் அவருக்கு விரைவில் கின்னஸ் பதிவு கிடைக்கும்; கிடைக்க வேண்டும்; கிடைக்கச் செய்ய வேண்டும். அது தமிழர் கடமை. காரணம் உண்மையில் இது ஓர் உலக சாதனை!
காலத்தால் மட்டும் சாதனையல்ல. காலம் கடந்து கொண்டிருப்பது. 100 ஆண்டு வாழ்வதுகூட சாதனை எனப்படுகிறது. அதில் சாதனை என்பது உடலை வைத்துக் கொண்ட முயற்சிக்கு மட்டுமே. மற்றபடி அதில் சிறப்பு ஏதும் இல்லை. அதேபோல், 50 ஆண்டு ஆசிரியர் என்பது ஒரு காலக்கணக்கீட்டுச் சிறப்பு. ஆனால், அது மட்டுமே இவருடைய சிறப்பன்று. 50 ஆண்டுகளில் ஒவ்வொரு நாளும் சிறப்பிற்குரியது.
30 வயதில், வாலிப துள்ளலில் வாழவேண்டிய வயதில் அவரிடம் தந்தை பெரியார் அவர்கள் சவால் நிறைந்த, சரித்திர முக்கியத்துவம் பெற்ற, சாதிக்க வேண்டிய, தமிழ் இனத்தை தலைநிமிர்த்த வேண்டிய, சூழ்ச்சியான, கூர்மையான, அதிகார பலம் வாய்ந்த எதிரியை எதிர்கொள்ள வேண்டிய ஒரு பெரும் பொறுப்பை மானமிகு கி.வீரமணி அவர்களிடம் பெரியார் கொடுத்தார்.
புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஆசிரியர் வீரமணி அவர்களைப்பற்றி வியந்து பாடிய பாடலில் இதை மிகச் சரியாகவே குறிப்பிட்டுள்ளார்.
இளமை வளமையை விரும்பிடும் என்பர்
இளமை எளிமையை விரும்பிய புதுமையை
வீரமணியிடம் நேரில் கண்டேன்!
என்று வியந்தார்கள்.
இளமைக்கால கனவுகள் எதையும் அவர் சிந்தையுள் கொள்ளாது, இனமானக் கவலையை மட்டுமே உள்ளத்தில் ஏற்றி, ஒவ்வொருநாளும் உழைத்தார்.
விடுதலை ஆசிரியர் பொறுப்பை மிகத் தயக்கத்துடனே ஏற்றார். பெரியார் தேர்வு என்றும் பிழையானதில்லை. அவ்வாறே இதுவும். இன்றைக்குப் பத்திரிகை நடத்துவது என்பது எளிமை. அந்த அளவிற்கு அறிவியல் சாதனங்கள், தொலைத்தொடர்பு, செய்தி சேரும் விரைவு, அச்சின் மேன்மை போன்றவை வந்துவிட்டன. ஆனால் இவர் ஆசிரியராய் பொறுப்பேற்றபோது என்ன நிலை?-
சரியான அச்சு எந்திரம்கூட இல்லை. எழுத்துக்களை ஒவ்வொன்றாய்ப் பொறுக்கிச் சேர்த்தாக வேண்டும். அச்சுக்கோர்த்து முடிக்கவே பல மணி நேரம் ஆகும். ஆனால், இன்று என்ன வளர்ச்சி!
வர்த்தக நோக்கில் நடத்தப்படும் நாளேடுகளோடு போட்டியிடும் அளவிற்கு தரமும், அமைப்பும், அழகும் மிளிர இன்றைக்கு விடுதலையை வளர்த்து, வெளியிட்டுவருகிறார். வண்ணவண்ண எழுத்துக்கள், படங்கள், உள்ளடக்கத்தைக் காட்டும் முகப்பு; கட்டமிட்ட கருத்துக்கள், கட்டங்களிலே பலவகை! பரவசமூட்டும் பக்கங்கள்.
சில ஆண்டுகளுக்கு முன் விடுதலையில் ஓர் அறிவிப்பையே ஆசிரியர் கொடுத்தார். விடுதலை ஏட்டில் என்னென்ன இடம்பெற வேண்டும்; என்னென்ன மாற்றம் வேண்டும் என்பன குறித்து வாசகர்கள் கருத்துத் தெரிவிக்கலாம் எனக் கேட்டிருந்தார்கள். நானும் கருத்து எழுதியிருந்தேன். கருத்துத் தெரிவித்தவர்களுக்கு நன்றி சொல்லி கடிதமும் எழுதி, உரிய மாற்றங்கள் செய்யப்படும் என்று உறுதியளித்திருந்தார்கள்.
ஒரு பத்திரிகையாசிரியர் இவ்வளவு ஜனநாயக அணுகுமுறையில் கருத்துக்களைக் கேட்டு, மாற்றங்களை உருவாக்கியது என்பது எத்தகைய மாண்பு! எத்தகு உயர்வு! அவருக்கன்றி அடுத்தவர்கக்கு வருவது அரிதே!
இரத்தினச் சுருக்கமாக கொளுவைகளாகச் (கேப்சூல்) செய்திகளைக் கொடுக்கும் பாங்கு நேர்த்தியானது. விளையாட்டு, மருத்துவம், அறிவியல், இல்லம், கல்வி, பெண்ணுரிமை என்று எத்தனை துறைசார்ந்த கருத்துக்கள்! அத்தனையும் முத்துக்கள்!
ஆசிரியர் அறிக்கை: எந்த ஏட்டிற்கும் இல்லாத சிறப்பு இது. அவர் அறிக்கை ஒவ்வொன்றும் வரலாற்றுக் கருவூலம். அன்றாட நிகழ்வுகள், அரசியல், சமூக நடப்புகள் போன்றவற்றைக் கூர்ந்து கவனிக்கும் எம் போன்றோர், இப்படிச் செய்திருக்கலாமே, அப்படிச் செய்யலாமே, இன்ன தீர்வு காணலாமே, இப்படித்தான் செய்ய வேண்டும் என்று எண்ணுவோம் பேசுவோம். அது அடுத்த நாள் விடுதலையில் ஆசிரியர் அறிக்கையாய் வந்திருக்கும். இதைப்பலரும் கூறக் கேட்டிருக்கிறேன்.
பலதரப்பு மக்களின் உணர்வுகளை உள்வாங்கி, விழிப்புடன் ஒவ்வொரு சொல்லையும், ஒவ்வொரு நிகழ்வையும் கவனித்து, காலம் தாழ்த்தாது, பட்டென்று அறிக்கையாக பத்திரிகையில் சொல்லவேண்டியதை சொல்லும் ஆற்றல், அறிவு நுட்பம், விரைவு வேறு யாருக்கு வரும்?
ஆசிரியர் அறிக்கை தமிழக அரசியலுக்கு ஒவ்வொரு நாளும் வழிகாட்டி; ஆட்சியாளர்களுக்கும், கட்சி நடத்துவோருக்கும் திசைகாட்டி, ஒவ்வொரு குடிமகனின் உண்மை விளம்பி. ஆட்சியாளர்களின் குறைகளைச் சுட்டித்திருத்துவதும், நல்லவற்றைப் பாராட்டிப் போற்றுவதும் இதில் அடங்கும்.
கலைஞர் தமக்கு வேதம் என்பார் விடுதலையை. ஒவ்வொரு நாளும் விடுதலையைப் பார்த்தே தம்மைச் சரிசெய்து கொள்வதாக கலைஞர் ஒருமுறை வெளிப்படையாகவே அறிவித்தார்கள்.
ஆசிரியரின் அறிக்கைகள் தொகுப்பு நூல்களாக வந்துள்ளன. அவை வரலாற்றுப் பெட்டகங்கள். வாரிசுகள் அறிய ஒவ்வொரு வீட்டிலும் வேண்டும்!
ஆசிரியர் மானமிகு கி.வீரமணி அவர்களின் வாழ்வு என்பது ஒரு சராசரி வாழ்வு அல்ல. 10 வயது தொடங்கி, பக்குவப்பட்ட, பயிற்சி பெற்ற, உலகத் தலைவருடன் உடன் உறைந்த வாழ்வு.
அவர் படித்த நூல்கள் ஆயிரம் ஆயிரம். அவர் பெற்ற அனுபவங்கள் கோடானுகோடி! மருத்துவம் முதல், உடற்பயிற்சி, உணவு, சட்டம், அறிவியல் என்று அனைத்துத் துறையிலும் நுண்ணறிவு பெற்றவர். எதற்கும் ஆலோசனை கூறும் ஆற்றல் அவருக்கு உண்டு. ஒரு மருத்துவரையும் மிஞ்சும் மருத்துவ அறிவும், தெளிவும் அவருக்கு உண்டு. அவர் சட்டமும் படித்ததால் அவர் அறியாததே இல்லை எனலாம். எனவே அனைத்து அனுபவங்களின் சாறாக வாழ்வியல் சிந்தனை வருவதால், அதைப் படித்தால், அவர் கற்றவற்றை, அறிந்தவற்றை, சிந்தித்தவற்றை சுருக்கமாக, எளிமையாக சிரத்தையின்றி நாமும் பெற்றதாக அமையும். இதுவும் தொகுப்பு நூலாக வந்துள்ளது. வாங்கிப் படித்தால் தலைமுறை தலைமுறையாய் பாடம் சொல்லிக் கொண்டிருக்கும்!
தலையங்கம்: விடுதலைத் தலையங்கம் சாட்டையாகவும் வரும்; பாராட்டுச் சட்டையாகவும் வரும்!
உரியவர்கள் கூர்ந்து படித்துத் தெளிந்தால், குற்றம் தவிர்த்து, நிறைவும், பெருமையும் நிறைய பெறலாம்.
விற்பனை: விடுதலையன் விற்பனையை ஆசிரியர் தன் வாழ்வின் தவமாகவே கொண்டுசெய்து வருகிறார்.
விடுதலை விற்பனை அளவு என்பது தமிழர் வாழ்வின் வளர்ச்சியின் அளவு ஆகும். அது சென்றடைய தமிழன் வளர்வான். அதனால்தான் விடுதலையை அதிக மக்கள் வாங்கிப் படிக்க வேண்டும் என்பதில் அதிக கவனமும் முயற்சியும் செலுத்துகிறார். மற்றபடி அந்த ஆர்வம் வணிக நோக்கில் வந்ததல்ல. வீதிதோறும் விடுதலை என்பதை தற்போது வீடுதோறும் விடுதலை என்று ஆக்கி, சந்தா சேர்ப்பை இயக்கமாக மாற்றி சாதனை புரிந்து வருகிறார்.
பவள விழாவிலும் பாராட்டுவோம்: 50 ஆண்டு ஆசிரியர் பணியை அரும்பணியாக, தமிழர் மேம்பாட்டுப் பணியாக, பெரியாரை உலக மயமாக்கும் பணியாகச் செய்து முடித்துள்ள ஆசிரியர், நல்ல நலத்துடன் இருந்து நம்மையும், விடுதலையையும் நடத்துவார். 75ஆம் ஆண்டு பவள விழாவும் காண்பார். அப்போது விடுதலை இன்னும் மாற்றமும் ஏற்றமும் பெற்று வரும். அதைத் தமிழினமும் பெற்றிருக்கும். ஆசிரியர் எத்தனை பொறுப்புக்கள் வகித்தாலும் அவரின் நிலைத்த விளிப்பு ஆசிரியர்தானே!
இந்தப் பொன்விழாவில் நாம் ஆசிரியருக்குச் செய்யும் பாராட்டு, நன்றியெல்லாம் வீடுதோறும் விடுதலையைத் தவறாது தொடர்ந்து கொண்டு சேர்ப்பதாகும்.