விடுதலை பரிணாமத்தின் சிற்பி

ஆகஸ்ட் 01-15

1960களின் தொடக்கம். விடுதலை நாளிதழின் ஆசிரியராக இருந்தவர் அலுவலகத்திற்கு ஓரிரு மணிநேரம் மட்டுமே வருவார். தலையங்கம் எனப்படும் ஆசிரிய உரையை எழுதித்தருவார்.

எழுந்து போய் விடுவார். எப்போதாவது பலசரக்கு மூட்டைப் பகுதியை எழுதுவார். மற்ற நேரத்தை எப்படிக் கழிப்பார் என்பது நமக்கு முக்கியம் அல்ல. ஆசிரிய உரைகூடப் பல நேரங்களில் தந்தை பெரியாரின் எண்ணங்களுக்கு மாறாகவே அமைந்துவிடும். அவர் நினைத்ததை எழுதிய சந்தர்ப்பங்கள் நிறைய.

 

துரோகத்தின் வித்து

ஊன்றிப்படித்து உண்மையை உணருங்கள் எனும் தலைப்பு தந்தை பெரியாரின் மிகமிக முக்கிய அறிக்கையின் தலைப்பு என்பது அக்கால முதல் விடுதலை படிப்போரின் கவனத்தில் இருக்கும். அந்தக் கால ஆசிரியரும் தோடுடைய செவியனாகக் காட்சியளித்த தென்னூர் வக்கீல் ஒருவரும் சேர்ந்து செய்த சதியை அம்பலப்படுத்திய அறிக்கை அது. அந்தச் சதியின் விளைவாக எவ்வளவு இன்னல்களை அய்யாவின் அறக்கட்டளை சந்தித்தது? அய்ய்வின் காலத்திலும் அம்மாவின் காலத்திலும் எவ்வளவு வழக்குகள்! விசாரணைகள்! அத்தனையும் தொலைத்துக்கட்டப்பட்டன. ஆசிரியர் பொறுப்பில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் அமர்த்தப்பட்டதன் பின்னர்தான்! அறக்கட்டளை வென்றது. அய்யாவின் நோக்கம் நின்றது; நிறைவேறியது! திராவிடச் சமுதாயத்தை மானம் உள்ள சமுதாயமாக ஆக்கி உயர்த்திடும் பணியில் அறக்கட்டளை செய்துவரும் பணி அளப்பரியது. அறிவுள்ள சமுதாயமாக திராவிடர் சமுதாயத்தை ஆக்கிட எவ்வளவு கல்விக்கூடங்கள்! பல்கலைக்கழகங்கள்! எல்லாம் ஆசிரியரின் தொண்டால் _ உழைப்பால் _ தொலைநோக்குத் திட்டங்களால்! நாடு அறிகிறது தந்தை பெரியாரின் நோக்கம் ஈடேறி வருவதை!

பரிணாம வளர்ச்சி

வரவேற்கிறேன் என்று எழுதிப் பதவிப் பிரமாணம்(!) செய்துவைக்கப்பட்ட ஆசிரியரின் தலைமையில் விடுதலை பெற்ற மாற்றங்கள் _ வளர்ச்சி எத்தகையது! நூலகத்தில் அமர்ந்து விடுதலை தொகுப்புகளை ஆரம்பமுதல் ஆண்டுவாரியாகப் பார்த்தாலே புரியும்.

கையால் அச்சுக்கோர்த்து, காலாலும் கையாலும் டிரெடில் அச்சியந்திரத்தை இயக்கி, அச்சிடப்பட்டுவந்த ஏட்டில் எழுத்துக்களைப் படித்துப் புரிந்துகொள்வது என்பதே ஒரு தனிக்கலை!

அந்த நிலையிலும், அறிவு ஆசான் தந்தை பெரியாரின் பிறந்த நாள் நம் குலமான மீட்பரின் பிறந்த நாள் _ நம் அனைவரின் மகிழ்ச்சிப் பெருநாள் _ என்ற வகையில் சிறப்பு மலர் வெளியிட்டுத் தலைவரின் காலடியில் காணிக்கையாக வைத்து நம் நன்றியுணர்ச்சியைக் காட்டிடத் தொடங்கியதும் இவர் காலத்தில்தான்!

ஏட்டின் உள்ளடக்கத்தில்தான் எத்துணை மாற்றங்கள்! அமைப்பு முறையில் எழில்கூட்டும் தோற்றங்கள்! படிநிலை வளர்ச்சியைப் பார்த்தால் மனம் பரவசம் கொள்ளும்.

பெரியாரின் பேச்சைப் படித்தும் கேட்டும் மனதில் இருத்திக் கொண்டோர் ஏராளம்! அக்காலகட்டத்தில் இல்லாமல் பின்னாள்களில் பிறந்தவர்களும் அவற்றைப் புரிந்துகொள்ளும் வகையில் அப்பொன்மொழிகளை ஒவ்வொரு நாளும் விடுதலை தாங்கி வருவதும் இவர் வந்த பிறகுதான்!

பெட்டிச் செய்தியின் பெருமை

பெட்டிச் செய்திகள் எனும் முறை படிப்போரின் கவனத்தை ஈர்த்துக் கருத்தில் கொள்ள வைக்கும் முறை! அதனை விடுதலை கையாள்வதே சிறப்பான முறையில்! சுருக்கமாக, ஆனால் சுறுக் எனத் தைக்கும் வகையில் அவை அமைந்து அறிவு கொளுத்தி வருகின்றனவே!

இது உண்மையா எனும் தலைப்பில் வரும் செய்திகள் விடுதலையின் தனிப்பெரும் சிறப்பு! உண்மையான தனிப்பெரும் சிறப்பு! உண்மையான செய்திகளையே வெளியிட்டு, தொடர்புடைய உயர் பதவியாளர்களை, முதலமைச்சரை இதனைக் கவனிக்கச் செய்து பரிகாரம் தேடும் பாங்கு ஆசிரியரின் தனிச்சிறப்புப் பணியின் அங்கம். இத்தலைப்பின் கீழ் வந்த செய்திகள் சமுதாயத்திற்கு ஏற்படவிருந்த பல கேடுகளைக் களைந்துள்ளன; தடுத்துள்ளன; அறியாமல் கேடுவிளைவிக்க எண்ணிய ஆட்சியாளர்களைத் தவிர்க்கச் செய்துள்ளன.

ஆசிரியரின் மயிலாட்ட பாணியைக் காப்பி அடிக்கும் வான்கோழிகள், மெய்யாலுமா என்று போட்டுத் தம் மன அரிப்பைத் தேய்த்துக் கொள்ளும் செயலை இந்நேரத்தில் நினைக்காமல் இருக்க முடியவில்லையே!

அகன்ற ஏடு

ஏழு பத்தி ஏடு இன்று எட்டுப்பத்தி ஏடாக ஆகி எட்டுத்திக்கும் செல்கிறது. மிக நவீனமான _ தானியங்கி அச்சு எந்திரங்கள் பொருத்தப்பட்டு _ பளிச்சென அச்சாகிறது. பல முன்னணி ஏடுகள் இங்கே அச்சிடப்பட்டு, வெளியிடப்பட்டதும் உண்டு! இங்கே இருப்பதைப் போன்ற எந்திரங்களை வாங்கிப் பொருத்திய பின்னரும் எழிலாக அமையவில்லையே என்று ஏக்கம் கொள்வோரும் உண்டு!

எல்லாச் செய்திகளும்

அறிவியல் செய்திகளை வாரம் ஒருநாள் மட்டும் ஊறுகாய் போலத் தரும் ஏடுகளுக்கு மத்தியில், நிறையச் செய்திகளை நாள்தோறும் தரும் ஏடாக விடுதலை வருகிறது. 130 கோடியைத் தொடும் மக்கள் தொகை இருந்தும் மூன்றாம் நிலைப் பதக்கங்களே எட்டாத நிலையாக உள்ள இந்தியாவில் விளையாட்டிற்கான செய்திகளை நிறைய வெளியிடுகிறது. உடம்பார் அழியின் உயிரார் அழிவர் _ எனவே உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே என்றாற்போல _ உடல் வளர்க்க விளையாட்டோடு, அரிய மருத்துவக் குறிப்புகள் அடங்கிய செய்திகளின் சிறப்பும் தனிதான்!

ஒரு காலத்தில் கழகச் செய்திகளை மட்டுமே தெரிந்து கொள்வதற்காகப் படிக்கப்பட்ட ஏடு என்றிருந்த நிலை மாறி, உள்ளூர்ச் செய்திகள், தமிழ் நாட்டுச் செய்திகள் மட்டுமே வரும் என்கின்ற நிலையும் மாறி, இந்தியச் செய்திகளும் உலகச் செய்திகளும் நிறைய வருகின்றன எனும் மாற்றமும் ஏற்றமும் பெற்றிருப்பதும் இவர் காலத்தில்தான்!

வாழ்வியல் சிந்தனைச் சிறப்பு

கடந்த பல ஆண்டுகளாக விடுதலையின் இரண்டாம் பக்கத்தில் வரும் சிந்தனைத் திரட்டு (ஆசிரியரின் முதல் நூலின் தலைப்பு இது _ தந்தை பெரியாரின் கருத்துக் கருவூலத்தைத் தலைப்புகளின் கீழ் தொகுத்து வெளியிடப்பட்ட நூல்) பற்றிப் பேசாதவர்களே தமிழ்பேசும் மக்களிடை இல்லை. அந்தச் சிந்தனைகள் வாழ்வியல் சிந்தனைகள் எனும் தலைப்பின் கீழ் வெளிவந்து நூலாகப் பதிப்பிக்கப்பட்டுப் பல தொகுப்புகளாகப் பல பதிப்புகளாகத் தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் இடம் பெற்றிருக்கும் மாட்சி எண்ண இயலாதது; சொல்லி மாளாதது! மாற்றுக் கருத்தும் சிந்தனையும் செயலும் கொண்டவர்கள் கூட வியந்து பாராட்டிப் பதிவு செய்துள்ளதை நூல் படிக்கும் பழக்கம் உள்ளோர் அறிவர். நூல் மதிப்புரை எழுதும்போது ஆனந்தவிகடன் பதிவு செய்துள்ள கருத்துகள் _ மாற்றுக் கருத்து கொண்டோரும் மதிக்கும் வண்ணம் ஆசிரியர் உயர்ந்துள்ளார் என்பதை எண்பிக்கும் எழுத்துகள்!

உலகச் சாதனையாளர்

ஆச்சாரியார், காமராசர், தொடக்ககால தி.மு.க.வின் சட்டமன்ற செயல்பாடுகள், பார்ப்பன ஆதிக்க நீதித்துறைச் செயல்பாடுகள் போன்ற நிரடான பல தலைப்புகளில் ஆசிரியரின் கருத்து வளமும் எழுத்து வன்மையும் நாம் அறிந்தவையே! கனிவு, கண்டிப்பு, கிண்டல், கேலி ஆக எல்லாம் கலந்த அவரின் எழுத்து பலரையும் கவர்ந்தவையே! ஆனால் நாளேட்டின் ஆசிரியராக _ நாட்டு நடப்பு பற்றிய கருத்துகளை தமது தனிப்பட்ட கருத்துகள் அல்ல _ தம் தலைவரின் கருத்துகளை, தமது கழகத்தின் கருத்துகளை உய்த்து உணர்ந்து எழுதுவது முக்கியமானது. உடனுக்குடன் பதிவு செய்வது எவ்வளவு சிரமமானது என்பது பத்திரிகைத் துறையில் இருப்போர்க்குத் தெரியும். பிளேடின் கூரிய முனையின் மேல்கூட நத்தை காயம்படாமல் நடக்கும் என்பார்கள். அதைவிட இலாவகமாகச் செயல்படவேண்டிய நாளேட்டின் ஆசிரியப் பணியைக் கடந்த 50 ஆண்டுகளாகச் செய்து வெற்றியை ஈட்டியிருப்பவர். நாளேட்டின் ஆசிரியராகத் தொடாந்து 50 ஆண்டுகள் செயல்பட்டு உலகச் சாதனையாளராக உயர்ந்து இருப்பவர் நம் ஆசிரியர்.

பெரியார் என்றால் நம் அறிவாசான்தான் _ அறிஞர் என்றால் அண்ணாதான் _ புரட்சிக்கவிஞர் என்றால் பாரதிதாசன்தான் என்பதைப்போல, ஆசிரியர் என்றால் மானமிகு கி.வீரமணி அவர்கள்தான் எனத் தமிழ்கூறு நல்லுலகம் அவரை அடையாளங்காணவும் அடையாளங் காட்டவும் தொடங்கிப் பல ஆண்டுகள் ஆகிவிட்டன.

பன்முகப் பெருமைகள்

மேடைப் பேச்சாளராக _தந்தை பெரியாரின் கருத்துகளுக்கு விரிவுரை பொழிப்புரை, பதவுரை தரும் மேடைப் பேச்சாளராகத் தோன்றி _ பின்னர் அவரின் கருத்துகளுக்கு பாஷ்யகாரராக (வைணவ மொழியில் உரையாசிரியர்) மேடையிலும் எழுத்துலகிலும் விளங்கிப் பின்னர் பெரியார் தந்த புத்தியே போதும் என்கிற அளவில் அந்த ஜெனரேட்டரின் உதவியால் அறிவுக்கருத்து விளக்கம் தரும் ஆசிரியராகப் பரிணமித்துப் பரிமளிக்கும் ஆசிரியர் அவர்களின் பணியை விவரிக்க எனக்குத் தகுதி போதாது. என் 15ஆம் வயது முதல் அவரால் ஆற்றுப்படுத்தப்பட்டு வரும் மாணவன் மட்டுமே, நான்!

நான் பட்டம் பெற்றவன். நான்தான் பெரியாரின் கருத்துகளுக்குத் தோற்றுவாய்; ஊற்றுக்கண் என்று சில குருவிக் கரம்பைக்காரர்களால் _ கழிஞ்சூர்க்காரர்களால் தூக்கி நிறுத்தப்படுவதைப் போல அல்லாமல் நித்திய புகழுக்குரியவராக _ நிலைத்த பெருமைக்குரியவராக _ உண்மையான பெரியாரின் மாணாக்கராக எஞ்ஞான்றும் திகழ்வதில் நிம்மதியும் பெருமையும் கொள்பவராகத் திகழ்பவர் நம் ஆசிரியர்.

எட்டுப் பத்தி ஏடாக மாறியதோடு, எட்டுப் பக்க ஏடாகவும் வளர்ந்துள்ளது விடுதலை! ஆறு பக்கங்களாக மாற்றிப் பின்னர் எட்டுப் பக்கங்களாக வளர்த்துள்ளவர் ஆசிரியர். திருச்சியில் ஒரு பதிப்பு வெளிவரும் அளவுக்கு விடுதலையின் ஆளுமைப் பரப்பை அதிகமாக்கியுள்ளார். அதன் வளர்ச்சியின் ஒவ்வோர் அங்குலத்தையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கி உருவாக்கி வளர்த்துள்ளார். 1962இல் அவரிடம் விடுதலையை ஒப்படைத்தபோது, தந்தை பெரியார் எந்த நம்பிக்கையை வைத்துக் கொடுத்தாரோ, அந்த நம்பிக்கையைப் பொய்க்காமல் மெய்ப்பித்துள்ளார்.
நடப்பே மாறியதே

நட்டத்திலே நடந்து வரும் நாளேடு என்ற நிலையில் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது. நட்டத்திற்காக நடத்தப்படும் ஏடு என்று தந்தை பெரியார் குறிப்பிட்ட ஏடு.

இலட்சியத்திற்காக நடத்தினார் _ இயக்கம் வளர்வதற்கும் இலட்சியம் பரவுவதற்கும் ஏடு அவசியம் என்பதை அறிந்திருந்த காரணத்தால் அய்யா விடாப்பிடியாக, நட்டம் வந்தபோதும் நடத்தினார். அந்த நிலை இன்று மாற்றப்பட்டுள்ளது. மிட்டா மிராசுகள், ஆலை அதிபர்கள், அரசியல் தலைவர்கள் எனப்படுவோரின் ஆதரவு கொண்டா? அல்ல, அவரது உழைப்பால் _ ஊதியம் பெறாத ஊழியத்தால்! விடுதலை அவர் நேசிக்கும் ஏடு மட்டுமல்ல, அவரின் சுவாசமே அதுதான்! விளம்பரங்கள் ஏதும் வரப்பெறாத நிலையிலும் முழுக்க முழுக்கச் செய்திகளின் திரட்சியாக ஏடு வருவதே அதிலும் வெற்றிகரமாக வருவதே _ அவரின் தனித்த திறமையினால்தான்!

உலகின் ஒரே பகுத்தறிவு நாளேடு! அதுவும் 77 ஆண்டுகளாக நடைபெறு-ம் ஏடு! அதன் ஆசிரியராக அய்ம்பது ஆண்டுக்காலமாக நம் ஆசிரியர்! இன்னும் 50 ஆண்டுக்காலம் ஆசிரியராக அவரே தொடரவேண்டும் என்பது நம் ஆசை! இன்னும் பல சிறப்புகளை ஏடு பெற்றிட வேண்டும். திராவிடத் தமிழ்ச் சமுதாயத்தின் ஏற்றத்துக்கு எழுதிடவேண்டும். அதனால் நம் வாழ்வு வளம்பெற வேண்டும். இதுவே பல இலட்சக்கணக்கான இன உணர்வாளர்களின் வேணவா!

– சு.அறிவுக்கரசு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *