வரலாறு தவிர்க்க இயலாத நாளிதழ்

ஆகஸ்ட் 01-15

வரலாறு எழுதுவோர்க்கும், வரலாற்றைப் படிப்போர்க்கும் அடிப்படையான தகவல்களை அளிப்பவை நாளிதழ்கள்தான். ஒவ்வொரு நாள் உலகின் நிகழ்வுகளையும் பதிவு செய்யும் நாளிதழ்கள் செய்திகளை செய்திகளாக மட்டுமே தருகின்றன. ஆனால், இவற்றில் வேறுபட்டு நிற்கிறது விடுதலை நாளிதழ்.எப்படித்தெரியுமா? விடுதலை ஏடு வரலாற்றைப் படைத்த ஏடு.

தமிழக வரலாற்றை மட்டுமல்ல, இந்திய வரலாற்றை எழுதும்போதும் விடுதலையைத் தவிர்த்துவிட்டு எழுதிவிடமுடியாது. 1935 ஜூன் 1 ல் விடுதலை தொடங்கியதிலிருந்து அரசியல், சமூகச் சிக்கல்களில் முக்கியக் கருத்துகளை அளித்த ஏடாக விடுதலை விளங்குகிறது. 20 நூற்றாண்டை மாற்றி அமைத்த மானுட நேயர் பெரியாரின் கொள்கைக் கருவூலமாக அவரது கருத்துக் களஞ்சியங்களைத் தாங்கி விடுதலை வாழ்ந்துள்ளது; இன்னும் வாழ்ந்து வருகிறது.அய்யாவுக்குப் பின்  ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுதலைப் பொறுப்பேற்ற பின்னர் விடுதலை படைத்த வரலாறுகளை  பட்டியல் போட்டால் அது ஆய்வேட்டை விட அதிகமாகலாம். எனவே, சிலவற்றை பருந்துப் பார்வையால் பார்க்கலாம்.

 

1976 ல் நெருக்கடி கால அடக்குமுறையை எதிர்கொண்ட ஓரிரு நாளிதழ்களில் விடுதலை முக்கியமான ஏடு.அக்காலகட்டத்தில் தமிழர்களின் ஜனநாயகக் குரலை எழுப்பி போராடி வலம் வந்தது விடுதலை. விடுதலையை முடக்க முயற்சித்த அன்றைய மத்திய அரசின் பார்ப்பனீய நிர்வாகத்தின் நேர் நின்றது. ஒருநாளும் ஓயாமல் குரலை ஓங்கி ஒலித்தது. 1977 க்குப் பிறகு இந்திய அரசியலை மாற்ற முனைந்த முக்கிய நிகழ்வு மண்டல் குழு அறிக்கை. பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைக் குரலாக மண்டல் குழு வெளிப்பட்டது. அந்த அறிக்கை அளித்த பரிந்துரையான 27 விழுக்காடு இட ஒதுக்கீட்டை நிரைவேற்ற விடுதலை எழுப்பிய குரலை இந்திய வரலாறு மறக்குமா? மறுக்கத்தான் முடியுமா? மண்டல் குழு பரிந்துரைக்காக விடுதலை எழுதிய எழுத்துகள் சீனப் பெருஞ்சுவரை விட நீளும் அல்லவா.

அடுத்த காலக்கட்டம் மிக முக்கியமானது. ஆம்… நம்முடைய தொப்புள்கொடி உறவான ஈழத்தமிழர்கள் கொல்லப்பட்ட கோர நிகழ்வு. 1983 லிருந்து தமிழர்கள் அகதிகளாக வந்த காலம். அப்போது அவர்களுக்காக இனமான முழக்கம் எழுப்பிய ஏடு விடுதலை. அதுமட்டுமல்ல அந்தப் போர்க்களத்தில் நின்ற போராளிகளின் முகவரியே விடுதலை அலுவலகம்தானே. ஊர்வலங்கள், மாநாடுகள், உரிமை முழக்கங்கள், ஈழம் தமிழர் தாயகம் என்ற ஆதாரபூர்வ தர்க்கங்கள், ஈழத்தில் நடக்கும் இனப்படுகொலைகளை அம்பலப்படுத்திய துணிச்சல், போராளிகளின் குரலை எதிரொலித்த எழுதுகோள் அத்தனையும் கொண்டிருந்தது விடுதலை மட்டுமே அல்லவா.

1992 பாபர் மசூதி இடிப்பு நிகழ்ந்த பின்னர் இந்தியாவின் அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதச்சார்பின்மையைக் காக்கும் கேடயாமாக செயல் பட்டுவரும் நாளேடு விடுதலைதானே.அன்று தொடங்கி இன்று வரை இந்திய வரலாற்றில் இந்துத்துவாக்களின் வன்முறைகள்,பார்ப்பனீய பயங்கரவாதச் செயல்கள், அதன் அரசியல் வடிவமான பா.ஜ.க.வின் தில்லுமுல்லுகள் என எழுதிக்குவித்த ஆதாரக்குவியல்கள் ஏராளம்… ஏராளம்.

அய்யா பெரியார் தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் கொண்டு வந்தார். அவரே தன்னுடைய விடுதலையில் அதனை நடைமுறைப்படுத்தினார். அதன் தொடர்ச்சியை ஆசிரியர் மேற்கொண்டார். அறிஞர் குழுவை உருவாக்கினார்.அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தார். அதன் முடிவுப்படி உகர ஊகார எழுத்துகளைக் குறைக்க புதிய வடிவங்கள் உருவாக்கப்பட்டன. அதனை விடுதலை ஏட்டிலேயே ஒரு தனிப் பத்தியாக தினந்தோறும் வெளியிடப்பட்டது. (தற்போது புதிய கணினி மென்பொருளுக்காக ஆய்வில் உள்ளது) 2000 க்குப் பின் நம் வாழ்வில் தவிர்க்க முடியாததாக ஆகிவிட்ட கணினியின் அறிவுச்செல்வங்களை மட்டுமல்ல, இணையம் தரும் அறிவியல் களஞ்சியங்களை பகுத்தறிவுப்பாதையில் தினந்தோறும் அள்ளி வழங்கும் ஏடாக மணம் வீசுகிறது.   இப்போது சொல்லுங்கள்…

காலம் தந்த செய்திகளை வழங்கி,காலத்தை உருவாக்கும் கருத்துகளைத் தரும் விடுதலை நாளிதழை வரலாற்றால் தவிர்க்க முடியுமா? எடுத்துச் சுவைத்தது ஒரு சில துளிகளே… அள்ளிப் பருக விடுதலையில் இருக்கிறது ஒரு கடல்.

– மணிமகன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *