மீண்டும் நீளும் ஜாதி வால்

மார்ச் 16-31

–  இளையமகன்

 

ஈ.வெ.ராமசாமி நாயக்கர் என்ற நான் இனிமேல் ஈ.வெ.ராமசாமி, சவுந்தரபாண்டியன் நாடார் என்ற நான் இனிமேல் சவுந்தரபாண்டியன் என்று தொடங்கிய குரல்கள், ஆயிரமாயிரம் பேர்களால் தங்கள் பெயரிலிருந்த ஜாதிப் பட்டத்தைத் தூக்கிப்போட்டு பிரதிபலிக்கப்பட்ட போது ஒரு பெரும் சமூகப் பண்பாட்டுப் புரட்சிக்கான வித்து ஊன்றப்பட்து. 1929 செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் ஜாதிப்பட்டங்களைத் துறக்க வேண்டும் என்று எடுக்கப்பட்ட தீர்மானத்தின் வெற்றியை இன்றும் நாம் அனுபவித்துக் கொண்டிருக்கிறோம்.

பள்ளிகளிலும், அலுவலகங்களிலும் ஜாதிப் பெயர்களால் தங்களை அழைத்துக்கொள்வதும், ஜாதிப் பெயரைத் தங்கள் பெயரோடு இணைத்துக் கொள்வதும் பெருமையாகக் கருதப்பட்ட காலத்திலிருந்து, ஜாதிப் பெயரோடு வெளியில் அழைத்துக் கொள்வது அசிங்கமான ஒன்று என்ற மனநிலையை உருவாக்கியது திராவிட இயக்கம் மெல்லமெல்ல மக்கள் மனங்களில் செய்த புரட்சியின் விளைவு. சமூக அந்தஸ்துக்காக திருமண அழைப்பிதழ்களில் ஜாதிப் பெயரொட்டு சேர்த்துக் கொள்ளுதலும் படித்த மக்கள் பெருகியிருக்கிற சூழலில் மறைந்து வருவதைக் காண முடிகிறது.

மற்றபிற மாநிலங்களிலெல்லாம் மக்கள் இன்றைக்கும் Surname என்று சொல்லி ஜாதிப் பெயரோடு திரிந்து கொண்டிருக்கும்போது, தமிழ்ச் சமூகத்தின் மாற்றத்தை வட இந்தியர்களும், பிற மாநிலத்தவரும் வியப்புடன் பார்க்கிறார்கள். ஆனால், இந்த நிலைக்கு மெல்ல மெல்ல ஆபத்து தோன்றி வருவதைக் கவனிக்கத் தவறினால் மீண்டும் நாம் ஜாதிப் பெயரால் அடையாளம் காணப்படும் காட்டுமிராண்டி நிலைக்குச் சென்றுவிடுவோம்.

திரைப்படங்களிலும் ஊடகங்களிலும் புகழ்பெற்றுள்ள பிற மாநிலத்தவர்களின் நடவடிக்கையால்தான் மீண்டும ஜாதிவால்கள் தலையெடுக்கத் தொடங்கியுள்ளன. சுரேஷ்மேனன், ராஜீவ்மேனன், உன்னி மேனன், நவ்யா நாயர், கீர்த்தி ரெட்டி என்று எட்டிப்பார்த்து இப்போது, கௌதம் வாசுதேவமேனன், நரேஷ் அய்யர், ஜனனி அய்யர், அனுஜா அய்யர், விக்னேஷ்மேனன், ராஜேஷ் யாதவ், ராம்நாத் ஷெட்டி என்று பட்டியல் மெல்ல மெல்ல நீண்டு கொண்டிருக்கிறது. மலையாளிகளின் மேனன், நாயர் பெயர்களில் துளிர்விட்ட தைரியம் அய்யர்களில் வெளிப்படத் தொடங்கி, ஆண்கள் மட்டுமல்லாமல் பெண்களும் ஜாதி வாலைக்கட்டிக் கொள்வது நடந்து, சூத்திரத் தமிழர்கள் வடநாட்டு உச்சரிப்போடு தங்கள் ஜாதிப் பெயரை புதுப்பித்துக் கொண்டிருக்கிறார்கள். கோன் (அ) கோனார் என்பது இழிவென்று கருதியோ என்னவோ யாதவ் ஆகி விட்டார் ஒருவர். செட்டி _ ஷெட்டி ஆகிவிட்டார் இன்னொருவர். இப்போக்கு ஸ்டைலாக தங்கள் பெயரோடு ஜாதிப் பெயரைச் சேர்த்துக் கொள்ளும் மனநிலையை இன்றைய போலச் செய்தல் தலைமுறைக்குத் தந்திருக்கிறது.

இத்தகைய போக்குக்கு இன்னொரு பக்கம் பெரும் ஊக்கத்தைத் தருவதும், ஊடகமாய் அமைவதும் அண்மைக் காலத்திய இணைய, சமூக வலைத்தளங்கள் என்ற உண்மை இதன் தீவிரத்தை உணர்த்தும். சமூக வலைத்தளங்களில் தன் விவரம் கேட்கப்படும் போது, பெயர் என்று மட்டும் கேட்கப்படாமல் மேலை நாடுகளின் பாணியில் முதல் பெயர் (First Name), இடைப் பெயர் (Middle Name), கடைப் பெயர் (Last Name) என்றோ, அல்லது வடநாட்டுப் பாணியில் முதல் பெயர் (First Name) பின்(குடும்பப்) பெயர் (Sur Name) என்றோ கேட்கப்படுகிறது.

கார்த்திக் என்ற ஒற்றைப் பெயரோடு உலாவருபவருக்கு மூன்று பெயர்களாக எப்படிப் பிரித்து எழுதுவது என்பதில் ஏற்படும் அறியாமை அவரை Surname   அல்லது Last Name என்ற கட்டத்தில் தனது ஜாதிப் பெயரைப் போட வைக்கிறது. ஆனால், கடவுச் சீட்டுகளிலும், பன்னாட்டு நிறுவனங்களிலும் பயன்படுத்தப் படுவதைப் போல தன் தந்தையின் பெயரை தன பெயருக்குப் பின்னால் சேர்க்கலாம் என்பது புரிவதில்லை. (இதில் தாயின் பெயரையோ, உங்களுக்குப் பிடித்த பெயரையோ, புனைப் பெயரையோ சேர்த்தாலும்கூட பெரும்பாலான வலைத்தளங்கள் எந்தக் கேள்வியும் கேட்பதில்லை).

இதில் இருவகையினர் உள்ளனர். உண்மையிலேயே அறியாமையினால் தங்கள் ஜாதிப் பெயரைப் பயன்படுத்துவோர். அவர்களுக்கு நம் சமூக வரலாறும் தெரிவதில்லை. சர்நேமுக்கு விளக்கமும் தெரிவதில்லை. இவர்களுக்கு எடுத்துச் சொல்லும்போது புரிந்துவிடும். பேஸ் புக் போன்ற சமூகத் தளங்களில், ஜாதிப் பெயரொட்டு இருப்பவர்களை நண்பர்களாக இணைத்துக் கொள்வதில்லை என்று முடிவெடுத்து, அதை அவர்களுக்கும் தெரிவிக்கும் நடவடிக்கையில் முற்போக்குச் சிந்தனையுடையோர் செயல்பட்டபோது இந்த அறியாமையாளர்களை மாற்ற முடிந்தது.

ஆனால், இன்னொரு தரப்பு- – வீம்புக்குச் செய்வோர். அப்படி அண்மையில் நடந்த நிகழ்வு. தமிழ்த்தேசியம் பேசும், பத்திரிகையாளர் ஒருவர் தன் பெயரோடு தன் தந்தையாரின் பெயரும் ஜாதிப் பெயரும் இருக்குமாறு அய்யநாதன் காசித்தேவர் என்று பதிவு செய்திருந்தார். இதுகுறித்து அவருக்கு தகவல் தெரிவித்து கடிதம் எழுதினார் கார்ட்டூனிஸ்ட் பாலா. ஆனால், அதற்கு பதில் எழுதிய அந்தத் தமிழ்த்தேசியர் அதுதான் தன் தந்தையின் பெயர் என்றும், அதை மாற்றப் போவதில்லை என்று தெரிவித்துவிட்டார். இன்னொருமுறை பாரதிராஜாவின் வேதம் புதிது வசனத்தைத்தான் இவர்களுக்குச் சொல்லவேண்டும். பாலுங்கிறது உங்க பேரு… பின்னாடி இருக்கிற தேவர்ங்கிறது படிச்சு வாங்கின பட்டமா? என்று! சரி, தமிழ்த் தேசியர்களைப் புரிந்துகொள்ள இது ஒரு வாய்ப்பு.

இதேபோன்ற பதிலைத்தான் இயக்குநர் கௌதம் வாசுதேவமேனனும் சொன்னார் முன்பு _ மறைந்த தனது தந்தைக்கு மரியாதை செய்யவே அவ்வாறு செய்துள்ளதாக! கௌதம் ஆக இருந்தவர் கௌதம் வாசுதேவ் ஆக மாறி, தந்தைக்குப் பெருமை சேர்ப்பதில் நமக்கொன்றும் மாற்றுக் கருத்தில்லை. மகிழ்ச்சியே! ஆனால், பண்பாட்டு ரீதியாக இந்தப் பெயர் மாற்றம் ஏற்படுத்தும் தாக்கத்தை அவர் புரிந்து செயல்பட வேண்டாமா? அந்த பொறுப்புணர்வு அவருக்கு வேண்டாமா?

இந்தப் போக்குகளின் நீட்சியாக, அண்மையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது விக்கிபீடியா தளத்தில் வந்த விளம்பரங்கள்! நான் விக்கிபீடியா வளர உதவுகிறேன். நீங்களும் உதவலாமே என்று பலரும் சொல்வதாக விளம்பரம் அத்தளத்தில் வெளியாகும். இந்தியாவைச் சேர்ந்தவர்கள், தமிழகத்தைச் சேர்ந்தவர்களின் பெயர்கள் கார்த்திக் நாடார் என்றும், அக்ஷயாஅய்யங்கார் என்று ஜாதிப் பெயரோடு குறிப்பிடப்பட்டு விளம்பரம் வந்தது. பின்னர் அது எதிர்ப்புக்குள்ளாகியதால் விக்கிபீடியாவின் கவனத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இது மிகவும் கவனத்துடன் முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டிய, உரிய விளக்கங் களுடன் விழிப்புணர்வு ஊட்டப்பட வேண்டிய, இளைஞர்களைக் கவனத்தில் கொண்டு சரிசெய்யப்பட வேண்டிய ஒரு பழக்கமாகும். சுருட்டி வைக்கப்பட்டால் ஜாதி வால்கள் என்றைக்காவது நீளும். வெட்டி எறிந்தால் ஒழிய தீர்வு வராது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *