அய்யாவின் அடிச்சுவட்டில்….

ஆகஸ்ட் 16-31

கிளர்ச்சிக்குப் பெயர் கொடுங்கள் – கி. வீரமணி

மதச்சார்பின்மை, செக்குயூலரிசம் என்பது எவ்வளவு பகிரங்கக் கேலிக் கூத்தாக்கப்படுகிறது பார்த்தீர்களா? கேட்டால் மிகவும் போக்கிரித்தனமானதொரு விளக்கம் மதச்சார்பின்மைக்கு அவர்களால் அளிக்கப்படுகிறது.

மதச்சார்பின்மை செக்குயூலரிசம் என்றால் மதமற்றது என்பது பொருள் அல்ல; எல்லா மதங்களையும் ஒன்று போல் பாவிப்பது என்று பொருள் என்று கூறுகின்றனர்.

தந்தை பெரியார் அவர்கள் இதற்கு அருமையானதொரு பதிலைச் சொன்னார்கள்.  கன்னி என்பதற்குப் பொருள் என்னவென்றால், ஆண்சேர்க்கை ஏற்படாத பெண் என்பதல்ல; எல்லா ஆண்களையும் சமமாகப் பாவிக்கும் பெண் என்றால் எவ்வளவு கேவலமோ, அது போன்றதே மதச்சார்பின்மை என்பதற்கு எல்லா மதங்களையும் ஒன்றுபோலவே பாவிப்பது என்று பொருள்கூறுதலும்!

வெள்ளைக்காரன் தந்த அந்தக் கருத்துக்கு விளக்கம் ஆங்கில அகராதிகளில் அல்லவா தேடப்பட வேண்டும்?  மதச்சேற்றைச் சந்தனமாகக் கருதும் ஆட்சியாளர்கள் அவரவர் இஷ்டம் போல் வியாக்யானம் செய்வது எவ்வளவு பெரிய மோசடி!

எனவே, இவற்றைச் சுட்டிக்காட்டி, இந்தப்படிக்கான இழிவுகள் நீக்கப்பட வேண்டுமானால் இந்திய அரசியல் சட்டம் தீவிரமான வகையில் திருத்தப்பட வேண்டும் என்றுதான் நாம் கோருகிறோம்.  24 ஆண்டுகளில் 30 அரசியல் சட்டத் திருத்தங்களைப் பெற்றிருப்பதுதான் அந்தச் சட்டம்.  எனவே, அது திருத்தப்பட முடியாத சட்டம் அல்ல! அதைச் செய்ய டில்லிப் பேரரசு மறுக்குமானால், அவ்வாட்சியை விட்டே விலக வேண்டும் என்பதாக பிரிவினை கேட்க வேண்டியிருக்கும் என்று நாம் கூறுகிறோம்.

30.11.73 அன்று உள்துறை அமைச்சர் பார்லிமெண்டில் கூறிய பதிலுக்குப் பின்னர் தந்தை பெரியார் அவர்கள் விடுத்த ஓர் அறிக்கையில் இந்தப் (அரசியல்)  பூனைகள் கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டுவிடுமா? என்ற தலைப்பில் எழுதிய ஓர் அறிக்கையில்,

இந்த நிலையில் இதை அறிந்த இந்திய அரசாங்கம் எங்கள் பிரச்சினையைப் புரிந்துகொண்டதாகக்கூட, தெரிந்து கொண்டதாகக்கூட காட்டிக்கொள்ளாமல், பிரிவினை கேட்கிறேன், நடவடிக்கை எடு என்று தங்களுக்குள்ளே பேசிக் கொண்டும், பத்திரிகை நிருபர்களுக்குச் சேதி தெரிவித்துக் கொண்டும் இருந்தால் பிரச்சினைகள் தீர்ந்துவிடுமா என்று கேட்கிறேன்  என்று கேட்டார்களே, அதற்கு இன்றுவரை டில்லி கூறிய பதில் என்ன?  காட்டிய சமிக்ஞைதான் என்ன? ஒருமைப்பாடு உபதேசிகளுக்குச் சொல்லுகிறோம்.  அது என்ன ஒருவழிப் பாதையா?  மக்களில் பிரிவினை, மேல் கீழ் என்று கூடாது என்று கூறுகிறோம். அது எங்களால் முடியாது என்றால், மண்ணைப் பிரித்தாவது, எங்கள் மக்களை ஒன்றாக்குவோம் என்று கூற நினைப்பது எவ்வகையில் சமூக நீதிக்குப் புறம்பானது?  மனிதாபிமானிகள் பதில் கூறட்டும்.

‘Only Shudras and destroy the chathuvarna’ என்று ஒருமுறை டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டார்.  சூத்திரர்களால்தான் நாலு வருணத்தை அழிக்க முடியும்.  அந்தக் காலகட்டம் வரலாற்றில் நெருங்கிவிட்டது தோழர்களே!  எந்த வித்தியாசத்திற்கும் தயாராக வந்துள்ள புடம்போட்ட தங்கங்களான தங்களையெல்லாம் வரவேற்பதில் பெருமகிழ்ச்சி அடைவதோடு, டில்லி இந்த உணர்வைப் பரிபூரணமாகப் புரிந்து கொள்ள சட்டப் புத்தகத்தை அது புரட்டுவதில் பயனில்லை, சரித்திரப் புத்தகத்தைப் புரட்டினால் பலன் உண்டு!  அண்டை நாடுகள் அண்மைக்காலச் சம்பவங்கள் அதில் ஏராளம் தென்படும்.

பேரறிஞர் அண்ணா அவர்கள் மாநிலங்களவையில் 25.1.1963இல் பிரிவினை கேட்டோரைத் தேர்தலில் நிற்க முடியாமல் செய்த அரசியல் சட்டம் வரப்பட்டபோது விடுத்த எச்சரிக்கை இப்போதும் நினைவுகூறத்தக்கதாகும்.

முதலாவது, நாங்கள் ஏன் பிரிவினை கேட்கிறோம் என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்க்கவில்லை, இரண்டாவது, எங்களைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றுகூட நீங்கள் முயற்சிக்கவில்லை.  மூன்றாவது, நீங்கள் எங்களுக்கு வேறு மார்க்கத்தைச் சொல்லவில்லை.  நான்காவதாக, மக்களை உங்கள் நம்பிக்கைக்கு உகந்தவர்களாகக் கொள்ளவில்லை.  ஆகவே, பிரிவினைப் பிரச்சாரத்திற்கு நீங்கள் விதிக்கும் தடைகள் நியாயத்திற்குப் புறம்பானதாகும் என்றார்.  நியாயம் வழங்க நினைத்தால், ஜாதி ஒழிப்பு சட்டத்திற்கு டெல்லி அரசு ஆயத்தப்படுத்தட்டும்.

தமிழர்களின் தனிப்பெரும் தலைவர் தந்தை பெரியார் அவர்களது கட்டளை கேட்டு களத்தில் இறங்கிட, இனத்தின் இழிவினைத் துடைத்திடத் தயாராகும் தன்மானச் சுடர்களே, தமிழர் சமுதாய விடுதலை விடிவெள்ளிகளே, உங்களை வருக வருகவென வரவேற்கிறேன்.  அய்யாவின் கட்டளையை ஏற்று அரும்பணி முடிப்போம் எனச் சூளுரை எடுத்திடுவோம்.

வரலாற்றுப் புகழ்மிக்க இந்த மாநாட்டிற்கு கழகத் தோழர்கள், தோழியர் குடும்பம் குடும்பமாக ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் வந்து அலைகடலெனக் கலந்து கொண்டு அய்யா அவர்களுக்குப் பெரும் உற்சாகத்தைக் கொடுத்தார்கள். காலை முதல் மாலை வரை எங்கு காணினும் மக்கள் கூட்டம் கடல் போல் காட்சியளித்தது.

17.11.1973 அன்று இரவு 7 மணி அளவில் சேலம் மாவட்டம் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. விழாவிற்கு வேலூர் பகுத்தறிவாளர் கழகத் தலைவர் வழக்குரைஞர் என்.எம்.பழனியப்பன் அவர்கள் தலைமை வகித்தார். பகுத்தறிவாளர் கழகச் செயலாளர் பழனிச்சாமி பி.எஸ்.சி., பி.டி. அவர்கள் வரவேற்புரை நிகழ்த்தினார்கள். விழாவில் அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட கழக முன்னணித் தோழர்கள் பலரும் கலந்து கொண்டனர். அதில் நானும் கலந்து கொண்டேன்.

விழாவிற்கு அய்யா அவர்களை மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட டிரக்கில் அமர்த்தி ஊர்வலமாக அழைத்து வரப்பட்டது. தந்தை பெரியார் அவர்கள் உரையாற்றுகையில், நாம் எல்லோரும் இன்றைய தினம் ஈனஜாதியாய், சூத்திரர்களாய், பார்ப்பனர்களின் தாசி மக்களாக இருக்கின்றோம். இது எதில் இருக்கின்றது என்றால், சாஸ்திரங்களில் மட்டுமல்ல, சட்டத்தில் உள்ளது. சுப்ரீம் கோர்ட் தீர்ப்பில் இருக்கிறது. இதனை ஒழிக்க முயற்சி எடுக்க வேண்டும். முயற்சி என்றால் ஏதாவது செய்து ஒழிக்க வேண்டும் என்கிற முடிவில் இறங்கியுள்ளோம் என்றார்கள். (விடுதலை -_ 17.12.1973 பக்கம்.3)

உணர்ச்சியுள்ள இளைஞர்கள் எல்லோரும் சிறை செல்லத் துணிந்து கிளர்ச்சிக்குப் பேர் கொடுங்கள்; சிறை செல்ல வசதி இல்லாதவர்கள் ஆதரவு கொடுங்கள். வசதி படைத்தவர்கள் வாரிவாரி பணமாகவும் பொருளாகவும் கொடுங்கள். போராட்டம் மாதக்கணக்கில் நடைபெறுவதாக இருக்கலாம் என்று கூறினார்கள்.

நாம் நமது கிளர்ச்சித் திட்டமாக மத்திய அரசாங்க ஆபிஸ்களில் மறியல் செய்ய வேண்டும். இந்தப் போராட்டத்திற்கும் தி.மு.கழகத்திற்கும் சம்பந்தம் இல்லை. தி.மு.கழகக்காரர்கள் போராட்டத்திற்கு வந்தாலும் வரவேண்டாம் என்றுதான் கூறிவருகிறேன்.

தி.மு.க. தலைவர்களோ, அமைச்சர்களோ எவர் எப்போது பிரிவினைபற்றிப் பேசினார்கள்? இல்லையே, ஆனால், எதிரிக்கட்சி அயோக்கியர்களும் பத்திரிகைக்காரர்களும் தி.மு.கழகத்தார் பிரிவினை கேட்கிறார்கள் என்று போக்கிரித்தனமாக எழுதிய வண்ணமாக இருக்கின்றார்கள் என்று எடுத்துக்கூறினார்கள்.

நாம் நமது கிளர்ச்சித் திட்டமாக மத்திய அரசாங்க ஆபீஸ்களில் மறியல் செய்ய வேண்டும். இந்தப் போராட்டத்திற்கும் தி.மு.கழகத்துக்கும் சம்பந்தம் இல்லை. கிளர்ச்சியில் ஈடுபட்டு இரண்டில் ஒன்றைப் பார்த்துவிட வேண்டும் என்ற முடிவில் உள்ளோம் என்று எடுத்துரைத்தார்.

கூட்டத்தில் நான், உணர்ச்சியுள்ள இளைஞர்கள் எல்லாம் கிளர்ச்சிக்குப் பெயர் கொடுங்கள் என்று குறிப்பிட்டு சுருக்கமாக என்னுரையை நிறைவு செய்தேன். விழாவில் மாவட்ட நிருவாகிகள் முழுவதுமாக கலந்து கொண்டார்கள். நாமக்கல் வட்ட தி.க. செயலாளர் கருப்பண்ணன், குமாரபாளையம் கழகத் தோழர் திரு. குழந்தைக்கருப்பன், கரூர் வட்ட தி.க.செயலாளர் திரு.கே.கே.பொன்னய்யா, கலைஞர் மன்றச் செயலாளர் க.சீனிவாசன், முன்னாள் பேரூராட்சி மன்றத் தலைவர் இராமநாதன், டாக்டர் ஆறுமுகம் எம்.பி.பி.எஸ்., முன்னாள் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் வீரமணி, சேலம் மாவட்டம் தி.மு.கழகப் பொறுப்பாளர் பாலு, நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் பழனிவேலன், குடிநீர் வடிகால் வாரியத் தலைவர் சந்தப்பன் எம்.ஏ., எம்.எல்.ஏ., மாண்புமிகு அமைச்சர் அன்பில் தர்மலிங்கம் உள்ளிட்ட திராவிட முன்னேற்றக் கழகத் தோழர்கள், தோழியர், அரசு அதிகாரிகள் பலரும் கூட்டத்திற்கு  வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *