சிறந்த நூலிலிருந்து சில பக்கங்கள்…

அக்டோபர் 16-31

நூல்    :    திருவள்ளுவர் புதிய பரிமாணங்கள் ஆசிரியர்    :    ந.வேலுசாமி
பதிப்பு    :    திருமதி. சரோஜா வேலுசாமி,
39/17, டெய்லர்ஸ் சாலை,
கீழ்ப்பாக்கம், சென்னை – 10.
( : 044-4285 8268
மொத்தப் பக்கங்கள்    :    344
விலை    :    ரூ. 250/-

வாழ்க்கைத் துணை நலம்! நேரடியாக மனைவிக்குச் சூட்டப்பட்ட மகுடம்தான் இந்த அதிகாரம். ஒரு குறளுக்கு ஏழு சீர்கள் மட்டுமே அமைத்து யாத்த வள்ளுவப் பெருமான், பலவகை வெண்பாவுள் குறுகிய குறள் வெண்பாவைச் சொற்சுருக்கம் கருதித் தம் நூல் செயற்குத் தெரிந்தெடுத்துக் கொண்ட வள்ளுவப் பெருமான், மனைவியைச் சுட்டிப்பாடும் இந்த அதிகாரத்திற்கு வாழ்க்கைத் துணை நலம் என மூன்று சீர்களைத் தலைப்பிற்காகவே ஒதுக்கியுள்ளார் எனின் மனைவியின் மாண்பை உணர்த்தத்தானே? இதனால் தானோ, ஜி.யூ. போப் இதை ஏழு சொற்களில் “The goodness of Help to Domestic Life” என்றவாறு மொழிபெயர்த்துள்ளார் போலும்!

பயனில் சொல் பாராட்டாத, சுருங்கச் சொல்லி விளங்க வைத்தலில் உலகுக்கே எடுத்துக்காட்டாக விளங்கும் குறளாசான் இந்த அதிகாரத் தலைப்பின் வழி இதன் இன்றியமையாமையைத் தெற்றென உணர்த்தியுள்ளார்.

முதற் குறளிலேயே இல்லாளின் மாண்பைத் துலக்கமுறக் காட்டுகிறார்.
மனைத்தக்க மாண்புடை யளாகித்தற் கொண்டான்

வளத்தக்காள் வாழ்க்கைத் துணை (51)
வாழ்க்கைத் துணை – மனைவி;

நலம் – தன்மை: அதாவது, மனைவியின் தன்மைகூறும் இம்முதற்பா எடுத்த எடுப்பிலேயே வலியுறுத்துவது என்ன?

இல்லறத்திற்கேற்ற நற்குணச் செய்கைகள் உடையவளாயிருத்தல்

கணவன் வருவாய்க் கேற்றவாறு செலவு செய்யும் குடும்ப நிர்வாகியாக இருத்தல் என்பனவேயாம்.

இந்த இரு பண்புகளிலேயே அனைத்தும் அடங்கிவிடும். இல்லறத்தேர் சீராக ஓடும். மேற்கூறிய இரு பண்புகளும் அவளிடம் இல்லை யென்றால்தான் எதிர்விளைவுகள், பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்பேற்படும்.

மேற்கூறிய குறளை, The wife who lives a good life and works with her husband for the common good is a reliable support.

என்று எவ்வளவு சிறப்பாக மொழி மாற்றம் செய்துள்ளார் அறிஞர். எல்லாப் பக்கபலமும் உண்மையான பக்கபலம் ஆகிவிடுமா? ஆகாது என இடித்துரைத்து மனைவி தரும் பக்கபலமே உண்மையானது என மட்டைக்கு இரண்டு கீற்றாகக் குறிப்பிட்டுவிட்டார் குறளாசான்.

* * *

மக்கட்பேறு (புதல்வரைப் பெறுதல்) அதிகாரம் ஆண் குழந்தைகளைப் பெற்றவர்களுக்கே கூறப்பட்டது, பெண் குழந்தை பெற்றவர்களுக்காக அன்று என்று தோற்றம் தரும் வண்ணம் பரிமேலழகர் வரைந்திருப்பது பொருந்தாது என்பதைப் புலப்படுத்த -பழந்தமிழ் நூல்களில் ஒன்றாகிய இறையனார் அகப்பொருள் என்னும் உயர்ந்த நூலுக்கு உரை வரைந்த நக்கீரர், தலைமகனும் தலைமகளும் ஒத்த அன்பும், ஒத்த குலமும், ஒத்த கல்வியும் உடையவராய் இருத்தல் வேண்டும் எனக் கூறுகின்றமையால் பெண் மக்கள் கல்வி கற்றல் தவறென்னும் வழக்கம் பண்டைத் தமிழ் வழக்கம் அன்றென்பது வெள்ளிடைமலை.

மேலும், நாயனார் குறளில் வழங்கும் மக்களென்னும் பெயர் பெண் ஒழித்து நின்றது என்றும் ஆண்மக்களே அறிவுடையார் என்றும் பெண்மக்கள் அறிவற்றவர் என்றும் பரிமேலழகர் கொண்ட கருத்தைச் சிவப்பிரகாச முனிவர் பெரிய நாயகியம்மையார் துதியில்,

கற்றார் அறிகுவர் மக்கள் தம் பேரெனக் கட்டுரைத்த
சொற்றான் ஒரு பெண் ஒழித்த தென்பாரோடு தொல்லுலகில்
நற்றாண் மகற்பெறு கென்று ஆசி சொல்பவர் நாணவுனைப் பெற்றான் மலையரையன் குன்றை வாழும் பெரியம்மையே
என நயமாகக் கண்டித்துள்ளார்.

அதாவது மக்கட் பேறு என்பதனை ஆண்மக்கட் பேறு என்று கொள்வாரும் மங்கல வாழ்த்துக் காலத்தில் ஆண்மக்களைப் பெறுக என்று வாழ்த்துக் கூறுவாரும் ஒருங்கே நாணும் வண்ணம் மலையரசன் ஒரு பெண்ணாகிய பெரிய நாயகியைப் பெற்றான் என்று கூறும் வாயிலாக பரிமேலழகரின் அடிப்படைக் கொள்கையை வன்மையாக மறுத்துள்ளார் என்பது தெற்றெனப் புலப்படுகிறது.

எனவே, மக்கட்பேறு என்பது பெண்மக்கட்பேறு உள்ளடங்கிய இருபாலார்க்கும் பொதுவாகவே மனைவியை மாண்புறுத்த வந்த வள்ளுவப் பெருந்தகை எழுதினாரேயன்றி ஆண்மக்கட் பேற்றை மட்டும் முதன்மைப்படுத்திக் கூறவில்லை என்பது அங்கை நெல்லிக்கனி.

* * *

வாழ்வியல் நூலாகிய திருவள்ளுவத்தை ஆராய்ந்த இலக்கிய அறிஞர்களும், சட்ட வல்லுநர்களும் ஒன்றைத் தெளிவாக நிறுவியுள்ளார்கள். அறத்தில் சட்டம் அடங்குமே தவிர சட்டத்தில் அறம் அடங்காது என்பதே அது. அறம் பற்றித் திருவள்ளுவர் கூறிய கருத்துகளைப் போல் உலகத்தில்  தோன்றிய எந்தச் சட்ட வல்லுநரும் கூறவில்லை _ கூற இயலவில்லை என்பார் நீதியரசர் பெ.வேணுகோபால்.

இதே சமயத்தில் திருக்குறளை ஓர் அறநூல் (Code of Moral Conduct) என்று மட்டும் சர்வ சாதாரணமாகக் குறிப்பிட்டுவிட்டுக் கைகழுவி விட்டோம் என்ற பொருள் பொதிந்த ஆதங்கமும் இல்லாமல் இல்லை. அறநெறிகளுக்கு என்ன தனித்தன்மை?

அறநெறிகள் மக்களின் உள்ளங்களைத் தொடும். உணர்வுகளைத் தொடும். பண்படுத்தும், சட்டநெறிகளோ பயமுறுத்தும்! மானுட மேன்மைக்கு வழிகாட்டுவது மனமாற்றமா? சட்டமா என்றால் மனம் மாற்றந்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *