கோவில்
டீ கடை வியாபாரத்தை முடித்துவிட்டு அந்த டீ மேடையைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார் மகாலிங்கம். மீதமுள்ள அடுப்புக் கறிகளை ஒழுங்குபடுத்தி சாக்கில் கட்டிக் கொண்டிருந்தாள் மகாலிங்கத்தின் மனைவி மரகதம்.
அம்மா கோவிலுக்குப் போவோமா என ஓடி வந்தாள் அவர்களின் செல்லப்பெண் லெட்சுமி. திருமண வயதை எட்டியவளுக்கு திருமண வரன்கள் அய்யருக்குத் திருப்தி இல்லாததால் தட்டிக்கொண்டே போனது.
அம்மா… வாங்கம்மா சீக்கிரம் என்றாள் லெட்சுமி. அன்றைய டீ கடை. வியாபாரத்தில் பால்பாக்கி போக 320 ரூபாயை எடுத்து தன் சட்டைப்பையில் வைத்தபடி போகாலாம்மா, 6 மணிக்குத்தானே எல்லோரும் போயிட்டு வரலாம் என்றார் அப்பா.
கால்நடையாகவே இரண்டு தெருவைக் கடந்து, கோவில் வாசலை வந்து அடைந்தனர். ஆண்களும் பெண்களுமாக கூட்டம் சற்று அதிகமாகவே இருந்தது.
தாங்கள் அணிந்து வந்திருந்த செருப்புகளை கோவில் வாசலில் விட்டுவிட்டு பூஜை மணி சப்தத்தைக் கேட்டு விரைவாக கோவிலுக்குள்ளே சென்றனர். பூஜை ஆரம்பமானது. நாதஸ்வர மேளம் முழங்க ஆரம்பித்ததும் சன்னதியில் கூட்டம் அதிகமானது. ஆண்களும் பெண்களுமாக பின்னிப் பிணைந்து அம்பாளின் ஆசிபெற முண்டியடித்துக் கொண்டு நின்றனர். ஆண்களும் பெண்களும் சமம் என்பது அங்கு மட்டுமே இருந்தது.
மகள் லெட்சுமியைப் பாதுகாப்பாக அம்மாவின் அரவணைப்பில் வைத்துக் கொண்டிருந்தாலும், இடிராஜ பக்தர்கள் எப்படியும் லெட்சுமியைத் தொட்டுவிடத் துடித்தபடி அவளின் முதுகின்மேல் சாய்ந்தபடியும் தோள் பட்டையை உரசியபடியுமாக சாமிதரிசனம் செய்தனர். லெட்சுமி புழுவாக நெளிந்து துடித்தாள். இடிபக்தர்களின் சில்மிசங்கள் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
அம்மா போவோமா என்றாள் லெட்சுமி. தீபாராதனை முடியவும் பிரசாதம் வாங்கிக்கிட்டுப் போவோம் என்றார் லெட்சுமியின் துன்பம் அறிந்த அம்மா.
தீபாராதனை முடிந்து திருநீறு பிரசாதம் பெற கூட்டம் வரிசையானது. இடிபக்தர்கள் இன்னும் லெட்சுமியின் பக்கத்தில் உரசலுடன் வந்து கொண்டிருந்தனர்.
தீபாராதனைத்தட்டில் 50 ரூபாய்க்கு மாலை, 20 ரூபாய்க்கு பூ, 10 ரூபாய்க்கு எலுமிச்சம் பழம் என வகைபிரித்துக் கொண்டிருந்தனர் அய்யர்கள்.
கூட்ட வரிசையில் தட்டில் ஒரு ரூபாயைப் போட்டுவிட்டு, கையை நீட்டினாள் மரகதம். பூ, குங்குமம், எலுமிச்சம் பழங்களை எடுத்த அய்யர், உன் பொண்ணுக்குத் தோஷம் இருக்கு. நாளைக்கு உச்சிக்கால பூஜை முடிந்ததும் நீ மட்டும் வா.
தோஷம் கழிச்சுடலாம். யாரும் இருக்க மாட்டா என மெதுவான குரலில் சொல்லி மரகதத்தின் கையில் பிரசாதத்தைத் திணித்து கையைப் பிசைந்து கொடுத்தார் அய்யர். வெலவெலத்துப் போன மரகதம் மகள் லெட்சுமியைக் கூட்டிக் கொண்டு பதில் ஏதும் சொல்லாமல் சன்னதியைவிட்டு வெளியேறினாள்.
தூரத்தில் நின்ற கணவர் மகாலிங்கத்தைக் கூப்பிட்டு, சாமி கும்பிட்டது போதும். வாங்க வீட்டுக்குப் போகலாம் என்றாள்.
இரு இரு, கோவில் உண்டியல்ல காணிக்கை போட்டுட்டு வர்றேன் என்றவர் சட்டைப் பைக்குள் கையை விட்டதும் அதிர்ச்சியானார். மரகதம், பையில் வெச்சிருந்த 320 ரூபாயை பக்தன் எவனோ பிக்பாக்கெட் அடிச்சிட்டாண்டி என்றார் ஆதங்கமாக. அப்பா, வாங்கப்பா வீட்டுக்குப் போகலாம். கோவிலே பிடிக்கலைப்பா என்றாள் மகள் லெட்சுமி.
மூவரும் பிரகாரத்தைக் கடந்து ஒருவழியாக இடிபக்தர்கள், ஜொள்ளு அய்யர், பிக்பாக்கெட் பக்தர்களிடமிருந்து வெளியே வந்து, வீட்டிற்குச் செல்ல அவசர அவசரமாக செருப்பைத் தேடினர். மூன்று பேர்களின் செருப்பும் திருடு போயிருந்தது.
மனம் நொந்தவர்களாக வெளியில் சொல்ல முடியாமல் வெறும் காலுடன் நடக்க ஆரம்பித்தனர்.
கோவில் வாசலின் முன்பாக பெரிய பிளக்ஸ் பேனர் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் கந்த சஷ்டி விழா பக்தர்களே வருக வருக என்ற விளம்பரத்துடன் நித்யானந்தாவின் அருள் பெற்ற சுபயோக தயானந்தா வருகை என சாமியாரின் புகைப்படமும் பெரிதாகப் போடப்பட்டிருந்தது. அதைப் பார்த்த மூவரும், தலைதெறிக்க வெறும் கால்களுடன் வீட்டிற்கு ஓட ஆரம்பித்தார்கள்.
அணு – கலைமகள்