அட்சய திருதியையா? அடாவடிதிருதியையா? – புலவர் குறளன்பன்

மே 16-31

மக்களால் மதிக்கப்படுகிற பொருள்; மக்கள் விரும்பி அணிகிற பொருள்; விலை ஏறிக்கொண்டே போகிற பொருள்; அந்தப் பொருள் என்ன பொருள் தெரியுமா? அடுத்தவர் சொல்லாமலே அறியும் பொருள். ஆம், அதற்குப் பெயர்தான் தங்கம் -வெள்ளி!

தங்கமும் வெள்ளியும் பிறந்த கதையை நம் மக்களுக்குச் சொல்லி இருக்கிறோமா?

சொல்லி இருந்தால் புராணங்களால் கேவலப்படுத்தப்பட்ட பொருளாகி நிற்கிற தங்கத்தையும் வெள்ளியையும் தொடுவதற்குக்கூட வெட்கப்பட்டு நம்முடைய மக்கள் தூக்கி எறிந்திருப்பார்கள்.

சொல்லாத காரணத்தால் ஏற்பட்டதுதான் அட்சயத் திருகு தாளங்கள். துருப்பிடிக்காத உலோகம் தங்கம்.  இலக்குமி குடியிருக்கும் பொருள் தங்கம்.  வெள்ளை வெளேர் ஒளியை வீசுவது வெள்ளி.

தெய்வத்தின்  திருமுன் இவ்விரண்டு பொருளையும் அணிந்துகொண்டால் ஆண்டுதோறும் அணியும் நகைகள் வாங்குகிற வாய்ப்பு வீடுதேடி வந்துசேரும் என்று கதை கட்டிவிட்டனர். கட்டிய கதைவழி மக்களிடம் விருப்பம் கொஞ்சங் கொஞ்சமாகக் களை கட்டியது.

கைகூடிய விருப்பத்தைக் கருத்தில் கொண்ட பார்ப்பனக் கும்பல் நாள், திதி (பிறை), இணைதல் (யோகம்), உருளுதல் (கரணம்), விண்மீன் (நட்சத்திரம்) என்பனவற்றை அதனோடு சேர்த்து எந்தச் செயலில் வெற்றிபெற வேண்டுமானாலும் நல்ல நாளைப் பார்த்துச் செய்யவேண்டும் –  என்று கூறிவைத்தனர்.

நாங்களாக இதனைச் சொல்லவில்லை என்றும்… நம்முடைய முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள் என்றும்… தற்காப்போடு சொல்லி நின்றனர். அப்படிச் சொன்னதன் வழியாகப் பிறந்ததுதான் அட்சய திருதியை.

அட்சயம் என்பது வடசொல். அதுபோல திருதியை என்பதும் வடசொல். வடசொல் இரண்டிற்கும் தமிழில் பொருள் பார்த்தால் இவ்வாறு கூற முற்படலாம். அட்சய _ என்பது  அள்ளக் குறையாத செல்வம். திரிதியை – என்பது மூன்றாம் பிறை நாள். மூன்றாம் பிறை நாளில் வாங்குகிற பொருள் அள்ளக் குறையாத செல்வம்போல வளர்ந்து கொண்டே வரும் என்று சொல்லி வழக்கப்படுத்திவிட்டனர். நடப்பில் அப்படி எதுவும் நடப்பதில்லை.

நாள் என் செய்யும்? கோள் என் செய்யும்?_ என்று கேட்ட சமயக் குரவர்கள் வாழ்ந்த நாடு இந்த நாடு. நாளையும் கோளையும் நம் முன்னவர்களே நம்பாதபோது நாம் எப்படி அட்சய திருதியையை நம்பமுடியும்?  அட்சய திருதியை அள்ளக் குறையாத செல்வத்தை எவருக்கும் அளிப்பதில்லை.

அதுபோலவே விருப்பூட்டிப் பொருள் பெருக்கும் விற்பனைத் தந்திரமே அட்சய திருதியை. அது மட்டுமல்ல _ 27 இராசிக்கும் என்னென்ன பொருள்கள் வாங்கலாம் என்கிற பட்டியல் அளிப்பு வேறு. எவ்வளவு பெரிய ஏமாற்றுவேலை என்பதை எல்லோரும் கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

தந்தை பெரியார் ஒருமுறை சென்னைப் பரங்கிமலைப் பொதுக்கூட்டத்தில் (13.04.1952) தங்கம் வெள்ளி பிறந்த கதையை மிகமிகத் தெளிவாக எத்தனை அருமையாகச் சொல்லிச் சென்றிருக்கிறார்! அசுரரும் தேவரும் திருப்பாற்கடலைக் கடைந்தனராம். அப்பாற்கடல் அமிழ்தத்தை (அமுதம்) அளித்ததாம்.  வழக்கம்போலப் பங்கிட்டுக் கொள்ளுவதில் சிக்கல் இருதரப்பினருக்கும் வந்ததாம்.

மகாவிட்டுணு பெண்வேடத்தில் தோன்றி அசுரர்களை மயக்கினானாம்.  மயங்கிய அசுரர்களை மகாவிட்டுணு ஏமாற்றிவிட்டானாம்.  அசுரர்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்த சிவன் அவனைப் பாராட்டுவதற்கு வந்தானாம்.  மகாவிட்டுணு வந்த சிவனுக்குத் தன் திறமையை விரித்துரைத்தானாம்.  அதைக்கேட்ட சிவன் அந்தப் பெண் வேடத்தில் மீண்டும் வா! – எல்லோரும் பார்க்கட்டும் என்றானாம்.

மீண்டும் பெண் வேடத்தில் மகாவிட்டுணு வந்தானாம். கண்ட சிவன் அவள்மேல் காமுற்றானாம்.  உள்ளூறும் காமத்தால் சிவன் அவளைத் துரத்த அவளோ தொலைதூரம் ஓடினாளாம்.  தொலைதூரம் காமவிருப்போடு ஓடிய சிவனின் விந்து விழுந்த இடங்கள் எல்லாம்தான் தங்கம் – வெள்ளிக்குத் தாயகமாம்.

தந்தை பெரியார் சொல்லிய புராணத் தகவல்கள் நமக்குத் தெரிவிப்பதென்ன?

அழகிய தங்கமும் வெள்ளியும் அருவருப்பான பொருள் என்பதை அறிவிக்கவில்லையா?  மின்னுவதெல்லாம் பொன்னல்ல! – என்பதையும் மெய்ப்பிக்கவில்லையா?  கருத்தில் மின்னாத தங்கம் வெள்ளியை நம்முடைய மக்கள் தாங்குவது அவர்களுக்குக் கேவலமில்லையா?

வெட்டி எடுக்கும் தங்கமும் வெள்ளியும் மக்கள் உழைப்பின் வெளிப்பாடல்லவா? மக்களின் உழைப்பை மதியாத மடமூட விழாக்களில் மனங்கொள்ளுவது விடியல் வழங்குமோ?  விழித்தால் விலகும் அட்சய திருதியை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *