அய்யாவின் அடிச்சுவட்டில்….

மார்ச் 01-15

புரட்சி வெளியிட்ட செய்தி

பெரியார் எதற்காக இதழ் நடத்த விரும்பினார் என்பதைத் துல்லியமாகப் புரிந்து கொள்ள முடிகிறதன்றோ? மேலும், அக்காலத்திய பரோடா மன்னரின் தனியாட்சியில் மகளிர் முன்னேற்றம் கருதிச் செய்யப்பட்ட ஓர் அரிய சட்டம்பற்றிய செய்தியைப் புரட்சியின் 4.2.1934 ஆம் நாளிட்ட இதழ் நமக்குத் தருகிறது.

பரோடா சமஸ்தானத்திலுள்ள இந்துப் பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, இந்துச் சமுதாயச் சட்டத்தைப் பின்வருமாறு திருத்திப் புதிய சட்டம் ஏற்படுத்தி யிருக்கிறார்கள்.  புதிய சட்டப்படி, ஓர் இந்துப் பொதுக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் இறந்து போனால், அவருடைய விதவைக் குடும்பத்தில் ஒரு பங்காளியாகிவிடுகிறார்.  விதவைகளின் முந்தின நிலைமையில் இந்தச் சட்டம் ஒரு பெரிய மாறுதலை உண்டு பண்ணிவிட்டிருக்கிறது. முந்தியெல்லாம் ஒரு விதவைக்குப் புருஷன் குடும்பத்திலே சோறும் உடையும்தான் கிடைக்கும்.  இந்தச் சட்டப்படி, ஒரு விதவை தன் புருஷன் குடும்பத்தில் மற்ற நபர்களைப் போல் ஒரு சம பங்காளி ஆகிவிடுகிறார்.  இந்தப் புதிய சட்டத்தினால் மகன் பேரன் முதலியவர்களைப் போலவே விதவையான பெண்ணுக்கும் சமபங்கு கிடைக்க உரிமை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.  விதவையான ஒரு மருமகளுக்கு, மாமியாருக்கு அடுத்தபடியான அந்தஸ்து ஏற்படுகிறது.

முந்தின சட்டப்படி, பெண்கள் தங்களுக்குக் கிடைக்கிற சொத்துகளை அனுபவிக்க மாத்திரம் செய்யலாம்;  விற்பனை செய்ய முடியாது.  இப்போது, பெண்கள் தங்கள் சொத்துகளை விற்பனை செய்யவோ அல்லது வேறு விதமாக விநியோகிக்கவோ புதிய சட்டம் பூரண உரிமை அளிக்கிறது. இந்தப் புரட்சியான செய்தியினைத் தந்தது மட்டுமின்றி, பெரியாரின் புரட்சி இதழ், இந்தப் புதிய சட்டத்தினால் பரோடா நாட்டுப் பெண்களுக்கு அதிக உரிமைகளும், பாதுகாப்புகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று பாராட்டி, இவ்விதமே பிரிட்டிஷ் இந்தியாவிலும் மற்ற சமஸ்தானங்களிலும் இந்தச் சட்டம் திருத்தப்படுமாயின் பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெரிதும் அனுகூலமாயிருக்கும் என்பதாகத் தன் பெயருக்கேற்ற வகையில் கருத்து வெளியிட்டது!

அளவில் சிறிதான இச்செய்தி நமக்குப் பலவற்றை உணர்த்தவல்லது.  நிலவுடைமைச் சமுதாய அமைப்பில் ஆட்சி செய்யும் அதிகாரத்தில் இருந்த மன்னர் என்பவர், மக்களாயச் சிந்தனையும், மகளிர் இனத்தின்பால் நல்லுணர்வும் படைத்தவராய் இருக்க முடியும் என்பது;  தன்னாட்சி நடத்திக் கொண்டிருந்த சுதேச சமஸ்தான மன்னர்கள் எண்ணற்றோரில் இந்துச் சட்டத்தினைத் திருத்தும் அளவுக்கு மாபெருந் துணிச்சல் வாய்க்கப் பெற்றிருந்தவர் பரோடா மன்னரே என்பது;  இந்தியாவைக் கட்டியாண்ட வெள்ளையர்களுக்குப் பரோடா மன்னர் முன்னோடியாகத் திகழ்ந்தார் என்பது;  இத்தகைய இந்து சட்டத் திருத்தத்தினை வலியுறுத்தியது பெரியாரின் புரட்சி இதழ் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது.

25.07.1973 – அன்று, சென்னை அரசு பொது மருத்துவமனையில் தந்தை பெரியார் அவர்கள், உடல் பரிசோதனைக்காகச் சேர்க்கப்பட்டிருந்தார்கள்.  அய்யா அவர்களுக்கு அசதியும், சோர்வும், ஏப்பமும் கடந்த சில நாள்களாக இருந்து வந்தது.  உடல் பரிசோதனைக்காக அரசு பொது மருத்துவமனையில் நேற்று காலை (24.7.1973) சேர்க்கப்பட்டார்கள்.  அய்யா அவர்களை, டாக்டர் திரு. கே. ராமச்சந்திரா (சூப்ரெண்டெண்ட்)  அவர்களும், அவரது குழு டாக்டர்களும் அய்யா அவர்களைக் கவனித்து நல்ல முறையில் மருத்துவம் செய்தார்கள்.  அன்னை மணியம்மையார் அவர்கள் உடனிருந்து நன்கு கவனித்து வந்தார்கள்.  நான், ஒவ்வொரு வட்டம், மாவட்டம் வாரியாக அய்யா அவர்களின் கார் நிதிக்காகச் சென்று வந்த பின்பு, அய்யா அவர்களைச் சந்தித்து உடல் நலம் விசாரித்து வருவேன். இது குறித்து  கழகத் தோழர்கள் அறிந்து கொள்ள  விடுதலையில் (25.7.1973)  செய்தியினை வெளியிட்டேன்.

மத்திய அரசாங்கம் (25.7.1973) அறிவித்த காகிதம் பற்றாக் குறையின் காரணமாக (30 சதவிகிதம்) சிறு பத்திரிகையாளர்கள் கோரிக்கை என்று கூடிய பத்திரிகை நிருவாகிகளின் ஆழ்ந்த வருத்தத்தை அரசுக்குத் தெரிவிக்கும் விதமாக, நவசக்தி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் நமது விடுதலை இதழின் சார்பாகவும் கருத்துத் தெரிவிக்கப்பட்டது.

விடுதலை, நவமணி, நவசக்தி, மித்திரன், தென்னகம், அலைஓசை ஆகிய பத்திரிகைகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்ட கூட்டத்தில்,  காகிதம் வெட்டுக் குறித்து விவாதிக்கப்பட்டு சில தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. தினசரி 4 பக்கங்கள் செய்தி வெளியாகும் பத்திரிகைகள் இந்த அளவையும் குறைத்துக் கொள்வது என்பது எண்ணிப் பார்க்க முடியாததாகும்.  இந்தப் புத்தகக் காகிதம் , 30 சதவிகிதம் பத்திரிகைகளிடம் வெட்டு என்று கூட்டத்தில் பிரதிநிதிகள் கருதினர்.

அதனால், 30 சதவிகிதம் பத்திரிகைக் காகித வெட்டு என்பது நியாயமற்றது என்பதையும், அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசே பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் அரசுக்கு உணர்த்தும் விதத்தில், பத்திரிகை விசயத்தில் அரசு காகித வெட்டைக் கைவிட வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது..

இவ்வளவு கடுமையான காகிதம் வெட்டு நிலையிலும் தந்தை பெரியார் அவர்கள் அறிவுரையை விடுதலை பத்திரிகையை வெற்றிகரமாக நடத்தியும் அதன் தமிழர்கள் உரிமையை நிறைவேற்றவும், தமிழர்கள் பெருமையையும் எடுத்துக்கூறும் வண்ணம், விடுதலை தொடர்ந்து வெற்றிநடைபோட்டு வருகிறது.

29.7.1973 – மணச்சநல்லூரில் சனி மாலை 7 மணி அளவில் தந்தை பெரியார் கார் நிதிக் கூட்டம், மணச்சநல்லூர் சிந்தனையாளர் கழகச் சார்பில் சிவன் கோயில் திடலில், சிந்தனையாளர் கழகத் தலைவர் திரு.வ.செல்வராசன் பி.இ. அவர்கள் தலைமையில் நடைபெற்றது.  மணச்சநல்லூர் திராவிடர் கழகச் செயலாளர் திரு. அரங்கராசன், சிந்தனையாளர் கழகச் செயலாளர் திரு. புலவர் இராமசாமி, ப. ஆறுமுகம், லால்குடி வட்ட தி.க. தி.வி.தொ. சங்கச் செயலாளர் திரு. தேவசகாயம், மதுரை மாவட்ட தி.க. செயலாளர் பெரியகுளம் ச.வெ. அழகிரி ஆகியோர் பேசிய பின்பு, திராவிடர் கழகத்தின் சார்பில் அதன் தலைவர் தந்தை பெரியார் அவர்களின் கார் நிதிக்காக ரூ. 501-ம், சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் திரு. புலவர் கே.ஆறுமுகம் அவர்கள் ரூ. 777-ம், என்னிடத்தில் வழங்கினார்கள், நிதியைப் பெற்றுக் கொண்ட நான், சிற்றுரையை நிகழ்த்தினேன், மழை பெய்து கொண்டிருந்தாலும் அய்யாவைப்பற்றிய அரிய கருத்துகளை எடுத்துக் கூறினேன்.  விழாவில் பொதுமக்கள் ஏராளமானோர் கூட்டம் முடியும்வரை காத்திருந்து விடை பெற்றுச் சென்றனர்.

22.7.73 அன்று மாலை 4 மணிக்குப் பெரம்பலூர் வட்ட பகுத்தறிவாளர் கழக 2-ஆம் ஆண்டு மாநாடு மிக்க சீரும் சிறப்புடனும் நடைபெற்றது. மாநாடு, கடவுள் மறுப்பு வாசகத்தோடு தொடங்கப்பட்டது.  முதலாவதாக, மதுரை பி.எஸ். செல்வா கலைக் குழுவினரின் பகுத்தறிவு இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது. மதுரை பி.எஸ். கலைத்தூதன் – செல்வா ஆகிய வாழ்விணையர் அருமையான சுயமரியாதைக் கொள்கைவாழ் கலைக்குடும்பத்தவர்.  கலைத்தூதன் நன்கு இசையமைத்து பாட்டெழுதுவார் – பாடுவார். செல்வாவின் குரல்வளம் மிக அருமையானதொன்று. கழகப் பிரச்சாரத்திற்கு அவர் தொண்டு புரிந்துள்ளார். மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களும் கலந்து கொண்டார்கள். மாநாட்டு வரவேற்புக் குழு சார்பாக, பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஜே.எஸ்.ராஜூ எம்.ஏ.பி.இடி, எம்.எல்.ஏ.அவர்கள் வரவேற்பு உரை நிகழ்த்தினார்கள். அவர் தமது உரையில், ஈரோட்டுப் பாதையானது மிக்க சரியான-தெளிவான பாதை.  இதில் பாமர மக்கள் நடைபோட அஞ்சுவதும், மறுப்பதும் வருந்தத்தக்கது என்று எடுத்துரைத்தார்.

மாநாட்டுக்கு என்னைத் தலைமை வகித்து நடத்திக் கொடுக்கும்படி ஆசிரியர் ஏ.எஸ்.முத்துசாமி அவர்கள் முன்மொழிந்தார்.  திருச்சி சிந்தனையாளர் கழகச் செயலாளர் து.மா- பெரியசாமி, பாடலூர் சோமசுந்தரம், ஆசிரியர் வரதராஜன், வெள்ளச்சாமி, ஆசிரியர் ஆத்தி நாட்டார் ஆகியோர் வழிமொழிந்தார்கள்.
மாநாட்டில் நான் குறிப்பிட்டதாவது; – பகுத்தறிவாளர் கழகப் பிரச்சாரம் பட்டணங்களில் மட்டும் நடைபெற்றால் போதாது.  பட்டிக்காடுகளிலும், கிராமங்களிலும் நடைபெற வேண்டும் என்ற அடிப்படையிலேயே இங்கு நடக்கின்றது. தந்தை பெரியார் அவர்கள் இந்த மண்ணில் விதைத்த பகுத்தறிவு விதையானது வீண் போகவில்லை என்பதை எடுத்துக்காட்டுவதுபோல் இந்த மாநாடு காட்சி அளிக்கின்றது என்று குறிப்பிட்டேன்.  பிறகு பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  அவற்றுள் சில:

1. பெருநகர இணைப்பு நெடுஞ்சாலைகளிலும், மற்றும் சென்னை நகரின் நடைபாதைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள நடைபாதைக் கோயில்களையும் அப்புறப்படுத்த அரசியலார் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று இம்மாநாடு கேட்டுக்கொள்கிறது.

2.  வடநாட்டில் திராவிட மக்களை இழிவுபடுத்தவும், அடிமைப்படுத்தவும்  ஆண்டுதோறும் புது டில்லியில் ராமலீலா மைதானத்தில் இந்திய ஜனாதிபதி, அமைச்சர்கள், அதிகாரிகள் முன்னிலையில் நடைபெறும் ராமலீலா விழாவை நாம் கண்டிப்பதோடு அதற்கு நம் அதிருப்தியைக் காட்ட, நாமும் ஆண்டுதோறும் ராமநவமியில் ராமன் பட எரிப்பைச் செய்ய தந்தை பெரியார் அவர்கள் அனுமதியளிக்கவும், அந்நிகழ்ச்சி விரைவில் தமிழகத்தில் நடக்கவும் இம்மாநாடு வேண்டிக்கொள்கிறது.

3.  தமிழர்கள் தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்வதன் மூலம் — அழைப்பதன் மூலம், தாம் சூத்திரர்கள், அதாவது பார்ப்பனரின் தாசிமக்கள் என்பதைச் சட்டப்படி – சாஸ்திரப்படி ஒப்புக்கொள்ளும் இழிநிலை ஏற்படுவதால் தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளக் கூடாது என்று தமிழ்ப் பெருமக்களுக்கு அறிவுறுத்துவதுடன், கோயிலுக்குப் போவதன் மூலம் இந்தக் கர்ப்பக்கிரகத்திற்குள்ளே போக முடியாத இழி ஜாதித்தன்மையைச் சூத்திர மக்கள் ஆகிய நம் மக்கள் உறுதிப்படுத்துவதாக இருப்பதால், கடவுள் நம்பிக்கை உடைய மக்களாக இருப்பவர்கள்கூட கோயிலுக்குச் சென்று இழி ஜாதிமக்களாக ஆகவேண்டாமென்று இம்மாநாடு வேண்டிக் கொள்கிறது.

இறுதியாக, தந்தை பெரியார் அவர்கள் மாநாட்டுத் தீர்மானங்களை விளக்கி பேருரை நிகழ்த்துகையில் குறிப்பிட்டதாவது:-  பகுத்தறிவாளர் கழக மாநாடு என்ற பெயரில் இந்த மாநாடு நடைபெறுகின்றது. இதில் 3 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதை விளக்கிச் சிறிது கூறுகின்றேன்.  நடைபாதைக் கோயில்கள் ஒழிக்கப்பட வேண்டும் என்பது ஒன்று.  அரசாங்கம் தீவிரமாக முயற்சி எடுத்து ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்.

அடுத்து, வடநாட்டில் இராமநவமி அன்று இராமலீலா என்ற பெயரில் தமிழ் மக்கள், திராவிடர்களின் மனதைப் புண்படுத்தும்படி இராவணன், கும்பகர்ணன் முதலானோர் சிலையினை எரிக்கின்றார்கள். இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர்கள், ஜனாதிபதி போன்றோர் கலந்து கொள்கின்றார்கள்.  நாம் பல தடவைகள் கண்டித்தாகிவிட்டது.  இனி, நாமும் பதில் நடவடிக்கை எடுத்தாக வேண்டும்.

சூத்திரனான சம்புகன் தவம் பண்ணினான், கடவுளைக் காண முயன்றான், இதன் காரணமாக வருணாசிரம தர்மம் கெட்டுவிட்டது என்றும், இதனால் ஒரு பார்ப்பனப் பையன் இறந்து விட்டான் என்றும் கூறி, இராமன் சம்புகனை வெட்டினான் – துண்டு துண்டாக வெட்டிக் கொன்றான்.  எனவே, இப்படிப்பட்ட இராமனை நாமும் இராமநவமி தினத்தில் எரித்து வடவருக்கு உணர்த்துவதுபற்றி யோசிக்கவேண்டும்.

அடுத்து, இந்து மதத்தில் இருந்து விலக வேண்டும் என்பது.  இந்து மதம் என்ற பெயரில் ஏராளமானவர்கள் உள்ளோம்.  அத்தனைபேரும் விலக ஒப்புக் கொள்வார்களா என்பது வேறு. தோழர்களே, இன்றைக்கு நாம் சூத்திரர்கள் என்பதும்,  இழி ஜாதி என்பதும் சட்டப்படி-சாஸ்திரப்படி இருக்கின்றது. இன்றைக்குப் பார்ப்பான் யாரும் நம்மைச் சூத்திரர் என்று சொல்ல, அஞ்சி அடங்கிவிட்டான்.  இன்றைக்கு ஜாதி இழிவை யாரும் பகிரங்கமாகக் கூறவும் முன்வரவில்லை.  இப்படி இருந்தும் நமது சூத்திரப்பட்டமும், ஜாதி இழிவும் நீங்கவில்லையே.  காரணம் என்ன? பார்ப்பானே அடங்கிவிட்டான், ஜாதி இழிவுபற்றி எவரும் கூறவும் முன்வரவில்லை என்று சொன்னேன்.

இந்த நிலையில் நம்மிடம் உள்ள இழி தன்மைக்கும், சூத்திரப் பட்டத்திற்கும் யார் மீது குற்றம் கூறுவது?  நம்மை நாமேதான் தாழ்த்திக் கொண்டு இழி தன்மையில் உள்ளோம். இனி, மதத்தையோ, கடவுளையோ, பார்ப்பான்களையோ திட்டுவதன் மூலம் ஒன்றும் பிரயோஜனம் இல்லை.  உங்கள் இழிவு நீக்கத்திற்கு இனி அது பயன்படாது. நாம் மனிதனாகணும்; நாம் ஈன ஜாதியாகாமல் இருக்க வேண்டும்; சூத்திரன் அல்லாதவனாக இருக்க  வேண்டும் என்பதுதான் ஆகும்.  நமது இழிவும் சூத்திரப் பட்டமும் இன்று சட்டத்தில் இருக்கின்றதே.  இப்படிச் சட்டத்தில் இருக்கும்போது கடவுளையும், பார்ப்பானையும் திட்டி என்ன பிரயோசனம்?  அறிஞர்கள் சிந்திக்க வேண்டும்.

இனி, நாம் சும்மா இருந்தால் பிரயோசனம் இல்லை.  நாம் இன்று இந்து மதத்தின் பட்டியலில் உள்ளோம்.  நாம் இந்த இந்து மதப்படித்தான் சூத்திரன்.  இது மாற வேண்டுமே.  இது கடினமான பிரச்சினை, இதற்குப் பரிகாரம் தேடியாகவேண்டும்.  சட்டப்படி நீங்கள் சூத்திரர்கள். இந்தச் சட்டம் இந்தியா பூராவுக்கும் உள்ளது.  இதனை மாற்றுவது எளிதல்ல.  ஒருக்கால் தமிழகம் தனியாகப் பிரிந்தால் நாம் மாற்றலாம்.  இதற்குப் பிரிவினைப் பிரச்சாரம் செய்ய வேண்டும்.

உடனடியாக நமது ஜாதி இழிவு மாற, நாம் இந்து மதத்தில் இருந்து விலகிவிடவேண்டும்.  அதற்காக, நாம் இந்துவல்ல என்று ஒவ்வொருவரும் விளம்பரப்படுத்திவிட வேண்டும். இந்து அல்ல என்று கூறிவிட்டால், இஸ்லாமாகவோ கிறிஸ்தவனாகவோ மாறினால், அதுவும் மூடநம்பிக்கைக்கு ஆட்பட்டுவிடுவோம்.

எனவே, அவையும் பயன்படாது.  எனவே, அறிஞர்கள் சிந்திக்க வேண்டும். இது இன்றைக்குப் பெரிய சிக்கல்.  மக்கள் சிந்திக்க வேண்டும்; மதம் விலகத் துணிய வேண்டும். இதற்கு என்றே ஒரு மாநாடு போட்டு, மதம் விலக ஏற்பாடு செய்ய உத்தேசித்து உள்ளேன்.  அதற்கு என்று பாரம் அச்சடித்து, அதனைப் பூர்த்தி செய்து கையெழுத்து வாங்கி, கெசட்டில் போடவும் ஏற்பாடு செய்யவேண்டி வந்தாலும் வரும். எனவே, நமது இழிநிலைமாற நாம் இந்து மதத்தில் இருந்து நீங்கிக் கொள்ளவேண்டும்.

அடுத்து, நமது மக்களுக்கு இன்று இருந்து வரும் தீண்டாமை இழிவு, நாம் கோயிலுக்குப் போவது மூலம்தான் உள்ளது.  குளித்து மூழ்கிக் கோயிலுக்குப் போனாலும், கர்ப்பக்கிரகத்துக்கு வெளியேயே நீங்கள் நிற்கின்றீர்கள்.  ஏன் இப்படி நிற்கின்றீர்கள்?  நீங்கள் தாழ்ந்தவர்கள் -தீண்டப்படாதவர்கள்.

அதற்குமேல் போனால், கோயிலின் புனிதத்தன்மை கெட்டு விடும் என்பதை ஒத்துக் கொண்டே நிற்கின்றீர்கள். எனவே, நமது மக்களின் இழிவும், தீண்டாமையும் நீங்க, நம் மக்கள் கோயிலுக்குப் போவதை  நிறுத்திக் கொள்ள வேண்டும்.  இனி, பிரச்சாரத்தில் மட்டும் இருந்து பயன் இல்லை.  காரியத்தில் இறங்க வேண்டும் என்று எடுத்துரைத்தார். ஆசிரியர் வரதராஜன் நன்றி கூறினார்கள். இதில் ஏராளமான கழகத் தோழர்கள், தோழியர்களும், பொது மக்களும் கலந்து கொண்டார்கள்.

-கி.வீரமணி

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *