மாயமான மலேசிய விமானம் :

மே 16-31 - 2014

மந்திரவாதியும், பெர்முடா முக்கோணப் புதிரும் – 2

– ப.ரகுமான்

பெர்முடா முக்கோணப் புதிர்

ரைட் சகோதரர்கள் விமானத்தைக் கண்டுபிடித்து சோதித்துப் பார்க்கத் தொடங்கிய 1908ஆம் ஆண்டில் தொடங்கி, ஏராளமான விமான விபத்துகளை உலகம் கண்டுவிட்டது. அதிலும் 1933க்குப் பிறகு எல்லா ஆண்டுகளிலும் விமான விபத்துகள் நடைபெற்றுள்ளன.

 

ஆனால் கடல் பகுதியில் பறந்துகொண்டிருந்தபோது நடைபெற்ற சில விமான விபத்துகள், அதிலும் விமானத்திற்கு என்ன கதி நேரிட்டது என்பது குறித்து உறுதியாகத் தெரியாத விமான விபத்துகள் குறித்த மர்மங்கள் இன்று வரை நீடிக்கிறது. அது விமானங்கள் தொடர்பான மர்மமாக மட்டுமின்றி கடல்பகுதி தொடர்பான மர்மமாகவும் மாற்றம் பெற்றன. பெர்முடா முக்கோணப் புதிர் என்பது அப்படி உருவானதுதான்.

1945ஆம் ஆண்டு, டிசம்பர் 5ஆம் தேதி பிற்பகல் 2.10 மணி. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் உள்ள லாடர்டேல் துறைமுகத்தில் அமைந்துள்ள, அமெரிக்கக் கடற்படைக்குச் சொந்தமான விமானத் தளத்திலிருந்து 5 போர் விமானங்கள் வழக்கமான பயிற்சிக்காகப் பறந்தன. விநோதமான முறையில் அந்த விமானங்கள் திசை மாறியதுடன், அவசர உதவி கேட்டு விமானங்களிலிருந்து ரேடியோ செய்திகள் பறந்தன. அத்தகையதொரு செய்தி கடைசியாக 7.04 மணிக்குக் கிடைக்கிறது. 7.20 மணிக்கு, மீட்பு விமானம் அனுப்பப்படுகிறது. புதிரான முறையில் மீட்பு விமானம் உட்பட அனைத்து விமானங்களும் சுவடு தெரியாமல் மறைந்துவிட்டன.

1964ஆம் ஆண்டு அர்கோசி என்கிற மாத இதழில், வின்சென்ட் கட்டிஸ் எனும் அமெரிக்க எழுத்தாளர், இந்த விமானங்களின் மறைவு பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அவர்தான் பெர்முடா முக்கோணம் என்கிற புனைவை உருவாக்கியவர். சார்லஸ் பெர்லிட்ஸ் எனும் எழுத்தாளர் இன்னும் அதிக கற்பனை வளத்துடன், பெர்முடா முக்கோணம் என்ற நூலை எழுதி வெளியிட்டார். அந்த நூல் பெரும் எண்ணிக்கையில் விற்றுத் தீர்ந்தது. நூல்கள் மட்டுமல்ல, டாக்குமெண்ட்ரி படங்கள், திரைப்படங்களும் அதைவைத்து இயற்றப்பட்டன. இயற்கைக்கு மேலான அதீத சக்தி பெர்முடா முக்கோணப் பகுதியில் இருக்கிறது என்பதுதான் இந்தப் புனைவுகளின் அடிப்படை.

பெர்முடா முக்கோணப் புதிர் என்கிற பரபரப்பு இப்படித்தான் தொடங்கியது. விமானங்கள் மறைந்த கடற்பகுதியில், பல்வேறு கப்பல்களும் புதிரான முறையில் மூழ்கியிருக்கின்றன என்ற செய்தியும் சேர்ந்துகொள்ள அதைப் பற்றிய ஆர்வம் அதிகரிக்கத் தொடங்கியது. யுஎஸ்எஸ் ஸ்கார்ப்பீன் என்ற அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல் மர்மமான முறையில் பெர்முடா முக்கோணப் பகுதியில் மறைந்து போனபோது, அதுபற்றிய விந்தைகள் கட்டுக்கடங்காமல் போய்விட்டன.

வடஅட்லாண்டிக் பெருங்கடலில், பெர்முடாதீவுகள் (பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்டது), போர்ட்டோரிக்கோ (அமெரிக்கக் கட்டுப்பாட்டில் உள்ள சுயாட்சிப் பகுதி) மற்றும் ஃபுளோரிடாவின் மியாமி (அமெரிக்கப் பகுதி) ஆகிய மூன்று நிலப்பகுதிகளுக்கும் நடுவே அமைந்த கடல்பகுதியைத்தான் பெர்முடா முக்கோணம் என்கின்றனர்.

திடீரெனத் தோன்றி மறையும் புயல்களை உருவாக்கும், வளைகுடா ஓடை (Gulf Stream) என்று சொல்லப்படும் கடலடி நீரோட்டம் பெர்முடா முக்கோணப் பகுதியிலேயே அமைகிறது. அமெரிக்காவின் கிழக்குக் கடற்கரையைப் பதம் பார்க்கும் அட்லாண்டிக் சூறாவளிகள் பெர்முடா அருகிலேயே உருவாகின்றன.

30 ஆயிரம் அடி ஆழம் கொண்ட, அட்லாண்டிக் கடலின் மிக ஆழமான பகுதி, பெர்முடா முக்கோணத்தில்தான் உள்ளது. இந்தக் கடலடிப்படுகையில் எதையும் தேடுவது என்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இவை எல்லாவற்றையும்விட முக்கியமானது, மிக அதிகமாக கப்பல்கள் பயணிக்கும் பகுதி இதுதான். அமெரிக்கா, அய்ரோப்பா, கரீபியன் தீவுகளில் உள்ள துறைமுகங்களுக்கு நாள்தோறும் கப்பல்கள் கடந்து செல்கின்றன. போர்க் கப்பல்களும், உல்லாசக் கப்பல்களும் ஏராளமாக நடமாடும் பகுதி இதுதான். வணிக, தனியார் விமானப் போக்குவரத்து அதிக அளவில் நடைபெறும் பகுதியும் இதுதான். அதனால் விபத்துகளும் இப்பகுதியில் அதிகம். அதாவது கற்பனை எதார்த்தத்தோடு முரண்படுகிறது. அதனால்தான் பெர்முடா முக்கோணம் என்பதை எந்த அரசும், மிகவும் குறிப்பாக அமெரிக்க அரசு ஏற்கவில்லை. அப்படி ஒரு வரையறை அதிகாரப்பூர்வமாக இல்லை. அதனால் பெர்முடா முக்கோணத்தின் பரப்பு பற்றி கருத்தொற்றுமை இல்லை. அது பத்து லட்சம் சதுரகிலோ மீட்டருக்கும் அதிகமான பரப்பு என்று பொதுவாகச் சொல்லலாம். விபத்துகள் பெர்முடா முக்கோணத்தில் நடைபெற்றது என்று காட்டுவதற்காக, அதன் பரப்பளவை எழுத்தாளர்கள் அதிகப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்பதே இதற்குக் காரணம். சரி, 1945ஆம் ஆண்டு நடந்த விமான விபத்துகளுக்கான விளக்கம் என்ன?

விமானங்களைச் செலுத்தியவர்கள் யாரும் அனுபவம் பெற்றவர்கள் அல்ல. அனைவரும் பயிற்சியாளர்கள். தளபதியாக இருந்தவர் மட்டுமே அனுபவம் பெற்றவர். அவர் தலைசுற்றல் காரணமாக பயிற்சியளிக்கச் செல்ல மறுத்திருக்கிறார். ஆனால், மாற்றுவதற்கு ஆள் இல்லாததால் வேறு வழியில்லாமல் சென்றுள்ளார். வானிலை மோசமாக இருந்துள்ளது. திடீரென ஏற்பட்ட புயலால் கடல் அலைகள் 15 மீட்டர் உயரம் வரை எழுந்துள்ளன. கட்டுப்பாட்டை இழந்து புயலில் சிக்கித்தான் அந்தப் போர் விமானங்கள் கடலில் மூழ்கியுள்ளன. ஒவ்வொரு விமானமும் 6 டன் எடை கொண்டவை. கடலில் விழுந்தால் வெகுவேகமாக மூழ்கிவிடும். மீட்புக்காகச் சென்ற விமானம், பெட்ரோல் கசிவால் புறப்பட்ட 23 நொடிகளில் வெடித்துச் சிதறிவிட்டது. அதன் சிதைகூலங்களும் பின்னர் கண்டறியப்பட்டன.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, மரைனர் ரக விமானங்களை அமெரிக்கக் கடற்படை கழித்துக்கட்டிவிட்டது தனிக்கதை. இந்த உண்மைகளை வசதியாக மறைத்துவிட்டு உருவாக்கப்பட்டதுதான் பெர்முடா முக்கோணப் புதிர். யுஎஸ்எஸ் நீர்மூழ்கிக் கப்பல் தொலைந்தது, பெர்முடா பகுதியில் அல்ல என்பதும் மறைக்கப்பட்டது. இந்தக் கட்டுக்கதைகள் அமெரிக்க வல்லரசின் தோல்விகளை மர்மங்களாக மாற்றி மறைக்கப் பயன்பட்டிருக்கின்றன என்பதும் முக்கியமானது. நூற்றாண்டுகளுக்கும் மேலாக மிகமுக்கியமான கடல்வழியாகத் திகழும் பெர்முடா பகுதி பற்றி 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில்தான் பேசப்பட்டதும், உலகின் பிற முக்கியமான கடல்வழிகளில் நிகழ்ந்த கப்பல் விபத்துகளைவிட அதிக எண்ணிக்கையிலோ அடிக்கடியோ பெர்முடா பகுதியில் ஏதும் நடந்துவிடவில்லை என்பதும் குறித்துக் கொள்ளத்தக்கது. இவை எல்லாவற்றையும்விட, உலகின் மிகவும் ஆபத்தான 10 நீர்வழிகள் பட்டியலில் பெர்முடா முக்கோணப் பகுதி இல்லை என்பதையும் மர்மங்களின் பரமபிதாக்கள் சொல்வதில்லை.

சுவடு தெரியாமல் மாயமான பிற விமானங்கள்

மலேசிய விமானம் மாயமான 17 நாட்கள் கழித்து, இந்தியப் பெருங்கடல் பகுதியின் தொலைதூரத்தில், விமானம் விழுந்து நொறுங்கிவிட்டதாகவும், அதில் இருந்தவர்கள் யாரும் உயிர் பிழைத்திருக்க வாய்ப்பில்லை என அறிவித்தார் மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக். இன்மார்சாட் (Inmarsat) எனும் பிரிட்டிஷ் செயற்கைக்கோள் நிறுவனம் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த முடிவுக்கு வந்திருப்பதாகவும் அவர் கூறினார். மாயமான விமான சர்ச்சைக்கு இந்தத் தகவல் முற்றுப்புள்ளி வைத்துவிடப்போவதில்லை. எங்கே என்ற கேள்விக்குத்தான் விடையளிக்கப்பட்டிருக்கிறதே ஒழிய எப்படி, ஏன் என்ற கேள்விகள் அப்படியே நீடிக்கின்றன.

இது ஒரு புறம் என்றால், இதற்கு முன்னர் சுவடு தெரியாமல் மறைந்த விமானங்கள் பற்றி என்ன சொல்வது? கண்டுபிடிக்க உதவும் தொழில்நுட்பத்தின் வரம்புகள் எத்தகையவை என்ற கேள்விக்குள்தான் அதற்கான விடை ஒளிந்துள்ளது.

கடற்பரப்பில் விமானத்தின் பாகங்கள் கிடக்கின்றனவா என, விமானத்தில் பறந்தபடியும், கப்பல்கள் மூலமும் தேடுவது வைக்கோல் போரில் ஊசி தேடும் வேலை. ஒப்பீட்டளவில் சிறிய துண்டுகளை, பல ஆயிரம் சதுரகிலோ மீட்டர் பரப்பில் தேடவேண்டும் என்பதும், கடற்பரப்பில் எத்தனையோ சிதைகூலங்கள் கிடக்கும் என்பது சிக்கலை அதிகப்படுத்துகிறது. எனவே செயற்கைக்கோள் வழங்கும் தகவலின் அடிப்படையில், குறிப்பான இடத்தில் தேடல் நடத்துவதே நடைமுறைக்குச் சாத்தியமானதாகி விடுகிறது. அப்படித்தான் இப்போதும் இந்தியப் பெருங்கடல் பகுதி சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. செயற்கைக்கோள் வழங்கும் தகவலும்கூட துல்லியமானவை அல்ல. பெரிய துண்டுகளாக விமானம் உடைந்து விழுந்திருந்தால்தான் அந்தத் தகவலும் கைகொடுக்கும். சிறு துண்டுகளாக நொறுங்கி விழுந்தால் அது கடலில் கரைத்த பெருங்காயம்தான். செயற்கைக்கோள்கள் அனுப்பும் படங்களைச் செயல்படுத்தி நமக்குத் தேவையான தகவலைப் பெற பெருந்திறனுடன் கூடிய பெரும் எண்ணிக்கையிலான கணினிகளின் ஆற்றல் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

இதுவும் ஒரு நடைமுறைச் சிக்கல். ராடார் கருவி என்பது தொடர்ச்சியாக ரேடியோ அலைகளை எல்லாத் திசையிலும் அனுப்பும். அதன் எதிரொலிப்பிலிருந்து ஒரு பொருளின் இடம், வேகம், திசை கண்டறியப்படும். ராடார் திரையில் விமானம் செல்திசை என்பது ஒரு சிறிய புள்ளி போலத்தான் தெரியும். விமானத்தைத் தாழ்வாகப் பறக்குமாறு செய்து, ராடார் கருவியின் கண்ணில் மண்ணைத் தூவுவது ஒன்றும் கடினமானது அல்ல. செயற்கைக்கோள்களும்கூட இதேபோல, ரேடியோ அலைகளின் எதிரடிப்பை வைத்து கடலில் கிடக்கும் பொருட்களை அடையாளம் காண்கின்றன. பெரும் மீன் கூட்டங்களும்கூட விழுந்து கிடக்கும் பொருள் என தவறாகக் கருதப்பட வாய்ப்பு உண்டு. எல்லா செயற்கைக்கோள்களும் படம் எடுத்து அனுப்புபவை அல்ல.

இப்படியே பின்னோக்கிச் சென்றால், இந்தத் தொழில்நுட்பங்களும், இத்தகைய விமான -_ -கப்பல் வசதிகளும் இல்லாத சில பத்தாண்டுகளுக்கு முன்னர் கடலில்- _ பனிமலைகளில் விழுந்து நொறுங்கிய விமானங்களைக் கண்டறிந்திருக்க முடியுமா என்ன?

தொழில்நுட்பத்தின் திறன்கள்மீது மிகைநம்பிக்கையை வளர்த்துக்கொண்டு அதை வழிபடுவதும், அதன் வரம்புகளை மறந்துவிட்டு வசைபாடுவதும் பாமரத்தனம்தானே வேறில்லை.

(மலேசிய விமானத்தைத் தேடுவதற்காக பயன்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்கள், அவற்றின் வரம்புகள் குறித்து  அடுத்த இதழில் பார்க்கலாம்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *