Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

துணை இழந்தவர்கள் மறுமணத்தில் தமிழ்கம் முதலிடம்

– சரவணா இராசேந்திரன்

இந்துமதக் கலாச்சாரமும் விதவைகளும் இந்துமதக் கலாச்சாரத்தில் விதவைகள் என்பவர்கள் தரிசு நிலத்திற்கு ஒப்பானவர்கள். சென்ற பிறப்பில் செய்த கொடுமையின் பலனால் அவர்களுக்கு இந்த நிலை. அவர்களுக்கு உதவுபவர்கள்கூட அவர்களின் பாவத்தில் பங்கு பெற்று அடுத்த ஜென்மத்திலும் துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று இன்னும் எவ்வளவோ சாத்திரங்களில் எழுதி இந்தியாவில் வேதகாலம் தழைத்தது முதல் விதவைப் பெண்களை கொடுமைக்குட்படுத்தி வந்தனர்.

பெரியாரின் விதவைத் திருமணப் போராட்டம்

பெரியாரின் சீரிய சமூகப்பணியில் விதவைத் திருமணமும் ஒன்று. தான் வலியுறுத்தியதை பெரியார் தனது வீட்டில் இருந்தே தொடங்கி எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்கினார். பெரியார் இதன் காரணமாக தென் இந்தியாவில் பெண்களின் நிலையில் மாற்றம் வந்ததுடன்,  திராவிட கட்சிகளின் தொடர் ஆளுமையால் தமிழகத்தில் விதவைகளின் மறுமணம் என்பது சாத்தியமானது, இன்றைய நிலையில் இந்தியாவில் விதவைகள் மறுமணம் அதிகமாக தமிழகத்தில்தான் நடக்கிறது. இந்திய மாநிலங்களில் விதவைத் திருமணங்களின் எண்ணிக்கை (விழுக்காட்டில்) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நடத்திய கணக்கெடுப்பின்படி தமிழ்நாடு விதவைத் திருமணத்தில் 8.8 விழுக்காடு என்ற நிலையில் எப்போதும் முதலிடத்தில் நிற்கிறது. இதனைத் தொடர்ந்து ஆந்திரா 8.2 விழுக்காடு, கேரளா மற்றும் கர்நாடகா 8.1 விழுக்காடு என்ற நிலையில் உள்ளன. மராட்டியத்தில் 7 விழுக்காடு, ஒரிசாவில் 7.4 விழுக்காடு, ஹிமாச்சல் பிரதேசத்தில் 6.9 விழுக்காடு,  பிகாரில் 6 விழுக்காடு என்ற நிலையில் விதவைத் திருமணங்கள் நடைபெற்று வருகின்றன,

இறுதி வரிசையில் குஜராத் 5.2 விழுக்காடு, ராஜஸ்தான் 5.0 விழுக்காடு, மத்திய பிரதேசம் 4.9 விழுக்காடு என்று உள்ளன. இந்தியாவின் தலைநகரான டில்லியில்தான் விதவைகளின் திருமணம் மிகவும் குறைவாக 4.1 விழுக்காடு நடைபெறுகிறது.

ரேணுகா சவுத்திரி பேட்டி

பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ரேணுகா சவுத்திரி கூறும்போது, வட மாநிலங்களில் விதவைப் பெண்களின் வாழ்க்கையில் கலாச்சாரப் பழக்கவழக்கம் பெரும் தடையாக அமைகிறது. முக்கியமாக சமூகத்தில் விதவைப் பெண்கள் என்றாலே தீண்டத்தகாதவர்கள் என்று சொந்த உறவுகளாலேயே வெறுக்கப்பட்டு வருகின்றனர். அதன் காரணமாக அவர்களுக்காக துணிந்து பேசுபவர்கள் என்று யாரும் இல்லாத சூழலில் அந்தப் பெண்களுக்கான மறு வாழ்வு என்பது இல்லாத நிலையில்தான் உள்ளது. தற்போதைய விகிதாச்சாரத்தின்படி வடக்கு மாநிலங்களில் நடக்கும் விதவை மறுமணம் எல்லாம் நகரம் மற்றும் படித்த வர்க்கத்திடம் மாத்திரமே உள்ளது. நகரத்திலும் உள்ள நடுத்தர மக்களிடம்கூட விதவை மறுமணம் என்பது ஏதோ தேவையற்ற குடும்பத்திற்குக் களங்கம் விளைவிக்கும் செயலாகவே கருதப்படுகிறது. இந்த நிலையில் சிறுநகரம் மற்றும் கிராமங்களில் விதவைகளின் நிலை என்பது மிகவும் மோசமாகவே உள்ளது.

பிரபுல் மனீஷா கவுர் பேட்டி

டில்லியைச் சேர்ந்த விதவைகள் மறுவாழ்வு மய்யத்தின் துணை இயக்குனரான பிரபுல் மனீஷா கவுர் என்பவர் கூறும்போது, இந்தியாவில் விதவைகள் மறுமணம் என்பது இவ்வளவு நாகரிக வளர்ச்சி அடைந்த போதிலும் அவசியமற்ற ஒன்றாகவே பார்க்கப்படுகிறது. இதற்கு முக்கியக் காரணம் மதம் தொடர்பான சடங்குகள்தான். இந்தியாவைப் பொருத்தவரை, மதம் வாழ்வில் ஒன்றாகக் கலந்துவிட்டது. தினசரி வாழ்வில் மதம் தொடர்பானவைகள் கலந்துவிட்டன. இங்குதான் விதவைகளுக்கான சிக்கல் ஆரம்பிக்கிறது. உதாரணத்திற்கு, விரத நாட்களில் விதவைகளைப் பார்ப்பது விரதத்திற்குப் பாதகமான ஒன்றாகக் கருதப்படுகிறது, வாரம் முழுவதும் விரதங்களை மேற்கொள்கின்றனர். எடுத்துக்காட்டாக, திங்கள் சிவனுக்கு, செவ்வாய் சக்தி தெய்வத்திற்கு, புதன் கிரக தோசத்திற்கு, வியாழன் குரு தெய்வத்திற்கு, வெள்ளி விஷ்னு மற்றும் லட்சுமிக்கு, சனிக்கிழமை சனி பகவான் மற்றும் காளிக்கு, ஞாயிறு அன்று சூரிய பகவானுக்கு என தினசரி வீட்டில் ஏதாவது ஒரு காரணத்திற்காக விரதமிருந்து வருகின்றனர்.

இந்த நிலையில் அந்த வீட்டில் உள்ள விதவைகளின் நிலையை நினைத்துப் பாருங்கள். இவர்களின் நம்பிக்கையின் மூலாதாரம், விரதமிருந்தால் தங்களுக்கு ஏற்பட்ட சிக்கலில் இருந்து விடுதலை கிடைக்கும் என்று நினைக்கின்றனர். அப்படி இருக்கும்போது சாத்திரங்களின்படி விரத காலத்தில் விதவைகளைக் கண்டாலோ அவர்கள் எதிரில் வந்தாலோ விரதம் கலைந்துவிடும் என்று இருக்கும்போது விரதமிருப்பவர்கள் தானாகவே முன்வந்து விதவைகளை விலக்கிவைப்பார்கள். இதனை, இயற்கையான நிகழ்ச்சி தொடர்பான ஒன்றாகப் பார்க்கிறார்களே தவிர அதை உணர்வு தொடர்பான ஒன்றாகப் பார்க்க மறுக்கிறார்கள், மறுமணத்தைப் பொருத்தவரை விதவைகள் என்பவர்கள் முற்பிறவியில் பாவம் செய்தவர்கள், அவர்கள் இந்தப் பிறவியில் தன்னுடைய விதவைப் பலனை அனுபவித்தே ஆகவேண்டும். அதிலிருந்து விடுபடுவது அல்லது மறுமணம் செய்வது பின்வரும் பிறவியில் மேலும் அதிக துன்பம் அனுபவிக்க வேண்டும் என்று உள்ளது. மேலும், விதவைகளுக்கு மறுவாழ்வு அளிப்பவர்கள், அவர்களின் பாவங்களில் பங்கு கொள்ளவேண்டும். அதே நேரத்தில் மறுமணம் செய்பவர்களும் அடுத்த பிறவியில் துன்புறுவார்கள் என்று உள்ளது. இதுவும் மதம் சார்ந்த கொள்கையாகப் பார்க்கப்படுவதால் விதவைகளுக்கு மறுவாழ்வு என்பது இல்லாத ஒன்றாகிவிட்டது. அப்படியே யாராவது முன்வந்தாலும், அதைத் தேவையற்ற ஒன்றாக்கி விதவைகளை மறுமணம் செய்பவர்களையும் ஒதுக்கி வைத்துவிடுகின்றனர். இதனால் ஒரு சமூகப் பிளவு அங்கு உருவாகிறது. இதிலிருந்து மீள்வதற்குத் துணிச்சல் இருந்தாலும் தினசரி வாழ்க்கையில் எதிர்கொள்ளும் ஏச்சுப் பேச்சும் மறுமணம் செய்தவர்களை மனதளவில் மருளச் செய்து விடுகிறது. இதன் விளைவு, நமக்கெதற்கு என்று விதவைகளை மறுமணம் செய்துகொள்ள முன்வரும் நபர்களும் ஒதுங்கிவிடுகின்றனர்.

தற்போது வீட்டிற்குள் தொலைக்காட்சித் தொடர்கள் மூலம் விதவைகள் குறித்த தவறான ஒரு பார்வை ஏற்பட்டு வருகிறது. ஆகையால் தொலைக்காட்சித் தொடர்களில் குறிப்பாக விதவைப் பெண்களுக்கு எதிராக வரும் எந்த ஒரு காட்சியையும் குறிப்பாக தொடர்களில் விதவையாக வரும் பெண்ணை அபசகுணமாகப் பார்க்கும் காட்சிகள், விழாக்களின் போது விதவையாக நடிப்பவர்களை கலந்துகொள்ளவிடாமல் அவர்களின் விதவைத்தனத்தைச் சுட்டிக்காட்டி ஏளனம் செய்வது, குடும்பமாக வெளியில் செல்லும் போது விதவையாக நடிப்பவர்களை வீட்டில் இருக்கும்படி ஆணையிடுவது விதவைகளை ஏதோ கொடூரமான வில்லிகளைப்போன்று சித்தரிப்பது போன்ற காட்சிகளைத் தடை செய்யவேண்டும். ஆனால், தொடர்களுக்கு ஏற்றவாறு அந்தக் காட்சிகள் இருந்தால்தான் சுவையாக இருக்கும் என்று கூறி வேண்டுமென்றே அது போன்ற காட்சிகளை அதிகமாக எடுத்து வருகின்றனர். இப்படி சமூகத்தில் விதவைப் பெண்களை ஊடகங்கள் மூலமாக கேவலப்படுத்தும் நிகழ்ச்சிகளை  அரசு கடுமையான தணிக்கை முறை வகுத்து அப்படிப்பட்ட காட்சிகளை எடுப்பவர்களுக்கும் தண்டனை கொடுக்க வழிவகை செய்யவேண்டும். கருவிலேயே பாலினம் கண்டுபிடிப்பதை எப்படி கடுமையான சட்டங்கள் கொண்டு தடை செய்கின்றனரோ அதுபோல் விதவைகளை மட்டமாகச் சித்தரிக்கும் தொலைக்காட்சித் தொடர்களைத் தடைசெய்யவேண்டும். தொடர் ஆரம்பிக்கும்போது அதுபோன்ற காட்சிகள் இடம் பெறாது என்ற குறிப்பையும் காட்டவேண்டும்.

தீர்வு

தீர்வுகள் என்று கூறப்போனால் மத ரீதியாக இந்த விவகாரத்தைச் சீர்செய்ய முன்வர வேண்டும். ஆனால், இங்குள்ள மதவாதிகள் இதை மாற்ற முன்வர மாட்டார்கள். காரணம், இது நேரடியாக மதம் தொடர்பான விவகாரம். இந்த விவகாரத்தில் தலையிடும்போது மத விதிகள் மாற்றம் காணும். அப்போது மதத்தின் மீதான நம்பிக்கைகள் குலைந்துவிடும் என்ற பயமும் மதவாதிகளிடம் இருக்கிறது. அதைவிட மதவாதிகளின் தனிப்பட்ட பல நன்மைகள் விதவைகளின் மறுமணத்தினால் பாதிக்கப்படும். மேலோட்டமாக பார்க்கப்போனால் இது கேள்விக்குரிய ஒன்றாகத் தெரியும். ஆனால், உண்மை விதவைகள் இந்தியாவில் சொத்துக்களைப் பாதுகாக்கப் பயன்படும் ஒன்றாகவும் குடும்ப கவுரவத்தைப் பேணிக் காக்கவும் பயன்படுத்தப்பட்டனர்.

சொத்திற்காக கொலை செய்யப்பட்ட விதவை

முக்கியமாக விதவைகள் மறுமணம் செய்யும்போது சொத்துக்கள் குறித்த சண்டைகள் ஏற்பட்டு கொலைகள் நடந்த சம்பவங்கள் பரவலாக வட இந்தியாவில் காணப்படுகின்றன. எடுத்துக்காட்டாக, 2011ஆம் ஆண்டு ஹரியானா மாநிலத்தில் உள்ள பிவானி மாவட்டம் பட்வான் கிராமத்தில் நடந்த கொலைச் சம்பவத்தைக் கூறலாம். பெயர்: சந்தோஷி தேவி, வயது 28. விதவையான இவர் தன்னுடைய இரண்டு குழந்தைகளுடன் பெற்றோரின் கவனிப்பில் வசித்து வந்தார். இவரது கணவருக்குச் சொந்தமான 16 ஏக்கர் நிலம் தொடர்பாக இவர்களுக்கு அடிக்கடி மிரட்டல் வந்துள்ளது. இந்த நிலையில் இவருக்கு மறுமணம் செய்துவைக்க சந்தோஷி தேவியின் பெற்றோர் முன்வந்த சில தினங்களுக்குள்  அவரும் அவரது இரண்டு குழந்தைகளும் கொலை செய்யப்பட்டனர். ஹரியானா மாநில காவல்துறையின் நீண்ட விசாரணைக்குப் பிறகு, இந்தக் கொலைதொடர்பாக சந்தோஷிதேவியின் இறந்து போன கணவருடன் பிறந்த மூன்று சகோதரர்களின் சதிச்செயல் என்று தெரியவந்தது. சொத்து தொடர்பாக இவர்கள் சந்தோஷி தேவியை அடிக்கடி மிரட்டி வந்தனர். இந்த நிலையில் இவர் தனது குழந்தைகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். பெற்றோரும் தன்னுடைய மகளுக்கு மறுமணம் செய்துவைக்க முன்வந்தது தெரியவந்தது. திட்டமிட்டு சந்தோஷி தேவியையும் அவரது குழந்தைகளையும் கொலை செய்துவிட்டனர். தற்போது அந்த நிலம் பஞ்சாயத்து நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதாவது, விதவைகளுக்கான பாதுகாப்பு 21ஆம் நூற்றாண்டிலும் அரசால் கொடுக்க முடியாத ஒன்றாக உள்ளது.

மாநிலங்களில் விதவைகளுக்கான நலத்திட்டம்

தமிழக அரசின் தர்மாம்பாள் அம்மையார் விதவை உதவித் திட்டம், ஆந்திர அரசின் விதவைகள் மறுவாழ்வு உதவித்தொகைத் திட்டம், கேரளாவின் மாங்கல்யா விதவைகள் மறுமண உதவித் திட்டம், மராட்டிய அரசின் மறுமணம் புரிந்த பெண்களுக்கான நலவாழ்வு மற்றும் பொருளாதார உதவிச் சலுகைகள் போன்ற திட்டங்கள் தணிக்கைக் குழுவின் அறிக்கைப்படி சரியான முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால், மற்ற மாநிலங்களில் இந்த நிலை மிகவும் மோசமாக உள்ளது. எடுத்துக்காட்டாக ராஜஸ்தான், மத்தியபிரதேசம் போன்ற மாநிலங்களில் தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள்கூட சமூக விரோதிகளின் மிரட்டலுக்கு ஆளாகி வருகிறது. இதில் அரசு சலுகைகள் மக்களை எந்த நிலையிலும் போய்ச்சேரவில்லை, ராஜஸ்தான் அரசில், கடந்த 7 வருடங்களாக விதவைகள் மறுமணத்திற்கான உதவித்தொகைக்கு யாருமே பதிவிடவில்லை என்ற அதிர்ச்சிகரமான செய்தி, நாட்டின் விதவைகளின் நிலையில் மாற்றம் ஏற்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகிறது.

மறுமணம் செய்தவர்களுக்கு அயல்நாட்டு சுற்றுலாப்பயணம்

வட மாநிலங்களில் விதவைகள் மறுமணம் என்பது சமூகத்திற்குப் பாதகமான ஒன்றாகப் பார்க்கப்பட்டு வரும் நிலையில், சத்தீஸ்கர் மாநிலத்தைச் சேர்ந்த பெண்களின் மறுவாழ்விற்காக ஆரம்பிக்கப்பட்ட தொண்டு நிறுவனம் விதவைகளை மறுமணம் செய்பவர்களுக்கு தேனிலவு சுற்றுலா ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து தொண்டு நிறுவன இயக்குனர் கூறியதாவது:.

இளம் வயதில் துணையை இழந்து தனிமையில் வாடிவரும் விதவைகளை நமது கலாச்சாரம் மற்றும் மத சாஸ்திரங்களைக் காரணம் கூறி எவரும் மறுமணம் செய்ய முன்வருவதில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஓர் இளைஞர் சிறுவயதுப் பெண் குழந்தையுடன் கணவனை இழந்து தனிமையில் வாழ்ந்த ஒரு விதவைக்கு மறுவாழ்வு தர முன்வந்து பலதரப்பு எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, துணிந்து மறுமணம் செய்தார். இந்தச் செயல் சமூகத்திற்கு ஒரு நல்ல உதாரணமாக விளங்குகிறது. இதை இப்படியே பேச்சோடு விட்டுவிடாமல் இவரைத் தொடர்ந்து பல இளைஞர்களும் முன்வர வேண்டும். இதற்காக பல திட்டங்களை வகுத்துள்ளோம். திருமணம் செய்யும் இளைஞர்களுக்கு பொருளாதார உதவி, வேலைவாய்ப்பு, சுயதொழில் பயிற்சி போன்றவைகளுடன் திருமணம் செய்யும் தம்பதியினருக்கு ஆசியாவின் 5 நகரங்களுள் ஏதாவது ஒரு நகரத்திற்கு 5 நாட்கள் இலவச தேனிலவு சுற்றுப்பயணம் ஒன்றையும் அறிமுகப்படுத்தியிருக்கிறோம். இதில் மறுமணம் செய்யும் தம்பதிகளுக்கான சுற்றுப்பயணம், செலவு, தங்குமிடம், உள்ளூர் சுற்றுலா என அனைத்துச் செலவையும் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். இது மறுமணம் செய்தவர்களுக்கு ஊக்கம் அளிப்பதாகவும் அதே நேரத்தில் இந்தத் தேனிலவுப் பயணம் என்பது சமூகத்தின் பார்வையிலும் மாற்றம் தரும் என்பதில் அய்யமில்லை. இதனால் சமூகத்தில்  பொதுவான ஒருவராக இவர்கள் ஏற்றுக்கொள்ளப்படுவர் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது என்று கூறியுள்ளார். வடமாநிலங்களில் அவ்வப்போது இதுபோன்ற ஒரு சில முற்போக்கான சம்பவங்கள் நிகழ்ந்தாலும், ஒரு பரபரப்பான செய்தி போன்று சில தினங்களுக்குள் அடங்கிவிடுகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் விதவைகளுக்கான மறுவாழ்வுத் திட்டத்தை, தற்போது உள்ள சட்டங்கள் போலில்லாமல் மறுமணம் புரிபவர்களுக்காக வேலைவாய்ப்பு, தொழில், கடனுதவி மற்றும் சமூகத்தில் மறுமணம் குறித்து ஒரு நல்ல பார்வையை உருவாக்க வீதி நாடகங்கள், மற்றும் ஊடகங்கள் மூலம் பல திட்டங்களை _ விழிப்புணர்வை உருவாக்க வேண்டும்.