Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

எனக்குத் தெரியும் எல்லாம்…

ஒரு நாள்…
என் நாட்டு
அரசியல் சாரா
அறிவுஜீவிகள் என்போர்…
நடுநிலை வாதிகள் என்று
நா சரசம் பேசியோர்…
துலாக்கோல் என
தம்மைத் தம்பட்டம் அடித்துக் கொண்ட
ஊடகங்கள்…
நடிப்பு
விளையாட்டு
இலக்கியம் என்று
விளம்பரமும்
பணமும்
விளம்பரத்தின் மூலம்
பணமும் பண்ணியோர்…
இன்னும் நல்லவர்கள்
என்று நம்பப்பட்டோர்
எல்லோரும்
எம் நாட்டு எளிய மக்களால்
குறுக்கு விசாரணை
செய்யப்படுவர்.
இந்நாட்டின் எதிர்காலம்
காவியிருளுக்குள்
கசையடி படப்போகிறது
என்று தெரிந்தும்
அந்தக் கொட்டடிக்குள்
எம்மைத் தள்ளிவிட்டு
சுற்றி நின்று -கைகொட்டிச்
சிரித்ததற்காக
அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.
கூடிநின்ற ரசிகர்களை
வரி ஏய்ப்புக்கும்
வருங்கால வாய்ப்புக்கும்
கூறுகட்டி விற்பனை செய்தவர்கள்
வரிசையாய் நிறுத்தப்பட்டு
அணிவகுப்பில் அடையாளம்
குறிக்கப்படுவார்கள்.
அதில் மரு வைத்து
மாறுவேடமிடுவோர்,
தடாலடி கட்சி மாறிகள்
தனியாக விசாரிக்கப்படுவர்.
ஒருகையில் விளக்குமாற்றையும்
மறுகையில் வெண்சாமரத்தையும்
வீசிக் கொண்டே
நடுநிலை என்று
வியாக்யானம் பேசியவர்கள்
நடுநிலையான
கூண்டில் நிறுத்தப்படுவார்கள்.
தேஷ வளர்ச்சி என்று
கார்ப்பொரேட்டுகளைக் கைகாட்டி
கூலிக்கு மேல் கூவியவர்களின்
தேக வளர்ச்சி
புள்ளி விவரங்கள்
பெருந்திரையில் காட்டி
விவாதிக்கப்படும்.
சிறுகச் சிறுக
இழந்து கொண்டிருந்த
தீச்சுடரென
இந்த மக்கள்
செத்துக் கொண்டிருந்தபோது
அந்த நெருப்பில்
குளிர் காய்ந்தவர்களின்
கோணல் புத்திகள்
சோதனைக்குட்படுத்தப்படும்.
அக் குற்றப் பத்திரிகையில்….
தெரிந்தே இச்சதி செய்தவர்கள்
மட்டுமல்லாமல்…
எல்லாம்
தங்களுக்குத் தெரியும் என்று
தங்களையே
ஏமாற்றிக் கொண்டவர்கள்…
நூல் ஏடுகளுக்கு
வால் பிடித்தவர்கள்…
போலி மின்னஞ்சல்களுக்கு
முகவரி கொடுத்தவர்கள்…
ஒரு கோக்குக்கும்
காக்டெயிலுக்குமிடையில்
சரித்திரம் பேசியவர்கள்…
ஒரு பார்ப்பன
ஷொட்டுக்காக
தாம் ஷர்ட்டு போட்ட
வரலாற்றை மறந்தவர்கள்…
சமூகநீதியால் கிடைத்த
சக்கர நாற்காலிகளில்
சுற்றிக் கொண்டே
அர்த்த சாஸ்திரத்தின்
பெருமை பேசியவர்கள்…
நேஷனல் இண்டகரிட்டி
ப்ரோக்ராமில்
இந்துத்துவாவை
#இன்க்ளூட் செய்து
சிறுபான்மையோரை
எஸ்க்ளூட் செய்தவர்கள்…
காவியும் அரைடவுசரும்
வைத்த குண்டுகளுக்கு
எவ்வித விசாரணையுமின்றி
தாடியையும்
குல்லாவையும் நோக்கிக்
கை நீட்டியவர்கள்…
தேவனுக்குச் சுவிசேஷம் சொல்லி
சேர்த்த சொத்துகளை
காத்தருள காவியிடம்
மண்டியிட்டவர்கள்…
மகளிர்க்குப்
பாதுகாப்பு வேண்டும் என்று
உதட்டில் பேசிக் கொண்டே
வேலைக்குப் போனால்
வீணாகிப் போவார்கள் என்று
வேதாந்தம் பேசியவர்களை
மறந்தவர்கள்…
எல்லோரும்…
எல்லோரும்…
அக்குற்றப்பத்திரிகையில்
சேர்க்கப்படுவார்கள்!
ஒரு மரண வியாபாரிக்கு
மகுடம் சூட்ட விரும்பியோர்…
ஒரு சர்வாதிகாரிக்கு
சனநாயகச் சாயம் பூசியோர்…
சுயநலத்துக்காக எம் மக்களை
சூழ்ச்சிக்குப் பலி கொடுத்தோர்…
அனைவரும்…
அனைவரும்…!
நிறுத்து…
இதையெல்லாம்
பேசவும் எழுதவும்
சிந்திக்கவும் கூட
உனக்கு
வாய்ப்பளித்தால் தானே!
என்ற குரல் கேட்கிறது.
என் குரல் வளை
நெரிக்கப்படலாம்.
எம் உடல் அமிலத்தால் எரிக்கப்படலாம்.
அதன் சாம்பலும்
சத்தமின்றி புதைக்கப்படலாம்.
ஆனால்
எமக்குத் தெரியும்!
எந்த ஒரு
கொடுங்கோலனின் உச்சமும்
ஒரு சில ஆண்டுகள் தான்.
அதன் பிறகான பெருவெடிப்பில்
அண்டம் சிதறியது போல
உங்கள்
அகண்ட பாரதம் சிதறும்.
அப்போதும்
எம்மக்கள் இருப்பார்கள்.
உங்களை நம்பி
ஏமாந்த எம் மக்கள்…
அப்போதும் இருப்பார்கள்.
அவர்களே சாட்சிகளாய்
அவர்களே வழக்காடிகளாய்
காலத்தின் தீர்ப்புக்காக
உங்களைக் கூண்டிலேற்றுவார்கள்.

– சமா.இளவரசன்