– இரெ.இளம்வழுதி எம்ஏ., பி.எல்.
திராவிட இயக்க தீரர் கடலூர் இரெ. இளம்வழுதி அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் திராவிடர் கழக மாணவர் அமைப்புக்குச் செயலாளராக இருந்தவர். தி.மு.க. தொடங்கிய நாளிலிருந்து பல்வேறு பொறுப்புகளில் செயல்பட்டவர். பொன்மொழி என்ற கழக இதழை தனது இறுதிக் காலத்தில் தொடங்கி நடத்தினார். தலைசிறந்த வழக்குரைஞராக, தலைமைக் கழகப் பேச்சாளராக விளங்கினார்.
1967இல் சட்டப்பேரவை உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார். அறிஞர் அண்ணாவால் கறுப்பு இளவரசர் என அழைக்கப்பட்ட இவர், தலைவர் கலைஞரின் ஆருயிர் நண்பர். இறுதி மூச்சு வரை, இயக்கப் பணியாற்றிய பகுத்தறிவுப் பண்பாளர்.
இந்தியன் பினல் கோடு செக்ஷன்களில் 420 ஒரு தனிரகம். சமுதாய அமைப்பில் பல்வேறு துறைகளில் இயங்கிவரும் திருவாளர்களைக் குறித்தும், அவர்கள் செயல்முறைகளில் எந்த அளவிற்கு மூளையைப் பயன்படுத்தி பலன் அடைகிறார்கள் என்பது பற்றியும், அவர்களுடைய வன்முறைச் செயல்களுக்கு முடிவுகட்டி அளிக்கப்படும் சிறைப்பரிசுகள் பற்றியும் விளக்குவதே 420ம் அதனை ஒட்டிய பிரிவுகளும்.
இந்த பேரும், புகழும் பெற்ற 420இல் சிக்குபவர்கள் யார்? பாங்குகளில், சினிமாக் கொட்டகைகளில் மாட்டப்பட்டிருக்கும் கேடிகளின் பட்டியல் மட்டுமல்ல; பெரிய மனிதர்கள் என்ற பெயரில்கூட அந்தத் திருவாளர்கள் பதுங்கியிருப்பார்கள்.
திருடனைக் கண்டுபிடித்துவிடலாம் கொலைகாரன் சிக்கிவிடுவான்; ஆனால் செக்ஷன் 420 கிடைப்பது சற்றுக் கடினம்தான்.
பக்திமான் போல் வேடமிடும் பகல் கொள்ளைக்காரர்கள், பகவான் பெயரைச் சொல்லிப் பணம் பறிக்கும் பாதகர்கள், செப்புக்காசை அசல் தங்கமென்று சொல்லி குறைந்த விலைக்கு அளிக்கும் குடிகேடர்கள், உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசும் உன்மத்தர்கள், அரிசியில் கல்லையும், மண்ணையும் கலந்து அளக்கும் அசகாய சூரர்கள், நோட்டை இரட்டிப்பதாகச் சொல்லும் எத்தர்கள், சீட்டுக் கம்பெனி நடத்துவதாக விளம்பரம் செய்து ஏழைகளின் பணத்தை ஏப்பமிடும் இழிசெயலர்கள், அரசியல் சூதாடிகள், இன்னும் எத்தனையோ ரகங்கள் _ அத்தனைபேரும் திருவாளர்கள் 420தான். ஏமாற்று உலகத்தின் அரசகுமாரர்கள் இந்த 420.
***
இந்த நூற்றாண்டிலுமா அந்தக் கைங்கரியம் என்று கேட்கத் தோன்றும். ஆனால் மனித வாழ்க்கை முன்னேற முன்னேற ஒவ்வொரு கோணத்திலும் யாராவது ஒரு திருவாளர் 420அய்ச் சந்திக்காமல் நம்மால் மேலே போக முடியாது. நீறு பூசிய நெற்றியும், உருத்திராட்சம் கட்டிய கழுத்தும், விசிறிமடி தொங்கும் தோளும், துவளும் ஜிப்பா தழுவும் உடலும், அத்தர் நெடி வீசும் வாடையும், புன்சிரிப்புத் தவழும் வாயும், விஷமம் விளையாடும் கண்களும், ஏமாற்றுக் கலை பயிலும் மூளையும், அப்பாவிகளைக் காணோமே என்று ஏங்கும் இதயமும், நயமான பேச்சும் கொண்ட மனித உடல் நடமாடும்போது, திருவாளர் 420இன் உலகம் விடிந்துவிட்டது என்றுதானே பொருள்!
***
ஆனால் அவர்களுடைய சரளப் பேச்சில் மயங்கி கைப்பொருளை இழக்கும் ஏமாளிகளைக் காணும்போது உள்ளபடியே நமக்கு ஆச்சரியமும் திகைப்பும் ஏற்படுகிறது. பத்திரிகைகளில் பத்தி பத்தியாக செய்தி வருகிறது, படித்தவர்களும் பாமரர்களும் எப்படி எத்தர்களிடம் ஏமாறுகிறார்கள் என்று.
ஆனால் அந்தச் செய்தி தொடர்கதையாக வருகிறதே தவிர, முற்றுப்புள்ளி வைத்து முடிக்க முடியவில்லையே! மனிதர்களின் பலவீனம், பேராசை, குறுக்கு வழியில் பெரும் பொருளீட்டும் பேராசை __ அந்தப் பேராசையை மூலதனமாகக் கொண்டே செயல்புரிகிறான் ஏமாற்றுக்காரன். சில சந்தர்ப்பங்களில் பயமுறுத்தியும் ஏமாற்றுகிறான், பழைய பஞ்சாங்கத்தைக் காட்டியும் ஏமாற்றுகிறான். ஆக இந்த ஏமாற்றுக் கலை வளர்ந்து வருகிறதே தவிர குறைவதாகக் காணோம்.
***
ஆண்டவன் பெயரைச் சொல்லி எப்படி அசகாய சூரனொருவன் அப்பாவி ஒருவரை ஏமாற்ற முனைந்தான் என்ற ஒரு கற்பனை _ நடந்த நிகழ்ச்சி ஒன்றை மய்யமாகக் கொண்டு தரப்படுகிறது.
சுமார் 30, 35 ஆண்டுகளுக்கு முன்னர் கடலூரில் ஷேக் இமாம் என்ற ஒரு பணக்கார முஸ்லிம் குடியிருந்து வந்தார். அவருடைய முன்னோர்கள் மலேயாவில் வணிகம் செய்து பெரும் பொருள் திரட்டியவர்கள். வம்ச பரம்பரையாகவே நல்ல செல்வாக்கில் உள்ளவர்கள்.
ஷேக் இமாம், மார்க்கத் துறையில் கெட்டிக்காரர். தொழுகையை முறை தவறாமல் மேற்கொள்ளுபவர். அல்லாவின் திருநாமம் உச்சரிக்கப்பட்டால் போதும்; மெய் மறந்துவிடுவார். நாகூர் ஆண்டவர்மீது அசைக்க முடியாத பக்தி. இமாம் சாயபுவின் தகப்பனார் ஹஜ் யாத்திரைக்குப் போய் வந்தவர். முஸ்லிம் பேட்டையில் நல்ல மதிப்போடு வாழ்ந்து வந்தார்கள்.
***
திடீரென்று தந்தை இறந்துபோன கவலையால் பீடிக்கப்பட்டிருந்த ஷேக் இமாமுக்கு பீதியும் பயமும் தரத்தக்க இரு கடிதங்கள் நேரே நாகூர் ஆண்டவனிடமிருந்து தபாலில் வந்தன. வந்தன என்று சொல்வதைக் காட்டிலும் ஆண்டவனால் அனுப்பப்பட்டிருந்தவை போல் இருந்தன.
ஆண்டவனின் கட்டளைகளாக சில பயங்கர உத்தரவுகளும் அவைகளில் கண்டிருந்தன. ஒரு குறிப்பிட்ட நபருக்கு ஒரு குறிப்பிட்ட இடத்துக்குச் சென்று ஒரு பெருந்தொகையை உடனடியாக ஷேக் இமாம் கொடுக்காவிட்டால், ஷேக் இமாமின் குடும்பம் அடியோடு நாசமாகி விடுமென்றும், அல்லாவின் ஆணைக்குக் கட்டுப்படாவிட்டால் இமாமின் குடும்பத்தில் திடீர்ச்சாவுகள் ஏற்படுமென்றும், தீப்பிடித்து எரியுமென்றும், இன்னும் எவ்வளவோ பயமுறுத்தல்களைத் தாங்கி வந்திருந்தன அந்த இரண்டு கடிதங்களும். மேலும், ஆண்டவனின் கோபம் இமாமின் குடும்பத்தின்மீது இருப்பதால்தான் அவரின் தந்தையும் திடீர் மரணமடைந்து விட்டாரென்றும் கடிதங்கள் பயமுறுத்தின.
தகப்பனார் மரணமடைந்து நாட்கள் சில ஆனதாலும், நாகூர் ஆண்டவனிடம் அழியாத பக்தி கொண்டிருந்ததாலும், ஷேக் இமாம் தெய்வக் கட்டளைக்குப் பயந்து, தன்னுடைய மைத்துனனையும் துணைக்கழைத்துக் கொண்டு, கடிதங்களில் குறிப்பிட்டிருந்த கடற்கரைப் பகுதிக்கு மாலை 6 மணிக்குச் சென்றார். பணமும் எடுத்துச் சென்றிருந்தார் என்று சொல்லவும் வேண்டியதில்லை.
கடற்கரைப் பகுதியில் ஒரு கனவான்_கார்த்திகேய அய்யர் எனப் பெயர் படைத்தவர் வீற்றிருந்தார். முதலில் வர்ணித்திருந்த திருவாளர் 420க்குள்ள சர்வ லட்சணங்களும் பொருந்திய சீமான்தான் அவர். அவரைக்கண்ட இமாம் ஆண்டவனை நேரே கண்டதுபோல் ஆனந்தம் கொண்டு, வந்த விவரங்களை அவரிடம் சொல்லி பணத்தையும் கொடுக்க முன்வந்தார்.
ஆனால் திருவாளர் கார்த்திகேயர் பணத்தை வாங்கவில்லை. வாங்காதது மட்டுமல்ல; விவரத்தை அறிந்து கேலியும் செய்தார். ஆண்டவனாவது கடிதமாவது அனுப்புவதாவது; இதெல்லாம் என்ன கேலிக்கூத்து; என்று சொல்லி, இமாமை, இப்படியெல்லாம் ஏமாறக் கூடாது என்று புத்திமதியும் கூறி அனுப்பினார். அவருடைய பேச்சில் நயம் இருந்தது; நயவஞ்சகம் இருந்தது தெரியவில்லை. போதனை இருந்தது; சூது இருந்தது தெரியவில்லை. இவ்வளவுக்கும் காரணம் இமாம் தனியாக வராமல் துணையோடு வந்ததுதான் என்பதை விவரம் அறிந்தவர் கூறுவர். இமாமும் அவரது மைத்துனரும் திரும்பிவிட்டனர்.
***
மழைவிட்டும் தூவானம் விடவில்லை. மேற்படி திருவாளர் கார்த்திகேயர் சில நாட்களுக்குப் பிறகு இமாம் வீட்டுக்கே சென்றார். தனக்கும் ஆண்டவர் இரு கடிதங்கள் எழுதியதாகவும், இமாமின் குடும்பத்தை ரட்சிக்க வேண்டுமானால், இமாம் கொடுக்கும் பணத்தைத் தான் வாங்கிக் கொண்டுதான் ஆகவேண்டும் என்று சொல்லி இரு கடிதங்களை இமாமிடம் கொடுத்தார்.
அக்கடிதங்களில் ஆண்டவர் விவரமாகக் குறிப்பிட்டிருந்தார். பணம் பெறவேண்டிய ஆளின் அடையாளத்தையும் கடிதங்களில் காட்டியிருந்தார். முழு அடையாளமும் திருவாளர் 420க்குப் பொருந்தியிருந்தது.
இமாமும் ஆண்டவனைத் திருப்தி செய்ய வேண்டி பணத்தைக் கொடுக்க முன்வந்தார். திருவாளரின் முகமும் அகமும் மலர்ந்து ஆண்டவனைத் தியானித்துக் கொண்டே அமர்ந்திருந்தார். அந்த நேரம் பார்த்துத்தானா இமாமின் மைத்துனர் வரவேண்டும்? அங்கு நடந்த நாடகத்தைக் கண்டு மனம் பொறாத அந்த நல்லறிவாளர், திருவாளர் 420இன் மீது லேசாக சந்தேகம் கொள்ள ஆரம்பித்து, தன் எண்ணத்தைச் சூசகமாக தன் மைத்துனருக்குத் தெரியப்படுத்தினார். விவரம் புரியாமல் குழம்பியிருந்த இமாமும் கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்று ஏங்கிய திருவாளரும் சற்று நேரம் ஒன்றும் பேசாமலேயே அமர்ந்திருந்தனர். பிறகு இமாமின் மைத்துனர் திருவாளருக்குத் தெருவழியைக் காட்டினார். வேறு வழியின்றி அவரும் நடையைக் கட்டினார்.
***
எதையும் நம்பும் ஏமாளி இமாமிருக்க, திருவாளர் 420 சும்மாயிருப்பாரா? அல்லது அரிய சந்தர்ப்பத்தை இழக்க மனந் துணிவாரா?
திடீரென ஒரு நாள் இமாமுக்குக் கடைசி எச்சரிக்கையாக நாகூர் ஆண்டவரே நேரில் தபால் எழுதினார். எப்படியாவது முன்னூறு ரூபாயாவது திருவாளர் கார்த்திகேயருக்குக் கொடுக்காவிட்டால், இமாமின் குலக்கொழுந்தைக் கொன்று, சொத்துக்களைச் சூறையாடி, குடும்பத்தின் பூண்டே இல்லாமல் அழித்துவிடுவதாக நாகூர் ஆண்டவர் மிரட்டியதுபோல அந்தக் கடிதம் எழுதப்பட்டிருந்தது. ஆண்டவன் மனது புண்பட்டுவிட்டதே என்று பயந்து நடுங்கிய இமாம் திருவாளர் கார்த்திகேயரை வீட்டுக்கு அழைத்தார். குழையக் குழைய பேசினார். தன்னை மன்னித்துக் கொள்ளும்படி மன்றாடிக் கேட்டுக் கொண்டார். ஏதோ தவறு நடந்துவிட்டது; ஆகையால் அதை மனதில் கொள்ளாமல் ஆண்டவன் ஆணைப்படி தான் கொடுக்கும் முன்னூறு ரூபாயையும் பெற்றுக்கொண்டு தன்னை ரட்சிக்கும்படிக் கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்.
ஆண்டவனின் இச்சைப்படி நடப்பதுதானே இந்த இமாமின் கடமை! உங்களிடம் உயிரையே கொடுத்துவிடு என்று அவர் எனக்குக் கட்டளை இட்டாலும், தப்பாமல் செய்திருப்பேன்! கேவலம் இந்தப் பணம்தானா எனக்குப் பிரமாதம்? நீங்கள் மறுக்காதீர்கள்; இனியொருமுறை அந்த ஆண்டவனிடமிருந்து எனக்கு இத்தகைய அச்சுறுத்தும் கடிதங்கள் வந்தால் நான் தாங்கமாட்டேன்! என்று சொல்லிக் கொண்டே உள்ளே அவசர அவசரமாக நுழைந்த இமாம், திரும்பி வரும்போது கையில் ஒரு தட்டுடன் வந்தார்.
மலர், பழம், சர்க்கரை இவைகளை வைத்து 3 நூறு ரூபாய் தாள்களை வைத்து மரியாதையாக திருவாளரிடம் இமாம் கொடுத்தார். ஆவல் பொங்கும் கண்களோடு தன் திறமையைத் தானே வியந்து கொண்டு, இமாம் கொடுத்த நோட்டுகளையும் எடுத்து தன் மடியில் வைத்துக்கொண்டு வெளியே செல்லக் கிளம்பினார். ஆனால் அவர் அறிவாரா இமாமின் மைத்துனர் ஏமாளி அல்லவென்பதை!
கடைசிக் கடிதம் வந்தவுடன் மைத்துனர் உள்ளூர் போலீஸ் நிலையத்தில் தகவல் கொடுத்து, அவர்களை இமாமின் வீட்டுக்கு வெளியே மறைவாகக் கொண்டுவந்து வைத்திருந்தார். திருவாளர் 420 அட்டகாசத்துடன் வெளியே வரும்போது 3 நூறு ரூபாய் நோட்டுகளுடன் போலீசார் அவரைக் கைது செய்து கைவிலங்கு மாட்டி ஆண்டவன் பெயரால் அப்பாவி ஒருவரை ஆட்டிப்படைத்த அந்த கார்த்திகேயரை காராக்கிரகத்தில் கொண்டு தள்ளினார்கள்.
பின் முறைப்படி வழக்கு நடந்தது. கடைசியில் நாகூர் ஆண்டவரைக் கைவிட்டு உயர் நீதிமன்றம்வரை திருவாளர் 420 வழக்காடிப் பார்த்தார். கடைசியில் உயர் நீதிமன்றமும் 6 மாதம் சிறையில் தள்ளி அவரைக் கைவிட்டு விட்டது. அந்தோ பரிதாபம்.
இந்த உலகத்தில் மனிதனை மனிதன் ஏமாற்றுவதென்பது அவ்வளவு சுலபமான செயலல்ல! என்ன காரணத்தாலோ ஏறிட்டு நோக்குகிறவனையே சந்தேகக் கண்களுடன் பார்ப்பார்கள். இரண்டு முறை ஒருவன் தம் வீட்டு வாசல் வழியே நடந்துவிட்டால் வீட்டுக் கதவைத் தாளிட்டு விடுவார்கள் பெண்கள்.
இத்தகைய உஷாரான உலகில் கார்த்திகேயரைப் போன்றவர் காலம் தள்ள முடிவது எப்படி? சுகவாழ்வு என்றால் சாதாரணமாகவா? ஆண்டுக்கு ஒன்பது லட்சம் வாங்கும் கவர்னர்களுக்கும் கிடைக்காத வரவேற்பைப் போன்றல்லவா அவர்களுக்கும் தருகிறார்கள்? இதற்குள்ளே புகுந்து கிடப்பது ரகசியமல்ல; எல்லாரும் உணர்ந்த அறியாமை _ மூட நம்பிக்கை!
அதை ஒழிக்க சட்டம் இருக்கிறது என்றாலும் பகுத்தறிவு இயக்கத்தின் சீரிய பணிக்குப் பின்னரே மக்கள் சிறிது உண்மையை உணரத் தலைப்பட்டனர்.
இந்தச் சிறிய நிகழ்ச்சி உண்மையில் நடந்த ஒரு சம்பவத்தை வைத்து கற்பனையாகப் பின்னப்பட்டதாகும். மனித சமுதாய அமைப்பில் ஏமாற்றுக்காரர்கள் எப்படி எப்படியெல்லாம் வேஷம் போட்டு ஏய்க்கிறார்கள் என்பதை உணரும்போது எந்தப் புற்றில் எந்தப் பாம்பு இருக்குமோ… என்று நாமும் சற்று உணர்வோடு இருக்க வேண்டும் என்பதை நல்லறிவாளர்கள் ஒத்துக்கொள்வார்கள்.
இருபதாம் நூற்றாண்டிலும் இத்தகையோர் வாழ்வது விசித்திரமே!
– நன்றி: முரசொலி பொங்கல் மலர் 1961
Leave a Reply