மதவாதிகளும் கடவுள் நம்பிக்கைவாதிகளும் சொல்வது, உலகைக் கடவுள் படைத்தார்; உயிர்களை அவரேதான் உண்டாக்கினார் என்பதுதான். எப்படி இப்படிச் சொல்கிறீர்கள் என்று கேட்டால் எல்லாம் ஒரு நம்பிக்கைதான் என்கிறார்கள். அந்த நம்பிக்கை நூறு கோடிப் பேர்களுக்கு மேல் இந்த உலகத்தில் வரவில்லை என்பதைக் கூறினால், மனம் திரும்பு, என் மதத்திற்குள் வந்து பார் என்று தங்கள் மடமையை வெளிப்படுத்துகிறார்கள். அவர்களின் வேண்டுகோளின்படியே, அங்கே போய்ப் பார்த்தால் வெறும் புளுகுகள்! ஆகட்டும் என்றாராம் கடவுள். அனைத்தும் ஆகிவிட்டன என்கிறது அந்தப் புத்தகம். தட்டையாக இருந்த உலகம் மேலும் கீழுமாக ஆடாமல் இருப்பதற்காக (பேப்பர் வெயிட் வைப்பதைப் போல) மலைகளை ஆங்காங்கே வைத்தார் என்கிறது ஒரு புத்தகம். அருகில் அமர்ந்து பார்த்ததைப் போல் கூறுகிறாயே என்று கேட்டால் எல்லாம் நம்பிக்கைதான் என்கிறார்கள்.
எப்படி உலகம் வந்தது, எப்படி உயிர்கள் வந்தன என்பதைக் கண்டறியும் அறிவும் ஆற்றலும் வளராத காலத்து மனிதன் வேண்டுமானால் நம்பலாம்! இன்றைய மனிதன் எப்படி நம்பலாம்? என்ன காரணி என்று பார்த்தால் அறியாமை என்றுதான் பதில் கிடைக்கிறது, அறிவுள்ளோரின் அறிவுக்கு!
தட்டை அல்ல, உருண்டை!
உலகம் தட்டை என்ற கருத்தைத் தகர்த்துக் கடவுளின் படைப்பான உலகம் என்ற மடத்தனத்தைப் பொசுக்கினார் மெகல்லன் என்பவர். கி.பி.1519ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டின் செவில்லி துறைமுகத்தில் இருந்து கப்பலில் மேற்கே பயணப்பட்டு 1522 செப்டம்பர் 7இல் மீண்டும் செவில்லி துறைமுகத்திற்கே திரும்பி வந்தார். புறப்பட்ட இடத்திற்கே திரும்பி வந்ததன் மூலம் உலகம் தட்டையல்ல, உருண்டை என்பதைச் செயல்மூலம் எண்பித்த பிறகுதான் கடவுளின் உலகம் தட்டை என்பது தகர்ந்தது.
உருண்டையான உலகம் உருவானது எப்படி? 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட பெரும் வெடிப்பு (BING BANG காரணமாக உலகம் உருவானது என்று பெல்ஜியம் நாட்டவரான அல்ஃப் ஜார்ஜ் லெமாய்த்தின் என்பவர் கண்டறிந்து கூறினார். இதன் விளைவாகத்தான் உலகம் உருவானது எனும் கருத்து தோற்றம் கொண்டது (HYPOTHESIS). இது முடிவானது அல்ல. அறிவியல் முடிவில்லாதது. நாளும் ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்கள். ஆய்வுகளின் வெளிப்பாடுகளின் மெய்ம்மை, அவற்றின் அடிப்படையில் முடிவு செய்யப்படும் உண்மைதான் அறிவியல் முறை! இதனையே பலரும் பலமுறைகளில் ஆய்ந்து ஒருமனதாக ஏற்றுக் கொண்ட பின்தான் கண்டுபிடிப்பு என்பதாக ஏற்கப்படுகிறது.
இதுதான் அறிவியல்
மெழுகுவத்தி எப்படி எரிகிறது? பிளாஜிஸ்டின் எனும் பொருளும் தீயும் காரணிகள் என்று ஆய்ந்து அறிவித்தார் லவாய்சியர் எனும் அறிவியலாளர். 18ஆம் நூற்றாண்டில் அவர் கூறியதை மறுத்து ஆக்சிஜன்தான் காரணி என்று எண்பித்தார் பிரீஸ்ட்லி என்பவர். எனவே முடிவில்லாத ஆய்வுகள் பலப்பல உண்மைகளை உலகிற்குக் காட்டிக் கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், பெருவெடிப்பு எப்படி ஏற்பட்டது? 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்டது என்பது அனுமானம். பக்கத்திலிருந்து பார்த்தவர்களோ, அதுபற்றி எழுதி வைக்கப்பட்டவைகளோ எதுவும் கிடையாது அல்லவா? இருக்க முடியாது அல்லவா? ஆகவே அனுமானம், இந்த அனுமானத்தை ஆய்வு செய்வோமே! செய்தார்கள் சுவிட்ஜர்லாந்து நாட்டில்!
பெரு வெடிப்பு
2008ஆம் ஆண்டு செப்டம்பர் 10ஆம் நாள் தொடங்கப்பட்டது. மின்சாரக் கோளாறு ஏற்பட்டதால் பணி தடைப்பட்டது. பிரான்சு நாட்டுக்கும் சுவிட்ஜர்லாந்து நாட்டுக்கும் எல்லைகளில் உள்ள இடத்தில் பூமிக்கு 100 மீட்டர் ஆழத்தில் 27 கி.மீ. நீளத்துக்குச் சுரங்கம் அமைத்து அதில் மிகப் பெரிய இடிப்பான் (COLLIDER) அமைக்கும் பணி. தடங்கலுக்கு வருந்திக் கொண்டிருக்காமல் சீர் செய்தனர். இந்தப் பணியேகூட 13 மாதங்களை விழுங்கிவிட்டது. ஒருவழியாக 20.11.2009இல் ஆய்வுப் பணி தொடர்ந்தது. ஏறத்தாழ மூன்று ஆண்டுகள் உழைப்புக்கும் ஆராய்ச்சிக்கும் செலவு செய்தனர். 2012 ஜூலை மாதம் 4ஆம் தேதி முடிவு புலப்பட்டது. 37 நாடுகளைச் சேர்ந்த 169 நிறுவனங்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டன. முக்கிய ஆய்வாளர் ஃபேபியாலா கியான்னாட்டி எனும் இத்தாலி நாட்டு இயற்பியலாளர்.
பெரு வெடிப்புக்குக் காரணமாக அமைந்த பொருள்கள், அவை அமைந்திருந்த சூழல், அவற்றில் ஏற்பட்ட அழுத்தம் போன்ற பலவகைக் கூறுகளையும் ஆய்வாளர்கள் ஏற்படுத்தி வெடிப்பான் மூலம் வெடிக்கச் செய்தனர். வெடிக்கச் செய்த வெடிப்பான் தயாரிக்க மட்டுமே 30 ஆயிரம் லட்சம் யூரோ செலவானது.
இது அமைக்கப்பட்ட சுரங்கம் அமைக்கப்பட 10 ஆண்டுகள் பிடித்தன. ALICE, CMS, ATLAS, LHDB என்று சுருக்கமாகக் குறிக்கப்படும் நான்கு வகையான ஆய்வுகள் நடத்தப்பட்டன. 1400 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தவை என அனுமானிக்கப்படும் ஆய்வு முறைகளை இவ்வாறு வகைப்படுத்தித் தற்போது ஆய்ந்தனர் அறிவியலாளர்கள்.
கடைசித் துகள்
அவர்களது அனுமானங்களின்படியே அனைத்தும் நடந்தன. ஏற்கெனவே கண்டறியப்பட்ட 12 துகள்களும் 4 விசைகளும் சேர்ந்த சேர்க்கையால் உருவானது உலகம் என்பதை மீண்டும் செயல்முறை மூலம் கண்டறிந்து உறுதி செய்தனர். இவற்றைச் சேரச் செய்த பொருளை இந்த ஆய்வு கண்டுபிடித்தது. இந்தக் கண்டுபிடிப்பின் முக்கியத்துவமே, கண்ணாமூச்சி ஆடிக்கொண்டிருந்த சேர்க்கைப் பொருளைக் கண்டுபிடித்ததுதான்.
QUARKS எனும் பிரிவில் 6 துகள்கள் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்டன. அவை UP, DOWN, TOP, BOTTOM, STRANGE, CHARMED என்பவை. LEPTONS எனும் பிரிவில் 6 துகள்கள் முன்பே கண்டறியப்பட்டன. எலெக்ட்ரான், எலெக்ட்ரான் நியுட்ரினோ, மூவான் (MUON), மூவான் நியுட்ரினோ, டாவ்(TAU) டாவ் நியுட்ரினோ எனும் பெயருள்ளவை. இந்த 12 துகள்களையும் இணைக்கும் விசைகளாக 4 உள்ளன. Z, W, PHOTON, GLUON எனும் நான்கும் விசைகளாகக் கண்டறியப்பட்டுள்ளன. இந்தப் பதினாறுடன் (12+4) சேர்ந்து 17ஆம் பொருளாகக் கண்டறியப்பட்ட ஹிக்ஸ்போசான் துகள்தான் CERN ஆய்வுக்கூடத்தின் மகத்தான கண்டுபிடிப்பு. 6 ஆயிரம் ஆய்வாளர்களின் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட உழைப்பின் பலன்தான் இந்த உலகை உருவாக்கிய எல்லாப் பொருள்களையும் கண்டுபிடித்தது.
நிலம், நீர், தீ. காற்று, வானம் ஆகிய 5 தனிமங்களின் சேர்க்கை (பஞ்சபூதங்கள்) இந்த உலகம் என்று கதவைச் சாத்திவிட்டனர் கடவுள் நம்பிக்கையாளர்கள். ஆனால், சீனர்களும் சார்வாகர்களும் 4 தனிமங்கள்தான் என்றனர். வானம் என்பது தனிமம் அல்ல, அதற்கும் உலகத்திற்கும் தொடர்பில்லை என்றனர் சார்வாகர்கள்! பரவாயில்லை! அந்தக் காலத்திற்கு அதுவே அதிகம்!
1400 கோடி ஆண்டுகளுக்கு முன் வெளிச்சம்
அறிவியல் உலகம் அத்தோடு நடையைக் கட்டிவிடவில்லை. பெருவெடிப்பு ஏற்பட்ட நேரத்தில் அந்த நிகழ்வு பெரும் ஈர்ப்பு அலைகளை உருவாக்கியிருக்க வேண்டும்; அந்த ஈர்ப்பு அலைகளில் சிக்கிய ஒளி (பெரு வெடிப்பினால் ஏற்பட்டது) நிலைமாற்றம் கண்டிருக்க வேண்டும் என்று தீர்மானித்தனர். இத்தகைய ஈர்ப்பு அலைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று முனைந்தனர். ஈர்ப்பு அலைகளைக் கண்டறிய (BICEP2) பைசெப் 2 என்ற தொலைநோக்கியை உருவாக்கி உலகக் கோளத்தின் தென்துருவத்தில் (முனையில்) அமைத்தனர்.
அறிவியல் ஆய்வறிவும், முயற்சிகளும் தோற்கவில்லை. அந்தத் தொலைநோக்கியின் வாயிலாக ஈர்ப்பு அலைகளைப் (GRAVITATIONAL WAVES – ஆகர்ஷண அலைகள்) பார்த்துவிட்டனர். இந்த ஆண்டு மார்ச் மாதம் 19ஆம் நாள் செய்தித் தாள்களில் இந்த வெற்றிச் செய்தி வெளிவந்திருக்கிறது. 1400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டபோது வெளிப்பட்ட ஈர்ப்பு அலைகளை இப்போது தொலைநோக்கி மூலம் கண்டறியும் வாய்ப்பை அறிவியல் வழங்கியுள்ளது (ஆண்டவன் வழங்கவில்லை) என்பதை ஹார்வர்டு ஸ்மித்சோனியன் மய்ய விண்வெளி இயற்பியல் ஆய்வாளர்கள் அறிவித்துள்ளனர். பெருவெடிப்பு ஏற்பட்ட நேரத்தில் உண்டான அதிர்வுகள், எப்படிப்பட்டவையாக இருந்தன என்பதை அறிய இது உதவும். பேரண்டம், அதில் உலகு முதலியவை எப்படித் தோன்றின என்பதை அறிய உதவும். பேரண்டத்தின் தோற்றம் போன்ற பல கமுக்கச் செய்திகளை ஒளியின் மூலம் அறிய முடியும் என்பதால் இப்போதைய கண்டுபிடிப்பான இந்த ஒளி பல உண்மைகளை உலகுக்குத் தெரிவிக்கப் போகிறது.
மனித சக்தி
மனித மூளையின் கருதுகோள்கள் ஆய்வு முடிவுகளோடு எவ்வளவு ஒத்துப் போகின்றன என்பதற்கு இது மற்றுமொரு எடுத்துக்காட்டு! மாயனார் எனும் குயவன் செய்த மண்பாண்டம் என்று சாக்குருவி வேதாந்தம் பாடிக்கொண்டு இருப்பதை விட்டு அறிவியல் மனப்பான்மையோடு வாழ்வதற்கும் வாழ்விப்பதற்கும் தயாராக வேண்டும்!
அறிவியல் ஆய்வுகளும் கண்டுபிடிப்புகளும் கடவுள் எனும் கற்பனையைக் காலி செய்து வருகின்றன. உலகிற்கும் கடவுளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்பதை அறிவியல் மெய்ப்பித்துக் கொண்டே வருகிறது. கடவுள் காலியாகிக் கொண்டே வருகிறது! அது இருந்த இடம் புல் முளைக்கும் இடமாக மாறிடும் நாள் வெகு தூரத்தில் இல்லை!
Leave a Reply