– மஞ்சை வசந்தன்
நம் சமுதாயத்தில் எல்லாமே தலைகீழ் செயல்பாடுகள்தான். நிலத்திற்கு உரியவன் அடிமையாய் இருப்பான்; வந்தேறி ஆதிக்கம் செய்வான் அல்லது ஆட்சிபுரிவான்.
வேலை செய்கிறவனுக்குக் குறைந்த கூலி; வேலை வாங்குகிறவனுக்கு அதிகக் கூலி!
விளைவிக்கின்ற விவசாயியைவிட வியாபாரம் செய்கின்றவனுக்குக் கொள்ளை லாபம். இப்படிப் பல…
இவையெல்லாம் ஆதிக்கத்தில், வலிமையும், அதிகாரமும் உள்ளவர்கள் வகுத்த விதிகளின் விளைவுகள்.
இந்த ஆதிக்கம் கற்கும் மாணவர்கள் மீதும் செலுத்தப்படுவது உண்மை; நடைமுறை! ஆம். இன்றைய கல்வி சுதந்திரமற்ற ஆதிக்கக் கல்வியே!
வகுப்பறைக்குள் மாணவர் ஆதிக்கக் கட்டுப்பாட்டுக்குள் அடக்கப்படுகின்றனர்; ஒடுக்கப்படுகின்றனர். கல்வி உரிய பலன் அளிக்காததற்கும்; மாணவர்கள் போதிய ஆற்றலும், அறிவுக் கூர்மையும், விழிப்பும், தெளிவும் பெறாமைக்கும் இதுவே காரணம்.
ஆசிரியர் போதிப்பார் மாணவர் கேட்டுக் கொள்ள வேண்டும்; ஆசிரியர் கேள்வி கேட்பார் மாணவன் பதில் சொல்ல வேண்டும்; ஆசிரியர் வீட்டுவேலை கொடுப்பார் செய்து வரவேண்டும்; மாதம் ஒருமுறை வினாத்தாள் தரப்படும். விடையெழுத வேண்டும். இதுதான் இன்றைய கல்வி. இங்கு என்ன நடக்கும்? மனப்பாடமும், நினைவு கூர்தலும், மனதில் உள்ளதைத் தாளில் எழுதுவதும். முடிந்தது கல்வி. மூன்று மாதம் கழித்து படித்தது; மனதில் இறுத்தியது மறந்து போகலாம் கவலையில்லை. தேர்வு எழுதும் மூன்று மணி நேரம் மறக்காமல் இருந்தால் போதும்!
இப்படிப்பட்ட கற்பித்தலும், கற்றலும், மனதில் இறுத்தலும், விடைத்தாளில் எழுதுதலும் கல்வியென்றால், புரிதலும், தெளிதலும் வினா எழுப்பலும், விளக்கம் பெறலும், சிந்தித்தலும், படைத்தலும் எங்ஙனம் நிகழும்?
எது உண்மையான கல்வி?
மாணவர் வினா எழுப்ப வேண்டும். ஆசிரியர் பதில் சொல்ல வேண்டும்.
அதற்கு ஆசிரியர் அதிகம் படிக்க வேண்டும்; மாணவன் அதிகம் சிந்திக்க வேண்டும்.
மாணவர்களுக்குக் கற்பித்து முடித்தபின், அதில் விளங்காத அய்யங்களை மட்டும் கேட்பது மாணவர் கடமையல்ல; ஆசிரியர் கற்பித்தது சார்ந்து, பலவற்றை மாணவன் சிந்தித்துக் கேட்க வேண்டும். அப்போதுதான் மாணவன் அறிவாற்றலும் படைப்பாற்றலும் வளரும்.
கருத்துகளைப் பெறுவது மட்டும் கல்வியல்ல; கருத்துகளைத் தருவதும் கல்வி. கல்விக் கூடங்கள் கற்கும் இடம் மட்டுமல்ல; சிந்தனைப் பட்டறையும் ஆகும்.
கல்வியாளர்கள், சிந்தனையாளர்கள், அறிவியலாளர்கள் கூறிய விதிகளை, தத்துவங்களை, கருத்துகளைப் படித்தறிதல் மட்டும் கல்வியல்ல; அவற்றைக் கற்பிப்பதும், கேட்பதும் மட்டும் கல்விமுறையல்ல.
அக்கருத்துகள் சார்ந்து, ஆசிரியர் தனது சிந்தனைகளை, திறனாய்வுகளைச் சொல்ல வேண்டும். அவற்றை மாணவன் கூர்ந்து, ஆய்ந்து தன் கருத்தைச் சொல்ல வேண்டும். இதுவே அறிவியல்சார் கல்விமுறை. இதற்கு என்ன செய்ய வேண்டும்?
மாணவர்கள்தான் கேள்வி கேட்க வேண்டும்; ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். இப்படிச் செய்தால் மாணவர்களும் கூர்ந்து, ஆழ்ந்து படிப்பர்; ஆசிரியர்களும் ஆழ்ந்து அதிகம் கற்று கற்பிப்பர்.
இல்லையென்றால் கல்வியென்பது மதபோதனைபோல் ஒருவழிச் சிந்தனையாகும். ஆய்வு முயற்சி அற்றுப் போய்; மனைப் பயிற்சியே மாணவர்க்கு நிலைக்கும்.
கருத்தரங்குகளே இன்றைக்கு கருத்துப் பரிமாற்றமாக (Intraction) மாறியபின், வகுப்பறை எப்படி மாற வேண்டும்? கல்வியாளர்கள் சிந்திக்க வேண்டும்!
தேர்வில் படித்த பாடத்தில் வினா கேட்டு பதில் எழுதச் சொல்வதோடு நில்லாமல், அவர்கள் படித்த பாடத்தில், மாணவர்கள் சிந்தித்து எழுப்பும் வினாக்கள் எவை என்று கேட்கப்பட்டு, அவர்கள் எழுப்பும் வினாக்களுக்கும், அவற்றின் தரத்திற்கும் ஏற்ற மதிப்பெண் தரவேண்டும்.
சுருங்கச் சொன்னால், மாணவர்கள் பாடப் பொருளை அறிந்த அளவைக் காட்டிலும், ஆய்ந்த அளவு எவ்வளவு என்பதைச் சோதிப்பதாகவே கற்பித்தலும், தேர்வும் இருக்க வேண்டும். இதற்கு வகுப்பறையில் மாணவர்கள் கேள்வி கேட்க வேண்டும். ஆசிரியர்கள் அதிகம் பதில் சொல்ல வேண்டும். அதுவே ஆக்கம் தரும் கல்வியாக அமையும்!
Leave a Reply