கோயில் கொள்ளை
ஒரு தொடர்கதையா?
– கி.வீரமணி
கண்களை மூடிக்கொண்டு கடவுளைத் தொழுது, அதற்காக விழா, விரதம், வேண்டுதல் என்ற பெயரால் காசை வீணாக்கி, பகுத்தறிவைப் பாழாக்கிடும் பரிதாபத்திற்குரிய பக்த சிகாமணிகளே!
கேரளத்தின் மூன்று பெரும் முதலாளிக் கடவுள்களில் ஒன்றான (1. குருவாயூரப்பன், 2.சபரிமலை சாஸ்தா அய்யப்பன், இப்போது தோண்டத்தோண்ட புதையல்கள்போல் வெளிவரும் திருவனந்தபுரம் பத்மநாபா கோயில்களில் நடைபெற்ற அமைதிக் கொள்ளைகளையும் அதிசயச் சுரண்டல்களையும் பற்றி உச்ச நீதிமன்றத்தில் போடப்பட்ட வழக்கின் அடிப்படையில், ஒவ்வொரு அறைகளாகத் திறக்கப்பட்டு ஆய்வு செய்தபோது, திடுக்கிடும் அதிர்ச்சி அலைகள் சுனாமிபோல் ஓங்கி உயர்ந்து கேட்போரைக் கதிகலங்க வைத்துள்ளது.
உச்ச நீதிமன்ற நீதிபதிகளை மதி கலங்க அடித்துள்ளது. அதுபற்றிய உண்மைகளை அறிய உச்ச நீதிமன்றம் கோபாலகிருஷ்ணன் என்பவரை நியமித்தது, விசாரணைகளும் அதன்பின் அதையொட்டிய உண்மைகளைப் பற்றிய தகவல்களைத் தரவேண்டியும் பணித்தது.
அவர் திருவனந்தபுரம் சென்று இரண்டு மாதங்கள் தங்கியிருந்து, அக்கோயிலுக்குச் சென்று ஆய்வு நடத்திய அறிக்கையை, உச்ச நீதிமன்றத்தில் (550 பக்கங்களைக் கொண்டது) தாக்கல் செய்ததினால் உச்ச நீதிமன்றமே அங்கு பத்மநாப சாமிக்கே தீட்டிய பட்டை நாமத்தின் பரிமாணத்தைக் கண்டு அதிர்ந்து போயுள்ளது.
ஒரு தமிழ் நாளேட்டில் (19.4.2014) வெளிவந்துள்ள _ திருவனந்தபுரம் பத்மநாபா கோயில் கொள்ளைபற்றிய செய்திச் சுருக்கம் இதோ: படியுங்கள்.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ஏ முதல் எப் வரையிலான 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பொக்கிஷங்களை மதிப்பிட உச்ச நீதிமன்றம் ஒரு குழுவை நியமித்தது.
இக்குழுவினர் ஏ என்ற ரகசிய அறை தவிர மற்ற அறைகளைத் திறந்து பொக்கிஷங்களை மதிப்பிட்டனர். இந்நிலையில், உச்ச நீதிமன்றம் சார்பில் கோயில் சொத்து குறித்து முழு விபரங்களை அறிய உதவி செய்வதற்காக கோபாலகிருஷ்ணன் என்பவர் நியமிக்கப்பட்டார். சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரம் வந்த அவர், 2 மாதம் தங்கியிருந்து பத்மநாபபுரம் கோயிலுக்குச் சென்று ஆய்வு நடத்தினார். ஊழியர்கள் ராஜ குடும்பத்தினர் உள்பட பலரைச் சந்தித்துப் பேசினார். சில தினங்களுக்கு முன் அவர் உச்ச நீதிமன்றத்தில் 550 பக்கங்கள் கொண்ட ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
அந்த அறிக்கையில் மன்னர் குடும்பத்தினர் மற்றும் கோயில் ஊழியர்களுக்கு எதிராக பரபரப்புக் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதில் முக்கியக் குற்றச்சாட்டுகள் வருமாறு:
பத்மநாபசுவாமி கோயில் ஒரு பொதுச் சொத்தாகும். ஆனால் கோயிலையும், கோயிலுக்குச் சொந்தமான சொத்துக்களையும் தங்களுக்குச் சொந்தமான சொத்துக்களாகக் கருதி மன்னர் குடும்பத்தினர் சில செய்யக்கூடாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னர் குடும்பத்தில் உள்ள சிலருக்கும் கோயில் ஊழியர்களுக்கும் இடையே மறைமுகத் தொடர்புகள் உள்ளன.
இவர்கள் ரகசிய அறைகளில் இருந்து பொக்கிஷங்களைக் கடத்தியிருக்கலாம் எனவும் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்தச் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் கோயிலுக்குள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட தங்க முலாம் பூசும் கருவி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரகசிய அறையில் இருந்து தங்க நகைகளைக் கடத்தி அதற்குப் பதிலாக போலி நகைகளைத் தங்கமுலாம் பூசி ரகசிய அறையில் வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
பல ஆயிரம் கோடி மதிப்புள்ள பொக்கிஷங்கள் இருப்பதாக கருதப்படும் பி அறை பல முறை திறக்கப்பட்டுள்ளது. இந்த அறையில் உள்ள பொக்கிஷங்களைப் புகைப்படம் எடுத்துள்ளனர். இந்த ரகசிய அறைக்கு மேலே ஒரு ரகசிய வழி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இது மர்மமாக உள்ளது. ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட 6 ரகசிய அறைகள் போக மேலும் 2 அறைகள் உள்ளன. இவற்றையும் திறந்து பரிசோதிக்க வேண்டும். கோயில் நஷ்டத்தில் இயங்குவது போல் பொய்க் கணக்குக் காட்டி வருகின்றனர். எனவே கோயில் கணக்குகளைத் தணிக்கை செய்ய முன்னாள் கணக்குத் தணிக்கை அதிகாரி வினோத் ராய் தலைமையில் ஒரு குழுவை அமைக்க வேண்டும். கோயில் விவகாரங்களில் இனிமேல் மன்னர் குடும்பம் தலையிடக்கூடாது.
கோயில் நிர்வாகத்தைக் கவனிக்க புதிய கமிட்டி ஒன்றை நியமிக்க வேண்டும். மன்னர் குடும்பத்திற்கு உள்ள சிறப்பு அதிகாரங்களை ரத்து செய்ய வேண்டும். இந்தியா குடியரசு நாடாகி பல வருடங்கள் ஆகின்றன. ஆனாலும் திருவனந்தபுரத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக மன்னர் ஆட்சியும் நடப்பது போல் உள்ளது. ஒரு குழுவாகச் சேர்ந்து கோயிலில் இருந்து பொக்கிஷங்களைக் கடத்தியுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இந்தக் கடத்தலைத் தடுத்த சில ஊழியர்களுக்கு எதிராக கொலைமுயற்சிச் சம்பவமும் நடந்துள்ளது. சமீபத்தில் ஒரு ஊழியர் மீது ஆசிட் வீசப்பட்டது சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இது தவிர சமீபத்தில் கோயில் குளத்தில் மர்மமான முறையில் ஒரு ஆண் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் போலீஸ் முறையாக விசாரிக்கவில்லை. பத்மநாபசுவாமி கோயில் விவகாரத்தில் கேரள அரசும் மெத்தனப் போக்கைக் கடைபிடித்துள்ளது. கோயில் பாதுகாப்பிற்கு மத்திய போலீஸ் படையை நியமிக்க வேண்டும். இதுதவிர கோயிலில் பணிபுரியும் ஒரு பெண் ஊழியரைக் கோயிலுக்குள் பலாத்காரம் செய்யவும் முயற்சி நடந்துள்ளது. இது போல் பல மோசமான சம்பவங்கள் கோயிலுக்குள் நடந்துள்ளன. இவ்வாறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவே முழு உண்மைகளையும் வெளிக்கொணர்ந்த அறிக்கையாகாது; பனிப்பாறையின் முனை (Tip of the iceberg) என்று சொல்லுவார்களே அது போன்றதே இது!
பொருள் கொள்ளையோடு, ஊழியர்களைக் கொலைசெய்த முயற்சிகளும், ஊழியர்கள் மீது திராவகம் _ ஆசிட் வீசிய நிகழ்வுகளான பல்வேறு கிரிமினல் குற்றங்களும்கூட நடைபெற்று உள்ளன!
இந்திய நாட்டின் எல்லா பிரபல கோயில்களையும் அதன் கடவுளர், கடவுளச்சிகளையும் _ சிலைகளையும், சொத்துக்களையும் ஆராய்ந்தால் தெரியும்.
பகற்கொள்ளை பகா மேதைகளான சிதம்பரம் தீட்சதர்களின் சுரண்டல், கொள்ளையிலிருந்து அதனை மீட்டது தி–.மு.க. அரசு. மீண்டும் பார்ப்பனர் உச்ச நீதிமன்றத்தின் தயவால் _ மீண்டும் பகற்கொள்ளைக்கு வாய்ப்பைத் திரும்பப் பெற்று தம் சைட் கொண்டையை தட்டிவிட்டுச் சவால் விடுகின்றனரே!
இந்தியா முழுவதும் இப்படி பல கோயில்களில் வடபுலத்திலும் நடைபெறுவதை ஆராய பிரதமர் நேரு காலத்தில், சர்.சி.பி.இராமசாமி அய்யர் தலைமையில் அதுபற்றி விசாரணை நடத்தி, பரிந்துரைகளைத் தவிர ஒரு கமிஷனை மத்திய அரசு நியமித்து அது அறிக்கையை 1960_62இல் தந்தது!
அதில் 2 பாட்டில் சாராயத்திற்காக சாமி சிலையையே விற்ற அர்ச்சகர்கள் சம்பவம் பற்றியெல்லாம் கூடக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் சில செய்திகள் இதோ!
பிரபல பழனிமுருகன் கோயிலில் அங்குள்ள அய்ம்பொன் முருகன் சிலையையே கொஞ்சம் கொஞ்சமாக அங்குள்ள பார்ப்பன அர்ச்சகர்கள் (முன்பு புலிப்பாணியார்கள் பரம்பரையான சைவப் பண்டாரங்களான தமிழ் ஓதுவார்கள்தான் அங்கே அர்ச்சகர்கள் _ பிறகு திருமலை நாயக்கன் மதுரையை ஆண்டபோது அவருக்கு பிரதம மந்திரியாகவும் இருந்த இராமப்பையன் என்ற பார்ப்பனர்தான் பழனிகோயிலில் முறையாக பார்ப்பனரை கொடுமுடியிலிருந்து இறக்குமதி செய்து அவர்களிடம் ஒப்படைத்தார் என்பது உண்மை வரலாறு).
அங்கே முருகனையே சுரண்டும் கொடுமை _ குற்றச்சாற்றாக விஸ்வரூபம் எடுத்தபோது, தமிழக அரசு நீதியரசர் ஜஸ்டிஸ் பி.எஸ்.சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் ஒரு நபர் விசாரணைக் கமிஷன் போட்டு அறிக்கை வாங்கி, பாதுகாப்பு தடுப்பு நடவடிக்கை எடுத்து பழனிமுருகனை மேலும் சுரண்டாமல் இந்து அறநிலையத்துறை பாதுகாத்தது!
எம்.ஜி.ஆர். அரசு நியமித்த ஜஸ்டிஸ் மகராஜன் கமிஷனின் அறிக்கையில் பார்ப்பன அர்ச்சகர் என்பவர்கள் எத்தகைய ஒழுக்கமற்ற சுரண்டல் பேர்வழிகள் என்பதையும் தகுதி இல்லாதவர்கள் என்பதையும்கூடச் சுட்டியிருக்கிறது!
ஹிந்து அறநிலையத் துறை கமிஷனராக இருந்த கோவைகிழார் என்று பலராலும் அழைக்கப்பட்ட, சி.எம்.இராமச்சந்திரனார் அவர்கள் கோயிற்பூனைகள் என்ற பெயரில் வெகுகாலம் முன்பு தினமணி வெளியீடாக எழுதியதில், இத்தகைய பல்வேறு சுரண்டல்கள், பகற்கொள்ளை, திருட்டுகள் பற்றியும் எழுதியுள்ளார். (நாமும் அதை சில ஆண்டுகளுக்கு முன் மறுபதிப்பாக வெளியிட்டுள்ளோம்.) இவை ஒருபுறமிருக்க, ஆந்திர ஆசிரமத்தில் சத்திய சாயிபாபா மறைவுக்குப் பின் அவரது சொத்துகள் பற்றிய தகவல்கள் மக்களுக்கு எளிதில் மறந்துவிட்டதே!
இப்போதுள்ள வடநாட்டு, பாபாக்கள், இன்றுள்ள ஆனந்தாக்களும், மயின்களும் பற்றிய பல்வேறு குமட்டல் கொள்ளைகள் கொஞ்சமா? நஞ்சமா? இந்திய அரசுக்குத் தேவையான அவ்வளவு நிதிகளும் இவைகளிடமிருந்து கடன்போல வாங்கி _ கோயில்களிடமிருந்து பறிமுதல்கூட வேண்டாம் _ தங்க பாண்டுகள் போல கடன் பத்திரங்களை மத்திய அரசு வழங்கி மக்களிடம் வரி போட்டு கசக்கிப் பிழியாமலேயே ஆட்சி நடத்தலாமே!
பொது ஒழுக்கம் காப்பாற்றப்பட வேண்டாமா?
பக்தி என்ற பெயரால் இப்படி ஒரு பகற்கொள்ளையை, ஏற்படாத இழப்பான, கற்பனை இழப்பான 2ஜி 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி என்று எழுதும், பேசும் வாய்கிழிந்த வக்கனை ஊடகத்தினர்களே, அரசியல் தலைவர்களே இந்த உலக மகா, மெகா, கொள்ளைகளுக்குத் தீர்வுதான் என்ன?
கடவுள் காப்பாராம் இன்னமும் நம்பும் அறியாமைப் பிண்டங்களே, தன்னை, தன் சொத்தைக் காப்பாற்றத் தெரியாத கடவுள்களா உன்னைக் காப்பர் என்று கேட்டாரே தந்தை பெரியார், அந்தக் கேள்விக்கு இதுவரை எவராவது பதில் சொன்னதுண்டா?
சிந்தியுங்கள் பக்தர்களே!
திருந்துங்கள், அறியாமையிலிருந்து அறிவுப் பாதைக்கு வாருங்கள், விரைந்து வாருங்கள்; அது உங்களை உயர்த்துவதோடு, உலகத்தார் கண்முன் இந்நாட்டிற்குப் பெருமையைக் கூட்டிவரும்!
ஹிந்து மத அறக்கட்டளைகள் ஆணைய அறிக்கை – 1960-1962
அ. கோயில்கள்
4. முதல் வேத இலக்கிய காலத்தில் தோன்றிய வேதகாலத்து வழிபாட்டுப் பாடல் திரட்டான சம்ஹிதாவில் இப்போது நாம் அறிந்திருக்கும் கோயில்கள் என்பது பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை. ஆனால், தீ வளர்க்கப்பட்டு, கடவுளுக்குக் காணிக்கை சமர்ப்பிக்கப்படும் ஓரிடம் பற்றி அக்னியகரா (agnyagara) என்று அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எந்த தெய்வம் தொழப்பட்டாலும் சரி, ஹூடாவாஹா (agnyagara) என்னும் புனிதமான தீக் குண்டம்தான் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகளை அந்தத் தெய்வத்திடம் எடுத்துச் சென்று சேர்க்க வேண்டும். வேறு எந்தவிதமான வழிபாட்டுக்கான அடையாளமோ, தொழுபவர் வாழும் இடத்தில் உள்ள பலிபீடம் தவிர பலி கொடுப்பதற்கான தனி இடமோ இருந்ததாகத் தோன்றவில்லை. இந்த அக்னியகரா என்னும் இடமே ஒரு கோயிலின் தோற்றமாக இருந்திருக்கலாம் என்று கூறப்படக்கூடும். சம்ஹிதாவில் கோயில்கள் பற்றிய குறிப்பு எதுவும் இல்லையென்றாலும், சூத்ர காலத்தில் ஏதோ ஒரு வடிவிலான கோயில்கள் இருந்திருக்கலாம் என்பது தெளிவாகவே தோன்றுகிறது. கடவுளின் வீடு என்ற பொருள் தரும் தேவதவதானம் (Devathavathanam) என்னும் சொல்லும், கடவுளின் உருவம் என்ற பொருள் தரும் தேவபிரதிமா (Devapratima) என்னும் சொல்லும் சூத்ரர்களுக்கு முந்தைய பார்ப்பனர்களின் வேதகால வழிபாட்டு இலக்கியத் தொகுப்பு ஒன்றில் பயன்படுத்தப்பட்டுள்ளன. பிற்காலப் பார்ப்பனர்களின் காலத்தில் கடவுளின் உருவங்களும், அவற்றை வைப்பதற்கான கோயில்களும் உருவாக்கப்பட்டன. கவுதமா மற்றும் அபஸ்தம்பா ஆகியோரின் தர்ம சாஸ்திரங்களில் கோயில்கள் பற்றிய நிச்சயமான குறிப்புகள் காணப்படுகின்றன. தனது தர்மசாஸ்திரத்தை கவுதமா எழுதிய காலத்தில், கிணறுகள், தோட்டங்கள், தர்மசாலைகள் போன்ற அறக்கட்டளைகள் இருந்திருக்கின்றன என்பதையும், இத்தகைய அறப்பணிகளுக்காகவும், ஆன்மீக நோக்கங்களுக்காகவும் நிலங்களை மானியமாக அளிக்கும் பழக்கம் ஏற்கெனவே நடைமுறையில் இருந்து வந்திருக்கின்றது என்பதையும் மெய்ப்பிப்பதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன. என்றாலும், புராண கால தொடக்கத்தில்தான் கோயில்களைக் கட்டுவது என்னும் செயல்பாடு மிகுந்த முக்கியத்துவத்தைப் பெற்றது. கடவுள் சிலைகளைப் புனிதமாக்கும் வழிமுறைகள் பத்ம புராணத்திலும், மற்ற புராணங்களிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. தானாகத் தோன்றிய (சுயம்பு) கடவுள் சிலைகளுக்கும், மண், மரம், கல், உலோகம் ஆகியவற்றைக் கொண்டு மனிதர்களால் செய்யப்பட்ட கடவுள் சிலைகளுக்கும் இடையே ஒரு தெளிவான வேறுபாடு வரையறுக்கப்பட்டுள்ளது.
பிந்தைய கடவுள் சிலைகளைப் பொருத்தவரை பிராணபிரதிஷ்டா (prana praatishtha) என்னும் புனிதமாக்கப்படும் சடங்கு செய்யப்படவேண்டும். அஷ்டதியாயி (Ashtadhyayi) நூலின் ஆசிரியரும், தலைசிறந்த இலக்கண ஆசிரியருமான பாணிணி காலத்தில், வேதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கடவுள்களுக்கான கோயில்கள் இருந்தது பற்றிய எந்தக் குறிப்பையும் நம்மால் காணமுடியவில்லை. ஆனால், பார்வதி என்னும் பெண் கடவுள் மற்றும் அவரது இணையர் சிவன் ஆகியோரைப் பற்றி பல்வேறு பெயர்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்புகள் உள்ளன. சந்திரகுப்த மவுரியரின் புகழ்பெற்ற அமைச்சரான கவுடில்யர் காலத்தில்தான், கோயில்கள் கட்டப்பட்டது பற்றிய நிச்சயமான குறிப்புகளை நம்மால் காண முடிகிறது. டாக்டர் ஷியாமா சாஸ்திரி பதிப்பித்த கவுடில்யரின் அர்த்தசாஸ்திரம் நூலின் 54ஆவது பக்கத்தில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது. அபராஜிதா, அப்ராதிதா, ஜெயந்தா, வைஜெயந்தா, சிவா, வைஸ்ரவானா, அஸ்வினா மற்றும் பெண் கடவுள் மதிரா ஆகியோருக்கான கோயில்கள் ஒரு நகரின் மய்யத்தில் அமைந்திருக்கவேண்டும்.
கோயில்களிலும், திறந்த வழிபாட்டிடங்களிலும் வைக்கப்பட்டிருந்த கடவுள் சிலைகள் எவரது தனிப்பட்ட உடைமைகளாகவும் இருக்கவில்லை; அதற்கு மாறாக ஒரு கடவுள் சிலையின் உரிமையாளருக்கு ஒரு தனிப் பெயர் அளிக்கப்பட்டது. அப்படிப்பட்ட கடவுள் சிலைகள் பூசிப்பதற்கு மட்டுமல்லாமல், உரிமையாளர் வாழ்வதற்கான ஓர் வாழ்வாதாரமுமாக இருந்தன. அதே நேரத்தில், தேவலாகாஸ் (Devalakas) அல்லது கோயில்களின் பாதுகாவலர்கள் உடமைகளாக இருந்த கடவுள் சிலைகளைப் பற்றி பாணினி விவரித்துக் கூறியுள்ளார். இந்தக் கடவுள் சிலைகள் ஒரே இடத்தில் நிலையாக வைக்கப்பட்டும் இருக்கும்; அல்லது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்துச் செல்லப்படுபவையாகவும் இருக்கும். பாணினி அறிந்த இந்தியா என்ற தனது நூலின் 362ஆவது பக்கத்தில், தேவததியக்ஷா என்று அழைக்கப்படும் அரசனின் அதிகாரி தெய்வீகக் கடவுள் சிலைகளை வழிபடுவது பற்றியும், திருவிழாக்கள், கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது பற்றியும் முனைவர் அகர்வால் குறிப்பிட்டுள்ளார். 1952இல் ஜார்ஜ் அல்லன் மற்றும் அன்வின் ஆகியோரால் பதிப்பிக்கப்பட்ட கிழக்கத்திய மேற்கத்திய தத்துவங்களின் வரலாறு என்னும் நூலின் 33ஆவது பக்கத்தில் குறிப்பிட்டுள்ளவாறு, வீடுகளில் தெய்வ வழிபாடு நடத்தும் வேதகால பழக்கத்தினால் சமூக மக்களிடையே ஏற்பட்ட உறவு, கிராமங்களிலும், நகரங்களிலும் சமூக வழிபாடு நடத்துவதற்கும், அதற்கான கோயில்களும், வீடுகளின் வழிபாட்டுத் தலங்களும் கட்டப்படுவதற்கும் வழிவகுத்தது.
5. வேதங்களில் கூறப்பட்டிருக்கும் சில சடங்குகள், உயிர்ப் பலிகளை எதிர்ப்பதையே முக்கிய நோக்கமாகக் கொண்டு கி.மு. அய்ந்தாம் நூற்றாண்டில் புத்தமதம் தோன்றியது. பிரபஞ்சம் தோன்றுவதற்கு மூலகாரணமாக இருந்த அறிவார்ந்த கடவுள் என்ற கோட்பாட்டில் நம்பிக்கை அற்ற, ஆன்மீக நெறியில் அல்லாத மதமாக பவுத்தம் விளங்கிய போதிலும், நினைவுச் சின்னங்களாக புத்தரின் உடல் உறுப்புகள் போற்றப்பட்டதும், பின்னர் புத்த மத நூல்களுக்கு அளிக்கப்பட்ட புனிதத்தன்மையும், புத்தரின் உருவத்தையே கடவுளாக வழிபடுவது என்று இறுதியாக ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாகவும், இந்தியாவில் பரவலான உருவ வழிபாட்டுக்கு வழிவகுத்தன. இந்துக்களிடையே எந்தக் காலகட்டத்தில் உருவ வழிபாடு தொடங்கப்பட்டது என்பதை அறுதியிட்டுக் கூறுவது எளிதானது அல்ல. தொடக்க கால புத்த இலக்கியத்தில் உருவ வழிபாடு பற்றிய எந்தக் குறிப்பும் இல்லை. கவுதம தர்ம சாஸ்திரத்தில் உருவத்தைப் பற்றிய ஒரு குறிப்பு இருக்கிறது என்ற போதிலும், அது எந்தக் குறிப்பிட்ட கடவுள் உருவத்தையோ, உருவங்களையோ குறிப்பிடுவதாக இருக்கவில்லை. இன்றைய நாளில் இந்துக்களால் வழிபடப் படுகின்ற கடவுள்களில் பெரும்பாலானவை இதிகாசங்களிலும், புராணங்களிலும் கொண்டாடப்பட்டவையே ஆகும்.
இந்தியாவின் சில பாகங்களில் வழிபாட்டு வடிவங்கள் மாந்திரிகச் சடங்குகளின் கலவையாக இருப்பதைப் பார்க்கலாம். இதற்கு எடுத்துக்காட்டாக வங்காளத்தைக் குறிப்பிட்டுக் கூறலாம். இதிகாச காலத்திற்குப் பிறகும், புத்தமதத்தில் மஹாயானப் பிரிவு தலைதூக்கிய கி.பி. 4 முதல் 6ஆம் நூற்றாண்டு காலத்திற்குப் பிறகும், இத்தகைய கடவுள்களின் வழிபாடு நாட்டில் பிரபலம் அடையத் தொடங்கியது. புத்தமதத்தின் செல்வாக்கு இந்தியாவில் உச்ச கட்டத்தில் இருந்த கி.மு.2ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 7 ஆம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் எல்லோரா, அஜந்தா, கர்லா, ஹளபீடு போன்ற சில குறிப்பிடத்தக்க குகைக் கோயில்கள் கட்டப்பட்டன. இந்துக் கோயில்களின் கட்டிடக் கலைக்கு முதல் எடுத்துக்காட்டாக புத்த விகாரங்கள் விளங்கின என்றும் கூறலாம்.
6. புராண தெய்வங்கள் வழிபடுவதற்கான கோயில்கள் கட்டுவது பற்றியும், புராணங்களின் பெருமை பற்றியுமான பரப்புரைக்கு குப்தப் பேரரசர்கள் பெரிதும் பங்களித்தனர். பல வடிவங்கள், பல தோற்றங்களில் விளங்கிய சிவன் மற்றும் விஷ்ணு ஆகியோரே பொதுவாக வழிபடப்பட்ட கடவுளர்கள் ஆவர். சக்தி வழிபாடு அல்லது உமா, பார்வதி, துர்கா, காளி என்பது போன்ற பல வடிவங்களில் சிவனின் இணையரை வழிபடுவது என்பது நாளடைவில் பிரபலமானது. விஷ்ணுவின் இணையரான லட்சுமி, பிரமனின் இணையரான சரஸ்வதி மற்றும் பல பெண் தெய்வங்களின் பல்வேறு அம்சங்களும் முக்கியத்துவம் பெறத் தொடங்கின.
அக்காலத்தில் பின்பற்றப்பட்ட இந்து, ஜைனம், புத்தம் ஆகிய மதங்களையும், அவற்றின் கலைகளையும் பெரிதும் ஆதரிப்பவர்களாக குப்தப் பேரரசர்கள் இருந்தனர். அவர்களுக்குப் பின் வந்த இந்து அரசர்களும், மதவிஷயங்களில் சகிப்புத் தன்மைக் கொள்கையைப் பின்பற்றுபவர்களாகவே இருந்தனர். நாடு முழுவதிலும் பலப்பல ஜைனக் கோயில்கள் தோன்றின. அபு மலைக்கு அருகில் உருவான தில்வாரா மற்றும் ரணக்பூர் கோயில்களை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். இந்தக் கோயில்களில் ஜைனரின் உருவச் சிலைகள் மட்டுமே இருக்கவில்லை. இந்து மதக் கடவுள்கள், கடவுளச்சிகளின் உருவங்களும் இடம் பெற்றிருந்தன.
7. இந்தியாவின் தென்பகுதியில் கோயில்கள் படிப்படியாக உருவாகி வளர்ச்சி பெற்ற காலம் என்று 13ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியையும், 14ஆம் நூற்றாண்டின் முற்பகுதியையும் கூறலாம். 6ஆம் நூற்றாண்டின் இறுதிக் காலத்தில், காஞ்சி பல்லவ சாம்ராஜ்யம் முழுவதிலும், குடவரைக் கோயில்களை கற்களைக் குடைந்து உருவாக்கும் உந்துதல் தலைதூக்கியது. கிருஷ்ணா, கோதாவரி டெல்டா பகுதிகளை ஆண்டுவந்த விஷ்ணுகந்தன் என்னும் அரசன் கிருஷ்ணா நதிக்கரையில் உருவாக்கிய குடவரைக் கோயில்களில் இருந்து இந்தக் கருத்து தோன்றியிருக்கலாம். தொடக்க கால பல்லவ குடவரைக் கோயில்கள் கி.பி. 600_-630ஆம் ஆண்டு காலத்தில் ஆட்சி செய்த மகேந்திர பல்லவர் காலத்தில் உருவாக்கப்பட்டன. தமிழ் நாகரிகம், பண்பாடு ஆகியவற்றின் நிலைகளில் புகழ் பெற்றிருந்த அரசர்களில் ஒருவராக இவரும் கருதப்படுபவர் ஆவார். இந்தக் காலத்தில் பல குடவரைக் கோயில்கள் உருவாக்கப்பட்டன என்று கூறப்படுகிறது. கி.பி. 630_-668ஆம் ஆண்டுக் காலத்தில் அரசாண்ட அவரது மகனான மாமல்லன் எனப்படும் நரசிம்ம பல்லவன் காலத்தில் விரிவான குடவரைக் கோயில்கள் கட்டப்பட்டன. கோயில் கட்டுவதில் அடுத்த கட்ட முன்னேற்றமாக, மூலக் கோயிலைவிட அதிக உயரம் கொண்ட பல அடுக்குக் கோபுரங்கள் கொண்ட, கற்களால் கட்டப்பட்ட பெரிய பெரிய கோயில்கள் தோற்றம் பெற்றன. காஞ்சி கைலாசநாதர் கோயிலை இதற்கு எடுத்துக்காட்டாகக் கூறலாம். சாளுக்கிய மன்னர்கள் காலத்தில் இந்து மற்றும் ஜைன மதக் கோயில்களும், சிலைகளும் உருவாக்கப்பட்டன. கி.பி. 900ஆம் ஆண்டுக் காலத்தில் தஞ்சையில் சோழ வம்ச அரசர்கள் பல நாடுகளையும் வென்று கொண்டு வந்த நிலையில், இறுதியாக பல்லவர்கள் தோற்கடிக்கப்பட்டதோடு, பல்லவ காலக் கோயில்கள் கட்டப்படுவதும் முடிவுக்கு வந்தன. கி.பி. 1019ஆம் ஆண்டு தொடங்கி நிலைபெற்ற சோழ சாம்ராஜ்ய காலத்தில் திருவாரூர், தஞ்சாவூர், உத்தரநல்லூர் வைகுந்தப்பெருமாள் கோயில் போன்ற எண்ணற்ற புதியவகைக் கோயில்கள் தோற்றம் பெற்றன. இதன் உச்சகட்டமாக ராமேஸ்வரம், மதுரைக் கோயில்களைக் கூறலாம். சோழர்களால் உருவாக்கப்பட்ட பாரம்பரியம் அவர்களைத் தொடர்ந்து வந்த விஜயநகர மன்னர்களாலும் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வந்தது.
Leave a Reply