Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வரவேற்கத்தக்க தீர்ப்பு

உச்ச நீதிமன்ற வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க நாள் 15.4.2014; நீதிபதிகள் கே.எஸ். இராதாகிருஷ்ணன், திரிபாதி ஆகியோரால் திருநங்கைகளை மூன்றாவது பாலினமாக அங்கீகரித்து வழங்கப்பட்ட தீர்ப்புதான் அது.

அரவாணிகள் என்ற பெயரில் ஏதோ நடமாடும் நிலையில்தான் அவர்கள் இருந்து வந்தனர். சமுதாயத்தில் ஏதோ அருவருப்பானவர்கள் கேலிக்குரியவர்கள் என்பது போன்ற மனப்பான்மை இருந்து வந்தது.

பிறப்பின் அடிப்படையில் உருவ அமைப்பில் சில மாற்றங்கள் இருந்து விடுவதாலேயே அவர்கள் மதிக்கப்படத் தகுந்தவர்கள் அல்ல என்ற மனப்பான்மை மனிதத் தன்மையற்றது -_ பகுத்தறிவுக்கும் விரோதமானது.

ஓர் உச்ச நீதிமன்ற தீர்ப்பின் வாயிலாக அம்மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றப்பட்டது என்பது பெரிதும் போற்றி வரவேற்கப்பட வேண்டிய ஒன்றாகும். இந்திய அரசமைப்பு – பாலினம், மதம், ஜாதி ஆகிய வேறுபாடுகளைக் கடந்து சம வாய்ப்பை அனைத்துக் குடிமக்களுக்கும் வழங்குகிறது என்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சிறப்பாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரிப்பதற்கு (இந்திய அரசமைப்புச் சட்டம் அமலாகி) 64 ஆண்டுகள் தேவைப்பட்டிருக்கின்றன என்றாலும் காலந் தாழ்ந்தாவது இப்படி ஒரு தீர்ப்பு வந்ததே என்று வரவேற்று மகிழ்ச்சி அடைகிறோம். உச்ச நீதிமன்றத் தீர்ப்பினை வரவேற்று, 15.4.2014 சென்னை ஈக்காட்டுத் தாங்கலில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்திலும் பேசினேன்.

13.4.2013 அன்று கோவை சுந்தராபுரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட புரட்சிப் பெண்கள் மாநாட்டில் திருநங்கைகள் குறித்த தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

(1) ஆண், பெண் என்ற இருபாலோடு திருநங்கைகளை மூன்றாவது பாலாக, மாற்றுப் பாலினம் என்று சட்டரீதியாக அறிவிக்கப்பட வேண்டும் என்றும், ஷிமீஜ் என்ற அரசு விண்ணப்பங்களில் இப்பிரிவுக்கும் சம இடம் தரவேண்டியது அவசியம்.

(2) திருநங்கைகளின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள வாரியம் இன்னும் செயல்படாத நிலையில் இருப்பதை மாற்றி, உடனே செயல்பட வைக்கவேண்டும் என்றும்,

(3) சட்டமன்றங்கள், நாடாளுமன்றத்தில் சிறுபான்மையினர் நியமனம் செய்யப்படுவது போல திருநங்கையருக்கும் அந்த வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும் என்றும்,

(4) கல்வி, வேலைவாய்ப்பில் திருநங்கையர்க்குக் குறிப்பிட்ட அளவில் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றும் திருநங்கையர்களுக்கு வீடு கட்ட மனை, நிதி உட்பட அனைத்து வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்றும் இம்மாநாடு மத்திய, மாநில அரசுகளை வற்புறுத்துகிறது என்பதுதான் அந்தத் தீர்மானம்!

மாநாடுகளில் திராவிடர் கழகம் நிறைவேற்றும் தீர்மானங்கள் எல்லாம் பிற்காலத்தில் சட்டங்களாக வடிவம் பெற்று வந்துள்ளன. அந்த வரிசையில் இதுவும் முக்கியமானதாகும். அந்தக் கோவைப் பெண்கள் மாநாட்டில் ரேவதி என்ற திருநங்கை அவர்களும் கலந்து கொண்டு அவர்களின் பிரச்சினைகள் குறித்து கருத்துக் கூறும் வாய்ப்பும் அளிக்கப்பட்டது.

அரவாணிகள் என்ற பெயரை திருநங்கைகள் என்று அழைத்து, அவர்களுக்கென்று வாரியம் அமைத்த சாதனைக்குச் சொந்தக்காரர் மானமிகு மாண்புமிகு கலைஞர் அவர்களே.

16ஆவது மக்களவைத் தேர்தல் தி.மு.க. அறிக்கையில்கூட, மிகவும் கவனமாக அவர்கள் பிரச்சினை முக்கியமாக இடம் பெற்றுள்ளது. மொத்தம் நூறு அம்சங்களைக் கொண்ட ஆவணக் காப்பகமான தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் 11ஆவது அம்சமாக அரவாணிகள் (Transgenders) என்ற தலைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே முதன்முதலாக கலைஞர் ஆட்சியில்தான் அரவாணிகள் எனப்படும் திருநங்கைகளுக்கு அங்கீகாரம் அளித்திடும் வகையில், அவர்களுக்குக் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.   அவர்களுக்குத் தேவைப்படும் அறுவை சிசிச்சையை இலவசமாகச் செய்வதற்கும் வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அரவாணிகள் நலவாரியம் ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக;  அரவாணிகளுக்கு தேசிய அளவில் உரிய அங்கீகாரம் பெற்றுத் தரும் வகையில், அவர்களுக்கு தி.மு.கழக ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் அனைத்தையும் அகில இந்திய அளவில் வழங்கிட தி.மு.கழகம் பாடுபடும்.  மேலும், கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளிலும் அவர்களுக்கு உரிய இடம் வழங்கிடுவதோடு, அரவாணிகளை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்திட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்.

சமுதாயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் பகுதியினர்மீது எப்பொழுதுமே உண்மையான திராவிடர் இயக்கத்திற்கு அக்கறை உண்டு என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.
கோவை திராவிடர் கழக மாநாட்டுத் தீர்மானம் _- தி.மு.க. தேர்தல் அறிக்கை இவற்றைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத் தீர்ப்பும் இசைவாக வந்ததற்காக உள்ளபடியே மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் சுட்டிக் காட்டியதுபோல இது ஒரு முக்கிய மனித உரிமைப் பிரச்சினையும்கூட!

உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் திருநங்கைகளின் சமூக பொருளாதாரப் பிரச்சினைகள் திருப்திகரமாக இல்லை என்று கூறப்பட்டுள்ளது. அது உண்மைதான் என்றாலும் கல்வி நிலையிலும் மிக மிகப் பின் தங்கிய நிலையில்தான் உள்ளனர்.

திராவிடர் கழக மாநாட்டிலும் தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் இவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு மத்திய, மாநில அரசுகள் அவர்களுக்கென்று ஒரு தனிச் சிறப்பான திட்டத்தை (Scheme) வகுத்து, அவர்களைச் சமூகத்தில் மதிக்கத்தக்க மனிதர்களாக மற்றவர்களுக்கு இணையானவர்கள் என்ற சமூக அங்கீகாரம் கிடைத்திட அவர்களின் கல்வி, சமுதாய, பொருளாதார நிலையை உயர்த்திட ஆவன செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.

இந்தியாவில் முப்பது லட்சம் திருநங்கைகள் இருக்கின்றனர். அவர்கள் வாழ்வு புதிய திருப்பம் பெற வேண்டும்; பல்வேறு மூடநம்பிக்கைகளில் ஈடுபட்டு வரும் அந்தத் தன்மையிலிருந்து அவர்கள் விடுபட்டு, முற்போக்குத் திசையில் அவர்கள் அடி எடுத்து வைக்க வேண்டும். அவர்களில் படித்தவர்கள் இந்த வகையில் வழிகாட்ட வேண்டியதும் அவசியமாகும். கழகமும் இதில் கவனம் கொள்ளும்.

– கி.வீரமணி,
ஆசிரியர்