– சு.மதிமன்னன்
பிப்ரவரி 15 சனிக்கிழமை. டெல்லி பிரகதி மைதானத்தில் உலகப் புத்தகச் சந்தை. கடை எண் 11. வாசலில் 12 பேர் கூட்டம். பெங்குவின் பதிப்பகத்தின் நூல்கள் விற்கும் இடம். கூட்டம் கூச்சல் போட்டது. வென்டி டானிகர் ஹை! ஹை! என்று கூச்சல். போவோர், வருவோரையெல்லாம் கூச்சல் போடக் கூப்பிட்டனர் அந்த டஜன் நபர்கள். ஒருவரும் இவர்களோடு சேரவில்லை. இவர்கள் டர்ட்டி டஜன் என்று அவர்களுக்குத் தெரிந்திருக்குமோ?
வென்டி டானிகர் எழுதிய இந்துக்கள்_ மாற்று வரலாறு எனும் நூலைக் கண்டித்துக் கூச்சல். சிக்ஷா பச்சோ அந்தோலன் எனும் மதவெறிக் குழுவினரின் கூச்சல். அலட்சியப்படுத்திட வேண்டிய கூச்சல்.
ஆனால்….
பெங்குவின் பதிப்பகம் கூச்சலுக்குப் பயந்து பணிந்தது. அந்தப் புத்தகம் மொத்தத்தையும் திரும்பப் பெற்றுக் கொள்வதாகக் கூறியது. கூறியவாறு எழுதிக் கொடுத்தது. மதவெறிக் குழு சமாதானம் அடைந்தது. ஆனால், எழுத்தாளர்கள் நொந்து போயினர். கருத்துச் சுதந்திரம், எழுத்துச் சுதந்திரம் வேண்டும் என்பவர்கள் வருத்தப்பட்டனர். ஆயினும் என்ன? 125 கோடி மக்களை அச்சுறுத்த சிறு குழுவினர் போதுமே! அவர்களின் கையில் உள்ள ஆயுதம் அவ்வளவு வலுவானது! மத உணர்வு!
சாத்தானின் கவிதைகள் என்று ஒரு நூல். சல்மான் ருஷ்டி எழுதியது. மத உணர்வு என்று காரணம் காட்டி ஈரான் நாட்டு அதிபரே மரண தண்டனை விதித்தார். அந்த நூலை மொழிபெயர்த்தவர்கள்கூடக் கொல்லப்பட்டனர். ஆசிரியர் பிரிட்டனில் அடைக்கலம் பு-குந்தார். பத்தாண்டுகளுக்கு மேல் அவரைப் பாதுகாத்தது பிரிட்டன். ஆசிரியர் இன்றும் உயிருடன் உலவி வருகிறார்.
இந்த நூலைப் பதிப்பித்ததும் அதே பெங்குவின் பதிப்பகம்தான்! இப்போது மட்டும் ஏன் பெங்குவின் பின்வாங்கியது?
இந்தியாவின் ஆகப் பெரும் பணக்காரர் என்ற பெருமை பெற்றவர், திருபாய் அம்பானி. அவரது வரலாற்றை ஹமிஷ் மக்டனால்டு என்பவர் எழுதினார். தலைப்பு பாலியஸ்டர் இளவரசர்! இந்தியாவின் எல்லா உயர் நீதிமன்றங்களிலும் இந்நூலுக்குத் தடை வாங்கிவிட்டனர் 1998இல்! நூல் வரவே இல்லை!
நேரு _ காந்தி குடும்பம் பற்றி ஒரு நூல். குஷ்வந்த் சிங் எழுதினார். மேனகா காந்தி _ இந்திரா காந்தியின் இரண்டாவது மருமகள் _ வழக்குப் போட்டார். நூல் வெளி வருவதற்கு முன்பே தடை ஆணை வாங்கிவிட்டார்.
சட்ட விரோதமாகப் பொதுமக்களிடம் திரட்டிய 22 ஆயிரம் கோடி ரூபாயைத் திருப்பித் தருமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் அதன்படிச் செய்யாததால் உள்ளே தள்ளப்பட்ட சாஹரா அதிபர் சுப்ரதா ராய் பற்றி ஒரு நூல். சாஹரா: சொல்லப்படாத கதை என்று தலைப்பு. அவதூறாக எழுதப்பட்டிருப்பதாக வழக்குப் போட்டார் சுப்ரதா ராய். நூலுக்குத் தடை விதித்தது கல்கத்தா உயர் நீதிமன்றம்.
ஜெயலலிதா: ஒரு படப்பிடிப்பு என்ற தலைப்பில் ஒரு நூல். வாசந்தி என்ற எழுத்தாளர் எழுதினார். 1-.4.2011இல் வெளியிடப்பட திட்டம். ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தடை. பதிப்பாளர் ஓராண்டுக் காலம் வழக்காடிப் பார்த்தார். 27.8.2012இல் சென்னை அமர்வு நீதிமன்றம் தடை ஆணையை நிரந்தரமாக்கிவிட்டது. பதிப்பாளர் உயர் நீதிமன்றத்திற்குப் போகவில்லை. இதன் பதிப்பாளரும் பெங்குவின்தான்!
சிறீ அரவிந்தரின் வாழ்க்கைகள் என்று ஒரு புத்தகம். பீட்டர் ஹீஹ்ஸ் என்பார் எழுதி நியூயார்க்கில் வெளியிடப்பட்டது.
மனது புண்ணாகிவிட்டது என்று இரண்டு பேர் வழக்குப் போட்டனர். ஒரிசாவில், கீழமை நீதிமன்றங்களில்! வழக்கு விசாரணைக்குத் தடை விதித்துள்ளது ஒரிசா உயர் நீதிமன்றம். நூல் எழுதிய ஆசிரியரை நாட்டைவிட்டு வெளியேற்ற வேண்டும் என்று ஒரு வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில்! வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது. இந்த நூலின் பதிப்பாளரும் பெங்குவின்தான்.
இப்படி இந்தியாவில் எழுத்துரிமையும் கருத்துரிமையும் படும்பாடுகள் பற்றி எவ்வளவோ எழுதலாம்!
எதனால் இது இங்கே மட்டும்? இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 295A தான் காரணம்! இச்சட்டம் எழுதப்பட்டது 1857இல்! இந்தியச் சிப்பாய்க் கலகம் நடந்ததற்குப் பிறகு, விக்டோரியா மகாராணி அளித்த உறுதிமொழிகளுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட சட்டம். கிறித்துவர்களான அன்றைய ஆட்சியாளர்கள் தம் நாட்டுக் குடிமக்களான இந்து, முசுலிம்களின் மத உணர்வுகளுக்கு மாறாக நடந்து கொண்டனர் என்பதால்தான் சிப்பாய்க் கலகமே நடந்தது. அம்மாதிரி இனிமேல் நடக்காது என்ற உத்தரவாதத்தின் பேரில் சட்டம் எழுதப்பட்டது. இன்று அந்நியர் ஆட்சியும் இல்லை. எல்லோரும் இந்நாட்டு மன்னர் எனும் மக்களாட்சி(?) நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இருந்தாலும் 160 ஆண்டுகளாக மாறுதல் இல்லாமலே சட்டம் இருக்கிறது!
சட்டத்திற்காக மக்களும் அவர்தம் உரிமைகளும் காவு கொடுக்கப்படுகின்றன.
கருத்துரிமை கிரிமினல் குற்றமாகக் கருதப்படுகிறது. சட்டத்திற்காக மக்களா? மக்களுக்காகச் சட்டமா?
Leave a Reply