கல்கி விமர்சனத்திற்கு நமது விளக்கம்
– க.திருநாவுக்கரசு
பழ.அதியமான் எழுதிய சேரன்மாதேவி குருகுலப் போராட்டமும் திராவிட இயக்கத்தின் எழுச்சியும் எனும் நூலுக்கு கல்கி வார ஏடு (30.03.2014) விமர்சனம் எழுதி இருக்கிறது. அவ்விமர்சனத்தின் இறுதிப் பகுதியில் அதன் கும்பி எரிச்சலைக் கொட்டித் தீர்த்து இருக்கிறது. ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு என்று சொல்லுவார்கள். அதுபோல விவரக்குறைவு காரணமாக எழுதிவிட்டது கல்கி. கல்கி எழுதிய இறுதிப் பகுதி வருமாறு:
ஜாதி வித்தியாசத்தை எதிர்ப்பதுதான் நாயுடுவின் ஈ.வெ.ரா.வின் நோக்கம் என்றால், இதே காலகட்டத்தில் _ சென்னையில் பச்சையப்பன் அறக்கட்டளையால் நடத்தப்பட்ட கல்லூரியில் தாழ்த்தப்பட்டவர்களை அனுமதிக்காமல் இருந்தார்களே,
அது பற்றிய போராட்டம் ஏன் நடத்தப்படவில்லை
இப்படிக் கேள்வியோடு முடிகிறது கல்கியின் நூல் விமர்சனம். இதன் மூலம் சேரன்மாதேவியில் நடைபெற்றது தவறு என்பதைக் கல்கி ஒப்புக் கொள்கிறது. அதற்காக நாம் கல்கிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கின்றோம்.
இனி கல்கி எழுப்பி இருக்கிற வினாவைப் பற்றிப் பார்ப்போம். கல்கி சொல்கிற விமர்சனம் என்ன? தாழ்த்தப்பட்டோரைக் கல்லூரியில் சேர்க்காத பச்சையப்பன் அறக்கட்டளையை எதிர்த்து பெரியாரும் வரதராஜுலு நாயுடுவும் ஏன் பேராட்டம் நடத்தவில்லை என்கிறது கல்கி! பெரியார் தமது பொது வாழ்க்கையின் தொடக்கக் காலத்திலிருந்து தாழ்த்தப்பட்டோருக்காக செய்த நன்மைகள் பல பதிவுகளில் காணக் கிடைக்கின்றன. வரதராஜுலு நாயுடுவும் ஒரு சமர்கள வீரர். பெரியாரின் நண்பர். தாழ்த்தப்பட்டோரின் முன்னேற்றத்தில் பெரிதும் அக்கறை காட்டியவர். இவர்கள் இருவரும் செய்த அய்ம்பெரும் பணிகள் குறித்து எந்தவிதப் பாராட்டையும் தெரிவிக்கவில்லையே கல்கி, அவற்றை எல்லாம் குறிப்பிட்டுவிட்டு அல்லவா _ இந்தக் குறையைக் கல்கி சொல்லி இருக்க வேண்டும். குருகுலப் போராட்டத்தில் வ.வே.சு.அய்யர் செய்தது தவறு என்று நேரடியாகச் சொல்ல மனம் துணியவில்லை கல்கி. சுற்றி வந்து மூக்கைத் தொடுகிறது.
சேரன்மாதேவி குருகுலம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிடமிருந்து நிதி உதவி பெற்று நடைபெற்றுவந்த அமைப்பு. காங்கிரஸ் _ எல்லா மக்களுக்குமான கட்சி. அது ஒரு பொது அமைப்பு. விடுதலைப் போராட்டக் கட்சி. எல்லா மக்களுக்கும் விடுதலை கோருகிற கட்சி. சமத்துவம் பேசுகிற கட்சி. அக்கட்சியிடமிருந்து நிதி பெற்று நடத்தப் பெறும் குருகுலம் எல்லா மாணவர்களுக்கும் சம நிலையில் அமரவைத்து அல்லவா உணவு வழங்க வேண்டும். பார்ப்பன மாணவர்களுக்குத் தனி இடம்; பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்குத் தனி இடம் என்று அனைத்து மக்களுக்குமான விடுதலையைக் கோரிப் போராடுகிற ஒரு கட்சியின் நிதி எப்படிப் பயன்பட முடியும்?
பார்ப்பனருக்கான அமைப்பின் நிதியினால் பார்ப்பனருக்கு மட்டுமே பயன்படுத்தப் படவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் பார்ப்பன அமைப்புக்கு மட்டுமே வழங்கப்பட்ட நிதியினால் பார்ப்பன மாணவர்களை மட்டும் சிறப்பாகக் கவனிக்கலாம்; உணவு வழங்கலாம். குருகுலத்திற்கு வழங்கப்பட்ட நிதி காங்கிரஸ் எனும் அனைத்து மக்களுக்கான அமைப்பிலிருந்து பெறப்பட்ட நிதியாகும். எனவே அதன் பயன்பாடு என்பது பாகுபாடு இல்லாமல் பொதுவாக இருக்க வேண்டும் என்று கருதியே சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் நடைபெற்றது.
பச்சையப்பன் அறக்கட்டளை என்பது காங்கிரஸ் கட்சிபோன்ற பெரிய அமைப்பு அல்ல. அது ஒரு கட்சியுமல்ல. அதன் இயங்கு எல்லை என்பது காங்கிரசை ஒப்பிட மிகமிகச் சிறியது. பச்சையப்பன் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டபோது அதன் நோக்கம், குறிக்கோள் என்று அதன் விதிகளில் சொல்லப்பட்டு இருக்கும் இந்த அறக்கட்டளையின் பயன் இந்துக்களுக்கு மட்டுமே சேரவேண்டும் என்று பதிவு செய்யப்பட்டு இருந்தது.
வர்ணாசிரமக் கோட்பாட்டின்படி நால்வர்ணத்தில் தாழ்த்தப்பட்டோர் அடங்காமையால் _ இதைப் பயன்படுத்திக் கொண்டு டிரஸ்டிகள் பச்சையப்பன் கல்லூரியில், ஆரம்பப் பாடசாலையில் மாணவர்களைச் சேர்க்க வாய்ப்பு மறுக்கப்பட்டது. சேர்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வழக்குத் தொடுக்கப்பட்டு நடந்து வந்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் பெரியார் வன்மையான தமது எழுத்தின் மூலம் தமது கண்டனத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். சங்கநாதம் செய்து இருக்கிறார். போராட்டத்திற்கு முன் அறிவிப்பு போல எச்சரிக்கை செய்து இருக்கிறார். சூத்திரனைப்போல தாழ்த்தப்பட்டவன் நால்வர்ணத்தில் இல்லாமையால் இனஇழிவு இல்லாதவனாக சூத்திரனைப் பார்க்கிலும் உயர்ந்தவனாகத் தாழ்த்தப்பட்டவன் ஆகிறான். எனவே, தாம் தாழ்த்தப்பட்டவனாகப் பிறக்கவில்லையே என்று வேதனைப்பட்டவர் பெரியார். அத்தகைய பெரியார் பச்சையப்பன் அறக்கட்டளையினர் தாழ்த்தப்பட்டவர்களைக் கல்லூரியிலும், பாடசாலையிலும் சேர்க்கவில்லை என்பதற்கு எப்படி எழுதுகிறார் என்று படித்தால் மெய்சிலிர்த்துப் போகிறது. கல்கிக்கு இந்த எழுத்துகள் தெரிய நியாயமில்லை; ஏனெனில் இது தெய்வத்தின் குரல் இல்லை.
ஆதிதிராவிடர் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? மகமதியருக்கும், இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தைகள் கோவிலுக்குள் போகலாம். பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், கிறிஸ்தவர்களுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தைகளும் கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், வெள்ளைக்காரனுக்கும், இந்து விபசாரிகளுக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குப் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், தமிழ்நாடு அல்லாத அன்னிய நாட்டு தீண்டாதார் என்போருக்கும் இந்து விபசாரிக்கும் பிறந்த குழந்தை கோவிலுக்குள் போகலாம், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும், மலையாள தீண்டாதார் என்போர்கள், இக்கோவிலுக்குள் போகலாம் என்றும், பச்சையப்பன் கல்லூரியில் படிக்கலாம் என்றும் பச்சையப்பன் கல்லூரியில் இத்தனை பேர்களும் உபாத்யாயராக இருக்கலாம் என்றும் பழக்கமும், வழக்கமும் இருக்கின்றது. ஆனால், தமிழ்நாட்டின் பூர்வீகமான குடியாய் இருந்து, தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ்நாட்டில் வளர்ந்து, இந்துக்கள் என்று மதிக்கப்பட்டு வாழ்ந்துவரும் ஆதிதிராவிடர்கள் என்னும் தமிழ் மக்கள் மாத்திரம் இந்து கோவிலுக்குள் போகக்கூடாது என்றும் பச்சையப்பன் கல்லூரியில் படிக்கக்கூடாதென்றும் சொல்லுவது யோக்கியமாகுமா? இம்மாதிரி கோவில்களையும் (டைனமெட்டு) வெடிகுண்டு போட்டு உடைத்தெறிந்தால் மனிதனால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றம் என்பதாக சொல்லப்பட்டாலும், கடவுளால் உண்டாக்கப்பட்ட சட்டப்படி குற்றமாகுமா? என்று கேட்பதுடன், நம் நாட்டு ஆதிதிராவிடர்கள் என்போர்கள் விபசாரி மக்களைவிட இழிந்தவர்களா? என்று அறிய விரும்புகின்றோம். – குடிஅரசு _ கட்டுரை – 27.11.1927
இதைவிட ஒரு போர்க்குணம் வேண்டுமா? பெரியாரைத் தவிர யாரால் இப்படி எழுத முடியும்?
காந்தியார் 1927ஆம் ஆண்டு மூன்று முறை தமிழ்நாட்டிற்கு வந்தார். முதல் முறையில் 24.08.1927 முதல் 23.10.1927 வரை இரண்டு மாதங்கள் இங்கே தங்கி சுற்றுப்பயணம் செய்தார். கதர் வளர்ச்சி, மதுவிலக்கு, தீண்டாமை ஆகிய கொள்கைகள் பற்றிப் பேசினார். 06.09.1927 அன்று பச்சையப்பன் கல்லூரியில் காந்தியார் பேசினார். அதுபோது அவர் பச்சையப்பன் டிரஸ்டிகளுக்கு ஒரு வேண்டுகோள் விட்டார். காந்தியாரிடமே மன்னார்குடியில் தாழ்த்தப்பட்ட மாணவனை ஆரம்பப் பாடசாலையில் சேர்க்க முடியாது என்று பள்ளித் தலைமை ஆசிரியரே தெரிவித்த சம்பவங்கள் எல்லாம் கல்கிக்குத் தெரியாமல் இருக்க முடியாது. காந்தியாரால் வேண்டுகோள்தான் விடுக்க முடிந்தது.
பெரியாரின் கடுமையை காந்தியாரின் பேச்சில் காணமுடியுமா? 1927 நவம்பரில் பெரியார் எழுதியதற்குப் பிறகு நிலைமை என்ன? திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை மாநாட்டில் நிறைவேறிய தீர்மானங்களில் பச்சையப்பன் டிரஸ்ட் பிரச்சினை 28_ஆவது தீர்மானமாக இடம்பெற்று இருக்கிறது. அத்தீர்மானம் வருமாறு:
சென்னை பச்சையப்பன் கலாசாலை டிரஸ்டிகள் ஆதிதிராவிடர்களை இந்துக்கள் என்று ஒப்புக் கொண்டதோடு அவர்களையும் பள்ளியில் சேர்த்துக் கொண்டதற்கு இம்மாநாடு மகிழ்கின்றது.
அதற்கு மாறாக நின்ற திரு. வெங்கடேசுவர சாஸ்திரலு என்ற பார்ப்பனரைக் கண்டிக்கிறதோடு, அக்கூட்டத்தாரை இனி டிரஸ்டிகளாக நியமிக்கக் கூடாதென்றும் பொதுஜனங்களைக் கேட்டுக் கொள்கிறது.
மேலும் சமூக ஒற்றுமையையும், நியாயத்தையும் கருதி பச்சையப்பன் கலாசாலையில் கிறிஸ்தவ மாணவர்களையும் மகமதிய மாணவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறது.
_ குடிஅரசு (11.12.1927)
வெங்கடேசுவர சாஸ்திரலு என்பவரால்தான் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் பச்சையப்பன் கல்லூரியிலோ பாடசாலையிலோ சேர்த்துக் கொள்ளப்படவில்லை என்பதை கல்கி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். தீர்மானத்தின் மூன்றாவது பாரா கிறித்தவர்களையும் முஸ்லிம்களையும் பச்சையப்பன் கலாசாலையில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது. இதைப்பற்றி கல்கி ஒன்றும் சொல்லவில்லையே! ஆனால் பெரியார் சொல்லுகிறாரே!
1994ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரி சாதனையாளர்கள் எனும் நூல் ஒன்று வெளியிடப்பட்டது. அந்நூலில், 06.09.1927 அன்று காந்தியடிகள் பச்சையப்பன் கல்லூரியில் சொற்பொழிவு நிகழ்த்தினார். பச்சையப்பன் கல்லூரி மாணவர்களைப் பார்த்துத்தான் இந்திய மாணவர் சமுதாயத்தைப் பற்றிய ஒரு மதிப்பீட்டைத் தன் மனதில் ஏற்படுத்திக் கொண்டுள்ளதாகக் காந்தியடிகள் உரையாற்றுகையில் குறிப்பிட்டார். காந்தியடிகளின் வேண்டுகோளின்படியும் நீதிமன்ற ஆணையின்படியும் பச்சையப்பன் கல்லூரியில் ஹரிஜன மாணவர்களும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது.
இதுவரை நாம் எடுத்துரைத்தவற்றை, நடந்த நிகழ்வுகளைப் பார்க்கிறபோது பெரியார் பச்சையப்பன் அறக்கட்டளையை எதிர்த்துப் போராடுவதற்கான வாய்ப்பு உருவாகவில்லை. ஏனெனில், பெரியாரின் குடிஅரசு கட்டுரைக்குப் பிறகு _ காந்தியாரின் வேண்டுகோளுக்குப் பிறகு _ நீதிமன்றத் தீர்ப்பிற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட மாணவர்களை பச்சையப்பன் கல்லூரியிலும் பாடசாலையிலும் டிரஸ்டிகள் சேர்த்துக் கொள்ள ஒப்புக்கொண்டுவிட்டனர். இதற்குப் பிறகு பெரியார் ஏன் போராட வேண்டும்? நோக்கம்தான் நிறைவேறிவிட்டதே! இவ்வளவு விளக்கத்திற்குப் பிறகும் கல்கிக்கு விளங்காமல் போகுமா?
Leave a Reply