Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

வள்ளுவப் பார்வை

கவர் ‘மாவா’  கவரி ‘மானா”

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

மயிரா? உயிரா?

திருக்குறளுக்கு, உரை எழுதத் தொடங்கிய நாள் தொட்டு, இன்றுவரை பல்வேறு உரைகள் எழுந்து உலவுகின்றன. அவற்றுள் பல உடன்பாடாகவும், வேறுபாடு ஆகவும் மாறுபாடாகவும் உள்ளன. அவற்றுள் உள்ள மெய்ப்பொருளைக் காண்பத நம் ஒவ்வொருவரின் இன்றியமையாக் கடமை.

மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின் (குறள் எண்: 969)

என்னும் குறட்பாவின் உரை கருத்து மாறுபாட்டுக்-கு உரியதாக உள்ளது. அதனை வள்ளுவப் பார்வை வழி ஆய்வு செய்து உண்மை அறிய முயல்வோம். முதலில், இந்தக் குறட்பாவில் வரும், மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் என்ற தொடருக்கு வரையப்பட்டுள்ள அறிஞர் சிலரின் உரை மாறுபாடுகளைச் சற்றே நினைவுபடுத்துவோம்.

(உரை) வலையில் சிக்கிய வள்ளுவர் பெருமான்

1.    ஒரு மயிர் சிக்கினால் பிராணனை விடும் கவரிமான் போன்றவர் என்கிறார் பாரதியார் (நூல்: திருக்குறள் உரை)

2.    மயிரை இழந்தால் உயிரை விட்டுவிடும் கவரிமான் போன்றவர் கவரிமா _ நீண்ட மயிரழகுடைய கவரிமான் என்பார், பேராசிரியர் பெரும்புலவர் அ.நடேச முதலியார். (நூல்: அருங்குறள் பொழிப்பு விளக்கம்.)

3.    ஒரு மயிர் நீங்கினால் உயிர்வாழாத கவரிமான் போன்றவர் என, உரை வரைகிறார் மாத்தளை. சோமு. (நூல்: திருக்குறள் அறிவியல் அகலவுரை).

4.    தன் மயிர்த்திரளில், ஒரு மயிர் நீங்கினாலும் உயிர் வாழாத கவரிமான் போன்றவர் வள்ளுவர் என்கிறார், பேராசிரியர் அ.மாணிக்கம் எம்.ஏ. (நூல்: திருக்குறள் தெளிவுரை)

5.    மயிர் நீங்கின் உயிர் வாழாத கவரிமான் போன்றவர் என்கிறார் முனைவர் கடவூர் மணிமாறன். (நூல்: திருக்குறள் இனிய தெளிவுரை.)

6.    ஒரு மயிர் நீங்கினும் உயிர்வாழாத கவரி மானைப் போன்றவர்… என்று உரை தருவார் புலவர் குழந்தை அவர்கள். (நூல்: திருக்குறள் புலவர் குழந்தை உரை)

7.    தனது மயிர்த் தொகுதியில் ஒரு மயிர் நீங்கினாலும் உயிரை வைத்துக் கொண்டிராத கவரிமான் போன்ற இயல்புடையார். இது நாவலர் நெடுஞ்செழியன் எழுதிய உரை. (நூல்: திருக்குறள் நாவலர் பொழிப்புரை) மா மட்டுமே!

8.    தன் மயிர்த்திரளில் ஒரு மயிர் நீங்கினும் உயிர் வாழாத கவரி மாவை ஒப்பார் -இது, பரிமேலழகர் உரை. (நூல்: திருக்குறள் பரிமேலழகர் உரை)

9.    ஒரு மயிர் நீங்கின் உயிர் வாழாத கவரி மாவைப் போன்ற மானமுடையார் என்கிறார் மணக்குடவர். (நூல்: திருக்குறள், மணக்குடவர் உரை.)

10.    குளிர்காப்பாம் மயிர் நீங்கினால் உயிரோடு வாழாத கவரிமா என்னும் விலங்கினைப் போன்றவர் இது, புலவர் இளங்குமரனார் உரை. (நூல்: திருக்குறள், மதுரை இளங்குமரனார் உரை.)

எட்டுப் பேர் ஒன்றுபோலவே எழுதிய உரை:

இன்னும், பழைய _ புதிய குறளறிஞர்கள், பெரும் புலவர்கள் உரை எழுதியுள்ளனர். தேவைக்காக, விரிவஞ்சி, ஒருசிலரின் உரைப் போக்கினையும் கருத்தமைவையும் மட்டுமே எடுத்துக்காட்டியுள்ளோம். எடுத்துக்காட்டப்பெற்ற 10 பேரில் 8 பேர் கவரிமா என்பதற்கு மயிர்க்கற்றையுடைய விலங்கு(மா) ஆகிய மான் -_ கவரிமான் என்றே உரை எழுதியுள்ளனர்.

பரிமேலழகர், மணக்குடவர், மதுரை இளங்குமரனார் ஆகியோர் மூவர் மட்டுமே கவரிமா என்று மட்டும் குறிப்பிட்டுள்ளனர். அந்த மா(விலங்கு) எது? என்பதனைச் சுட்டிக்காட்டவில்லை.

காணப்படும் கருத்தொற்றுமை:

ஒருவர் நீங்கலாக ஒன்பதுபேரும், தானாகவோ சிக்கிக் கொண்டாலோ ஒரு மயிர் தானாக உதிர்ந்து அல்லது விழுந்துவிட்டாலோ அந்த மான் உயிர் வாழ விரும்பாது உயிர் நீங்கும் என்ற கருத்தில் ஒற்றுமை உடையவர்களாக உள்ளனர். ஒருவர் (இளங்குமரனார்) மட்டும் குளிர் காப்பாம் மயிர் நீங்கினால் உயிரோடு வாழாத கவரி மா என்று இயற்கைச் சூழலின் -_ தட்பத்தின் விளைவினை அடிப்படையாகக் கொண்டு உரை வரைந்துள்ளார்.

இப்பொழுது மேற்கண்ட குறட்பாவில் வரும் கவரிமா எது? அது கவரிமானா? பிற விலங்கா? என்பதை முதலில் ஆய்வு செய்வோம்.

திருவள்ளுவர், மிகத் தெளிவாக, மயக்கம் _ குழப்பம் இன்றி மயிர்த்திரள் உடைய விலங்கு என்ற பொருளில் கவரிமா _ என்றே எழுதியுள்ளார். மான் என்று குறிக்க விரும்பியிருந்தால் தெளிவாகவே கவரிமான் என்றே எழுதியிருப்பார். அதனால், யாப்பமைதி அதாவது சீர், தளை எதுவும் தவறாது. பின் ஏன் கவரிமா _என்று குறிப்பிட்டார்?

அது எது?

கவரிமா என்பது, உண்மையில் மயிர்க்கற்றை அல்லது திரள் அதாவது சடைசடையாய் அடர்ந்து வளர்ந்துள்ள மயிர்த்திரள் கொண்ட விலங்குதான் கவரிமா. (மா_விலங்கு) அந்த விலங்கு எது? வள்ளுவர் பெயர் சுட்டிக் கூறவில்லை! ஆனால், அது வள்ளுவர் கருத்துப்படி மான் அன்று. அது வேறு!

இது, திபெத்தில் உள்ள மிக உயர்ந்த மலைப்பகுதியில் வாழ்வது. உலகிலேயே, மிக உயர்ந்த மலைகளே இதன் வாழ்விடம். குளிர்காலத்தில் கூட, 14 ஆயிரம் அடி உயரத்திற்குக் கீர் இது வருவதில்லை. இந்திய நிலப்பரப்பில், சங்கசென்மோ பள்ளத்தாக்கில் மட்டுமே காணப்படுகிறது.

இதன் வகை இரண்டு

இந்தக் கவரி மா இருவகைப்படும். அவை: 1. காட்டுக் கவரிமா. 2. வீட்டுக்கவரிமா. காட்டுக் கவரிமா, 6 அடி உயரம் இருக்கும். அதன் கொங்கு 25 அங்குலத்திலிருந்து 30 அங்குலம் இருக்கும். எப்போதும் இதன் மூக்கு நிலத்தைத் தொடுவதுபோல, தலை தொங்கியபடியே இருக்கும்.

கன்னங்கருத்த முடி

இதன் உடல் முழுதும் மிகவும் கன்னங்கரேல் -_ என, கருப்பு நிறத்தில் அல்லது கரும்பழுப்பான முடி _ மயிர்த்திரள் இருக்கும். முடிநீளமாக இருக்கும்; பட்டுப்போல மென்மையானது; இது தரையைத் தொட்டுக்கொண்டே இருக்கும்; விரைந்து நடக்கும்; துணிவு மிக்கது; கொம்புகள் கூரியன; இதனை வேட்டையாடுவது அத்துணை எளிது அன்று.

வளரும் – முடி வளரும்:

ஒன்றன்பின் ஒன்றாக, எறும்பு செல்வதுபோல நடந்து செல்லும் இயல்புடையது; இது, மோப்பத்திறன் மிகுதியாக உடையது. ஆண்டில், ஏப்ரல் திங்களில் குட்டி போடும். பிறந்து, 2 திங்கள் நிறைவடைந்த பின்னரே இந்தக் குட்டிக்கு முடி வளரும்.
வீட்டுக் கவரிமா

சொத்தான சொத்தல்லவோ?

காட்டுக் கவரிமாவும், மங்கோலிய மாடும் சேர்ந்து இனப்பெருக்கம் செய்து பிறப்பதுதான் வீட்டுக் கவரிமா. இதன் முடி காட்டுக் கவரிமாவைவிட அடர்ந்திருக்கும். வாலில் மிகுதியான முடி வளர்ந்திருக்கும். வீட்டுக் கவரிமாவின் முடிதான், சவரி சாமரம் எனப்படுவது. வீட்டுக் கவரிமா திபேத்தியர்களுக்குப் பெரும் சொத்தாக இருக்கிறது.

சத்தான சத்தல்லவோ?

பெரிய பொதிகளோடு, நாள் ஒன்றிற்கு 40 கி.மீ. தொலைவு பயணம் செய்யும். இதன் இனிய பால் நிறைவான ஊட்டச் சத்துடையது; மிகவும் குளிர்ந்த பகுதியில் வாழும் கவரிமாவின் முடியைக் குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள மக்கள் பயன்படுத்துகிறார்கள். இதன் கவரி முற்றும் நீக்கப்பட்டால் கொடும்_கடும் குளிர் தாங்க முடியாமல் உயிர் இழக்க நேரும்; சில உயிரிழக்கும்.

இந்தக் கவரி மா யாக் (சீணீளீ) எனப்படும்.

அந்த மானைப் பாருங்கள், அழகு!

இனி, கவரி மான் பற்றியும் பார்ப்போம். தமிழ்நாட்டில் அழகிய கவரிமான்கள் உள. மிக நீண்ட முடியோ (மயிரோ) அது, பயன்படுத்தும்படியாகவோ இதற்கு இல்லை. அவ்வாறு, பயன்படுத்தத் தேவையான குளிரும் தமிழ்நாட்டில் இல்லை!
தரப்படும் தகவல்கள்:

இதுவரை, கவரிமா, கவரிமான் பற்றிய தகவல்கள் எல்லாம் புவியியல் _ அறிவியல் தொடர்பான அறிவியல் செய்திகளின் அடிப்படையிலேயே தரப்பட்டுள்ளன.

மயிர் ஒன்று போனால் உயிர் நின்று போகுமா?

இப்பொழுது, நாம் ஓர் உண்மையைத் தெளிவாக உணரவேண்டும். திருவள்ளுவர் குறிப்பிட்டது கவரிமா! கவரிமான் அன்று.

கவரியை உடைய விலங்கு. அதாவது, திபெத்திய சடை எருமை! அதாவது, யாக் விலங்கு. அதன் முடி நீக்கப்பட்டால் குளிர் தாங்காது உயிர்வாழ முடியாத நிலை ஏற்படும். கவரிமானுக்கு அத்துணை முடியும் கிடையாத. உரையாசிரியர் சிலர் கூறுவதுபோல மயிர் நீப்பின் என்பது முடிக்கற்றையில் ஏதேனும் ஒரு மயிர் நீங்கினால் அது ஏன் உயிரிழக்கும்? எப்படி உயிரிழப்பு ஏற்படும்? ஒரு மயிர் விழுவதால் அதன் உயிருக்கு எப்படி, பாதிப்பு ஏற்படும்?

ஏதோ, ஏதோ, ஏதோ ஒரு மயக்கம்

யாரோ, எப்பொழுதோ, எங்கேயோ சொன்னதை சொல்லப்பட்டதை, கேட்டதை, கேட்டதை நம்பியதை அப்படியே ஆராயாது, கிளிப் பிள்ளை போல, ஒரு மயிர் நீங்கின் கவரிமான் உயிர் துறக்கும் என்று இந்த உரையாசிரியர்கள் சொல்கிறார்களே?

எப்படி இது சரியாகும்? உண்மையாகும்? இது ஒரு கருத்து மயக்கம் அல்லவா?

இது, எப்படி எப்படி, எப்படி வந்தது இவர்க்கும்?

பிற உரையாசிரியர்கள் தாம் பகுத்தறிவுக் கண்ணோட்டமோ, அறிவியல் மனப்பான்மையோ இல்லாத அல்லது இருக்க வாய்ப்பு இல்லாத அவற்றைப் பெற ஆர்வம் இல்லாத புலவர்கள், மொழியறிஞர்கள் இவ்வாறு உரை எழுதியுள்ளனர் என்றால் பகுத்தறிவாளர்களாக, தந்தை பெரியாரின் தடம்பற்றி நடந்த புலவர் குழந்தை, நாவலர் நெடுஞ்செழியன் அவர்கள் ஆகியோர் ஏன் இவ்வாறு கருத்து மயக்கம் கொண்டு கவரிமான் ஒரு மயிர் நீங்கினால் உயிரிழக்கும் என எழுதினார்கள்? என்பதைத்தான் புரிந்துகொள்ள இயலவில்லை? வருத்தமாக உள்ளது! நம்மை நாமே நொந்துகொள்ள வேண்டியுள்ளது!  இந்தக் கருத்து மயக்கம் இவர்களுக்கு எப்படி வந்தது?

இலக்கணம் மாறுதோ? இலக்கியம் ஆனதோ?

மயிர் நீப்பின் வாழா என்றுதான் வருகிறது; உரையாசிரியர்கள் கூறுவதுபோல மயிர் நீங்கின் _ உதிர்ந்து போயின் என்று வரவில்லை. நீங்கின் _ என்பது தானாக விழுவது; உதிர்வது; இலக்கணப்படி இது தன்வினை. எனவே, மயிர் தானாக நீங்கின் உயிர் வாழாது என்று பொருள் இதற்கு இல்லை. மயிரைப் பிறர் நீக்கினால் என்று பிற வினைப் பொருளில்தான் வருகிறது. இதில், இந்த பிறவினைப் பொருளில்தான் நீப்பின் என்னும் சொல் இடம்பெற்றுள்ளது.

இதனை, வால் மயிர் துடைக்கின் தான் உயிர் வாழாப் பெருந்தகைக் கவரி என்கிறது பெருந்தொகை என்னும் நூல்.

துடைக்கின் வாழாது _ என்பதில் துடைக்கின் _ மழிப்பின் என்று பிறவினைப் பொருளில்தான் வருகிறது. கவரி _ என்று பொதுவாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது. கவரிமான் என்று குறிப்பிடப்படவில்லை.

உம்மை ஒன்று கேட்பேன் உண்மை சொல்ல வேண்டும்:

இதுகாறும் நாம் ஆய்ந்த வகையில் தன் உடலில் உள்ள தன் மயிர்க்கற்றையை பிறர் நீக்கிவிட்டால் கடுங்குளிரினைத் தாங்கமாட்டாமல் கவரி மா எனப்படும் யாக் எனும் பனிமலைச் சடைமுடி விலங்குக்கு, உயிர் வாழ்வதற்கேற்ற வாய்ப்பு, நிலைமை இராது.

இது போலத்தான், மானம் பிறரால் தொலைக்கப்பட நேரிடில் தன்மானமுடையோர் உயிர்வாழும் சூழல், நிலை, இல்லாதுபோய் உயிர் நீக்கப்படும் வாய்ப்பு வரும் என்பது இக்குறளின் கருத்து; மெய்ப்பொருள்.

அறிஞர்கள் மேலும் ஆய்வு செய்தல் வேண்டும். செய்வார்களா? இக்குறளில் அமைந்துள்ள உண்மைப் பொருளைத் தெளிவாக _ மயக்கம் இன்றி மக்களுக்குச் சொல்ல வேண்டும். சொல்வார்களா?