Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மீண்டும் ஒருமுறை…

இந்த நேரத்தில் தாய்மை அடைந்துவிட்ட கயல்விழியால் வேறு எந்த முடிவையும் எடுக்க முடியவில்லை. எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே உட்கார்ந்துகொண்டு இவளைக் கண்காணிப்பது ஒன்றே பிரதான வேலை என்று திருஞானம் இருந்ததால் காசு, பணமெல்லாம் கரையத் தொடங்கியது. அப்பா, அம்மா வைத்திருந்த மிச்ச, சொச்சமெல்லாம் போயிற்று. இந்த நிலையில்தான் மருத்துவமனையில் மகள் பிரியா பிறந்தாள். அச்சு அசலாக திருஞானத்தைப் போன்றே இருந்ததால் தன்னுடைய குழந்தைதான் என்று இந்த ஒரு விஷயத்தில்மட்டும் திடமாக நம்பினான். சோர்வாய் கட்டிலில்  படுத்திருந்தவளின் அருகிலிருந்த குழந்தையைக் கையில் எடுத்துக் கொண்டு அமர்ந்த திருஞானம், இப்பொழுது நான் சொல்வதை நன்றாகக் கேட்டுக்கொள்.

இவள் என்னுடைய மகள், எனக்கு மட்டுமே மகள். இவளை நான் வளர்த்துக் கொள்கிறேன். நீதான் இனிமேல் வேலைக்குச் செல்லவேண்டும். நாங்கள் வாழ்வதற்கு இனி வருமானத்தை நீதான் ஈட்டியாக வேண்டும். நீ நினைக்கலாம், உன்னை வெளியில் வேலைக்குச் செல்ல நான் எப்படிச் சொல்கிறேன் என்று. நீ வீட்டிலிருந்தால் குழந்தை உன் அணைப்பில் வளரும். என் குழந்தையை நீ வயிற்றில் சுமந்தாய் என்பதைத் தவிர உனக்கு என் குழந்தையுடன் எந்தத் தொடர்பும் இருப்பதை நான் விரும்பவில்லை. என் வாழ்க்கைக்கு ஓர் அர்த்தம் வேண்டும். அது இந்தக் குழந்தையால் எனக்குக் கிடைத்திருக்கிறது. உன்னுடைய பழைய பழக்கவழக்கங்களைப் பற்றிக் கவலைப்பட்டு என் வாழ்க்கையை, என் குழந்தை வாழ்க்கையை வீணாக்க நான் விரும்பவில்லை. என்னைப் பொறுத்த அளவில் இந்தக் குழந்தை மட்டுமே என் குடும்பம். என்னுடைய அன்பு, பாசம் எல்லாமே இந்தக் குழந்தைக்கு மட்டும்தான் என்று குழந்தையைத் தூக்கிக் கொண்டு வீட்டிற்குப் போய்விட்டான்.

கயல்விழி தன்னுடைய அவல வாழ்க்கையை நினைத்து நொந்து போனாள். இப்படியே அவனை விட்டுப் போய்விடலாம். ஆனால் என் குழந்தை? பக்கத்தில் இருந்தால் பார்க்கவாவது செய்யலாம். ஏதோ இந்தமட்டில் குழந்தையையாவது நேசிக்கிறானே. வீட்டிற்குச் சென்றாள். குழந்தைக்குப் பாலைக்கூட கொடுக்க விடவில்லை. மார்பு கட்டிப்போய் அவள் துடித்த துடிப்பு இருக்கிறதே…. நாட்கள் ஓடத் தொடங்கின. ஆனால் வெளியில் வேலைககுச் செல்ல அனுமதித்திருந்ததால் மீண்டும் பூங்கொடியைப் பார்க்கும் வாய்ப்பு வந்தது. பூங்கொடி முதுநிலைப் பட்டம் பெற்று மருத்துவம் முடித்து இப்பொழுது சென்னையில் கிளினிக் வைத்திருக்கிறாள். எட்டு வருடங்கள் கழித்து மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் சந்தித்தபோது எல்லா செய்திகளையும் பரிமாறிக் கொண்டார்கள். பாரியும் சென்னையில் நல்ல வேலையில் இருக்கிறான் என்ற தகவல் உட்பட.

நீயும் சென்னைக்கு வந்துவிடேன்.

ம். பார்க்கலாம். அவரிடம் சொல்லிப் பார்க்கிறேன்.

விடைபெற்றுக் கொண்டார்கள்.

திருஞானத்திடம் சொன்னாள். பிரியாவின் மேல் படிப்புக்கு சென்னை வசதியாகயிருக்கும். வருவாயும் அதிகமாகக் கிட்டும்.

திருஞானம் யோசிக்கத் தொடங்கினான். அவன் மிகவும் மாறித்தான் போயிருந்தான். அவளிடம் அதிகமாகப் பேசுவதில்லை. கடுஞ்சொற்கள் கொண்டு திட்டுவதில்லை. ஒருவேளை அவள் வேலைக்குப் போவதால் இருக்கலாம். அவளுடைய சம்பாத்தியத்தால் என்பதுகூட இருக்கலாம். பிரியாவைக் கவனிப்பதுதான் அவனுடைய முழுநேர வேலை. 7 வயதான பிரியாவுக்கும் அப்பாவைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது. அம்மாவைப் பற்றி எந்த எண்ணமும் கிடையாது. கயல்விழியும் மகளிடம் நிலைமைகளைச் சொல்லியிருக்கலாம். அதனால் பிரியாவின் நிம்மதியும் போயிருக்குமே தவிர வேறு ஒன்றும் நடந்திருக்காது. தான் ஒருத்தி மட்டும் பாதிக்கப்பட்டது போதாதா? மகளின் மனமும் அமைதிகெட்டு அலைய வேண்டுமா! இதனால் குழந்தையின் வளர்ச்சியைத் தள்ளியிருந்தே பார்க்கப் பழகிக் கொண்டாள்.

சென்னைக்கு மாறினார்கள். பாரியின் முயற்சியால் கிடைத்த வேலையில் இவளுடைய திறமையால் மேலும் மேலும் முன்னேற்றம் அடைந்தாள். வீடு வாங்கினார்கள். அதுவும்கூட திருஞானத்தின் பெயரில்தான். தனக்கென ஒரு சின்ன சேமிப்பு எதையும் வைத்துக்கொள்ளவில்லை. நெரிசல் பேருந்துகளில் பயணப்பட்டுப் பழகிக்கொண்டாள்.  பாரி, பூங்கொடியுடன் நட்பு தொடர்ந்தது. பூங்கொடி மட்டும் வீட்டிற்கு வருவாள். போன ஆண்டு திருஞானத்தின் இறப்பிற்கு வந்து ஆறுதல் கூறியதுடன் அமெரிக்காவில் ஒரு பயிற்சிக்குச் சென்றுவிட்டாள். எல்லாவற்றையும் சொல்லி முடித்தாள் பூங்கொடி. இப்பொழுது சொல் பிரியா. ஒரு பெண்ணாக இருந்து உன் அம்மாவைப் பார். உன் அப்பா உன்னை நேசித்தது, அன்பு காட்டியது எந்த அளவிற்கு உண்மையோ அந்த அளவிற்கு உன் அம்மாவைத் தள்ளி வைத்ததும், உன் மேல் பாசம் காட்டும் வாய்ப்பையே அவளுக்குத் தர மறுத்ததும், தேவையற்ற சந்தேகங்களால் அவளுடைய வாழ்க்கையைப் பாழாக்கியதும் உண்மை.

இப்படிப்பட்ட உன் அப்பா இறந்ததால் அவளுக்கு என்ன பாதிப்பு இருக்க முடியும்? உனக்கு ஏற்பட்ட இழப்பை நினைத்துத்தான் அவள் மிகுந்த வேதனைப்பட்டுக் கொண்டிருந்தாள். உன் அப்பாவின் துர்போதனைகளால் உன்னால் உன் அம்மாவை வெறுக்க முடிந்திருக்கிறதே தவிர  அந்தத் தாய்க்கு நேர்ந்த கொடுமைகளை நீ அறிந்துகொள்ளவில்லை.

ஒரு கணவனால் ஒரு பெண்ணுக்குக்  கிடைக்க வேண்டிய அன்பும், அரவணைப்பும் எந்தவித சுகங்களும் கிடைக்காத ஒரு பெண் அதுவும் 39 வயதுடைய பெண், தன்னைக் கல்லூரி வயதிலிருந்து இன்றுவரையிலும் களங்கமில்லாத நேசிப்புடன், தனக்கென்று வாழாது சமூகத்திற்கான மாற்றத்தைத் தேடி வாழ்வை ஒப்படைத்துக் கொண்ட ஒருவனை நேசிப்பதில் என்ன தவறிருக்க முடியும்? அவளுடைய வாழ்க்கை அவள் வாழ்ந்துதான் பார்க்கட்டுமே என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது கயல்விழியிடமிருந்து பூங்கொடிக்குத் தொலைபேசி வந்தது.

எப்படியிருக்கிறாய் கயல்விழி?

எந்த மாற்றமும் இல்லாமல் எப்பொழுதும் போலத்தான் உள்ளேன். பாரியைத் திருமணம் செய்யும் முடிவை இன்னும் உறுதியாக எடுக்க முடியாமல் தவிக்கிறேன். பிரியா வேறு வீட்டைவிட்டு வெளியேறி விடுதியில் தங்கியுள்ளாள். என்மேல் கடும் கோபத்தில் உள்ளாள். அவளை எந்த வகையிலும் குற்றம் சொல்ல முடியாது. அவளுடைய அப்பாவின் வளர்ப்பு அப்படி. இன்னும் அவளுக்கு நான் செய்ய வேண்டிய கடமை ஒன்றிருக்கிறது. அவளுடைய அப்பாவின் பெயரால் உள்ள இந்த வீட்டை அவளுடைய பெயருக்கு மாற்றி ஒப்படைத்துவிட்டு நான் வெளியேறிவிட வேண்டும். பாவம் பிள்ளை வெளியில்போய் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பாள். நீ ஒரு உதவி செய்ய வேண்டும். அவளுடைய கைப்பேசி எண்ணைச் சொல்கிறேன்; அவளுடன் பேசி வரும் செவ்வாய்க்கிழமை சைதை பதிவாளர் அலுவலகத்திற்கு எப்படியாவது அழைத்து வந்துவிடு. அது அவளுக்கான வீடு. அவள் இருந்து வாழவேண்டிய வீடு என்று பேசிக்கொண்டே போனாள்.

அவள் பேசிய அனைத்தையும் பிரியாவும் கேட்டாள் ஸ்பீக்கர் மூலமாக.

பூங்கொடி கைப்பேசியை அணைத்துவிட்டு பிரியாவைப் பார்த்தாள். உனக்கு இதற்கு மேலும் நான் விளங்கவைக்கத் தேவையில்லை என்று நினைக்கிறேன்.
பிரியாவின் கண்களிலிருந்து கண்ணீர் எந்த நிமிடமும் வெடித்துக் கிளம்பத் தயாராகயிருந்தது. இத்தனை ஆண்டுகளாக தன் அம்மாவைப் பற்றி எதனையும் அறிந்துகொள்ள முயற்சிகூட செய்யாத தன்னுடைய அறியாமையை, அறியாமை என்றுகூட சொல்ல முடியாது; ஆணவத்துடனும், திமிருடனும், அப்பாவின் எதிரி என்ற எண்ணத்தை வளர்த்துக்கொண்டு ஒரு தன்னலமற்ற தாயைப் புரிந்துகொள்ளாமலேயே இருந்துவிட்டோமே! அப்பாவின் பாசமும் அன்பும் என்னை ஆக்ரமித்திருந்ததே ஒழிய அம்மாவுக்கு ஒரு நல்ல துணையாக, இணையாக அப்பா இல்லாதிருந்திருக்கிறார் என்பதைத் தெரிந்து கொள்ளாமலேயே வாழ்ந்திருக்கிறோமே!

பூங்கொடியிடம் விடைபெற்று, காத்திருந்த ஆட்டோவுக்கு வந்தாள். தனது வீடிருக்கும் பள்ளிக்கரணையில் உள்ள பாவாணர்   தெருவுக்குப் போகச் சொன்னாள்.

வீடு வந்தது. இறங்கினாள். ஓடிப்போய் அம்மாவைக் கட்டிக் கொண்டாள். இதுவரைத் தொட்டிராத அந்த மினுமினுப்பான சருமத்தை முதன்முறையாக ஸ்பரிசித்து, இத்தனைக்காலமாய் படுத்து அறியாத அந்தச் சுகமான மடியில் கவிழ்ந்து குலுங்கிக் குலுங்கி அழுதாள். அம்மா… அம்மா… மீண்டும் மீண்டும் சொல்லிச் சொல்லிப் பார்த்தாள். அடிவயிற்றில் சுமையாயிருந்து இறங்கிய தன் மழலையை 18 ஆண்டுகள் கழித்து இறுகிப் போன தன் மார்புகளில் அனுபவித்தறியாத ஓர் இன்ப உணர்ச்சியுடன் சுகமாக ஏந்திக்கொண்டு தன் ஆசை மகளை முத்தமழையில் நனைத்தாள் கயல்விழி.

இரண்டு மாதங்கள் கழித்து… தன்னை நேசிக்கத் தொடங்கிய தன் மகளோடு மீண்டும் ஒருமுறை மணமகளானாள் கயல்விழி, தன்னைப் புரிந்துகொண்டு நேசித்தவனோடு. அருகில் பிரியா அம்மாவிற்கு மணப்பெண் தோழியாக நின்றுகொண்டிருந்தாள்..

பாரி கயல்விழி பக்கத்தில் நிலைகொள்ளாது உட்கார்ந்திருந்தான்.  இதைக் கவனித்த பிரியா அவனுடைய சட்டையின்மேல் உள்ள மாலையைச் சரிசெய்து அப்பா உங்கள் கல்லூரிக் கனவுநாயகி கிடைத்துவிட்டார்கள்.  இனியென்ன, கவிஞர் பாட்டெழுத நாயகி இசைபாட உலகையே மறக்க வேண்டியதுதான் பாக்கி. ஆனால் சந்தோசத்தில உங்க பொண்ண மறந்திடாதீங்க என்று தன் உறவை உறுதியாக்கி பாரியை இயல்பு நிலைக்குக் கொண்டுவந்து மணமேடையைக் கலகலப்பாக்கினாள்.
கீழே இருந்து பூங்கொடி குடும்பத்தினர் உட்பட வந்திருந்தவர்கள், மாறவேண்டிய மனித சமூகத்தின் பிரதிநிதிகளாய் இருந்து மனமுவந்து வாழ்த்தினார்கள்.

புரிந்துகொண்ட உறவுகளாய் இப்பொழுதும் இவர்கள் இந்த ஊரில்தான் வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.

– இசையின்பன்
mobile : 9940348533