Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வர சந்தா செலுத்துங்கள்..

மதத்தின் பேரால் பிளவு – தந்தை பெரியார்

தோழர்களே! கடவுள், மதம், ஜாதீயம், தேசியம், தேசாபிமானம் என்பவை எல்லாம் மக்களுக்கு இயற்கையாக தானக வரும் உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல் படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக் கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங் களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப் பட்ட உணர்ச்சிகளேயாகும்.

 

இந்தப்படி புகுத்தப் படவேண்டிய அவசியமும், காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும் அன்னியர் உழைப்பாலேயே வாழவேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும் சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்.

 

ஆதியில் மனிதர்கள் காடுகளில் தனிமையில் -சுயேச்சையாய் திரிந்த இயற்கை வாழ்க்கையிலிருந்து சமூகக்கூட்டு வாழ்க்கைக்கு வரும்போது, அவனவன் தனக்குவேண்டிய சகல காரியங்களையும் தானே செய்து கொண்டும், அவசியமான பரஸ்பர உதவிகளை வழங்கிக் கொண்டும் ஒரே சமூகமாய் சமத்துவமாய் வாழலாம் என்று எண்ணியே  ஒழிய, மற்றபடி மற்றொருவனை அடிமைப்படுத்தி அவனிடம் தனக்குவேண்டிய எல்லா வேலையையும் வாங்கிக் கொண்டு ஏய்த்து அவனை உலக சுகபோகங்களில் பட்டினி போட்டு தான் மாத்திரம் சோம்பேறியாய் இருந்து வாழ்ந்துகொண்டு எல்லா சுகபோகங்களையும் தானே அனுபவித்துக் கொண்டு இருப்பதற்கோ அல்லது மற்றவனுக்கு அடிமையாய் இருந்து கஷ்டப்பட்டு உழைத்து அவ்வுழைப்பின் பெரும் பயனை மற்றவன் அனுபவிக்க விட்டுவிட்டுதான் பட்டினி கிடப்பதற்கோ அல்ல என்பது நேர்மையுள்ள மனிதர் யாவரும் ஒப்புக்கொள்ளத்தக்க விஷயமாகும்.

ஆனால், நாள் ஏற ஏற மக்களுக்குள் சிலருக்கு பேராசையும், பொறாமையும் சோம்பேறித் தனமும் வலுக்க வலுக்க அவற்றிலிருந்து செல்வவானும், அரசனுக்கு குருவும் ஏற்பட்டு பிறகு அவற்றை நிலைநிறுத்த ஆத்மா, கடவுள், வேதம், ரிஷிகள், மகாத்மாக்கள் ஆகியவை கற்பித்துபிறகு அவை மூலம் கடவுள் செயல், முன் ஜென்மம் பின்ஜென்மம், கர்ம பாவம், புண்ணியம் மேல் உலகம் கீழ் உலகம், தீர்ப்பு நாள், மோட்சம் நரகம் ஆகியவைகளும் கற்பிக்க வேண்டியதாய் விட்டது.

இந்த கற்பனைகளின் பயன்தான் பெரும்பான்மையான மக்கள் பாமரர்களாகவும் ஏமாற்றப்படவும், கொடுமைக்குள்ளாகவும், மற்றவர்களுக்கு அடிமையாகி உழைக்கவும், உழைத்தும், சரியான கூலி கிடைக்காமல் பட்டினி கிடந்துழல்வதை பொறுமையுடன் பொறுத்துக் கொள்ளவுமான காரியங்கள் நடந்துவருவதுடன் அவை எங்கும் என்றும் நிலைத்தும் நிற்கின்றன. எப்படியாயினும் அந்த நிலை அடியோடு அழிபடவேண்டும். அதற்காக அதன் காப்புகளான மேற்குறிப்பிட்ட கடவுள், மதம், தேசீயம், ஜாதீயம் என்பவைகளும் அவற்றின் பேறுகளான கர்மம் தீர்பபு, மோட்ச நரகம், பாவ புண்ணியம் ஆகியவற்றை போலி உணர்ச்சிகளும், அவற்றின் ஸ்தாபனங்களும் உடைத்தெறியப்படவேண்டும்.

கஷ்டப்படுகிற மனிதர்கள் தாங்கள் பாடுபட்டும் பட்டினி இருக்க நேருவதையும் `யோக்கியமாய், `நாணயமாய் நடந்தும் `இழிவாய் `கீழ்மக்களாய் கருதப்படுவதுமான தங்களது கொடுமையின் நிலைக்கு மற்றவர்களால், தாங்கள் ஏமாற்றப்படுவதுதான் காரணம் என்பதை உணராமல் தங்களுடைய முன்ஜென்ம கர்மபலன் – தலைவிதி – கடவுள் செயல் என்பதாகக் கருதிக்கொண்டு சிறிதும் முன்னேறுவதற்கு முயற்சி செய்யாமலும், சூழ்ச்சியின் தன்மையை உணராமலும் இருப்பதோடு தங்கள் நிலையைப்பற்றி சிறிதும் அதிருப்திகூட அடையக்கூடாதென்று கருதி தங்கள் நிலையைப்பற்றி தாங்களே சமாதானமும், சாந்தமும் அடைந்து கொள்கிறார்கள் வெளியில் சொல்லக்கூட வெட்கப்படுகிறார்கள்.

ஏனெனில் கஷ்டப்படுகின்ற மக்களுக்கு கடவுள் உணர்ச்சியும், மதமும் இதைத்தான் போதிக்கின்றது எப்படி என்றால்:-

“ஓ கஷ்டப்படுகின்ற மனிதனே! கஷ்டப்பட்டும் பட்டினி கிடக்கின்ற இளைத்த ஏழை மனிதனே  நீ உனது முன்ஜென்ம பாப கர்ம பலத்தினால் தலைவிதியால் கடவுள் சித்தத்தால் இம்மாதிரி துன்பத்தை அனுபவிக்கின்றாய் இந்த ஜன்மத்தில் நீ உனக்கேற்பட்ட இந்த நிலைமையை பொறுமையுடன் ஏற்று சமாதானமும் சாந்தமும் அடைந்து இருப்பாயாகில், அடுத்த ஜன்மத்தில் சுகப்படுவாய் – அல்லது ஜன்மத்தில் சுகப்படுவாய் – மேலான பிறவி பெறுவாய் – அல்லது மேல் உலகில் மோட்சம் என்றும் மேன்மையை அடைவாய் – கடவுள் சன்மானம் அருளுவார் என்கின்ற உபதேசமேயாகும்.

இந்த பெருமை உபதேசமும், சாந்த உபதேசமும் சமாதான உபதேசமும் மக்களை கோழைகளாகவும், முற்போக்கற்றவர்களாகவும் செய்து அவர்களது கஷ்டத்திலிருந்தும், இழிவிலிருந்தும் முன்னேற முடியாமலும் விடுபட முடியாமலும், சுயமரியாதை உணர்ச்சி பெறாமலும் இருந்து உயிர் வாழும்படி செய்து வந்திருக்கிறது.

இவ்வளவு மாத்திரம்தானா? இந்தக் கடவுள் உணர்ச்சியும் மதமும் செல்வந்தர்களுக்கும், மிராசுதாரர்களுக்கும், மற்றும் உத்தியோகம் வியாபாரம், லேவாதேவி என்னும் பேர்களால் ஏழைகளிடமிருந்து பணம் கொள்ளை கொண்டு மற்றவர்களை பட்டினிபோட்டு பெரும் பணப் சேர்க்கும் பணக்காரர்களுக்கும் போதிப்பது என்பதைப் பார்த்தாலே அது.

“ஓ பிரபுகளே! செல்வாவன்களே!! ஏராளமாக மேலும், மேலும் பணம், சேர்க்கும் பணக்காரர்களே!!! லட்சுமி புத்திரர்களே!!! நீங்கள் முன் ஜன்மத்தில் செய்த புண்ணிய கர்மங்களால் – கடவுள் உங்கள் மீது வைத்த கருணையினால் இவ்வுயர்நிலையை அடைந்திருக்கிறீர்கள். இவ்வேராளமான பண வருவாய்கள் உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இச்சுகபோகம் உங்களுக்குக் கிடைத்ததற்கும் காரணம் கடவுள் சித்தமேயாகும். ஆதலால் நீங்கள் கடவுள் பக்தி உள்ளவர்களாக இருந்து கடவுளுக்குக் காணிக்கை செலுத்துவதன் மூலமும், கடவுளுக்குக் கோயில் கட்டுவதன் மூலமும், கடவுள் பக்தர்களான பாதிரி குழு பிராமணர் முதலியவர்களுக்கு மரியாதை செய்து, சத்திரம், மடம் முதலிய உதவி அளிப்பதன் மூலமும் நன்றி செலுத்தி, இந்நிலையை நிலை நிறுத்திக்கொள்ளுவதுடன் மோட்ச லோகத்திலும் சுலபமாக இடம் சம்பாதித்து கொள்ளுங்கள் என்பதேயாகும்.

ஆகவே, தோழர்களே! இந்த காரணங்களாலேயே மக்களில் உயர்வு – தாழ்வும், எஜமான் – அடிமையும், முதலாளி – தொழிலாளியும், அரசன் – குடிகளும் ஒரு சிஷ்யனும் ஏற்பட்டிருக்கின்றனர் என்பதை உணருங்கள்.

17.10.1932 அன்று இலங்கையில் தந்தை பெரியார் அவர்கள் ஆற்றிய உரை

(`விடுதலை`, 19.11.1972).