மனுவும் சூத்திரர்களும்
மனுவின் திட்டத்தின்படி சதுர்வர்ணத்திற்கு உள்ளே உள்ளவர்கள், சதுர்வர்ணத்திற்கு வெளியே உள்ளவர்கள் என இரண்டு முக்கியமான சமூகப் பிரிவுகள் உள்ளன என்பது வாசகர்களுக்குத் தெரிந்திருக்கும். இன்றைய தீண்டப்படாதவர்கள் சதுர்வர்ணத்திற்கு வெளியே உள்ளவர்களின் நகல்தான். சதுர்வர்ணத்திற்கு உட்பட்டவர்கள் வெளியே உள்ளவர்களுக்கு நேர்மாறானவர்கள். அவர்களை பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள் மற்றும் சூத்திரர்கள் என்ற நான்கு வேறுபட்ட வகுப்பினரைக் கொண்ட ஒரு கூட்டு அமைப்பு எனலாம்.
சமுதாயச் சிந்தனையை விட வகுப்பைப் பற்றிய எண்ணமே மேலோங்கி ஆட்சி செலுத்தும் ஓர் அமைப்பு இந்து சமுதாய அமைப்பு. அது, வகுப்பினர்களிடையே சமத்துவமின்மையை அடிப்படையாகக் கொண்டது.
எனவே தனி மனிதர்களுக்கிடையே ஏற்றத் தாழ்வை அடிப்படையாகக் கொண்டது. தெளிவாகச் சொல்வதென்றால், பிராமணர்கள், சத்திரியர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் மற்றும் அந்தியஜாஸ், (தீண்டப்படாதவர்கள்) என்ற வகுப்பினர்கள் எல்லோரும் சமநிலையில் அதாவது ஒரே மட்டத்தில் உள்ளவர்களாக இல்லை. அவர்கள் படிநிலையில் அதாவது ஒருவரைவிட ஒருவர் உயர்வான நிலையில் இருக்கிறார்கள். இந்தக் கூற்றை எந்த இந்துவும் மறுக்க மாட்டார். ஒவ்வொரு இந்துவுக்கும் இது நன்கு புரியும். இதைப்பற்றி ஏதாவது அய்யம் கொள்பவராக யாராவது இருப்பாராகில், அவர் வெளி நாட்டவராகத்தான் இருக்க முடியும். ஆனால் வெளிநாட்டவருக்கு ஏற்படும் அய்யப்பாடு இந்து சமூகத்தின் தலைமைச் சிற்பியான மனுவின் சட்டத்தைப் புரட்டிப் பார்த்தால் கரைந்துபோகும். அந்தச் சட்டங்களின் அடிப்படையில்தான் இந்து சமூகமே கட்டப்பட்டுள்ளது. அவர்கள் எளிதில் புரிந்து கொள்வதற்காக, இந்து சமூகம் ஏற்றத்தாழ்வுக் கோட்பாட்டின் அடிப்படையில்தான் கட்டப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க, மனு ஸ்மிருதியிலிருந்து தேவையான வாசகங்களை எடுத்தெழுதுகிறேன்.
மனு ஸ்மிருதியில் மனுவால் விதிக்கப்பட்டுள்ள ஏற்றத் தாழ்வுநிலை, வரலாற்று முக்கியத்துவம் மட்டுமே உள்ள ஒரு நிகழ்வு என்று வாதிடக்கூடும். அது பழைய வரலாறு, மற்றும் இன்றைய இந்துக்களின் வாழ்க்கை நடைமுறையில், அதற்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றும் கூறலாம். இதைவிடப் பெரும் தவறு வேறு இருக்க முடியாது என்று நிச்சயமாகக் கருதுகிறேன். மனு நியதி என்பது ஒரு கடந்தகால நடைமுறையல்ல. தற்காலத்தின் இறந்தகாலத்தைவிட அது அதிகமெய்யானது. அது வாழ்ந்துவரும் கடந்தகாலம். எனவே எந்த நிகழ்காலத்தையும் போலவும் அது ஓர் உண்மையான நிகழ்கால விஷயந்தான்.
மனு நிர்ணயித்திருந்த ஏற்றத்தாழ்வுக் கோட்பாடு பிரிட்டிஷார் இந்தியாவிற்கு வருவதற்கு முன்பே இந்த நாட்டின் சட்டமாக இருந்தது என்பது பல வெளிநாட்டவர்களுக்குத் தெரியாமலிருக்கலாம். இதுதான் உண்மையான நிலை என்பதை சில விவரக் குறிப்புகளே தெளிவாகக் காட்டும்.
மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் ஆட்சியின்போது, பேஷ்வாக்களின் தலைநகராக இருந்த புனா நகரத்திற்குள் மாலை 3 மணியிலிருந்து காலை 9 மணிவரை தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், ஒன்பதுக்கு முன்பும் மூன்றுக்குப் பிறகும் அவர்களுடைய உடல்கள் நீண்ட நிழல்களை ஏற்படுத்தியதே இதற்குக் காரணம். இந்த நீண்ட நிழல்கள் ஒரு பிராமணரின் மீது பட்டுவிட்டால் அவர் குளித்துத் தனது தீட்டைப் போக்கிய பிறகே உணவு அருந்தவோ, தண்ணீர் குடிக்கவோ முடியும். இதே போன்று மதில் சுவரால் அரண் செய்யப்பட்ட நகரங்களுக்குள், தீண்டப்படாதவர்கள் வசிக்க அனுமதிக்கப்படவில்லை. கன்று காலிகளும், நாய்களும் சுதந்திரமாக நகருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டாலும், தீண்டப்படாதவர்கள் அனுமதிக்கப்படுவதில்லை.
மராட்டியர்கள் மற்றும் பேஷ்வாக்களின் சட்டப்படி தீண்டப்படாதவர்கள், தரையில் துப்புவதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஏனெனில், அவர்கள் எச்சிலை ஓர் இந்து மிதித்தால் அவர் தீட்டுக்குள்ளாகக் கூடும். எனவே, எச்சிலைத் துப்புவதற்காக தீண்டப்படாதவர் தன் கழுத்தில் ஒரு பானையைக் கட்டிச் செல்ல வேண்டுமென்ற விதி இருந்தது. தனது காலடித் தடத்தை அழித்துவிட ஒரு புதர்ச் செடியை இழுத்துச் செல்ல வேண்டுமென்றும் இருந்தது. ஒரு பிராமணன் வருவது தெரிந்தால் தீண்டப்படாதவன் தரையில் குப்புறப்படுத்து தனது நிழல் பிராமணன் மீது விழுவதைத் தவிர்க்க வேண்டுமென்ற நிலையும் இருந்தது.
ஒருவன் தாழ்த்தப்பட்டவன் என்பதைத் தெரிந்துகொள்ளும் பொருட்டு அவன் கழுத்தைச் சுற்றியோ, இடுப்பைச் சுற்றியோ கறுப்புக் கயிறு அணிய வேண்டுமென்ற விதி மகாராஷ்டிராவில் நிலவி வந்தது.
குஜராத்தில், தீண்டப்படாதவர்கள் தங்களை வேறுபடுத்திக் காட்டும் சின்னமாக, ஒரு கொம்பை அணிய வேண்டுமென்ற கட்டாயம் இருந்தது.
பஞ்சாபில் ஒரு தெருக் கூட்டுபவன் தெருவில் நடந்து செல்லும்போது தான் ஒரு துப்புரவுப் பணியாளன் என்பதை வெளியார் அறிந்துகொள்ள தனது அக்குளில் ஒரு துடைப்பத்தை வைத்திருக்க வேண்டும்.
பம்பாயில், தீண்டப்படாதவர்கள் சுத்தமான துணிகளை உடுத்த அனுமதிக்கப்படவில்லை. கந்தல் துணிகளையே உடுத்த வேண்டும். தீண்டப்படாதவர்களுக்குத் துணிகள் விற்கும்போது, அந்தத் துணிகளைக் கந்தலாக்கியும் அழுக்கடையச் செய்தும் விற்பதில் கடைக்காரர்கள் கவனமாக இருந்தார்கள்.
மலபாரில் தீண்டப்படாதவர்கள் ஒரு மாடிக்கு அதிகமான மாடிகளுடன் வீடுகள் கட்ட அனுமதிக்கப்படவில்லை. இறந்தவர்களை எரியூட்டவும் அனுமதிக்கப்படவில்லை.
குடை எடுத்துச் செல்லவும், காலணிகள் அணியவும், நகைகள் அணியவும், பசுக்களிடமிருந்து பால் கறக்கவும், நாட்டில் சர்வசாதாரணமாகப் புழங்கும் மொழியை உபயோகிக்கவும் மலபாரிலுள்ள தீண்டப் படாதவர்கள் அனுமதிக்கப்படவில்லை.
தென் இந்தியாவில் தீண்டப்படாதவர்கள் இடுப்பிற்கு மேலே எந்தத் துணியும் அணியக் கூடாது என்று திட்டவட்டமான விதியிருந்தது. தீண்டப்படாத பெண்மக்களும் உடலின் மேற்பகுதியை மூட அனுமதிக்கப்படவில்லை. பம்பாய் மாகாணத்தில் சோனர்கள் (பொற்கொல்லர்கள்) தங்கள் வேஷ்டியைத் தார்பாய்ச்சி உடுத்திக் கொள்ள அனுமதிக்கப் படவில்லை. ஒருவருக்கு வணக்கம் தெரிவிக்கையில் நமஸ்காரம் என்ற வார்த்தையை உபயோகிக்க அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.
மராட்டியர்களின் ஆட்சியில் பிராமணர்களைத் தவிர மற்றவர்கள் வேத மந்திரங்களை உச்சரித்தால் நாக்கை வெட்டிவிடும் தண்டனை வழக்கத்தில் இருந்ததால் சட்டத்தை மீறி வேதத்தை உச்சரித்த துணிச்சலுக்காக பேஷ்வாவின் ஆணையினால் பல சோனர்களின் நாக்குகள் வெட்டப்பட்டதாக அறிகிறோம்.
இந்தியா முழுவதும் பிராமணர்களுக்குத் தூக்குத் தண்டனையிலிருந்து விலக்களிக்கப் பட்டிருந்தது. அவன் ஒரு கொலை செய்திருந்தாலும் தூக்குத் தண்டனை விதிக்க முடியாது.
பேஷ்வாக்களின் ஆட்சியில் குற்றவாளிக்கு அவர்களின் ஜாதியின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டது. தீண்டப்படாதவர்களுக்கு எப்பொழுதும் மரண தண்டனையும், கடின உழைப்பும் தண்டனையாக அளிக்கப்பட்டு வந்தன.
பேஷ்வாக்களின் ஆட்சியில் பிராமண எழுத்தர்கள் வாங்கும் பண்டங்களுக்கு சில வரிகளிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அவர்களுக்கு இறக்குமதி செய்யப்பட்ட தானியங்களை ஓடங்களில் கொண்டுவருவதற்கு கூலி கிடையாது. பிராமண நிலக்கிழார்களின் நிலங்களுக்கு மற்ற வகுப்பினர்கள் செலுத்தவேண்டிய வரியைவிடக் குறைவாகவே விதிக்கப்பட்டுள்ளது. வங்காளத்தில் நிலத்திற்கான குத்தகை அதை அனுபவிப்பவரின் ஜாதியைப் பொறுத்திருந்தது. தீண்டப்படாதவர் அதிகமான குத்தகை கொடுக்க வேண்டியிருந்தது.
கிறிஸ்து பிறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்போ, அல்லது சில ஆண்டுகளுக்குப் பின்போ மனு பிறந்திருந்தாலும், இந்த விவரங்கள் அவர் இன்னும் மடிந்துவிடவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. இந்து அரசர்கள் ஆட்சியில் இருந்தபோது இந்துக்களுக்கும், இந்துக்களுக்கும் இடையே, தீண்டப்படாதவர்கள் மற்றும் தீண்டத்தக்கவர்களுக்கும் இடையேயான உறவுகள் மனுவின் சட்டப்படி தீர்மானிக்கப்பட்டன. அந்தச் சட்டம் வெளிப்படையாகவே ஏற்றத்தாழ்வின் அடிப்படையில்தான் அமைந்து இருந்தது. இதைத்தான் மனுதர்மம் எடுத்துரைக்கிறது. அது மானவ தர்மம் என்று அழைக்கப்படுகிறது. அதனுடைய உள்ளார்ந்த சிறப்பினால் எல்லாக் காலத்திலும், எல்லா இடங்களிலும், எல்லா மக்களுக்கும் அது பொருத்தமானது என்று கருதப்படுகிறது. இந்தியாவுக்கு வெளியே அது வழக்கத்தில் இல்லாதது ஒரு சாபமா அல்லது வரமா என்பதை நான் ஆராயப்போவதில்லை. இந்த மானவ தர்மத்தின்படி பிராமணர்களுக்கு எல்லாச் சலுகைகளும் அளிக்கப் படுவதுடன் சூத்திரர்களுக்கு மனிதப் பிறவி என்ற உரிமைகூட வழங்கப்படவில்லை. பிராமணன் அவனது உயர்ந்த பிறவியின் காரணத்தினால் மட்டுமே, மற்ற எல்லோரையும்விட எல்லா விஷயத்திலும் உயர்ந்தவனாகக் கருதப்படுகிறான். சூத்திரன் எல்லோருக்கும் கடைசியில் தள்ளப்பட்டதுடன், அவனுடைய மதிப்பு எவ்வளவு உயர்ந்ததாக இருந்தாலும் அவனுக்கு எந்த சமூக அந்தஸ்தும் கிடையாது.
இந்த மானவ தர்மத்தின் வெட்கம்கெட்ட தன்மையையும் இழிவையும் அம்பலப்படுத்துவதற்கு அதைத் தலைகீழாகத் திருப்பிக் காட்டுவதைத் தவிர வேறு சிறந்த வழியில்லை. இப்பணியை கல்வியாளரும், அரசியல்வாதியும் சமூகச் சீர்திருத்தவாதியுமான டாக்டர் ஆர்.பி.பராஞ்சபேயைவிட வேறு யாரும் சிறப்பாகச் செய்துவிடவில்லை எனத் துணிந்து கூறலாம். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ள கருத்துகளை முழுவதுமாக அளிப்பதில் மிக்க மனநிறைவு பெறுகிறேன்.
எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பார்வை
பம்பாய், சென்னை ராஜதானி மற்றும் மத்திய மாகாணங்களில் ஆட்சி புரிந்து வந்த பிராமணர்கள் அல்லாத கட்சிகளுக்கு எதிராக எழுதப்பட்டது இந்தக் கட்டுரை. அரசுப் பணிகளில் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு, வகுப்பினருக்கு மட்டும் ஏகபோகம் இருக்கக்கூடாது என்ற தெளிவான குறிக்கோளின் அடிப்படையில்தான் பிராமணர்கள் அல்லாதவர்களின் கட்சிகள் துவங்கப்பட்டன. இந்தியாவில் எல்லா மாகாணங்களிலும் சமஸ்தானத்தில் எல்லாத் துறைகளிலும் அரசுப் பணிகளில் அனேகமாக பிராமணர்களின் ஆதிக்கமே முற்றிலும் ஏகபோகமாக இருந்தது. வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று அறியப்பட்ட கொள்கையைப் பிராமணரல்லாத கட்சியினர் முன்வைத்தனர். அதாவது, குறைந்த தகுதியுடையவர்களை அரசுப் பணிகளில் வேலைக்கு அமர்த்தும்போது பிராமண வகுப்பினரைச் சேர்ந்தவர்களைவிட பிராமணர்கள் அல்லாதவர்களுக்கே அதிக முன்னுரிமை அளிக்க வேண்டுமென்ற கோட்பாடுதான் அது. இந்தக் கொள்கையில் எந்தவிதத் தவறும் இருப்பதாக என் பார்வையில் தெரியவில்லை. ஒரு தனிப்பட்ட வகுப்பினரின் கைப்பிடியில், அந்த வகுப்பினர் எவ்வளவுதான் புத்திசாலிகளாக இருந்தாலும், ஒரு நாட்டின் நிர்வாகத்தையே கொடுப்பது சந்தேகத்துக்கிடமின்றி தவறு என்று கூறலாம்.
ஒரு நல்ல அரசு ஒரு திறமையான அரசைவிடச் சிறந்தது என்ற கருத்தைப் பிராமணர்கள் அல்லாதவர்களின் கட்சி கொண்டிருந்தது. ஆனால், இது சட்டமன்றத்துக்கும் ஆட்சித்துறைக்கும் மட்டுமே உரித்தான கொள்கையாக இருந்துவிடக் கூடாது. மாறாக, அது நிர்வாக விஷயங்களிலும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். நிர்வாகத்தின் மூலமே ஓர் அரசு மக்களுடன் நேரடித் தொடர்பு கொள்கிறது. எந்த ஒரு நிர்வாகமும் அனுதாபத்துடன் செயல்படாவிட்டால் நன்மைகளைச் செய்ய முடியாது. பிராமணர்கள் மட்டுமே பொறுப்பில் இருந்தால் அந்த நிர்வாகம் அனைவரிடமும் அனுதாபத்துடன் செயல்பட முடியாது. மற்ற பொதுமக்களைவிட தன்னை மேன்மையாகக் கருதுபவன் ஒரு பிராமணன்; மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியினர், சூத்திரர்கள் என்று இகழ்பவன், அவர்களுடைய விருப்பங்களுக்கு எதிராகச் செயல்பட்டு, இயற்கையிலேயே தன் வகுப்பினருக்குச் சாதகமாகச் செயல்படுபவன். மக்களின் மீது அக்கறையில்லாததால் ஊழலுக்குப் பலியாகிறவனாக இருக்கும் இப்படிப்பட்ட ஒரு பிராமணன் எப்படிச் சிறந்த நிர்வாகியாக இருக்க முடியும்? மற்ற எந்த அன்னியர்களையும் போலவே அவனும் இந்தியப் பொதுமக்களுக்கு அன்னியனே. இதற்கு மாறாக, சுத்த சுயம்புவான திறமையே எல்லாம் என்ற நிலையைப் பிராமணர்கள் எடுக்கிறார்கள். கல்வியில் அவர்கள் முன்னணியில் இருப்பதன் காரணத்தால் இந்தத் துருப்புச் சீட்டைத்தான் வெற்றிகரமாகப் பயன்படுத்த முடியும் என்பது அவர்களுக்குத் தெரியும். திறமை மட்டுமே அளவுகோலாக இருந்தால், அரசுப் பணிகளை இந்த அளவுக்கு ஏகபோகமாக வைத்திருக்க அவர்களுக்கு வாய்ப்புக் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். திறமைதான் எல்லாவற்றையும்விட மிக முக்கியமானதென்றால் ஒரு ஆங்கிலேயரையோ, பிரெஞ்சு, ஜெர்மன் அல்லது துருக்கி நாட்டவரையோ, வேலைக்கு அமர்த்துவதில் எந்தத் தவறும் இருக்க முடியாது. இது இப்படியென்றால் பிராமணரல்லாத கட்சியினர், திறமை மட்டுமே எல்லாம் என்று மூடத்தனமாக அதைப் பின்பற்றக் கூடாது, அரசுப் பணிகளில் வகுப்புவாரி விகிதாசாரம் புகுத்தப்பட வேண்டும், நிர்வாகத்தில் எல்லா வகுப்பினரின், பிரிவினரின் கூட்டமைப்பும் இருந்தால்தான் அது ஒரு நல்ல நிர்வாகமாக அமையுமென்று அவர்கள் பதவியில் இருந்தபோது எண்ணினர். நிர்வாகத்தில் பிராமண ஆதிக்கத்தை நீக்கும் ஆர்வத்தில் இந்தக் கொள்கையை அமலுக்குக் கொண்டுவருவதில், அரசுப்பணிகளில் பிராமணர்கள் மற்றும் பிராமணர்கள் அல்லாதவர்களிடையே ஒரு சமநிலை ஏற்படுத்தும் முயற்சியில் குறைந்த அளவு திறமை என்ற வரையறைக்கு தங்களை உட்படுத்திக்கொண்டதை அவர்கள் மறந்து விடுகிறார்கள். ஆனால் தங்களுக்கு வழிகாட்டியாக அவர்கள் மேற்கொண்ட கொள்கை பொதுமக்களின் நன்மைக்கு உகந்ததல்ல என்று இதற்கு அர்த்தமல்ல.
இந்தக் கொள்கை பிராமணர்களைப் பெருங்கோபத்திற்குள்ளாக்கியது. அவர்கள் கோபத்தின் உச்சியில் இருந்தனர். பிராமணர்கள் அல்லாத கட்சியினரின் கொள்கையைப் பற்றி டாக்டர் பரஞ்சிபே ஒரு மிகச் சிறந்த நையாண்டிச் சித்திரத்தை வெளியிட்டார். பிராமணர் அல்லாத கட்சியினரின் கொள்கைகளை அது பயங்கரமாக நையாண்டி செய்கிறது. அது வெளிவந்தபோது பல பிராமணரல்லாத தலைவர்கள் சினமுற்றதுடன் மௌனமாகிப் போயினர். டாக்டர் பரஞ்சிபே மீது எனது குற்றச்சாட்டு அதிலுள்ள நகைச்சுவையை அவர் பார்க்க மறுத்ததுதான்.
பிராமணரல்லாதவர்கள் கட்சி புதிதாக ஒன்றையும் செய்துவிடவில்லை. மனு ஸ்மிருதியைத் தலைகீழாக மாற்றினர். அதைத் தங்களுக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டார்கள். மனு சூத்திரர்களுக்கு எந்த இடத்தைக் கொடுத்தாரோ அந்த இடத்தைப் பிராமணர்களுக்குக் கொடுத்தார்கள். ஒருவன் பிராமணன் என்பதற்காகவே மனு அவனுக்குச் சலுகைகள் அளிக்கவில்லையா? சூத்திரர்கள் உரிமைகள் பெறத் தகுதி பெற்றிருந்தும் மனு அந்த உரிமைகளை மறுக்கவில்லையா? இப்பொழுது சூத்திரர்கள் என்பதற்காகவே சில சலுகைகள் அளித்ததால் அதைப் பற்றி, குறை கூற முடியுமா? அது அபத்தமாகத் தோன்றலாம். ஆனால், இந்த விதிக்கு முன் உதாரணம் இல்லாமல் இல்லை. மனு ஸ்மிருதிதான் அந்த உதாரணம். பிராமணர்கள் அல்லாத கட்சியின் மீது யார் கல்லெறிய முடியும்? பிராமணர்கள் பாவம் செய்யாமலிருந்தால் அவர்களால் முடியும். ஆனால் மனு ஸ்மிருதியை உயர்த்திப் பிடிக்கும், வணங்கிப் போற்றும் அவர்கள் பாவிகள் இல்லை என்று சொல்ல முடியுமா? மானவ தர்மத்தின் ஏற்றத் தாழ்வுக் கொள்கைக்கு ஒரு சிறந்த சவுக்கடிதான் டாக்டர் பரஞ்சிபேயின் இந்தக் கட்டுரை. ஒரு சூத்திரனின் நிலையில் ஒரு பிராமணனை வைத்தால் அவன் எப்படி அதை எதிர்கொள்வான் என்பதை இதைவிட எதுவும் படம்பிடித்துக் காட்ட முடியாது.
இந்துக்கள் மட்டுந்தான் ஏற்றத்தாழ்வுக் கொள்கையைக் கொண்டிருந்தனர் என்று கூற முடியாது. மற்ற இடங்களிலும் இது நிலவியிருந்தது. இதுதான் சமுதாயத்தை உயர்ந்தவர்கள் தாழ்ந்தவர்கள் என்றும் சுதந்திரமானவர்கள் அடிமைகள் என்றும் பிளவுபடுத்தியது. டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர்: பேச்சும் எழுத்தும் (நூல் தொகுப்பு: தொகுதி 25) என்ற நூலிலிருந்து.