– சு.அறிவுக்கரசு
ஜாதி இருக்கின்ற தென்பானும் இருக்கின்றானே எனப் பாடினார் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன். ஜாதியை நியாயப்படுத்தியும் அது அழியக் கூடாது, அழிக்கக் கூடாது, அழிக்கும் வகையில் ஜாதி மறுப்புத் திருமணங்கள் நடக்கக் கூடாது என்றெல்லாம் பிதற்றி வருபவர்களும் இருக்கிறார்கள். அடுத்த திங்கள் நடக்கவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் ஜாதிகளைக் காட்டி வாக்கு சேகரிக்கவும் முயற்சி செய்து வருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள ஜாதிகளின் பட்டியலை மய்ய அரசும் மாநில அரசுகளும் தனித்தனியே தயாரித்துப் பேணி வருகிறார்கள். அவரவர்க்குரிய அப்பத்தினைப் பிரித்துத் தருகிறார்கள். அவர்களுக்குத் தரப்படும் சலுகை என்கிறார்கள் ஆட்சியாளரும் ஆதிக்க ஜாதியினரும்! ஆனால் அது அவர்களின் உரிமை என்பதை அறிந்தே வைத்திருக்கின்றனர் மக்கள்.
ஜாதிகளைப் பட்டியல் இனம், பழங்குடி இனம், மிகவும் பிற்படுத்தப்பட்ட இனம், பிற்படுத்தப்பட்ட இனம் என்று பிரித்து வைத்துள்ளனர். இந்தப் பட்டியலில் தங்களைச் சேர்க்க வேண்டும் என்கிற முயற்சியில் பல்வேறு மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையங்களும் மண்டல் ஆணையமும் முயன்று சேகரித்த வகையில் இந்தியாவில் 6,748 ஜாதிகள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளன. இதன் அடிப்படையில் இந்தியத் தலைமை நீதிமன்றம் தன் தீர்ப்பில் 6 பெரு மதங்களும் 6,000க்கும் மேற்பட்ட ஜாதிகளும் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
உள்ளபடியே எத்தனை ஜாதிகள் உள்ளன? இதைத் தெரிந்து கொள்வதற்காக இந்தியாவின் 421 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 3,000 ஆய்வாளர்கள் பங்கு பெற்றனர். 1985 அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கிய ஆய்வு 1992 மார்ச் 31ஆம் நாளில் முடிவடைந்தது. மொத்தம் 26 ஆயிரத்து 510 நாள்கள் ஆய்வு நடந்தது. ஜாதி பற்றிய தகவல்கள் 24 ஆயிரத்து 951 பேர்களிடமிருந்து பெறப்பட்டன. இவர்களுள் 4 ஆயிரத்து 981 பேர் பெண்கள். இவர்கள் தந்த செய்திகள் / தகவல்கள் / தரவுகள் ஒலிநாடாக்களில் பதிவு செய்து பத்திரப்படுத்தப்பட்டுள்ளன.
அதன்படி, இந்தியாவில் 4 ஆயிரத்து 635 ஜாதிகள் உள்ளன. எல்லோரும் ஓர் குலம் எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்று பாடியது சரியா?
இந்தியாவின் 28 மாநிலங்களில் பரவிக் கிடக்கும் ஜாதிகள், இரண்டு மாநிலங்களில் மட்டும் பெரும் எண்ணிக்கையில் உள்ளன. அவை தமிழ்நாடும் ஆந்திராவும்! இது பெருமையா?
இவை இரண்டிலும் 350க்கும் மேற்பட்ட ஜாதிகள் இருக்கின்றன. தமிழ்நாட்டில் 364 ஜாதிகள் உள்ளன. ஒன்றே குலமும் என்ற திருமூலரின் தமிழ்நாட்டுக்கு இது பெருமையளிக்குமா?
வடநாட்டில் உள்ள மாநிலங்களில் சராசரியாக 150 முதல் 250 வரைதான் ஜாதிகள் இருக்கின்றன. மேற்கு வங்காளம், ராஜஸ்தான், அசாம், திரிபுரா, இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், அரியானா, பஞ்சாப் மாநிலங்களில் சராசரியாக 50 முதல் 150 ஜாதிகளே உள்ளன. யாவரும் கேளிர் என்ற தமிழன் வெட்கப்பட வேண்டும்!
தமிழ்நாட்டின் 364 ஜாதிகளில் 209 ஜாதியினர் தமிழ் பேசுபவர்கள். தெலுகு மொழியை 70 ஜாதியினர் பேசுகின்றனர். 25 ஜாதியினர் கன்னட மொழிக்காரர்கள். மலையாளம் பேசுவோர் 21 ஜாதியினர். படக மொழிக்காரர்கள் 4 ஜாதியினர். மீதிப்பேர் கொங்கணி, துளு பேசும் ஜாதிக்காரர்கள். 15 ஜாதிக்காரர்களின் மொழி உருது. 5 ஜாதியினரின் மொழி குஜராத்தி. மராத்தி, மார்வாரி, பஞ்சாபி, சவுராட்டிரா போன்ற பல மொழிக்காரர்கள் 32 ஜாதிக்காரர்களாக உள்ளனர். இப்படிப் பிற மொழிபேசும் 155 ஜாதிக்காரர்கள் தமிழ்நாட்டில் உள்ளனர்!
தமிழ்நாட்டின் 364 ஜாதிகளில் 299 ஜாதிகள் இந்து மதத்தவர். இந்திய நாட்டளவில் இந்துக்கள் 76.35 விழுக்காடு. தமிழ்நாட்டில் இந்துக்கள் 82.14 விழுக்காடு. கிறித்துவர்கள் 65 ஜாதிகளாகப் பிரிந்திருக்கின்றனர். ஒரே மேய்ப்பன் என கிறித்துவை ஏற்றவர்கள் ஒரே மந்தை என்று ஒன்றாக இல்லை. 65 ஜாதிகளாகப் பிரிந்து மேய்கின்றனர். இது ஆட்டிடையன் (கிறித்து-_மதம்) தவறா? மந்தை ஆடுகளின் முந்தைய மதமான இந்து மதத்தின் தாக்கம் என்பதாலா? ஆயர்கள் விடைகாண வேண்டும்!
இந்திய அளவில் கிறித்துவர்கள் 7.31 விழுக்காடு. தமிழ்நாட்டில் 17.86 விழுக்காடு. அதேநேரத்தில் இசுலாமியர்கள் 6.32 விழுக்காடு தமிழ்நாட்டில்! இந்தியாவில் 12.60 விழுக்காடு. இந்து முன்னணியினர் கவனத்திற்காக! இசுலாத்தில் 23 ஜாதிகள் உள்ளன.
ஜாதிகூட நேரத்திற்கு நேரம் மாறுகிறதாம்! அதிர்ச்சி அடைய வேண்டா! காலையிலும் மாலையிலும் ஒரு ஜாதியாக இருப்பவர்கள் நண்பகல் நேரத்தில் மட்டும் வேறு ஜாதியாக மாறிவிடும் கோலமும் உண்டு! இப்போக்கு பார்ப்பனர்களிடம் உண்டு. திருவாருரில் உள்ள பார்ப்பனர்களிடம் உண்டு. இதற்கும் ஒரு கதைகட்டி வைத்திருக்கிறார்கள்! பார்ப்போமா!
திருவாரூர்க் கோவிலின் உள்ளே யாகம் நடக்கிறது. ஒரு பறையன் (எனப்படும் ஜாதிக்காரர்) செத்த கன்றுக்குட்டியைத் தோளில் போட்டுக்கொண்டு யாகம் நடக்கும் இடத்தருகே போனார். பார்த்துவிட்ட பார்ப்பனர் பதறித்துடித்து அவருடைய ஜாதியைச் சொல்லிக் கத்தினர். யாகம் நடக்கும் இடத்தை விட்டுவிட்டு ஓடினர்.
கன்றுக்குட்டியைத் தூக்கிக் கொண்டு வந்தவருக்கு வந்ததே கோபம்! மூன்றாம் கண்ணில் கோபம் கொப்பளித்தது! ஆம், அவர் பரமசிவன்! நீங்களெல்லாம் பறையனாகப் போகக்கடவது! என்று சாபம் இட்டுவிட்டார். பார்ப்பனர் பதைத்தனர். பரமசிவனைப் பறையர் எனக்கூறி விட்டோமே என்பதற்காக அல்ல! தங்களைப் பறையர்களாக்கி விட்டாரே, உயர்ஜாதி அந்தஸ்து போய்விட்டதே என்று அலறினர். போனால் போகிறது என்று பரமசிவன் பார்ப்பனர்களுக்குத் தற்காலிக சாந்தி அளித்தார். நண்பகலில் முதல் நாழிகை மட்டும் நீங்கள் பறையர்கள், மீதி நேரங்களில் பார்ப்பனர்கள் என்று திருத்தப்பட்ட சாபம் கொடுத்தாராம். அதனால் திருவாரூர்ப் பார்ப்பனர்கள், நண்பகலில் ஒருமுறை குளித்துவிட்டுத்தான் கோயிலுக்கு வருகிறார்கள் என்கிறார் பேரா. தொ.பரமசிவன். (பண்பாட்டு அசைவுகள்)
திருவாரூர்ப் பார்ப்பனர்கள் இந்தச் சாபத்தால், மத்தியானப் பறையர்கள் என்று அழைக்கப்படுகிறார்களாம்! 1,886 பார்ப்பனப் பிரிவுகளில் இதுவும் ஒன்றா? தாம்பிராஸ் தான் கூறவேண்டும்.
சடங்குகள் (திவசம்) செய்துவைக்க, மற்றவர் வீடுகளுக்கு வரும் பார்ப்பனர்கள் உயர் ரகமாம். புனித ஊர்களில் (கயை, காசி, ராமேசுவரம் போன்ற) இருந்து கொண்டு ஆறு, குளக்கரைகளில் அதையே செய்பவர்கள் தாழ்ந்தவர்களாம். கல்யாணப் புரோகிதம் செய்பவன் உயர்ந்தவனாகவும் கருமாதிப் புரோகிதம் செய்பவன் தாழ்ந்தவனாகவும் பாகுபாடு உள்ளது. உழக்கிலும் கிழக்கு மேற்கோ?
சாஸ்வத், காஷ்மீர், வங்காளப் பார்ப்பனர்கள் மீன், இறைச்சி உண்பவர்கள். இவர்கள் எந்த ரகம்? இவர்களைப் பஞ்ச கவுடர் என்று கூறுகிறார்கள்! இறைச்சி உண்ணாதவர்கள் பஞ்ச திராவிடர்களாம்! மது அருந்தி, புகை பிடித்து, வேறு ஜாதிப் பெண்களுடன் வாழ்பவர்கள் என்ன ஜாதி? தாம்பிராஸ் விளக்கினால் விளங்கிக் கொள்ளலாம்!
மக்களாட்சி முறையும் குடவோலைத் தேர்தல் முறையும் தமிழ்நாட்டில் சிறந்து விளங்கியதாகக் கதைக்கிறார்கள். அந்த முறை பார்ப்பனர்க்குத் தானமாக, வரி இல்லாத கிராமமாக, சோழ மன்னர்களால் பிரமதேயமாக வழங்கப்பட்ட ஊர்களில் மட்டும் நடத்தப்பட்டது என்பதைத் தமிழ்த் தேசியர்கள் பேசுவது கிடையாது. இத்தகைய ஊர்களில் இருந்த பார்ப்பனச் சேரிகளில் வசித்த பார்ப்பனக் குடும்புகளில் மட்டும்தான் இம்முறை இருந்தது. பார்ப்பனர் அல்லாதார் கலந்துகொள்ள முடியாத, கலந்து கொள்ளக்கூடாத தேர்தல் இது. தேர்தல் என்ற பொருளில் ஆளக்கூடாத திருஉளச் சீட்டு முறை அல்லது குலுக்கல் சீட்டு முறை மட்டுமே! இதற்குத் தமிழ்த் தேசியர்கள் தக்க விளக்கம் தரட்டும்!
கோவில்களில் வழிபாட்டுக்குரிய முறைகள் பற்றிக் கூறுவதாகக் குறிப்பிடப்படும் ஆகமம் வடமொழியிலிருந்து தமிழாக்கித் தந்ததே சுந்தரநாதன் எனும் பார்ப்பனர். இவர் ஆக்கித் தந்த நூல் திருமந்திரம். ஆம், இவர்தான் திருமந்திரம் தந்த திருமூலர். சுந்தரநாதன் திருமூலராக ஆகியது ஒரு கதை. மூலன் எனும் சூத்திரனின் உடலில் புகுந்து திருமந்திரத்தை எழுதினார் எனக் கதைகட்டிவிட்டனர். திருவள்ளுவ நாயனார் ஆதிக்கும் பகவனுக்கும் பிறந்த பாதிப் பார்ப்பனர் என்பது போன்ற புனைகதை. மூலனே எழுதியது என்பதை ஏற்றுக் கொள்ளச் சகிக்காத வைதீகம், இதிலும் பார்ப்பனரைப் புகுத்தி மூலனின் சிறப்பைக் களவாடி விட்டனர். ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் பேசுபவர்கள் இதற்குத் தரும் விளக்கம் தெரிந்து தெளிவு பெற வேண்டும்.
ராஜராஜசோழன் தொட்டு, பல சோழ மன்னர்களும் பார்ப்பனர்களின் பாதந்தாங்கிகளாக இருந்தனர் என்பது வரலாறு. அதிலும் வடக்கே இருந்து வரவழைக்கப்பட்ட பார்ப்பனர்கள் சமயத் துறையில் செலுத்திய ஆதிக்கம் தாங்கமுடியாமல் சூத்திரர்கள் தமக்கென மடங்கள் அமைத்து அவர்களின் சமயப் பற்றை வெளிப்படுத்தி வளர்த்து வந்த நிலை அதனைப் பெறாத பார்ப்பனர்கள் அத்தகு மடங்களை எதிர்த்துக் கலகங்கள் செய்துள்ளனர். இதனை குகையிடிக் கலகங்கள் என்று சைவச் சீலர் தெ.பொ.மீனாட்சி சுந்தரம் போன்றவர்களே ஆய்ந்து அறிவித்துள்ளனர். பார்ப்பனரும் தமிழரே எனும் தமிழ்த்தேசியத் திருமேனிகள் குகையிடிக் கலகக்காரப் பார்ப்பனர்களை ஏற்கிறார்களா?
அந்தக் குகையிடிக் கலகம் இன்றளவும் தொடர்கிறதே! தென் தமிழ்நாட்டு இளைஞர்கள் சரியான வேலை வாய்ப்புகள் இல்லாமல் இருக்கிற நிலையை மாற்றிட உருவாக்கிய திட்டம்தான் சேதுக்கால்வாய்த் திட்டம்! ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவு செய்து திட்டம் நடைபெற்று வந்த நிலையில் ஆறு பார்ப்பனர்கள் வழக்குப்போட்டு முடக்கி விட்டனரே! (ராமேசுவரம் வக்கீல்) குப்புராம்(இவரைத்தான் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜ.க.வேட்பாளராக சங் பரிவார் நிறுத்தியுள்ளது) (இந்து முன்னணி) ராமகோபாலன், (சோழவந்தான்) சு.சாமி, (வி.எச்.பி.) அசோக் சிங்கால், (ராமன் கோவில் கட்டும் குழு) வேதாந்தி, அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா ஆகியோர் அந்த ஆறுபேர்கள்! குகையிடிக் கலகக்காரர்கள்! மத்திய அரசின் ஆராய்ச்சி அமைப்பான நீரி(NEERI)க்கு மாற்றான கருத்தை எழுதிக் கொடுத்த பச்சோரி என்பவரும் இதில் இணையும் ஏழாவது பார்ப்பனர். இவர்கள் அத்தனைப் பேரும் 20ஆம் நூற்றாண்டு குகையிடிக் கலகக்காரப் பார்ப்பனர்களாக விளங்குகின்றனர். தமிழ்த் தேசியர்கள் இதுபற்றி வாயைத் திறப்பதே இல்லையே! அவ்வளவு பயம்!
ஜாதிப் பிரிப்புகள், பார்ப்பனர்க்கு மேலாதிக்க உரிமைகள், அவற்றால் ஏற்பட்ட அட்டூழியங்கள் போன்ற கட்டமைப்புகள் மீது போர் தொடுத்துத் தமிழனை, விடுதலை உணர்வு கொண்ட மானமுள்ள மனிதனாக மீட்டெடுக்கச் சமர் புரிந்த ஒரே தலைவர் தந்தை பெரியார் மட்டுமே! மூலன் உடலில் சுந்தரநாதன்கள் புகுந்தது போன்றவை தம் காலத்திலும் நடைபெறாவண்ணம் தடுப்பதற்காகத்தான் தலைவர் பெரியார் நம்மைத் திராவிடர் என்று அடையாளம் காட்டினார். மானத்தையும் அறிவையும் ஊட்டினார். திருந்தாதவர்கள் திருந்தட்டும்!
Leave a Reply