தற்போது இலங்கையில் மின்சாரம், தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியத் தேவைகள் விலை உயர்ந்துள்ளன. உண்மையான பொருளாதார வளர்ச்சி நடைபெறவே இல்லை. போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களின் நிலை படுமோசமாக உள்ளது. அதிலும் வன்னி போன்ற பகுதிகளில் வாழும் பெண்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். பல கிராமங்களில் 80 சதவிகித பெண்களே உள்ளனர். அவர்களுக்கென வாழ்வாதாரம் குறித்து அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மனித உரிமை சபைக்கு வந்திருக்க வேண்டிய அய்.நா.வின் வல்லுநர்கள் அறிக்கையை அய்.நா. செயலாளர் சமர்ப்பிக்கவே இல்லை. அய்.நா. இப்படிச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. உலக அளவில் மனித விவகாரங்களைப் பேச அய்.நா.வின் மனித உரிமை சபை மட்டுமே இருக்கிறது என்ற நிலையில் அது செயலூக்கம் உள்ளதாக இருக்க வேண்டும். அரசுகள் கையில் மனித உரிமை சபையின் செயல்பாடுகளை முடக்கிவிடக் கூடாது.
– நிமல்கா பெர்னாண்டோ,
இலங்கை மனித உரிமைப் போராளி
மனித உரிமை ஆணையத்தின் ஒப்புதலின் பேரில் இலங்கைமீது சர்வதேச விசாரணை நடத்த ஆணையர் அலுவலகத்தால் முடியும். மனித உரிமை மீறல் தொடர்பான புகாரின்பேரில் அந்நாட்டில் விசாரணை மேற்கொள்ள எனக்கு அதிகாரம் உள்ளது.
– நவநீதம் (பிள்ளை), அய்.நா. மனித உரிமை அமைப்பின் ஆணையர்
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துவிட்டதால் பள்ளிகளிலேயே தற்காப்புக் கலைகளைக் கற்றுக்கொடுப்பது அவசியம். வீட்டில் உள்ளவர்களையும் வீட்டுக் காரியங்களையும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்ளும் பெண்கள் பலர் தங்கள் உடல் நலனில் அக்கறை செலுத்துவதில்லை. பெண்களுக்குச் சுயமாக முடிவெடுக்கும் திறன் வேண்டும். இந்தத் திறனே அவர்கள் வாழ்க்கையை நிர்ணயிக்கிறது.
– டாக்டர் சாந்தா,
சென்னை அடையாறு புற்றுநோய் மய்யத் தலைவர்.