Unmai Magazine Subscription - உண்மை இதழ் உங்கள் முகவரி தேடி வார சந்தா செலுத்துங்கள்..

மகாபாரதமா/ மாபாதகமா? – கவிஞர் கலி.பூங்குன்றன்

அ.இ.அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழ்நாடு முதல் அமைச்சருமான செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களின் 66ஆம் ஆண்டு பிறந்த நாள் என்று சொல்லி, தமிழ், ஆங்கில ஏடுகளுக்கெல்லாம் பக்கம் பக்கமாக விளம்பரங்கள் அள்ளிக் கொட்டப்பட்டுள்ளன. பணத்தைத் தண்ணீராக வாரி இறைப்பதுபற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோம். அம்மையார் விடயத்தில் அதனை நேரிடையாகப் பார்க்க முடிந்தது; அது எப்படியோ போகட்டும்!

தினமணி பல பக்கங்களில் பளபளக்கும் தாளில் இணைப்பு ஒன்றையும் வெளியிட்டுள்ளது. அதில் ஒரு செய்தி, மக்கள் குறிப்பாக திராவிடர் இயக்கச் சிந்தனையாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று.

எனக்குப் பிடித்த இலக்கிய நூல் மகாபாரதம். காரணம், அது வெறும் இலக்கியப் படைப்பு அல்ல; வாழ்க்கை முறையினை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டுமென்று உணர்த்தும், வழிகாட்டும் அருள்வாக்கு.

பண்பாடு, கலாச்சாரம், சமூகவியல், அரசியல், யுத்த சாஸ்திரம் உள்பட அனைத்து சாஸ்திர அம்சங்களையும் உள்ளடக்கிய முழுமையான வாழ்க்கைக்குத் தேவையான பொக்கிஷம் அது _ என்று ஜெயலலிதா தெரிவித்துள்ள கருத்தாக தினமணி வெளியிட்டு அழகு பார்க்கிறது.

எந்த வகையிலும் இந்த அம்மையார் திராவிடர் இயக்கத்துக்குத் தொடர்புடையவர் அல்லர் என்பதைவிட _ திராவிடர் இயக்கச் சிந்தனைக்கும் தத்துவத்திற்கும் நேரிடையான எதிரான நிலைப்பாடு உடையவர் என்பதற்கு இது ஒன்றுகூடப் போதுமானதுதான்.

இராமாயணம், மகாபாரதம் என்னும் இரண்டு இதிகாசங்களும் ஆரியர் பரவிய பருவங்களை வெகு தெளிவாகக் குறிப்பிடுகின்றன.  மகாபாரதம், கங்கைச் சமவெளியில் ஆரியர்கள் பரவியதையும், இராமாயணம் தென்னிந்தியாவை அவர்கள் கைப்பற்றியதையும் உணர்த்துகின்றன

(முன்பு கல்வி அமைச்சராகவிருந்த ஜே.வர்க்கி எம்.ஏ. எழுதிய இந்திய ஜாதிப் பாகுபாடு என்னும் நூலின் பக்கம் 15)

பாரதத்தில் இடும்பி என்ற ஓர் ஆரியரல்லாத பெண்மணியைப் பற்றி எழுதிய பார்ப்பனக் கவி தனக்குள்ள ஜாதி துவேஷத்தால் ராட்சசி என்று எழுதி இருக்கிறான். இராட்சதன் என்ற பயங்கரப் புரளி வார்த்தை வைதீகப் பார்ப்பனரின் மூளையில் தோன்றிய கற்பனையாகும்

(நாகேந்திர கோஷ் பி.ஏ., பி.எல். எழுதிய இந்திய ஆரியரின் இலக்கியமும், கலையும்  எனும் நூல் _ பக்கம் 194)

வரலாற்றாளர்கள் இந்தப் பாரதத்தின் வண்டவாளத்தை வட்டியும் முதலுமாகச் சேர்த்து வண்டி வண்டியாக ஏற்றியிருக்க திராவிடத்தையும் அண்ணாவையும் கட்சியில் முத்திரையாகப் பொறித்து, அதேநேரத்தில் அவர்களின் அடிப்படைக்கே  வேட்டு வைக்கும் விபரீத வேலையில் இறங்கியுள்ளார் அம்மையார் ஜெயலலிதா என்பதை நம் மக்கள் உணரும் அந்தத் தருணத்திலேயே அவரின் அடையாளம் தெரிந்துவிடாதா?

ஆரியம் ஊடுருவினால் அதன் ஆபத்து அடிவேர்வரை சென்றுவிடும் என்பதுதான் புரியாதா?

வெறும் இலக்கியம் மட்டுமல்லவாம் மகாபாரதம். வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ள வேண்டும் என்கிற அருள்வாக்கு. பண்பாடும், சமூக இயலும் கொட்டிக்கிடக்கிறதாம்!

அப்படி என்ன வாழ்க்கைத் தத்துவம் குவிந்து கிடக்கிறது? பெரும்புலவர் ச.சீனிவாசன் சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் தெரிவித்த கருத்துதான் (20.6.2002) நினைவிற்கு வருகிறது.

திரவுபதை கர்ணன் மீது ஆசைப்பட்டது ஏன்? அதற்கான காரணத்தையும் அவரே சொல்லி விடுகிறார்.

1. தருமன் _ சதா வேதாந்தம் படிப்பவன்

2.    பீமன் _ உடல் பெரியவன், குண்டன், சாப்பிட்டுக் கொண்டே இருப்பவன்.

3.    அர்ச்சுனன் _ ஏகப்பட்ட மனைவிகள் (ஆற்று மணலை எண்ணினாலும் அர்ச்சுனன் மனைவியரை எண்ண முடியாதாம்!)

4.    நகுலன், 5. சகாதேவன் _ எனது பிள்ளைகள் மாதிரி.
எனவே கர்ணன் மீது எனக்கு ஆசை என்கிறாள் திரவுபதை.

இதுதான் பாரதத்தின் கதாநாயகி நாட்டு மக்களுக்குத் தரும் அருள்வாக்கா? வழிகாட்டும் நெறிமுறையா? அம்மையாருக்குத்தான் வெளிச்சம்.

இந்து ஏட்டில் ஆசிரியருக்குக் கடிதம் ஒன்று வெளிவந்தது. (17.12.1988)

அந்தக் கடிதத்தை எழுதியவர் சென்னையைச் சேர்ந்த வி.ஆர்.சுந்தரம். என்ன எழுதியுள்ளார்?

தர்மபுத்திர (யுத்திஸ்த்ரா), வாயுபுத்திரா (பீமர்) ஆசியோடு குந்திக்கு தர்மர் முதலியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது உடனே குழந்தைகள் அந்தப் பிறப்புப் பற்றி சில கேள்விகளைக் கேட்கிறார்கள். அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

எனவே அதுபற்றியெல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக்கூடாது. பெற்றோர்களால் பதில் சொல்ல முடியாது. இப்பொழுது மேலும் தொடர்கள் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன.

பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, துரவுபதையைத் துகிலுரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன. இவைகளைக் குழந்தைகளை வைத்துக்கொண்டு எப்படிப் பார்க்க முடியும்? என்கிறது அந்தக் கடிதம்.

திரவுபதை என்னவென்றால், தனக்கு 5 கணவன் போதாது; ஆறாவது கணவன் கர்ணனுக்கு கண்ணடித்தாள். பாரதத்தின் முக்கிய கதாப்பாத்திரங்களுள் ஒருவனாகிய அர்ச்சுனன் எப்படிப்பட்டவன் என்றால், ஆற்று மணலை எண்ணினாலும் அவனின் மனைவியர்களை எண்ண முடியாதாம்!

இத்தகு நூல்தான் சிறந்த இலக்கியமா? வாழ்வியல் நூலா? செல்வி ஜெயலலிதா அவர்கள் சீர்தூக்கிச் சொல்லட்டும் பார்க்கலாம்!

மகாபாரதத்தின் இணைப்பாகிய கீதையோ பெண்களைப் பாவயோனியில் பிறந்தவர்கள் என்று அசிங்கப்படுத்துகிறது. (கீதை: அத்தியாயம் 9, சுலோகம் 32)

தாயைப் போற்றும் தமிழ்த் தரணியில் அந்தத் தாய்க்குலத்தை ஒரு தறுதலைபோல ஆபாசக் கண்கொண்டு அடையாளப்படுத்தும் கீதைக்கு ஒரு பெண்ணே வாழ்த்துப்பா பாடலாமா?

போர்க்களத்திலே நிற்கும் அர்ச்சுனன் தன் எதிரில் நிற்கும் உற்றார் உறவினர்களை அழிப்பதற்குத் தயங்குகிறான். அதற்கு அவன் கூறும் பதில் விசித்திரமானது.

நான் எனக்கு முன்னே எனது சகோதரர்களையும், சுற்றத்தாரையும், மாமன் மைத்துனர்களையும், சித்தப்பன் பெரியப்பன்மார்களையும் அவர்களுடைய எனது பிள்ளைகளையும், முன்னோர்களையும், பாட்டன்மார்களையும் எனது உறவின் முறையினரையும் காண்கிறேன்.

அவர்களையெல்லாம் கொல்லுவதானால் நமது குலத்தையே அழிப்பதாகும். அவ்வாறு அழிப்பது என்றால் நம்முடைய பண்டைய குலதர்மம் அழிந்துவிடும். இந்தத் தவறைச் செய்பவர்கள் நரகத்திற்குத்தான் போவார்கள் _என்று கூறுகிறானே அர்ச்சுனன்.

தனது சுற்றத்தாரை அழிப்பதுபற்றி ஆதங்கப்படுகிறான் _ அதுவரை சரி. அடுத்து அவன் வாயிலிருந்து வந்து விழும் வார்த்தைகள் என்ன?

நமது பண்டைய குலதர்மம் அழிந்துவிடும் என்று அலறுகிறானே… அதன் பொருள் என்ன? போரில் ஆண்கள் கொல்லப்பட்டால், அவர்தம் மனைவிகள் விதவையாவார்கள். வேறு கல்யாணம் செய்ய நேரிடும்போது வேறு ஜாதி ஆடவர்களை மணக்க வேண்டிய சூழல் ஏற்படும்.

அதனால் குலதர்மம், ஜாதி தர்மம் குலைந்து போய்விடும் என்ற குறிக்கோள் அல்லவா அதில் குடிகொண்டிருக்கிறது. இந்த மனுதர்மம்தான் அம்மையார் ஜெயலலிதா கூறும் அரசியல் யுத்த சாஸ்திரமா?

ஏகலைவன் கதைதான் என்ன? துரோணாச்சாரி ஏகலைவனின் கட்டை விரலை ஏன் காணிக்கையாகக் கேட்டான்? வருண ஜாதிவெறி தானே இதன் மூலக் காரணம்?

திராவிடம் பேசினாலும் அய்யா, அண்ணா பெயர்களை உச்சரித்தாலும் அம்மையாரின் அடிமனத்தில் ஆழப் பதிந்திருக்கும் வேர் ஆரியத்தின் வர்ணாசிரமம்தானே!

ஆரிய ஊடுருவலின் ஆழத்தை நம் மக்கள் தெரிந்துகொள்வது ஒருபுறம் இருக்கட்டும்; முதலில் திராவிட இயக்கத் தீரர்கள் தெரிந்துகொள்ள வேண்டாமா?

ஆரியம் நடமாடும் நாசம்; திராவிடத் தோழா வேண்டாம் அதனிடம் பாசம்; அதனால் வருமே அந்தக் காசம்! _  அறிஞர் அண்ணா (நூல்: ஆரிய மாயை)

 


 

பெரியார் பார்வையில்

பாண்டவர்கள் சூரியன், யமன், வாயு, இந்திரன், அஸ்வினி, தேவர்கள் முதலியவர்களுக்குப் பிறந்ததாகக் கூறப்படுகின்றது. இவர்கள் எந்த உலகத்தில் இருப்பவர்கள்? பாண்டவர்கள் பிறப்புக் கதையோ, பராசரன் மகன் வியாசன்; வியாசன் பேரன்மார்கள் பாண்டவர்கள் என்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பராசரன் வசிஷ்டன் பேரன்; வசிஷ்டன் பிரமன் மகன், வசிஷ்டன் பறைச்சியை மணந்து (அந்தக் காலத்தில் பறைச்சி, பறை ஜாதி இருந்ததா?) கொண்டான் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. (விரிக்கின் பெருகும்.) இவைகளையெல்லாம் நம்பினால்தானே பாரதக் கதையை நம்ப முடியும்?

பராசரன் மகன் வியாசன் என்றால் மச்சகந்தி கதையை நம்ப வேண்டும்.

வியாசன் எழுதியது பாரதம் என்றால் வியாசன் சொல்லக் கணபதி எழுதினான் என்பதை நம்ப வேண்டும்.

கணபதியை நம்ப வேண்டுமானால் கணபதி பிறப்புக் கதையை நம்ப வேண்டும்.

இவ்வளவையும் நம்பினால்தான் பாரதம்; பாரதத்தை நம்பினால்தான் கிருஷ்ணன்; கிருஷ்ணனை நம்பினால்தான் கீதை முதலியவை மெய்யாக வேண்டும்? மற்றும், தமிழர்களின் இலக்கியங்களான குறள் முதல் எல்லா இலக்கியங்களிலும் மேற்கண்ட இராமாயணம், பாரதம் முதலிய கதைகள் புகுத்தப்பட்டிருக்கின்றனவே!

இவை மாத்திரமல்லாமல், இன்று சைவர், வைணவர் என்று சொல்லிக் கொள்ளுகிற தமிழர் எல்லோராலும்,  தமிழ் மறை என்று பாராட்டி ஸ்தோத்திரம் செய்யப்படுகிற தேவாரம், திருவாசகம், பிரபந்தம் முதலிய யாவும் பெரிதும் மேற்கண்ட இராமாயணம், பாரதம் முதலிய கதைகளில் சம்பந்தப்பட்ட கதாநாயகர்களையும் அவர்கள் செய்கைகளையும், நடப்புகளையும் பற்றிக் குறிப்பிட்டுப் பாடப்பட்ட பாடல்களாகத்தானே இருக்கின்றன?

இந்த நிலையில் நாம் எப்படி நம்மைச் சூத்திரர்கள் அல்ல என்று சொல்லிக்கொள்ள முடியும்?

நம் புலவர்களால் நமது சமுதாயத்திற்கு இதுவரை ஏற்பட்ட பயன் என்ன? வையாபுரி பிள்ளை, சேதுப்பிள்ளை, வரதராஜன், மீனாட்சிசுந்தரம் பிள்ளை, ஏ.சி.செட்டியார் மற்றும் மறைமலை அடிகள் முதலிய எவ்வளவோ பெரும் புலவர்களும், வித்தகர்களும் இருந்தும் நம் சமுதாயத்திற்கு எந்தச் சிறு முன்னேற்றமும் நன்மையும் ஏற்படவில்லையே!

– (தந்தை பெரியார், விடுதலை 21.1.1969)

 


 

 

புகழ்பெற்ற வரலாற்று அறிஞர் ஆர்.எஸ்.சர்மா முடிவு

மகாபாரத காலத்தில் கிருஷ்ணன் வாழ்ந்ததற்கு ஆதாரம் இல்லை என 90 வயது கடந்தவரும், பல வரலாற்று நூல் எழுதியவருமான பேராசிரியர் ராம் சரண் சர்மா எழுதியுள்ளார்.

இதிகாச காலம் உண்மையா?

11_ஆவது வகுப்புக்கான என்.சி.ஆர்.டி. வெளியிட்டுள்ள தொன்மை இந்திய வரலாறு (ஏன்சியன்ட் இண்டியன் ஹிஸ்டரி) எனும் நூலை எழுதியவர் ராம் சரண் சர்மா (ஆர்.எஸ்.சர்மா) அந்த நூலில், கிருஷ்ணன் மகாபாரதத்தில முக்கியப் பங்கு ஆற்றியதாக இருந்தாலும், மதுரா நகரில் கி.மு.200 முதல் கி.பி.200 வரை கிடைக்கப்பெறும் சிற்பத் துண்டுகள், கிருஷ்ணன்பற்றிய தகவலைத் தரவில்லை. இதன் காரணமாக, ராமாயணம் மற்றும் மகாபாரதம் ஆகியவற்றின் அடிப்படையில் இதிகாச காலம் எனும் கருத்தைப் பற்றிப் பேசுவதைக் கைவிடவேண்டும் என எழுதப்பட்டிருக்கிறது.

அயோத்தி ராமன்

அயோத்தியாவைப் பற்றியும், ஆர்.எஸ்.சர்மாவின் நூல் ஓர் ஆய்வு முடிவைத் தருகிறது. புராணங்களில், மிக நீண்ட குடும்பக் கால்வழி கூறப்படுகிறது. ஆனால், அவை கூறும் குடும்பக் கால்வழியை விட அகழ்வு ஆய்வு வெளிப்படுத்தும் தடயங்களையே ஏற்றுக்கொள்ள வேண்டும். புராண மரபுப்படி அயோத்தியில் ராமன் கி.மு.2000_இல் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், அயோத்தியில் விரிவான அளவில் தோண்டிப் பார்த்து, ஆய்வு நடத்திய பின்பு, அந்தக் காலத்தில் அங்கு மக்கள் வாழ்ந்ததாகவே தெரியவில்லை என்று ஆர்.எஸ்.சர்மாவின் தொன்மை வரலாறு எனும் நூல் கூறுகிறது.