– நாஞ்சில் கி.மனோகரன்
அடங்காப்பிடாரி! போகிற போக்கைப் பார்! கொஞ்சமாவது மானம் ஈனமிருக்கிறதா? தறுதலை!
பேச்சைப் பார்!… குறும்புக்காரி! எதற்கெடுத்தாலும் வாதிடுகிறாள்! அடக்கமற்றவள்! துடுக்குக்காரி!
நடக்கிற நடையைப் பார்! அடேயப்பா! தலை வானத்தையே இடித்துத் தூளாக்கிவிடும் போலிருக்கே! பெண்ணுக்கேற்ற பண்பே அற்ற பேய்!
சேரிக்குப் போகிறாள்; சாக்கடையிலே புரளும் குழந்தைகளைத் தோளிலே தூக்கிப் போட்டுக் கொள்ளுகிறாள்; அங்கேயேகூடச் சாப்பிடுகிறாள்! செச்சே! சமூகத்திற்கே லாயக்கற்றவள்!
படித்ததனாலே வந்த கேடு இது! அவளைச் சொல்ல என்ன இருக்கிறது! காதகி… கல்லூரியிலே படித்த தோஷம்! தடித்த தோல்! உள்ளமோ கடுகத்தனை!
ஊருக்கு உபதேசம் செய்ய வந்து விட்டாளாம் ஊதாரி!… இவளை முதலிலே திருத்திக் கொள்ளட்டும்! நாலு பெண்களைப்போல மஞ்சள் குளித்து, குங்குமம் தொட்டு, அடங்கி ஒடுங்கி, வீட்டிலே அடைபட்டுக் கிடக்கக்கூடாதோ? பெண்கள் வீட்டிலே இருப்பதுவரைதான் சிறப்பு! வெளியே வந்துவிட்டாலே போச்சு; அத்தனையும் போச்சு!
சடையைப் பார், சதிராடுகிறது! நடையைப் பார், குதிரை மாதிரி! உடையைப் பார், உள்ளெல்லாம் தெரிகிறது! என்ன கொடுமை அய்யா இது! இவளுக்கு நல்ல படிப்பினைக் கொடுக்க வேண்டும் _ இல்லாவிட்டால் இந்த ஊர் மானமே காற்றிலே பறந்துவிடும்!
– மேலே பொறித்திருப்பவைகள், தோழியர் சந்திராவுக்குச் சமுதாயத்தின் ஒரு பகுதி வழங்கிய வாழ்த்துரை!
அவள் படிப்பை முடித்துவிட்டுப் புரையோடிப்போன சமூகத்தைத் திருத்திச் செப்பனிடத் தன்னை ஒப்புவித்தாள்.
சேரி _ நகரத்தைக் களங்கப்படுத்தும் அந்தப் பகுதி _ வாழ்வின் ஆதாரத்திலே பற்றிய புற்றுநோய் எனத் துணிந்தாள்!
அழுக்கு _ அதன் அபாயத்தை எடுத்துச் சொல்லி, புற அழுக்கைவிட மன அழுக்கு உருவாக்கும் ஆபத்தை விளக்கிக் கூறுவாள்.
முடைநாற்றச் சுடுகாடாக உருமாறிவிட்ட சமுதாயத்திற்கு உணர்ச்சிமிக்க பகுத்தறிவுக் கருத்துகளைக் கூறித் திருத்துவாள். அம்மை நோயால் அவதிப்படும்போது, மாரியம்மனை அழைப்பதை நிறுத்தினாள்; மருத்துவர் வரவழைக்கப்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினாள்.
காலணாவுக்கும் காளிக்கும் இருந்த நேரடித் தொடர்பைத் துண்டித்தாள்.
பரிகாரத்திற்கு காளிகோயில் பக்கம் திரும்பிய கண்களை ஆஸ்பத்திரிப் பக்கம் திருப்பினாள்.
இழிந்தவர்கள் நாம் எனும் மனப்பான்மையைச் சிறுகச் சிறுக அந்தப் பகுதியிலே மாற்றினாள்.
சந்திரா, இப்போது சேரிவாழ் மக்களின் இதய பீடத்தில் இடம் பிடித்துக் கொண்டவள்!
அந்தப் பகுதியைப் பாழாக்கி வந்த மதுவரக்கனை அறவே விரட்டினாள். ஒரு நாள் மக்கள் அனைவரையும் திரட்டி, மதுவரக்கனைப்போல் பிரம்மாண்டமான உருவம் ஒன்றைச் செய்து, நடுத்தெருவிலே நிறுத்தி வைத்து, முதன்முதலில் தீயிட்டாள். அந்தச் சேரியின் ஒவ்வொரு மனிதரும் அதற்கு எண்ணெய் வார்த்தனர்!
சந்திராவின் சேவை சர்க்காரின் சிரமத்தைக் குறைத்தது. ஆட்சியாளர்கள் பாராட்டினர்; அதிகாரிகள் வரவேற்றனர். சந்திரா பாராட்டைப் பெற்றாள்; பதக்கம்கூட பெற்றாள்.
அந்தச் சேரியிலே அவள் முயற்சியால் ஒரு பாடசாலை, வாசகசாலை, இரவுப் பள்ளிக்கூடம் _ இவை தோன்றின.
அவள் பெற்ற பதக்கம்கூட அதோ அந்த வாசகசாலையிலே பார்வைக்கு வைக்கப்பட்டிருக்கிறது. ஊரிலே அவளைத் தெரியாதவர்களில்லை. பல நிகழ்ச்சிகளிலே அவள் பங்கு பெறுகிறாள். அரசாங்கக் கமிட்டியிலே இடம் பெறுகிறாள். பத்திரிகையாளர்கள் கட்டுரைகள் கேட்கின்றனர். அனுபவத்தைக் கூறக் கோருகிறார்கள். புகைப்படங்கள் தின, மாத இதழ்களிலே இடம் பெறுகின்றன. ஆசிரியர் _ சந்திரா உரையாடல், கற்பனை உரையாடல் _ இவை போன்ற சுவையூட்டும் நிகழ்ச்சிகள் வெளிவருகின்றன.
சந்திரா சமூக சேவகி _ நாடறிந்த நங்கை இப்போது. அவள் பட்டதாரி! வயதோ இருபத்தி நான்கு; ஆனால் கன்னிப்பெண்!
பருவத் துடிப்பிற்கும், கடமை உணர்ச்சிகளுக்கும் இடையே அவளது வாழ்வு இழைந்தோடிக் கொண்டிருக்கிறது.
நேரத்தில் பெரும் பகுதியை சமூகத்தின் சேவைகளுக்கே சொந்தமாக்கிய சந்திராவுக்கு தன்னைப் பற்றிய நினைப்பு எப்போதாவது வரும்!
மண வாழ்வு! மனப்பூர்வமாக அவள் மறுக்கத் தயாரில்லை; வேண்டும்தான்! என்ன காரணத்தாலோ அதை ஒரு பிரச்சினையாக்க அவள் விரும்பவில்லை.
ஆனால், மணவாழ்வு சமூக சேவையிலே ஈடுபட்டிருக்கும் அவள் உறுதியைத் தகர்த்துவிடும் என்றால் மணத்தைவிட அவளுக்கு மரணம்மேல் என்று கருதுகிறாள்.
சந்தர்ப்பங்கள் சில வேளைகளில் சபலங்களைச் சந்திக்கழைத்துவிடும். ஆரம்பத்திலே எழும் பலகீனங்கள் சந்தித்த சிறிது நேரத்திலே பறந்து விடும்! அவள் இதயம் வைரமாகும் _ வார்த்தைகள் வீசிடும் ஒளிக் கற்றைகளாகும்.
என்றாலும் அவள் பெண்!
சமூக சேவகி சந்திரா _ துணிச்சலும் கொள்கைத் திட்பமும் கொண்டவள் _ உண்மை.
ஆனால் வெறும் சந்திரா _ உணர்ச்சிப் பின்னல்களால் உருவான ஆடை!
சமூக சேவகி சந்திராவும், வெறும் சந்திராவும் பலமுறை மோதியிருக்கிறார்கள்!
வெறும் சந்திரா _ உணர்ச்சிகளும், வேட்கைகளும், பருவத்தாகமும், தசை உணர்வும் கொண்டவள் _ அவள் மணம் செய்து கொள்ளட்டும்.
சமூக சேவகி சந்திரா _ சேவையிலே, கடமையிலே களிப்பைக் காணட்டும்!
* * *
அன்று அந்த ஊரிலே ஒரு பெரிய விழா! பலதுறைப்பட்ட தலைவர்கள் ஒன்று கூடுகின்றனர். அங்கே சந்திரா பேசச் செல்லுகிறாள்! மகத்தான அந்தக் கூட்டம் மாநாட்டை நினைவுபடுத்தும், கூடிக்கிடந்த மக்களோ ஒன்றுசேர முடியாத தலைவர்களை ஒருங்கு சேர்த்த இசைவாணனுக்கு தங்கள் நன்றியை விழிகளாலே மலர்ந்த இதயங்களாலே தெரிவிக்கின்றனர்.
அந்தக் கூட்டத்தின் நோக்கம், உலகைச் சுற்றி இசையாலே உலகத்தைக் கவர்ந்த இசைவாணனுக்குப் பாராட்டுதல் தெரிவிப்பது!
இசைவாணன் கட்சி வேற்றுமைகளை _ ஜாதி, நிற பேதங்களைக் கடந்தவன்.
அத்தனைக் கட்சிக்காரர்களுக்கும் அவன் பொதுக் கலைஞன்! எனவே அவன் நாட்டின் பொதுச் சொத்து!
பேசிய தலைவர்கள் எல்லாம் இசைவாணனை எவரஸ்ட் சிகரத்தில் கொண்டு நிறுத்தினர்!
இசைவாணன் பாராட்டு விழாவில் பங்கு பெற்றிடும் நல்வாய்ப்பு கிடைத்ததற்காக மகிழ்ச்சி! விழாவிலே எல்லோரும் பாராட்டினர்! நானும் பாராட்டுகிறேன்! அதோடு வேலை முடிந்துவிடவில்லை _ இந்த விழாவிலே ஒரு பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.
முரண்பட்ட கட்சித் தலைவர்கள் இங்கே இணைந்தனர்! கட்சி வேற்றுமைகளுக்கு அப்பாற்பட்ட பெரும்பகுதி ஒன்று இருக்கிறதென்ற உண்மையை இதன்மூலம் நாடறிந்து கொள்வதற்கு இந்த விழா பயன்படட்டும்! அந்தப் பகுதியிலே அனைவரும் கூடிட முடியும் _ விகாரமின்றி விவாதிக்க முடியும் – பல கேள்விகளுக்கு விடை காண முடியும்.
இங்கே கூடியுள்ள கட்சித் தலைவர்களுக்கும், பேச்சாளர்களுக்கும் அந்தப் பகுதிக்கு விரையுங்கள் என்று அன்பழைப்பு விடுவதுதான் இந்த விழாவிலே என் நோக்கமாகும்!
சந்திரா பேசியதும் விண்ணதிரும் கையொலிகள் வானைப் பிளந்தன _ தோழியர் சந்திராவின் கருத்துக்கு இத்தனை வரவேற்பு கிடைக்குமென்று எதிர்பார்க்கவேயில்லை. யாரும் தொடாத கருத்தைத் தொட்டாள்! தொட்ட கருத்துகள் கூடிய மக்களின் உள்ளங்களிலே பட்டன; படிந்தன! பரவசமடைந்து விட்டவர்கள் பாராட்டினர்; கையொலி செய்தனர்!
சந்திரா, தன்னை அறியாமலே வளருகிறாள்! மாநாட்டிலே அவள் பேசிய பேச்சுகள், அடுத்த நாள் தின இதழ்களிலே முதலிடம் பெற்றன! அவளது எத்தனையோ வகையான புகைப்படங்கள் பத்திரிகைகளுக்கு சிறப்பூட்டுகின்றன!
* * *
காலை எட்டு மணி! வீட்டிலே பல குழந்தைகளுக்குப் பாடம் கற்றுத் தந்து கொண்டிருந்தாள் சந்திரா! வெளியிலே யாரோ நின்று அவளை அழைத்தார் _ மாநாட்டிலே பங்கேற்ற ஒருவர், அவளைச் சந்திப்பதற்காக நின்று கொண்டிருந்தார். வந்தவரை வரவேற்றாள் _ உட்கார வைத்துத் தேநீர் அளித்தாள். குழந்தைகள் விடை பெற்றுச் சென்றன!
எனது பாராட்டுதல்களை நேரிலே தெரிவித்துச் செல்லுவதற்காக வந்தேன். பெற்றுக் கொள்ளுங்கள்! _ வந்தவர் சிரித்தார்!
மெத்த மகிழ்ச்சி! அப்படி நானொன்றும் பிரமாதமாகப் பேசிவிடவில்லையே! _ சந்திரா இயற்கை உணர்ச்சிக்கு உருவம் கொடுத்தாள்!
தாங்கள் எதுவரை படித்திருக்கிறீர்கள்…? _ உணர்ந்து கொள்ள வேண்டும் என்கிற ஆவல், வந்தவரிடம் பொங்கியெழுந்தது!
பட்டத்திற்கும், பண்பிற்கும் ரொம்பத் தொடர்புண்டு என்பதிலே நம்பிக்கையற்றவள் நான்!
அப்படி முடிவு கட்டிவிடலாமா? நான் எம்.ஏ. படித்திருக்கிறேன். நீங்கள்?….
நான் பி.ஏ. படித்தவள்! அதை ஒரு பெரும் சாதனையாக நான் நம்புவதில்லை. பட்டம் சமூக அந்தஸ்தை உருவாக்கப் பயன்படும் ஒரு கருவியாக அமைவதை நான் விரும்புவதில்லை _ படித்த படிப்பும், பெற்ற பட்டமும் நாட்டுக்கும், மக்களுக்கும் பயன்பட வேண்டும் என்ற கருத்துள்ளவள் நான்!
ஏன்; நானும்கூட அப்படித்தான்! அரசியல் கட்சியிலே பணியாற்றுகிறேன்…. நாட்டுக்காகத் தொண்டாற்றுகிறேன்… ம்… உங்களுக்குத் திருமணமாயிற்றா? _ வந்தவர் சுமந்து வந்த பாரத்தைக் கீழே இறக்கி வைத்தார்! சந்திராவின் இதயத்திலே பெரியதோர் பாரம் ஏறிற்று! நடுங்கி விட்டாள்!
இல்லை _ சந்திரா பதில் கூறினாள்!
உத்தேச முண்டா? _ வந்தவர் பல்லைக் காட்டினார்.
இல்லை என்று சொல்லுவதற்கில்லை! _ சந்திராவின் முகம் நாணத்தால் சிவப்பேறியது!
நான்கூடத் திருமணமாகாதவன்தான்! _ வந்தவர் தன்னிலையைத் தெளிவுபடுத்திப் புதுநிலையை உருவாக்க ஆவல் காட்டினார்!
சந்திரா பதில் பேசவில்லை! தலை நிமிர்ந்து கருத்துகளைப் பேசும் அவள் இப்போது பெருவிரலை நோக்கிக் கவிழ்ந்திருந்தாள்! ஆசா பாசங்களுக்கு உட்பட்ட அந்தப் பெண் நால்வகைப் பண்புகளால் சுற்றி வளைக்கப்பட்டு விட்டாள்! பெண்மை, அவளிடம் ரகசியமாகப் பெருமை பேசுகிறது _ ஒரு பெரியதோர் நெருக்கடியில் சிக்கிவிட்ட உணர்ச்சியில் உட்கார்ந்திருக்கிறாள்!
ஆசைகாட்டி அவளை அழைக்கும் தாம்பத்திய உலகம் முன்னே நிற்கிறது!
ஏன் பேசாமல் இருந்துவிட்டீர்கள்? _ வந்தவர் அமைதியை உடைத்தார்!
ஏறெடுத்துப் பார்த்தாள் _ ஏறு நடைக்காரனோ தோளுயர்த்தி நின்றான்!
விழிகள் சந்தித்தன!
என் பெயர் மோகன்!
என் பெயர் சந்திரா!
மோகன் சந்திராவின் பக்கம் நெருங்கிக் கரம் பற்றினான்; அவள் எட்டி நின்றாள்!
மோகன் _ பொது வாழ்வு பயங்கரமானது! ஊர்ந்தால் பறக்கிறதென்பார்கள்! பறந்தால் பாய்கிறதென்பார்கள்! இல்லாததை இருக்கிறதென்பார்கள்! எண்ணாததை நிலைநாட்டுவார்கள்! கற்பனைக் கட்டுக் கதையிலே இந்த நாடு ருசி கண்டிருக்கிறது! நாட்டின் அந்தப் பசிக்கு நாம் இரையாகக் கூடாது! அமைதியான என்னுடைய இதய நீரோடையில் கல்லெறிந்து விட்டீர்கள் _ தவறில்லை _ நான் உங்களை விரும்புகிறேன் _நீங்களும் என்னை விரும்புகிறீர்கள்!… இரண்டு பேரையும் தடைபடுத்த சக்திகள் ஏதும் இல்லை! இன்றைக்கென்றால் இன்றைக்கு! நாளையென்றால் நாளை _ மண மன்றம் நம்மை ஒன்று சேர்க்கட்டும்! இடையே இந்த இடைவெளி இருக்கட்டும்!
மோகன் கற்சிலைபோல் நின்று கொண்டிருந்தான்!
ஏன் அமைதியாகி விட்டீர்கள்? _ சந்திரா மோகனைக் கேட்டாள்! கேள்வியிலே குறும்பு குழைந்தது.
அமைதியா?…. _ பேச்சை முடிக்கவில்லை மோகன்.
புயலைக் கிளப்பி விட்டேனா?… _ சந்திரா முடித்தாள்.
நாளை சந்திக்கிறேன்….! _ மோகன் விடை பெற்றுத் திரும்பி விட்டான்.
* * *
தினந்தோறும் மோகன் வீட்டிற்கு வர ஆரம்பித்தான். பேசிக் கொண்டிருப்பான் _ எழுந்து போவான் _ சந்திராவுக்கு வேதனை அதிகரித்தது! முடிவற்ற நாட்கள் கடந்து கொண்டேயிருந்தன! முடிவோடு வருவான் என்று காத்திருந்த சந்திராவுக்கு ஏமாற்றம்! கேட்டுவிட அன்றைக்குத் தயாரானாள்!
மிஸ் சந்திரா! நீங்கள் பிருந்தாவனம் பார்த்திருக்கிறீர்களா? _ கேட்டுக் கொண்டே வந்தான் மோகன்!
இல்லை…! _ சந்திரனின் குரலிலே பசுமையில்லை.
உங்களை அழைத்துச் செல்லலாமென்றிருக்கிறேன் _ என்று மோகன் தன் ஆசையை வெளியிட்டான்!
நான் கன்னிப் பெண்!… கண்டவர்களோடு வெளியே செல்வதற்கில்லை!
நான் என்ன கண்டவனா? _ மோகன் கேட்டான்.
நீங்கள் என் கொண்டவரா? _ சந்திரா இடைமறித்தாள்.
கொண்டவன்தான் கூட்டிச் செல்ல முடியுமா? மோகன் இளித்தான்.
விபரீதமாகப் பேசுகிறீர்கள்! நான் மானத்தோடு வாழ விரும்புபவள்! அதற்காக சாகவும் துணிந்தவள்!
பொது வாழ்விலே மானம் மண்ணாங்கட்டி எல்லாம் எங்கே சந்திரா வாழுகிறது? _ கூறிக்கொண்டே அவள் கையை எட்டிப் பிடித்தான்!
சந்திரா அதிர்ந்து போனாள்! அவள் முகம் செவ்வானத்தைச் சவாலுக்கழைத்தது!
மிஸ்டர் மோகன்! மரியாதையாக வெளியே போங்கள்!
பொது வாழ்க்கையிலேயே மானத்திற்கிடமில்லை என்று உரைத்த முதல் மனிதரும் கடைசி மனிதரும் நீங்களாக இருக்கட்டும். மலர்ந்த என் ஆசை கருகிப் போய்விடட்டும். மோகன் பொது வாழ்வு வழுக்கு நிலம்! அதிலே நடைபோட ஒழுக்கமென்ற ஊன்றுகோல் தேவை. அதை வீசியெறியத் துணிகிறீர்கள்! அதனாலே ஆபத்து உங்களுக்கு மட்டுமல்ல; உங்களை நம்புபவர்களுக்கும்தான்!
பெண் இழுத்த இழுப்பிற்கு வளையும் ரப்பர் துண்டல்ல! வைரம்! அதிலே ஒளியும் உண்டு; உறுதியும் உண்டு! ஏன்; சாகடிக்கும் சக்தியுமுண்டு!… திருந்துங்கள்; உங்களின் தங்கை என்ற முறையில் நான் தரும் அறிவுரை இதுதான்! கண்ணீரைத் துடைக்க வேண்டிய நீங்கள், கண்ணீரைப் பெருக்க வழிகோல வேண்டாம். சென்று வாருங்கள்…!
_ மோகனின் கவிழ்ந்த தலை நிமிரவில்லை. வெளியேறி விட்டான்!
உலகம் பொல்லாதது! சந்திரா எப்படி சந்தேகத்திற்குரியவளானாள்? நற்பண்புமிக்கவளை _ பாதையிலே வழியூன்றி நடப்பவளை _ நடத்தை கெட்டவள் என்று சொல்ல எவனுக்குத் தைரியம் வரும்?
மோகன் இலட்சியவாதியாம்! அரசியல் கட்சியிலே அங்கமாம்! இல்லை… வெறும் குப்பைமேடு!
சந்திராவின் அறிவாற்றல் அவனை அவளிடமிழுத்தது! வந்தான்; வந்தவன் அவளைத் தடம்பெயர்க்க விழைந்தான். அவள் மணமாலை கேட்டாள் _ அவனோ பண்பிற்கு மரணவோலை நீட்டத் தயாரானான்! சந்திரா சமுதாயத்தின் புண்ணுக்கு மருந்து அளித்த புண்ணியவதி _ வெறுக்கப்படுகிறாள், பிற்போக்காளர்களால்! பாராட்டப்படுகிறாள் வளரும் உலகத்தால்!
பிற்போக்குலகம் அவளுக்கு வாழ்வளிக்கக் கூடாதென்கிறது! வளருமுலகமோ ஆசை காட்டுகிறது; ஆனால் வாழ்வளிக்க வரமாட்டேன் என்கிறது! என்ன நியாயம்! சந்திராவின் இதயம் வெந்து, நொந்தது.
சந்திரா _ இரண்டு உலகத்திற்கும் இடையே சிக்கி விட்ட புள்ளிமான்!
ஒரு உலகு அவளைத் துரத்துகிறது! இன்னொரு உலகு அவளைத் துதிக்கிறது!
ஆனால் இரண்டுலகும் அவளைக் கைகொடுத்துக் காக்க மறுக்கிறது!
சந்திரா சமூக சேவகி!.. இன்றைக்கு அவள் தொண்டைத் திருமணம் புரிந்து கொண்டாள்! பிற்போக்கு சமூகத்தின் கண்களுக்கு அவள் வாழாவெட்டி! ஆர்ப்பாட்டமாக, இலட்சியத்தை உதட்டளவில் பேசும் உலகத்திற்கோ அவள் வாழத் தெரியாதவள்! தூய்மையான சேவைகளின் உலகத்திற்கோ அவள் பெண் தெய்வம்!
நன்றி: முரசொலி பொங்கல் மலர்-1959
திராவிட இயக்க எழுத்தாளர்களுள் ஒருவரான நாஞ்சில் கி.மனோகரன் அவர்கள் தமிழகத்தின் சிறந்த அரசியல்வாதியாகவும் திகழ்ந்தவர். முதுகலைப் பட்டப் படிப்பை முடித்தவர். மூன்று முறை தென்சென்னை மக்களவைத் தொகுதி உறுப்பினராகவும் நான்குமுறை தமிழக சட்டப்பேரவை உறுப்பினராகவும், தமிழக அமைச்சராகவும் பணியாற்றியவர்