– சரவணா இராஜேந்திரன்
இராஜீவ்காந்தி மரணம் தொடர்பான வழக்கு நிலவரங்களில் தமிழர்களுக்கு எதிராக வரிந்துகட்டி வடக்குத் தலைவர்கள் எல்லோரும் ஓரணியில் நிற்பது பற்றிய ஒரு வரலாற்றுப் பார்வை.
உண்மையில் திராவிடத்தால் வீழ்ந்தோம், திராவிட எதிர்ப்பு என்று கிளம்பி இருப்பவர்களும் கவனிக்க வேண்டிய ஒன்று.
1. தென்னிந்தியாவில் உள்ள மக்களேதான் குரங்குகளாகவும் அரக்கர்களாகவும் வர்ணிக்கப்பட்டார்கள் _ஜவகர்லால் நேரு
2. ஆரிய திராவிடப் போராட்டமே ராம_-ராவண யுத்தம்- _ஹென்றி ஸ்மித்; ராமாயணத்தில் குடிகாரர்களை சுரர்களென்றும் குடியாதவர்களை அசுரர்கள் என்றும் கூறப்பட்டிருக்கிறது _-ரமேசு சந்திரதத்:
3. ராமாயணத்தில் குறிக்கப்பட்டுள்ள குரங்குகள், கரடிகள் என்பவை தென்னிந்தியாவில் உள்ளவர்களை, ஆரியர் அல்லாதவர்களைக் குறிப்பதாகும்- _பண்டிதர் பி பொன்னம்பலம் பிள்ளை:
4. ராமாயணக் கதையானது ஆரியர்களை மேன்மையாகக் கூறவும் திராவிடர்களை இழிவுபடுத்திக் கூறவும் எழுதப்பட்ட நூலாகும் _-சி. ஜே. வர்க்கி:
5. ராமாயணம் தென்னிந்தியாவில் ஆரியர் பரவியதையும் அதைக் கைப்பற்றியதையும் உணர்த்தும் _நூல்-: ஷோஷி சந்திரதத்:
6. திராவிடர்களை ஆரியர்கள் வென்று விட்ட அகங்காரத்தால் குரங்குகள் என்றும், ராட்சதர்கள் என்றும் எழுதி வைத்தார்கள். ஆனால் இந்தப்படி இழிவுபடுத்தப்பட்ட வகுப்பாரிடமிருந்து பல நாகரிகங்களை இந்த பிராமணர்கள் கற்றுக் கொண்டார்கள்- _ சி.பி. காவெல்:
7. நாராயணன் என்கிற கடவுள் ஆரியக் கூட்டத்தாருக்கு வெற்றி தேடிக் கொடுக்கவும், யோசனை கூறவும் அடிக்கடி அவதாரம் செய்வதாகக் கூறப்பட்டிருக்கிறது- _சந்திரசேகர பாவலர்: சூத்திரன் தவம் செய்யக்கூடாது என்பதற்காகவே ராமன் சம்பூகனைக் கொன்றான் _ராவ்சாகிப் திமேசு: இராமாயணக் கதை மாந்தர்களில் திராவிட இனத்தின் தலைவனான இராவணனை திராவிடன் என்றும், குரங்குகள் என்றும் (குரங்கில் இருந்து மனிதர்கள் வந்ததைக் கருத்தில் கொண்டு மூத்தகுடி மக்களைக் குரங்காகக் காண்பித்து உள்ளார்கள். அவர்களுக்கு உள்ளாகவே தங்களுக்கு உதவுபவர்களை விபீடணன், சுக்ரீவன் என காண்பித்து கதையைத் திரித்து இருக்கிறார்கள்.
இதற்கு முக்கியக் காரணம், இந்தியா முழுவதும் ஆதிக்குடிகள் தங்களின் வாழ்வாதாரத்தைத் தக்க வைக்க கடுமையாகப் போராடிக்கொண்டு இருந்தனர். சிறுகச் சிறுக பிளவை உண்டு செய்து அதன் மூலம் ஒற்றுமையைச் சிதைத்து பிரிவினை வாதத்திற்கு வித்திட்டது பார்ப்பனியம். இராமாயணம் என்னும் மூலம் புகுத்தப்பட்ட பிரிவினை தான் சுமார் இரண்டாயிரம் நூற்றாண்டாக வடக்கு தெற்கு கலாச்சார பிரிவு மாத்திரமல்லாமல் இந்த மண்ணின் மூத்த குடிகள் மதிக்கவேண்டிய அல்ல என்ற ஒரு மனநிலைக்கு மாற்றிவிட்டனர். இதன் தொடர்ச்சி தான் ஒவ்வொரு காலகட்டத்திலும் தெற்கின் மீதான விரோதப்பார்வை அதிகரித்தது. பார்ப்பனர்களால் முகலாயர் ஆட்சியின் இறுதிவரை தெற்கே மதரீதியாக பிளவினை ஏற்படுத்த முடியவில்லை. 1892 முதல் சுதந்திரம் அடையும் வரை மதக்கலவரம் வட இந்தியாவை நாசம் செய்ததை வரலாற்றின் மூலம் அறிகிறோம். ஆங்கிலேய ஆட்சியில் இராணுவச் சிப்பாயாகப் பணிபுரிந்த பக்ருதீன் என்பவர் பி.பி.சி தொலைக்காட்சிக்காக அளித்த பேட்டியில் உத்திர பிரதேச மாநிலம் பரேலியில் இந்து முஸ்லீம்களிடையே நடந்த கலவரத்தின் போது முஸ்லீம் தலையை வெட்டி வந்தால் ஒரு மூட்டை தானியம் தருவதாக அறிவித்திருந்ததையும், அதே நேரத்தில் ஒரு இந்துவைக் கொலை செய்தால் நிலம் தருவதாகவும் தண்டோரோ போட்ட கொடுமையை தன்னுடைய பேட்டியில் பதிந்திருந்தார்.
மதக்கலவரங்களும் வடக்கு அரசியலும். ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராகப் போராட்டம் ஆரம்பித்தது முதலே வடக்கில் மதக்கலவரங்களும் உருவாகிவிட்டது. இதற்கு இரண்டு உலகப்போரினால் ஏற்பட்ட தாக்கத்தின் காரணமாக பிரிட்டீஸ் அரசு காலனி நாடுகளை விட்டு வெளியேற ஆரம்பித்தது. இந்தியாவும் சுதந்திரம் அடையும் என்ற நிலைக்கு வந்த பிறகு பார்ப்பனியம் மனுதர்ம ஆட்சியைக் கொண்டுவருவதற்கு நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொண்டனர். இதற்காகவே மதக்கலவரங்களின் மூலம் சிறுபான்மையினரைப் பயமுறுத்தி சுதந்திரத்திற்கு முன்பாகவே நாட்டை விட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்ற நிலையில் இஸ்லாமியர்கள் மீதான தாக்குதல் நடத்தி வந்தது. இந்த நிலையில் தென்னகம் இந்தப் போக்கிற்கு எதிராக மத நல்லிணக்கத்தைக் காத்து வந்தது. சிறுபான்மையினருக்கு எதிரான அடக்குமுறையின் காரணமாக அய்தராபாத் நிஜாம் தன்னுடைய ஆளுமைப் பகுதியை இந்திய அரசுடன் இணைக்காமல் காலம் தாழ்த்தி வந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் சிப்பாய்க் கலகம் என்ற ஒன்றை மீண்டும் மீண்டும் கூறி தென்னகத்தில் இந்து முஸ்லீம்களுக்கு இடையே சண்டை மூட்டப் பார்த்தார்கள். ஆனால் அவர்களால் ஒன்றும் செய்ய முடியவில்லை. காரணம், தெற்கு மத நல்லிணக்க விவகாரத்தில் எந்தச் சமரசமும் செய்துகொள்ளவதில்லை, உள் விவகாரங்களில் எந்தப் பிரச்சனை நடந்து கொண்டு இருந்தாலும் பெரும்பான்மை மக்கள் சகோதரத்துவத்துடன் வாழ்ந்தே வந்தனர். இதற்கு உதாரணம் திருப்பரங்குன்றம் புகழ்பெற்ற அறுபடை வீடுகளில் ஒன்றின் மீது சிக்கந்தர் தர்கா உள்ளது. இதுபோன்று தமிழகம் முழுவதும் பல இடங்களில் பிரபல இந்து தலங்களுக்கு அருகிலேயே இஸ்லாமிய புகழ்பெற்ற வழிபாட்டுத்தலங்களும் உள்ளன. இது இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் காணப்பாடாத ஒன்றாகும்.
சைவ வைணவ வளர்ச்சிக்கு முன்பு தமிழர்கள் கல்வியில் சிறந்து விளங்கினார்கள். இதற்குப் பல உதாரணங்களைக் கூறலாம். முக்கியமாக வேதகாலத்தில் பெண்கள் கல்வி முற்றிலும் மறுக்கப்பட்டது. ஆனால் சங்ககாலத் தமிழ் இலக்கியங்களில் 60க்கும் மேற்பட்ட பெண்பாற் புலவர்கள் பாக்களை தெள்ளிய இலக்கிய நயத்துடன் பாடியுள்ளனர். அவ்வையார், காக்கைப்பாடினியார், நக்கண்ணையார், பாரி மகளிர், ஒக்கூர் மாசாத்தியர் போன்றோரை எடுத்துக்காட்டாகக் கூறலாம். மேலும், தொல்காப்பியம் தந்த தொல்காப்பியர் முதல் தான் பெற்ற கல்வியறிவை தமிழுக்கு எதிராகப் பயன்படுத்திய கம்பர் வரை கல்வியில் சிறந்து விளங்கினார்கள். ஆனால் 6ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு மீண்டும் கல்வியில் தொய்வு ஏற்பட்டது. இதற்குக் காரணம் வேத காலத்தில் பார்ப்பனர்களைத் தவிர மற்றவர்கள் கல்வி கற்கக்கூடாது என்ற மனுதர்ம சட்டமாகும். இதனால் தமிழகம் பல நூற்றாண்டுகளாக கல்வியறிவு பெறமுடியாமல் போய்விட்டது. 16-ஆம் நூற்றாண்டில் அய்ரோப்பியர்களின் வருகைக்குப் பிறகு தமிழகத்தில் கல்வி மீண்டும் சாமானியர்களைச் சென்றடைந்தது. இதில் புனித சவேரியாரின் கல்விப்பணி நினைவுக்கூறத்தக்கதாகும். இதை மதமாற்றம் என்று கூறினாலும் மதம் பாராமல் கல்வி என்பது தென் இந்தியாவின் அனைத்துப் பகுதிக்கும் சென்றடைந்தது.
கல்வி என்பது எந்த வகையிலும் சாமானியர்களைச் சென்றடையக்கூடாது என்ற நிலைப்பாட்டால்தான் பார்ப்பனியம் தன்னுடைய ஆளுமையைப் பல நூற்றாண்டுகளாக கையில் வைத்திருந்தது. இவ்வாறு வேதகாலத்தில் அடக்கி வைக்கப்பட்ட கல்வியறிவு மீண்டும் 17ஆம் நூற்றாண்டு முதல் சாமானியர்களுக்கு உரிமையானது. வடக்கில் சிலருக்கு அச்சுறுத்தலாகவே இருந்தது. இருபதாம் நூற்றாண்டில் இந்த அச்சம் ஒரு கடுமையான பகைமையாக கொண்டு வளர்ந்து கொண்டு வந்தது. இது சாமானியருக்குத் தெரியாத ஒன்றாக தெரியாவிட்டாலும், உள்ளூர எரிமலைக்குழம்பு போல் கொதித்துக்கொண்டிருந்தது. பெரியாரின் பார்வை மாற காரணமாக இருந்த பார்ப்பனியம்.
பார்ப்பனர்களின் உள்ளூர இருந்த இந்தப் பகைமை உணர்வை மதப்பிரிவினை, சாதிப்பிரிவினைகள் மூலம் மக்கள் மத்தியில் எளிமையாக மறைத்து விட்டனர். வடக்கில் தமிழினத்திற்கு எதிராக மேற்கொண்டு வரும் உள்ளார்ந்த பகைமைப்போக்கை ஒருவர் மட்டும் ஊன்றிக் கவனித்து வந்தார். அவர் தான் தந்தை பெரியார் பார்ப்பனியம் இன்றும் பெரியார் கொள்கைகள் மீது கொண்டிருக்கும் கடுமையான பகைமைக்குக் காரணம், சுமார் ஆயிரத்தி அய்நூறு ஆண்டுகளாக வளர்த்து வந்த பிரிவினைப் பகைமையை பாதாளத்தில் தள்ளி மூடிவிட்டாரே! என்ற ஒரு வெறுப்புதான். பார்ப்பனியம் மீண்டும் பிரிவினைவாதப் பகைமையை வெளிக்கொண்டு வருவார்கள் என பெரியா சிந்தித்ததன் விளைவு. அவர் தனி நாட்டுத் தீர்மானம் கொண்டு வந்தார். ஆனால் நிலைமை அந்த அளவு போகவில்லை என உறுதி செய்த பிறகு தன்னுடைய நிலைப்பாட்டைத் திரும்பப் பெற்றுக்கொண்டார். காந்தி வர்ணாசிரம தர்மத்தை தன்னுடைய உடலில் ஒரு பாகமாக நினைத்தார். எந்த இராமாயணம் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு எதிராகக் கிளம்பியதோ அந்த இராமாயன நாயகனான இராமரின் பெயரால் இராம ராஜ்ஜியத்தை உருவாக்குவேன் என்று சபதமெழுப்பி பார்ப்பனியத்திற்குக் குடைபிடித்தார். தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் தமிழர் நலம் சார்ந்த எந்த ஒரு நடவடிக்கைக்கும் ஆதரவு தரவில்லை. இதற்கு உதாரணமாக சேரன்மாதேவி குருகுலப்பிரச்சனையில் ஏதோ தனிப்பட்ட பகைமைக்காக ஒரு சிலர் உ.வே.சுவாமிநாத அய்யருக்கு எதிராக புறப்படுகின்றனர், என்றார்.
மேலும் வைக்கம் போராட்டத்தின் போது அதை முற்றிலும் எதிர்த்தார். பிறகு அதன் தீவிரம் காரணமாக பிற மதத்தவர் அந்த போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று அறிக்கை விட்டார். ஆனால் தந்தை பெரியாரின் கடுமையான போராட்டத்தால் வெற்றிபெற்ற வைக்கம் போராட்டத்தைப் பற்றி தன்னுடைய நூலில் ஒரு இடத்தில் கூட பெரியார் பெயர் இடம்பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் தீண்டாமைக் கொள்கை பற்றிய பேச்சு எழும்போதெல்லாம் இப்போது நமது நோக்கம் எல்லாம் சுதந்திரம் அதன் பிறகு இது குறித்து பேசித் தீர்க்கலாம் என்ற பதிலே அவரிடமிருந்து கிடைத்தது. மேலும் சுதந்திரப் போராட்டத்தில் தெற்கின் பங்கை முற்றிலும் மறைத்து தெற்குத் தலைவர்களில் பெரும்பாலானோர் ஆங்கிலேயர்களுக்கு ஆதரவாகச் செயல்பட்டனர் என்ற மாயையைப் பரப்பிவிட்டார். காந்தியாருக்கு முன்பே தமிழக மண்ணில் சுதந்திரப் போராளியாக மாறி பெரும் இன்னல்களை அனுபவித்த வ.உ.சிதம்பரனார் செய்த தியாகத்தை வரலாற்றில் இருந்தே மறைத்த பெருமை காந்தியாரையும் அவருக்குப் பின் நின்ற பார்ப்பனிய சிந்தனை கொண்டவர்களையும்தான் சாரும்.
தொட்டுத்தொடரும் வன்மப் பாரம்பரியம்
இன்றும் இவர்களின் போக்கில் எந்த மாற்றமும் இல்லை என்பது இலங்கை விவகாரம், காவிரி, முல்லைபெரியார் போன்றவற்றிலும் தெரியவந்தது. இதுவரை ஆழமாக இலைமறை காய்போல் இருந்துவந்த பிரிவினை வாதம் இன்று மீண்டும் மெல்ல வெளியே வர ஆரம்பித்து விட்டது. இராஜீவ் கொலையாளிகள் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று விட்டார்கள்.
இத்தனைக்கும் இவர்கள் குற்றத்தில் நேரடியாகத் தொடர்பில்லாதவர்கள் என்று உண்மைக் குற்றவாளிகள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று நீதிமன்றமே தெரிவித்து இருந்தும் ஒட்டு மொத்த வடக்குத் தலைவர்களும் ஏதோ தமிழ்நாடே தீவிரவாத மக்கள் வாழும் நாடாக இந்தியா முழுவதும் ஊடகங்கள் மூலம் மக்களிடம் கொண்டு செல்லுவது பச்சை பாசிச சித்தாந்தமே ஆகும்.
வடநாட்டுக் காங்கிரஸ் கட்சி மட்டுமல்ல, இந்துத்துவக் கும்பலான பாரதிய ஜனதாவும் 7 தமிழர்களின் தூக்குக்கு ஆதரவாக இருக்கிறது. மூவர் தூக்கை ரத்து செய்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு பற்றியோ, எழுவரை விடுதலை செய்த தமிழக அரசின் முடிவு பற்றியோ கருத்துக் கூறுவதை பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் தவிர்க்கிறார். அருண் ஜேட்லி எதிர்க்கிறார். ஆனால், தமிழ்நாட்டு பாஜக தலைவர் பொன்.இராதாகிருஷ்ணன் தேர்தலை மனதில் வைத்து ஆதரிக்கிறார்.
வடநாட்டுக் கட்சிகள் மட்டுமல்ல, ஊடகங்களும் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட தமிழகக் கட்சிகள் அனைத்தையும் ஒருசேரக் கண்டிக்கிறார்கள். காந்தி கொலையாளிகளுக்குச் சிம்மாசனம் போட ஊதுகுழலாக இருக்கும் ஊடகங்கள், ராஜீவ் கொலையில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தூக்கில் போடத் தூண்டுகின்றன.
ஆக, வடவர்களின் எண்ணம் அன்றும் இன்றும் தமிழர்களுக்கு எதிராகவே இருப்பதற்கு ஆதிநாள் தொட்டு ஊட்டப்பட்ட வெறுப்புணர்வே ஆகும். இதற்கு அவர்களின் இராமாயணமும் ஒன்று என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.
நாம் ஒற்றுமையையே விரும்புகிறோம். பிரிவினை என்பது முடிந்துபோன ஒன்று ஆனால் ஒற்றுமையாக எங்களுக்கு அடிமையாக இருங்கள் என்று சிலர் தங்களின் நன்மைகளுக்காக கூறி இந்திய மக்களிடம் தமிழர்களைப்பற்றி ஊடகங்கள் மூலம் தவறான தகவல்களைத் தொடர்ந்து பரப்புவார்கள் என்றால் அதனை நாம் ஒன்று சேர்ந்து எதிர்க்கவேண்டும். இல்லையென்றால் மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் இன்று இல்லாவிட்டாலும் என்றாவது தமிழகத்தில் உருவாகும் என்பது திண்ணம்.