மதிய உணவுக்காக அரிசி கலைந்து கொண்டிருந்தாள் மருதாயி. தொலைபேசி அலறல் கேட்டு கையிலிருந்ததை அப்படியே போட்டுவிட்டு எழுந்து வந்தாள்.
அதை எடுத்துக் காதில் வைத்ததும் யாருங்க பேசுறது என்றாள்.
நீங்க பொன்னியோட அம்மாதானே? கேட்டது ஒரு பெண் குரல்.
ஆமா…
பள்ளிக்கூடத்துல இருந்து உங்க மகளோட கிளாஸ் டீச்சர் பேசுறேன்
சொல்லுங்கம்மா. அவளுக்குச் சரியா படிப்பு வரலையா… ராவெல்லாம் புத்தகமும்
கையுமாத்தானே இருக்கா என்றாள் பதட்டத்துடன்.
அதுக்கில்லே. உங்க மக, ஏஜ் அட்டன் பண்ணியிருக்கா…
எனக்குப் புரியும்படி சொன்னிங்கன்னா தேவலை
அப்படியா, உங்க மக வயசுக்கு வந்திட்டா. வந்து கூட்டிட்டுப் போங்க
புரியுதும்மா. என்னமோ ஏதோன்னு பயந்துட்டேன். சந்தோசம்மா. அவளோட அப்பா ஆபீசுல இருக்காரு. அவருக்கே பேசிடுங்க. அந்த நம்பரெல்லாம் பொன்னிக்குத் தெரியும். தயவு பண்ணி.. என்று இழுத்தாள் அவசரமும் ஆர்வமும் பொங்க. இணைப்பு துண்டிக்கப்பட்டது.
மருதாயி _ அழகய்யா இணையருக்கு ஒரே மகள் பொன்னி. பிறந்தது, வளர்ந்தது, மணம் முடித்தது எல்லாம் புதுப்பட்டி கிராமம்தான். நகராட்சியில் கடைநிலை ஊழியர் வேலை கிடைக்க அழகய்யாவின் குடும்பம் நகருக்கு இடம் பெயர்ந்தது.
அவனது கடும் முயற்சியும், அனுபவமும், அறிவும் கைகொடுக்க எழுத்தர் பதவி அவனைத்தேடி வந்தது. மேல்நிலைப் பள்ளி ஒன்றில் பொன்னி எட்டாம் வகுப்பு மாணவியாக இருந்தபோதுதான் அவள் ஆளான செய்தி வந்தது. அவள் பருவமடைந்துவிட்ட செய்தி அறிந்ததும் ஒரு தாய்க்கே உரிய பூரிப்பு அவள் முகத்தில்! அழகய்யாவுக்கும் செய்தி எட்டியது.
பொன்னி படு சுறுசுறுப்பு. படிப்பிலும் அப்படியே. அதிகாலையில் எழுந்து அம்மாவுக்கு உதவும் கரங்களும் அவளுடையதுதான். வாசலைப் பெருக்கி, சாணி தெளித்து, கோலம் போட்டு அழகு பார்த்தபின் பாடப் புத்தகங்களில் மூழ்கிவிடுவாள். சைக்கிள் மிதித்து பள்ளிக்கூடம் போய்வரப் பழகியிருந்தாள். தந்தையின் வருகைக்காகக் காத்திருந்தபோது அழகய்யா வகுப்பு நோக்கி வந்து கொண்டிருந்தான்.
அழகய்யா வந்திருப்பது தெரிந்ததும் கரும்பலகையில் எழுதிக் கொண்டிருந்த வகுப்பு ஆசிரியை, அதை நிறுத்திவிட்டு அங்கே வந்தார். ஆசிரியையும் அழகய்யாவும் சில நொடிகள் தனியே பேசிக் கொண்டிருந்தார்கள்.
விரைவில் விடைபெற்றுக் கொண்டு வெளியே வந்தார்கள் தந்தையும் மகளும்.
வீட்டு வாசலில் மருதாயி காத்திருக்க இரு சக்கர வாகனத்திலிருந்து இறங்கி வருவதைப் பார்த்தாள். ஓடிவந்து மகளைக் கட்டிக் கொண்டாள். பொன்னியின் நடையில் வழக்கமான துள்ளல் இல்லை. நடை தளர்ந்திருந்தது. அதிர்விலிருந்து மீண்டவள்போல் களைத்திருந்தாள். கிராமத்துப் பழக்கப்படி சொந்தங்களுக்குச் சொல்லியாக வேண்டும். முக்கிய நிகழ்வாகக் கொண்டாடுவார்கள்.
கையில் காசு இருக்கிறதோ இல்லையோ, கடன் பட்டாவது பருவச் சடங்குகளை நடத்திடத் துடிப்பார்கள். அதுவும் மாமன் மச்சான் உறவு முறைகள் பெருகிப் போயிருந்தால் கேட்கவே வேண்டாம். தடபுடலுக்குக் குறைச்சல் இருக்காது. சீர் செனத்தியைக் குறிவைத்து புனித நீராட்டு விழா பத்திரிகை அடித்து ஊரைக் கூட்டி அமர்க்களப்படுத்தி விடுவார்கள்.
கொட்டு மேளத்தோடு வீட்டு வாசலில் வந்து நிற்கும் சொந்தங்கள், சீர் சுமந்து வரும் உறவுகள், கூம்புக் குழாய் ஒலிபெருக்கிகளை ஊர்முழுக்கக் கட்டி அலற வைத்து உறங்கவிடாத நட்புகள்! இன்னும் இன்னும்…
மலர்ந்து வந்த மகளுக்கு அடுத்து ஆக வேண்டியது பற்றிய சிந்தனை தாயின் மனதில் திரைப்படம் போல் ஓடிக் கொண்டிருந்தது. சோர்ந்திருந்த பொன்னியைக் குளியலறைப் பக்கம் அழைத்துப் போனாள். அங்கிருந்து அவள் வெளிவந்தபோது மாற்றுடையில் தோன்றினாள். யாருடனும் பேசிக் கொள்ளவில்லை. அறையின் கதவைத் திறந்து போனவள் ஓர் ஓரமாய்ப் படுத்துக் கொண்டாள். மருதாயி முகத்தை ஏறிட்டபடி உட்கார்ந்திருந்தான் அழகய்யா. நீங்க உங்க வேலையப் பாருங்க. விடிஞ்சு பேசிக்கலாம் என்றாள் அவள்.
புலர்ந்தும் புலராத வைகைப் பொழுது. கிழக்கு வெளுத்துக் கொண்டிருந்தது. எங்கோ உறங்கிக் கிடந்த பறவைகள் அங்குமிங்குமாய் வானில் சிறகடித்துக் கொண்டிருந்தன. வாசல் பெருக்கும் வேலையை மருதாயி செய்து கொண்டிருந்தாள். வீட்டைக் கடந்து போகிறவர்களுக்கும், பக்கத்து வீட்டுக்காரர்களுக்கும் மூக்கு வியர்க்க இதுபோதுமே!
என்ன மருதி பொன்னி என்ன பண்றா? என்றாள் பக்கத்து வீட்டுப் பரிமளா அவள் வீட்டைப் பெருக்கிக் கொண்டே.
எல்லாம் நல்ல காரியந்தேன். பொன்னி உட்கார்ந்துட்டா. இன்னிக்கிச் சாயந்திரம் தலைக்குத் தண்ணி ஊத்தணும் என்றாள் கோலம் போட்டுக்கொண்டே. தெரு விளக்குகள் அத்தனையும் எரிய ஒரு சுவிட்சைப் போட்டால் போதுமே. அதுதான் நடந்தது. சிறிது நேரத்தில் அந்தத் தெரு மகளிர் அணி அங்கே வந்து நின்றது. சிறுமிகள் மூதாட்டிகள் இதில் அடக்கம். அவ்வளவு பெரிய அதிசயமா இது என்று ஆராய்ந்துகொண்டிருக்க அங்கு வந்து போகிறவர்கள் யாருக்கும் நேரமும் இல்லை. வழக்கமும் இல்லை போலும்.
மாலைப்பொழுது கடந்து மின் விளக்குகள் ஒளிரத் தொடங்கின. வெளியே போய் விட்டு வந்த அழகய்யா உடைகளைக் களைந்து கைலிக்கு மாறியிருந்தான். அம்மாவின் அன்புக்குக் கட்டுப்பட்டு கொஞ்சம் சாப்பிட்டுவிட்டு சீக்கிரமே உறங்கிப் போனாள் பொன்னி. சுவர்க் கடிகாரம் இரவு பத்தைக் காட்டிக் கொண்டிருந்தது. புரட்டிக் கொண்டிருந்த வார இதழ் ஒன்றை மூடி வைத்துவிட்டு கொட்டாவி விட்டபடி படுக்கை விரித்தான் அழகய்யா. அவனருகில் வந்து நின்ற மருதாயி அதுக்குள்ள என்ன உறக்கம் வேண்டிக்கிடக்கு என்றாள். தன்னிடம் ஏதோ சொல்ல நினைக்கிறாள் என்பதைப் புரிந்துகொண்டவன் அவளை நிமிர்ந்து பார்த்தான். அவன் அருகில் உட்கார்ந்தவள் பொன்னி படுத்துறங்கும் அறை சாத்தப்பட்டிருக்கிறதா என்று நோட்டம் விட்டபின் மெதுவாகப் பேச ஆரம்பித்தாள்.
போன மாசம் கிராமத்துல இருந்து அண்ணன் வந்திருந்தப்போ… பொன்னி வயசுக்கு வந்துட்டா சொல்லிவிட மறந்துடாதேனு சொல்லிட்டுப் போச்சு…
தாய் மாமனாச்சே. சொன்னாப் போகுது…
என்ன இப்படி சப்புனு சொல்லிட்டீங்க. உடனே சொல்லியிருக்க வேணாமா? மாமன் சீர் வேண்டாமா?
தாய் மாமனைக் கண்டிப்பா அழைக்கத்தான் வேணும். பூப்பு நீராட்டு விழான்னு பத்திரிகை அடிக்கணும். ஊர் ஊருக்கு உறவுகளைத் தேடிக் கொடுக்கணும். கடா வெட்டி கறிச்சோறு போட்டு விருந்து வேடிக்கையெல்லாம் வைக்கணும். இதெல்லாம் வேணுமா? வெட்டி வேலையாப் படலையா? எத்தனை பொண்ணுங்க படிக்கப் போகுது? பள்ளிப் படிப்பு காலேஜ் படிப்பு, உத்தியோகம்னு போய்க்கிட்டே இருக்குதுக. நீ சொல்ற மாதிரி சடங்கு சம்பிரதாயம்னு ஆரம்பிச்சோம்னா ஊர் முழுக்க அதுதான் நடந்துக்கிட்டிருக்கும்…
என்ன சொல்றீங்க. எனக்கு எதுவுமே வௌங்கலே…
நல்லதாப் போச்சு. வௌங்காமலே போகட்டும். உங்க அண்ணே சும்மா வரமாட்டாரு. என் பையனுக்கு இப்பவே பருசம் போடணும். நிச்சயதார்த்தம் எப்ப வச்சுக்கலாம்? வர்ற வைகாசியில வச்சுக்கலாமானு கேட்பாரு.
ஒத்தக்கால்ல நிப்பாரு….!
கேக்கட்டுமே. அதுல என்னங்க தப்பு? மாமனுக்கு இல்லாத பாத்யதையா?
மாமன்மார்களுக்கு அப்படி ஒரு உரிமையை யார் கொடுத்தாங்களோ? போகட்டும். நமக்கு இருக்கிறது ஒரே பொன்ணு. அதோட விருப்பம் என்னன்னு தெரியணும். அதுபத்திச் சிந்திக்கிற வயசும் இது இல்லே. எல்லா வீட்டுப் பிள்ளைகளும் படிக்குதுங்க. இதுவரையிலும் எல்லா வகுப்பிலேயும் நல்ல மார்க் எடுத்து பாஸ் பண்ணிட்டு வர்ற நம்ம பொன்னியும் படிக்கட்டுமே. நாம ஏன் குறுக்கே நிக்கணும்?
அண்ணன் கோவிச்சுக்க மாட்டாரா?
அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன். இதோ பாரு. நீ தெரிஞ்சுக்கணுங்கிறதுக்காக ஒன்னு சொல்றேன். உலகத்துல எந்த நாட்டுலேயும் இதைப் பெரிசு பண்ணுவது இல்லே. ஊருக்கெல்லாம் தெரியட்டும்னு தமுக்கு அடிக்கிறதும் இல்லே. சீர் செனத்திக்கு ஆசைப்பட்டுக் காத்துக் கிடக்கிறதும் இல்லே. பல் இல்லாம பிறந்த பிள்ளைக்கு பல் முளைக்குது. தரையில தவழ்ந்துக்கிட்டு இருந்த குழந்தை நடக்க ஆரம்பிக்குது. பேசுது. எழுதுது. வயசு ஆக ஆக கருப்பா இருக்குற தலை முடி வெளுத்துப் போகுது. இதையெல்லாம் கொண்டாடிக்கிட்டா இருக்கோம்? மொட்டை போட, காது குத்த, வளையல் போடன்னு எதுக்கெடுத்தாலும் வெட்டிச் செலவு பண்ணிக்கிட்டே அலையணுமா? அறிவு வளர்ச்சியில்லாத அந்தக் காலத்துல பொண்ணுக வயசுக்கு வர்றதைப் பெரிய விசயமா எடுத்துக்கிறதுக்கு மூடத்தனம் மட்டும் காரணம் இல்லே. அவசரமும் காரணம். உனக்குச் சொன்னா புரியாது
நான் படிக்காதவதான். எனக்குப் புரியறமாதிரி சொல்லப்படாதா?
நம்ம கலியாணத்தப்ப உனக்கு வயசு என்ன?
தலையைச் சொறிந்தபடி யோசித்து பதினெட்டுனு சொன்னாங்க என்றாள். எனக்கு 25. இது பரவாயில்லே. ஆனா அந்தக் காலத்துல என்ன நடந்ததுனு தெரியுமா? குழந்தைத் திருமணம். பெண் குழந்தைக்கு அஞ்சு வயசு. பையனுக்கு அதே வயசும் அதுக்கு மேலே ஒன்னுரெண்டு இருந்தாலே போதும். கல்யாணம் பண்ணி வச்சிருவாங்க. பெண் குழந்தையச் சிங்காரிச்சு உட்காரவச்சு, பொடியனை மாப்பிள்ளைக் கோலத்துல நிறுத்தி, கையில தாலியக் கொடுத்துக் கட்டச் சொல்லுவாங்க.
ஏதோ விளையாட்டாக்கும்னு குழந்தைங்க ரெண்டும் நினைச்சுக்கும்…
இது என்ன கன்றாவியா இருக்கு…
இனிமே சொல்லப் போறதையும் கவனமாக் கேளு. அப்பல்லாம் படிப்பும் இல்லே. பள்ளிக்கூடங்களும் இல்லே. அதுக பாட்டுக்கு விளையாடிக்கிட்டுத் திரியுங்க. பொண்ணு வளர்ந்து வயசுக்கு வந்துட்டான்னு வையி. அன்னிக்கி ராத்திரியே மாப்பிள்ளைப் பையனைக் கூட்டி வந்து சாந்தி முகூர்த்தம்னு சொல்லி முதலிரவுக்கு ஏற்பாடு பண்ணிருவாங்க. அறைக்குள்ளே தள்ளிக் கதவைப் பூட்டிருவாங்க. குழந்தைத் திருமணத்தைத் தடை செய்த பிறகுதான் அது சன்னஞ் சன்னமா குறைஞ்சுது. இப்பவும் தெரிஞ்சும் தெரியாமலும் நடக்குது. மைனர் பொண்ணுனு வெளியிலே தெரிஞ்சா அதிகாரிக வருவாங்க. போலீஸ் வரும். கல்யாணம் நின்னு போகும்…
பெத்தவங்க ஒத்திருந்துதானே நடத்துறாங்க?
நீ பேப்பர் படிக்கிறதில்லே. நம்ம பொண்ணு படிக்கிற பள்ளிக்கூடத்துலேயே போன மாசம் நடந்திருக்கு. அந்த டீச்சர் சொன்னாங்க. 9ஆம் வகுப்புப் படிச்சிக்கிட்டிருந்த பிள்ளைய 40 வயசு மாப்பிள்ளைக்கு ரெண்டாந்தாரமா கட்டிக்கொடுக்க ரகசியமா வேலை நடந்திருக்கு. விசயம் கலெக்டர் வரைக்குப் போயி கல்யாணம் நின்னுபோச்சு. கல்யாணம் நின்னுபோனா பரவாயில்லே. படிப்பு நின்னு போச்சேங்கிற ஏக்கத்துல அந்தப் பொண்ணு கிணத்துல குதிச்சிருக்கு. இப்போ அந்தப் பொண்ணு ஆஸ்பத்திரியில…
இப்படியும் நடக்குமா? என்ன இருந்தாலும் பழகிப்போனத, பழைய வழக்கத்தை எப்படிங்க மறக்கிறது? தாய்மாமன், உறவு, உரிமைன்னு சொல்லி கூடப் பிறந்தவன் வந்து நின்னா யாருங்க பதில் சொல்றது? சொந்தம் விட்டுப் போயிறக் கூடாதுல்ல
அத என்கிட்ட விடு. நான் பக்குவமாச் சொல்லி மைத்துனருக்குப் புரிய வைக்கிறேன். புருசன் செத்துப்போனா கூடவே பெண்டாட்டியையும் சேர்த்து எரிச்சுருவாங்க. உயிரோட. இப்ப முடியுமா? அப்பன் வெட்டுன கிணறுங்கிறதுக்காக உப்புத் தண்ணியக் குடிக்க முடியுமானு பெரியார் கேட்டாருன்னு ஒரு போடு போட்டா அடங்கிப் போவாரு. சொந்தம் விட்டுப் போகவும் கூடாது. கெட்டுப்போகவும் கூடாது. அதுக்குப் பெண்ணோட கல்வியும், சுதந்திரமும் அவசியம்.
உங்க பாடு என் அண்ணன் பாடு என்று அவள் சொல்லிமுடிக்கும்போது எதிர்பாராத ஒன்று நடந்தது. அறைக்கதவு திறந்தது. தூங்கிக் கொண்டிருந்த பொன்னி வெளியே வந்தாள். நீங்க பேசிக்கிட்டிருந்ததெல்லாம் என் காதுலேயும் விழுந்துச்சு. விடிஞ்சதும் நான் பள்ளிக்கூடம் போயாகணும் என்றாள் அழுத்தமாக.
நிச்சயம் நீ படிக்கத்தான் போறே. அந்தப் பொறுப்பு எங்களுடையது என்றான் அழகய்யா அன்பொழுக.
நாளைக்கே போகணும்…
திங்கக் கிழமை போலாம்மா. ஏன்னா நாளைக்கு ஞாயித்துக் கிழமை என்று குடும்பத் தலைவன் சொன்னதும் எழுந்த குபீர் சிரிப்பு அடங்க சில நிமிடங்கள் தேவைப்பட்டது.