சிங்கள இன வெறியன் ராஜபக்சேவின் கடும் கோபத்திற்கு ஆளாகியிருக்கும் ஒரு சிங்களர் நிமல்கா பெர்னாண்டோ. இனப்பாகுபாடுகள் மற்றும் இனவெறிக்கு எதிரான பன்னாட்டு அமைப்பின் தலைவி.
மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா கடந்த 3.3.2014 குங்குமம் இதழுக்கு அளித்த பேட்டியில் ஈழத்தமிழர்களுக்காகக் கொடுத்த குரலிலிருந்து…
இப்போதுள்ள நிலையில், சுயமரியாதையோடும், சுதந்திரத்தோடும் தமிழ் மக்கள் இலங்கையில் வாழ்வது சாத்தியமில்லை என்பதே என் கருத்து. இலங்கை தேசிய கீதத்தைக்கூட தமிழில் பாட சுதந்தரமில்லாத ஒரு நிலையில் எப்படி இணைந்து வாழ முடியும்? தமிழ் மக்கள் தங்களுக்கென்ற தனித்த சுயஆட்சி, சுயஅதிகாரம் கொண்ட ஒரு அரசையே விரும்புகிறார்கள். 75 சதவீத வாக்குகளை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியிருப்பதன் மூலம், எங்கள் பிரதிநிதிகளே எங்களை ஆளவேண்டும் என்று தமிழ் மக்கள் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்கள்.
தமிழர் பகுதிகளில் இருந்து முற்றிலுமாக ராணுவம் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும். அரசியல் சாசனத்தை முழுவதுமாக மாற்றி எழுத வேண்டும். தமிழர்களின் எதிர்ப்பு, கோபம், உணர்வுகள் அனைத்துக்கும் மரியாதை அளிக்க வேண்டும். அவர்களுக்கான திட்டங்களை அவர்களே தீர்மானிக்கும் நிலை வரவேண்டும். இலங்கை என்பது இரண்டு தேசிய இனங்களை உள்ளடக்கிய நாடு. இரண்டு தேசிய மொழிகளைக் கொண்ட நாடு. சிங்களர்களுக்கு உள்ள உரிமைகள், தமிழர்களுக்கும் உண்டு.
அய்.நா. சபையின் மூன்றாவது தீர்மானம் எதையாவது சாதிக்கும் என்ற நம்பிக்கையோடுதான் செயல்பாடுகளை முன்னெடுக்கிறோம். உலக நாடுகளிடம் பேசுகிறோம். போர்க்குற்றம் குறித்து சர்வதேச விசாரணை நடத்துவது ஒன்றே இப்போது நம் கோரிக்கை. உள்நாட்டு விசாரணை என்பது பொய். ஏமாற்று வேலை. இதை சமரசமில்லாமல் வலியுறுத்துவோம். உலக நாடுகளும் அழுத்தம் தரும் என்று நம்புகிறோம்.
என்னை சிங்களப்புலி என்கிறார்கள். அமெரிக்காவிடம் காசு வாங்கிக்கொண்டு வேலை செய்கிறேன் என்றும் சொல்கிறார்கள். தேசப் பற்று இல்லாதவள் என்று தூற்றுகிறார்கள். தேசத்தின் மீது பற்று இருப்பதால்தான் போராடுகிறேன். நான் வெறுப்பது இலங்கையின் ஆட்சியாளர்களைத்தான்; இலங்கையை அல்ல. இலங்கையில் எல்லாத் தரப்பினரும் அமைதியோடும், உரிமையோடும் வாழ வேண்டும். மனித உரிமையே எனது கொள்கை. மதம், இனம் கடந்து மனிதர்களுக்காகப் போராடுவது எனது இயல்பு. அதை யாருக்காகவும் மாற்றிக் கொள்ள மாட்டேன்.