இராமர் பாலக் கற்பனைக்கு எரியீட்டி – இராவணனின் இலங்கை எது? – புது ஆய்வு முடிவு

மார்ச் 16-31

– பேராசிரியர் ந.வெற்றியழகன்

கொக்கரிப்புக் கூக்குரல்கள்:

இன்றைக்கு, பொருளியல் வழி ஆதாயமும் கூடுதல் பயனும் தரத்தக்க வரத்தக்க சேதுப்பெருங்கடல் திட்டத்தை இந்துமத இதிகாசமாகிய இராமாயணம் எனும் நூல் அடிப்படையில் இந்துமதவாதிகளும், இதை அடிப்படையாகக் கொண்ட இயக்கங்களும் கட்சிகளும் திட்டமிட்டு வரிந்து கட்டிக்கொண்டு இத்திட்டத்தை ஒழித்துக்கட்ட கூக்குரல் எழுப்பி வருகின்றனர்.

புராதனச் சின்னம் என்றும் புலம்பல்

இந்தக் கும்பலுக்கு, அதிகார ஆட்சி மய்யமாக இருக்கும் இன்றைய தமிழ்நாடு அரசு, தனது முந்தைய கொள்கை அறிவிப்புக்கு மாறாக _ முரணாக _ எதிராக ஆதாம் பாலம் என்பதை இராமர் பாலம் என்று கூறி இதனை இந்தியாவின் புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டு ஏறி வழக்குத் தொடுத்து இந்தத் திட்டத்திற்கு உலை வைக்கும் உயரிய திருப்பணிக்கு உறுதுணை புரிந்து வருகிறது.

புறப்பட்டுவிட்டன புத்தம் புதிய ஆய்வுகள்

இப்பொழுது, இராமன், இராவணன் குறிப்பாக இலங்கை பற்றிய ஒரு புதிய ஆய்வுத்தகவல் கிடைத்துள்ளது. அது, இராமன் விந்திய மலைக்குத் தெற்கில் காலடி எடுத்துவைக்கவில்லை. சேதுபாலம் கட்டவில்லை; இலங்கை (இன்றுள்ளது)க்குச் செல்லவில்லை என்ற புதிய உண்மைகளை எடுத்துக் கூறுகிறது.

இலங்கை எது? அது இருப்பது (இருந்தது) எங்கே? அது, தற்போது சிங்களம் _ சிறீலங்கா எனப்படும் தீவா? என்ற புதிய ஆய்வுத் தகவல்களைத் தெரிவிக்கின்றன. இந்த ஆய்வு, இராமர் பாலம் எனப்படும் கட்டுக்கதையின் அடிப்படையைத் தகர்த்துவிட்டது. அதன் ஆணிவேரை அறுத்துவிட்டது.

இந்தப் புதிய ஆய்வு முடிவு முழுக்க முழுக்க உண்மை என்று ஏற்றுக்கொள்ள வேண்டியதில்லை. தவறானது, பொய்யானது என்று தள்ள வேண்டியதும் இல்லை. ஆனால், எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப(து) அறிவு

என்கிற அண்ணல் புத்தர், அறிஞர் திருவள்ளுவர், அய்யா தந்தை பெரியார் வழிநின்று பகுத்தறிவைப் பயன்படுத்துவோம்.

உண்மை எனின் கொள்ளுவோம்;
பொய்மை எனில் தள்ளுவோம்.

இராமர் பாலம் என்ற கற்பனைக் கட்டடத்தைத் தரைமட்டமாக்குவதால் இந்தப் புத்தாய்வு முடிவினைப் பார்ப்போம்; பகுத்தறிவோம்.

அயோத்தி-அப்படி ஒன்றும் இல்லையே!

இராமாயணத்தில் கோசலநாடு என்றும் அதன் தலைநகரம் அயோத்தி என்றும் அதன் அரசர்கள் தசரதன், இராமன் என்றும் கூறப்படுகிறது.

அயோத்தி என்பதாக ஒரு நகரம் உண்மையில் இருந்ததா? தொல்பொருள் அகழ்வாளர்கள் அகழாய்வு செய்தனர். அயோத்தி என்று கூறப்பட்ட நகரம் கி.மு.700 ஆண்டுகளுக்கு முன் இருந்ததற்கான சான்று எதுவும் கிடைக்கவில்லை என்று முடிவு வெளியிட்டுள்ளனர் அகழாய்வாளர்கள்.

ஆல மரங்கள் அய்ந்து

இராமாயணத்தில் பஞ்சவடி என்ற இடம் குறிப்பிடப்படுகிறது. அய்ந்து ஆலமரங்கள் ஒன்றாக இருந்த இடம் என்பது இதன்பொருள் (பஞ்சம் _அய்ந்து; வடம்_ஆலமரம், வடி_ஆலமரம் இருக்கும் இடம்). இராமன், சீதை தங்கியிருந்தது இங்கேதான்! இந்தப் பஞ்சவடி இராவணனுக்குச் சொந்தமான பகுதியாகும். இங்கு ஆரியர்கள் பரவி வந்து யாகங்களை இயற்றினர். இவர்கள் செய்த யாகங்களை இராவணனின் தம்பி முறையினரான கரன், திரிசிரன் முதலானவர்கள் மக்களுடன் சேர்ந்து எதிர்த்தனர்; தடுத்தனர்; போரிட்டனர்; மடிந்தனர்.

பஞ்சவடியில் சரபங்க முனிவன் இருப்பிடத்தில் இருந்த இராவணனின் ஆதரவாளர்கள் யாகங்களுக்கு எதிராக இருந்தவர்கள் இவர்கள்தான் அரக்கர் (ராட்சசர்)கள் என்று ஆரியர்களால் அழைக்கப்பட்டனர்.

மகதம் தாடகையின் ஆட்சியகம்

மகதம், தாடகையின் அதாவது இராவணனின் அத்தை முறை கொண்ட மூதாட்டியின் இருப்பிடம். இராவணனின் உறவுமுறை அடிப்படையில் இராவணன் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது.

இங்கு இருந்த அனைத்து மக்களும் தாடகையின் யாக எதிர்ப்புக்கு ஆதரவு தெரிவித்ததால் வட ஆரியரை எதிர்க்க முடிந்தது.

இராவணன் ஆண்ட நாடு இதுதான்!

மக்கள் நெருக்கமாக இருந்த சோணாறு ஆற்றின் பகுதி ஜனஸ்தானம் எனப்பட்டது. யாக நாட்டமுடைய வடவ(ஆரிய)ர்களை இராவணன் தலைமையில் எதிர்த்தனர்.
மத்தியப் பிரதேசத்தில் தற்போது சோன், டோன்ஸ், பைசூனி, சோணாறு ஆற்றுப் பகுதியின் பெரும்பகுதி, பீகார் மாநிலத்தில் ஒரு சிறிய தெற்குப்பகுதி, இராவணன் ஆட்சியில் இருந்த நாடு ஆகும்.

வேறொரு வகையில் சொன்னால், இன்றைய பீகார் மாநிலத்தில் கங்கையின் தெற்கில் மலையிடைக்காடு ஆகிய தாடகைவனம் முதல் ஏறத்தாழ அதே வடதீர்க்கப் பகுதியில் அமைந்துள்ள சித்ர கூடம், அனுசுயா குன்று, சுரங்க இருப்பிடமான பன்னா மலைத்தொடர், இன்றைய பன்னா மாவட்டத்தில் அமைந்த கென் ஆற்றில் அமைந்த பல பகுதிகள், இன்றைய தாமோ மாவட்டத்தில் சோணாறு ஆற்றில் அமைந்த பல பகுதிகள் வரை இராவணனின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருந்தது. சுருங்கக்கூறின், இராவணன் நாடு விந்தியமலைத் தொடரிலும் அதனைச் சார்ந்த பகுதியிலும் பீகார் நிலப்பகுதியில் சிறிய பகுதியும் கொண்டதாகும்.

இன்றைய மத்தியப் பிரதேசத்தில் தாமோ, பன்னா, சாத்னா மாவட்டங்களில் பெரும்பகுதியையும் பீகாரில் தென்பகுதியில் சிறிய பகுதியையும் கொண்டதுதான் இராவணன் ஆண்ட நாடு.

இலங்கை எது?

மத்தியப் பிரதேசத்தில் ஜபல்பூர் மாவட்டத்தில் பனகர் மஞ்ச கோனி சாலையில் இந்திரானா என்ற மலைக்குன்று இராமாயணத்தில் குறிப்பிடப்படும் இலங்கா ஆகும். எளிதில் செல்லமுடியாதபடி நிலப் பகுதியிலிருந்து துண்டிக்கப்பட்ட ஒரு பகுதியாக இருந்த இடம் இலங்கா ஆகும். ஏறத்தாழ 25 ச.கி.மீட்டர் பரப்பளவுள்ள இடம் இது.

நான்கு பக்கம் கடலா?

இலங்காவின் நான்கு பக்கமும் அகழிகள் இருந்தன. நீர்நிலையில் ஏறத்தாழ 16 கி.மீ. தொலைவிற்கு இருந்தது. கோடையில் வடதிசையில் மட்டும் அந்த அகழி வற்றிப்போய் தேர் போன்ற ஊர்தியில் வருமாறு இருக்கும்.

இலங்கா நகரத்தின் நான்கு பக்கமும் நீர் சூழ்ந்திருந்ததால் மரங்களைப் போட்டுப் பாலம் கட்ட வேண்டியிருந்தது.

பாலம் என்பது மழைக்காலம் மற்றும் நீர்ப் பிடிப்புக் காலத்தில் தேவையாக இருந்தது. இலங்காவைச் சுற்றிச் சாகரம் (கடல்) இருந்ததாக வால்மீகி கூறுகிறார். சாகரம் அல்லது சாகரா என்ற சொல்லிற்கு வடமொழியில் ஏரி, கடல், மாக்கடல் (சமுத்திரம்) எனப் பொருள் ஆகும்.

சீதர். எம்.கிபி என்பவர் சாகரம் என்ற பெயரில் மிகவும் பழைய காலத்தில் பல நீர்நிலைகள் இருந்தன என்கிறார். அவற்றுள், இதிகாசங்களுள் ஒன்றான இராமாயணத்தில் பேசப்படுகிற இலங்காவும் ஒன்றாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார்.

இன்றும்கூட, மைசூரில் கிருஷ்ணராஜசாகர் என்ற நீர்த்தேக்கம் எனக் கூறப்படுவதை ஒப்பிட்டுப் பார்க்கலாம். இதில் குறிப்பிடப்படும் சாகரம் என்பது கடலா? அல்ல; நீர்த்தேக்கம்!

இன்றைய இலங்கை இராமாயண இலங்கையா?

இலங்கைத் தொல்லியல் துறை அறிஞர் டாக்டர் பானாலி தானா என்பவர், இராமாயண இலங்கை இன்றைய இலங்கை அன்று என்று நிறுவியுள்ளார். (Indian Express. Madras 23-10-1971). அறிஞர் மான்காட் சுந்தரகாண்டம் பதிப்பு முகவுரையில் பல்வேறு துணைச் சான்றுகளைக் காட்டி, அறிஞர் பரமேசுவர அய்யர் அவர்களின் கருத்தையும் மேற்கோள் காட்டி இலங்கா இன்றைய இலங்கை அன்று என்று முடிவு கட்டியுள்ளார்.

பரமேசுவர அய்யர் கருத்துப்படி, அன்றைய இலங்கை மத்தியப் பிரதேசத்திலுள்ள விந்திய மலைக் காடுகளில் ஜபல்பூருக்கு 13 கி.மீ. தொலைவில் உள்ளது என்கிறார் டாக்டர் எச்.டி.சங்காலியா _ (கட்டுரை 4.10.1971). (Dr. H.D.Sankaliya article – Hindu 4-10-1971)

1925 இல் இந்தியக் கீழ்த்திசைஇயல் கருத்தரங்கில் சர்தார் கிபே (Sirdar Kibe) இலங்கா தொடர்பான ஓர் ஆய்வு நிகழ்த்தியுள்ளார்.

அவ்வாய்வில், விந்திய மலைச் சாரலுக்கும் மண்டலேசுவரர் நர்மதா ஆற்றுத் தீரத்திற்கும் இடைப்பட்ட சோலி என்ற ஊரே அன்றைய இலங்கை ஆகும் என்கிறார். மேற்கண்ட ஆய்வறிஞர்களின் கருத்துப்படி இராமாயண இலங்கா இன்றைய இலங்கை அன்று, அது மத்தியப் பிரதேசத்தில் இருந்தது என முடிவுக்கு வருகிறோம்.

இராவணனின் பரம்பரை இனம்

இன்றைக்கு இராவணனின் பரம்பரை கோண்டு இன மக்கள் ஆவர். குன்று என்ற தமிழ்ச் சொல் கோண்டு எனத் திரிந்தது. திராவிட மொழியான தெலுங்கில் கொண்டா எனப்படுகிறது.

இந்திரானா என்னும் மலை

தற்காலத்தில் ஜபல்பூர் மாவட்டத்தில் இந்திரானா மலை என்றும் இந்த இலங்கா குறிப்பிடப்படுகிறது. இதற்குத் திரிகூடமலை என்றும் பெயர்.

இன்று ம.பி.யில் ஜபல்பூர் நகரத்திற்கு அருகில் உள்ள இந்திரானா என்ற மலை இராவணன் இறுதியாகத் தங்கியிருந்த இடம் ஆகும். இராமன் இராவணனை இங்குதான் போர் தொடுத்தான். இதனைச் சுற்றியிருந்த நீர்நிலை வறண்டுவிட்டது என்கிறார் இராமபிரானைக் கற்போம் _ என்ற நூலாசிரியர் சிறீகோபால மகாதேசிகன். தற்போது கிரன், கையர் ஆறுகள் நிலப் பகுதிகளாக இருப்பதையும் மழைக்காலத்தில்  அவையே சதுப்பு நிலமாக இருப்பதாகவும் அறிகிறோம்.

இந்த இடத்தில் இருந்துதான் அனுமன் இந்திரானா இடத்திற்கு, சகதியும் நீரும் ஆக இருந்தபோது நீந்திச் சென்று சீதையை அறிந்து, அதே இடத்திற்கு வந்தான். மழை நீர் தேங்கும்போது அந்த நீர் இந்திரானா என்ற இலங்கை நகரத்தினைச் சூழ்ந்து காணப்படும்.

கட்டாக் கணவாய் பக்கத்திலிருந்து இலங்கா என்னும் இந்திரானா மலைக் குன்றுக்குச் சாதாரணமாக பாலத்தின் மூலமே செல்ல முடியும். கோடைக்காலத்தில் மக்கள் நடந்தே செல்ல முடியும். மரங்களைப் போட்டு மழைக்காலத்தில் இராமன் படை இலங்கை (இந்திரானா) சென்றது.

இராவணன் நாட்டில் வாழ்ந்த மக்களில் கோண்டு இன மக்களும் கோ(கூ)ர்க்கா இன மக்களும் சார்ந்த முன்னோர்கள் முக்கியமாக இருந்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தில் காணப்படும் கூர்க்கா இன மக்கள் இராமாயணத்தில் குரங்குகள், வானரர்கள் என்று கூறப்பட்டனர்.

மலையில் வாழ்ந்துவரும் அவர்களைக் குன்றவர்கள் என்று தமிழர் அழைப்பர். வால்மீகி குன்றவர்களை வானரர்கள் என்று இழித்துக் கூறியுள்ளான்.

ஆய்வு ஆதாரங்கள்

நர்மதா ஆற்றில் கிடைக்கும் புவியியல் ஆதாரங்கள் இங்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் மக்கள் வாழ்ந்தனர் என்பதை நிலைநாட்டுகின்றன. இந்தப் பழங்குடியினரான கோண்டு மக்கள்தான் இராவணன் பரம்பரையினர் என்பதற்கு அவர்களின் ஊர் அமைப்பு, பெண்களின் அணிகலன்கள், திருமணமுறை, உணவு, முகமூடி அணிந்து போரிடுதல், மாறுவேடம் பூணுதல், தொழில்கள் முதலியன அடிப்படை ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

கோண்டு மக்கள் பேசிய மொழி

குன்று என்ற சொல்லின் அடிப்படையில் கோண்டு மக்களின் பெயர் இருப்பதை அறிகிறோம். கு, குயி, கொயி, கோட்சு, கோண்டுசு என்ற தமிழ் அல்லது திராவிட மொழி அடிப்படையில் கோண்டு பழங்குடி மக்களின் பெயர்கள் வந்ததாக அமைகின்றது.

கோண்டுகள், கோண்டி எனப்படும் திராவிட மொழியைப் பேசுபவர்கள் கோர்க்கர்கள் முண்டா என்பதும் திராவிடமொழி பேசும் வானரர்கள் என்பதும் பரமசிவ அய்யரின் முடிவு.

ஊர், பூரி (ஜபல்பூர்) என்ற இடப்பெயர்கள் எல்லாம் தமிழ் (திராவிட) மொழிவழிப் பெயர்கள் ஆகும்.

இராவணனுக்கு விழா எடுத்தனரே!

மத்திய பிரதேசம் ஜோத்பூருக்கு அருகிலுள்ள பண்டைய தலைநகரமான மண்டோர் நகரில் இராவண விழாவை ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

இராவணன் துணைவி மண்டோதரி அந்நகரில் பிறந்தவள் என்றும் அதனால் இராவணனைத் தங்கள் நகரின் மருமகனாகக் கருதியும் அவனது வீரம், அறிவு, இசைப்புலமை, இலக்கியத் திறன் போன்றவற்றைப் போற்றும் வண்ணம் விழா நடத்தப்படுகிறது.

கான்பூரில் இராவணனுக்குக் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் இராவண விழா நடக்கிறது. சத்தீஸ்கர் மாநிலத்தில் அமர்கண்டதம் இடத்திலும் இராவணன் இந்திரஜித்திற்கு கோவில்களும் நீர்நிலைகளும் உள. இவர்கள் தங்கள் மூதாதையருக்கு இவ்வண்ணம் மரியாதை செய்கின்றனர்.

இராமாயண வண்டவாளம் என்ன? என்ன? என்ன?

வரலாற்று உண்மைகள் இவ்வாறு இருக்க, அதாவது இராவணனின் இலங்கா நகர் மத்திய பிரதேசத்தில் இருப்பதைப் புறக்கணித்து விந்தியம் தாண்டி வந்தனர் என்றும், சேதுக்கடலில் பாலம் சமைத்தனர் என்றும் இந்துமதவாதிகள் கூறும் வண்டவாளங்கள் தண்டவாளங்கள் ஏறிவிட்டன என்பதை நாம் உணர்கிறோம்.

துணை செய்த நூல்கள்

1.    இராவணன் நாடு _ அகத்தியதாசர் _ (பெரிதும் துணை செய்தது)

2.    இராமனைக் கற்போம் _ சீ.கோபால தேசிகன்

3. Ramayana Temples –  சித்ராராம் குருமூர்த்தி,  விகாஸ் பப்ளிசிங் ஹவுஸ், நியூடெல்லி.

4.    நமது நாடு என்னும் தோட்டத்திலே _ த.ஜகன்னாதன்.

5.    Ravana and his Tribes – R.Ramakrishnan

6.    The Wonder that was India – A.L. Basham

7.    Ramayana and Lanka – T.Paramasiva Iyer.

மற்றும் சில நூல்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *