நாகரிகம் என்கிற வார்த்தைக்கு எந்தக் கருத்தை வைத்துக் கொண்டு பேசினாலும் மக்கள் சமூகம், நடை, உடை, உணவு மற்றும் எல்லா நடவடிக்கைகள், பாவனைகளிலும், பிறரிடம் பழகுவதிலும் பெரிதும் மாறுபட்டிருக்கிறது. எந்த ஆதாரத்தினால் இவை மாறுபட்டிருக்கிறது என்று கூற முடியாது. எப்படியோ எல்லாம் மாறுதலில்தான் போய்க் கொண்டிருக்கிறது.
நம்முடைய பெண்கள் முன்பு பெரும்பாலும் ரவிக்கை அணிவதில்லை. அணிவதிலும் பல்வேறு மாறுபாடுகளை, முறை மாற்றிக் கொண்டே வருவதைக் காண்கிறோம். மேல்நாட்டிலும் பெண்கள் தெருக்கூட்டுவது போன்ற ஆடைகளை முன்பு அணிந்து வந்தார்கள்.
இடை சிறுத்துக் காணும்படி தொம்பைக் கூடுபோன்ற பாவாடையுடன் கூடிய கவுன்கள் அணிந்து வந்தார்கள். பணக்காரப் பெண்கள் தங்கள் நீண்ட அங்கிகளை பின்னால் தூக்கிப் பிடித்துக் கொள்ள பணியாட்களை நியமித்துக் கொண்டிருந்தனர். அது அக்காலத்திய நாகரிமாகத் தோன்றியது இன்றோ ஆடை விஷயத்தில் மேல்நாட்டுப் பெண்கள் எல்லாம் சுருக்கிக் கொண்டு விட்டார்கள். இதையும் நாகரிகம் என்றுதான் கருதுகிறோம்.
நாம் இவைகளைப் பற்றி எல்லாம் பேசும்பொழுதும், யோசிக்கும் பொழுதும் எந்தவிதப் பற்றுதலும் இல்லாமல் அதாவது, ஜாதி, மதம், தேசம் என்பன போன்று பற்றுக்களை விட்டுவிட்டு சுயேச்சையாகச் சீர் தூக்கிப் பார்த்தால்தான் நன்றாக விஷயங்களைத் தெரிந்து கொள்ளலாம். அதன் உண்மையும் அப்பொழுதுதான் விளங்கும்.
***.
நாகரிகம் என்பது நிலைமைக்கும், தேசத்திற்கும் காலப்போக்குக்கும் தக்கவாறு விளங்குவதாகும். மாறிக் கொண்டே வருவதாகும். காலதேச வர்த்தமான பழக்கத்தையொட்டி நாகரிகம் காணப்படுகிறது. காலப் பேச்சானது எந்தத் தேக்கத்தையும் உண்டாக்குவதில்லை. ஒன்றிலிருந்து மற்றொன்று தோன்றவும், புரட்சிகரமான மாற்றங்களை ஏற்படுத்தவும் செய்கிறது.
மீசை, தலைமயிர் இவைகளைப் பற்றியெல்லாம் குறிப்பிட்டீர்கள். எது நாகரிகமென்று கருதுகிறோமோ, அது பெருத்த அஜீரணத்துக்கு வந்துவிடுகிறது. மீண்டும் அந்த நிலைமையானது மாறிக் கொண்டு போகத்தான் செய்கிறது.
ஒரு விஷயமானது, வாய்ப்பேச்சு சாமர்த்தியத்தினால் செலாவணியாகி விடக் கூடும். அது மெய்யோபொய்யோ, சரியோதப்போ எப்படியும் இருக்கலாம். வருங்காலத்தில் உடல் உழைப்புக் குறைத்து வரும் நிலையேற்பட்டே தீரும். அதுவே நாகரிகமாகக் கருதப்படும்.
நாம் ஏன், எதற்காக உழைத்துப் பாடுபட்டுக் கொண்டேயிருக்க வேண்டும்? பகுத்தறிவு படைத்த நாம் பாடுபட்டுத்தான் ஆக வேண்டுமா? நாகரிகம் என்பது சதா உழைத்துத்தான் உண்ண வேண்டுமா? பல கேள்விகள் எழுந்து மக்கள் சமூகம் கஷ்டம் தியாகமின்றி நலம்பெற முயற்சிக்கலாம். இது நாகரிகமாகக் கருதப்பட்டு பயன் அடையக் கூடும்.
நாம் ஒரு காலத்தில் தேசம், தேசியம், தேசப்பற்று என்பதை நாகரிகமாகக் கருதி வந்திருக்கிறோம். ஆனால், இன்றோ அவைகளை எல்லாம் உதறித் தள்ளி மனித ஜீவகாருண்யம் உலக சகோதரத்துவம் (Citizen of the World) என்று கருதுவதையே பெரிதும் நாகரிகமாகக் கருத முன்வந்து விட்டோம்.
***
தோழர்களே, நான் குறிப்பாக ஒரு விஷயத்தைப் பற்றி வற்புறுத்தி இங்கு கூற விரும்புகிறேன். அதாவது, நாம் அனுபவ முதிர்ச்சியால் முற்போக்கு ஆகிக் கொண்டு, வந்து கொண்டேயிருக்கிறோம் என்பதாகும். நாம் எல்லா மனிதர்களையும் அறிவின் உணர்ச்சியால் ஆழ்ந்து கவனிக்கிறோம்.
உதாரணமாக, வியாபாரிகளை மக்கள் சமூகத்தின் நலனைக் கெடுத்து லாபமடையும் கோஷ்டியினரென்றும், லேவா தேவிக்காரர்களை மனித சமூக நாச கர்த்தாக்களென்றும் மத ஆதிக்கங்கொண்ட வர்க்கத்தினர்களை மனித சமூக விரோதிகளென்றும் கண்டிக்கிறோம்.
***
நம்மிடையேயுள்ள ஜாதி அபிமானம், சொந்தக்காரர்கள் என்ற அபிமானம், மொழிப் பற்று, தேசப்பற்று எல்லாம் நம் அறிவை மழுங்கச் செய்கின்றன. இந்த அபிமானம், – பற்று எல்லாம் தொலையாவிட்டால் எந்த நல்ல விஷயத்திலும் நாம் சரியான முடிவு காண்பது அரிது. நமது முடிவு நியாயமானது, சரியானது என்று கொள்ள முடியாது.
காந்தியார் மேனாடு சென்றபோது பிடிவாதமாக முழங்கால் அளவுக்கு ஒரே ஆடையணிந்திருந்தார். நன்கு ஆடையணியாமல் குளிரில் விறைத்துப் போகும்படி (கேவலம் இந்திய தர்மம் என்ற எண்ணத்துக்கா) இங்கிலாந்தில் கஷ்ட வாசம் செய்தார். இது எவ்வளவு தூரம் நியாயமான செய்கையாகும்? அறிவுக்கு ஒத்த செய்கையெனச் சொல்ல முடியுமா? எல்லோரையும் அவ்வாறு இருக்கச் செய்ய முடியுமா? செய்தாலும் சரியாகுமா?
உலகில் புதிய புதிய எண்ணங்களும், செய்கைகளும் மலர்ந்த வண்ணம் உள்ளன. நிகழுகின்றன. நீங்களும் காலப் போக்கில் உரிய பலனை வீணாக்காமல் அனுபவிக்கத் தவறக் கூடாது. பகுத்தறிவை மேற்போட்டுக் கொண்டு சிந்தித்து ஜன சமுதாய நன்மை எது என்று தேடி அதற்காகப் பாடுபட முன்வாருங்கள். உங்களுடைய இந்த முயற்சிதான் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும்.
வெறும் கடவுள் நம்பிக்கை கொண்டிருந்தவர்கள்கூட தங்கள் போக்கை மாற்றிக் கொண்டு மெய்வருத்தக் கூலி தரும் என்பதை உணர்ந்து சொல்லியும், செய்தும் வருகிறார்கள். ஆகவே, நீங்கள் தன்னம்பிக்கை கொண்டு மக்களின் விடுதலைக்கு ஆன வழிகளில் பகுத்தறிவை அடிப்படையாகக் கொண்டு போராட முன்வர வேண்டும்.
தனக்கு என்னென்ன வசதிகள், நன்மைகள், பெருமைகள் தேவையென்று கருதப்படுகிறதோ அவற்றை சமுதாயத்தில் உள்ள அனைவரும் அடையச் செய்யும் வழியில் நடப்பதே உண்மையான நாகரிகம் என்பதாகும். நாகரிகம் சமுதாயத்தின் பொதுவான முன்னேற்ற நிலை என்று கொள்க. இது கால விஞ்ஞான அறிவுப் பெருக்கத்துக்கு ஏற்ற வகையில் முன்னேறிக் கொண்டும் மாறுபட்டுக் கொண்டும் இருப்பதாகும். மக்கள் வாழ்க்கை இன்பமயமாகத் திகழச் செய்வதே நாகரிகம்.
(1933-ஆம் ஆண்டு தந்தை பெரியார் அவர்கள் இந்தியாவில் காணப்படும் இன்றைய நாகரிகம் என்ற பொருள் பற்றி ஆற்றிய உரையிலிருந்து- விடுதலை 9.2.1964).