நாத்திக அறிவியலாளர் – பால் நர்ஸ்

மார்ச் 16-31

– நீட்சே

இங்கிலாந்து நாட்டு மரபணுயியலாளரும், செல்உயிரியலாளருமான சர் பால் மேக்சைம் நர்ஸ் (Sir Paul Maxime Nurse) என்ற அறிவியலாளர்  1949 ஜனவரி 25 ஆம் தேதியன்று பிறந்தவர். லேலேன்ட் எச். ஹார்ட்வெல் (Leland H. Hartwell)  மற்றும் ஆர். திமோதி ஹன்டு (R. Timothy Hunt) ஆகியோருடன் இணைத்து உடலியல் அல்லது மருத்துவத்துக்கான நோபல் பரிசு 2001ஆம் ஆண்டில் நர்ஸூக்கு வழங்கப்பட்டது. உடலின் செல் சுழற்சியில் செல்களைப் பகுத்துப் பெருக்கும் செயலைக் கட்டுப்படுத்தும் புரத மூலக் கூறுகளைக் கண்டு பிடித்ததற்காக இந்த நோபல் பரிசு இம்மூவருக்கும் வழங்கப்பட்டது.

மய்யக் கரு உள்ள செல்கள் பிரிந்து பெருக்கமடையும் நடைமுறையின் நிலைகள்  (G1-Growth) வளர்ச்சி, (S- synthesis) கூட்டிணைப்பு, (G2- growth) வளர்ச்சி, (M- mitosis) பிரிந்து பெருகுதல் என்று அழைக்கப்படுகின்றன. இவற்றில் ஒரு நிலையில் இருந்து மற்றொரு நிலைக்குச் செல்வதைக் கட்டுப்படுத்தும்  Cyclin மற்றும்  cyclin dependent kinase  என்ற இரண்டு புரதங்கள் இருப்பதை இவர்கள் மூவரும் கண்டுபிடித்தனர். இந்த புரதங்கள் சோதனைப்புள்ளிகள் என்று அழைக்கப்படுகின்றன. இதன் காரணம் ஒரு செல் சரியாகப் பிரிகிறதா என்பதை அவை சோதனை செய்து சரிபார்க்கின்றன. அந்த செல் சரியாகப் பிரியவில்லை என்றால்  அதனைச் சரி செய்ய மற்ற புரதங்கள் முயல்கின்றன. அவற்றின் முயற்சிகள் வெற்றி பெறாவிட்டால் சரியாகப் பிரியாத அந்த செல் அழிக்கப்பட்டு விடுகிறது. ஒரு செல் சரியாகப் பிரியாமலும், அதே நேரத்தில் அழிக்கப்படாமலும் இருக்குமானால்   புற்று நோயையும் மற்ற கொடிய நோய்களையும் ஏற்படுத்த அதனால் இயலும்.

ஈஸ்டில் ஆராய்ச்சி செய்த நர்ஸ் cdc2  என்ற மரபணுவை அடையாளம் கண்டார். செல்களின் நிலை மாற்றத்தில் G1 நிலையில் இருந்து S நிலைக்கு மாற்றம் பெறுவதை இந்த மரபணு கட்டுப்படுத்துகிறது. செல் பிரியும்போது, மரபணுப் பெருக்கம், G2 வளர்ச்சி மற்றும் M பிரிந்து பெருகும் நிலை மாற்றத்துக்கான தயாரிப்பின்போது செல் வளர்ச்சி அடைகிறது. இதனை ஒத்த மரபணுவான CDK1 மனித உடல்களில் இருப்பதாகவும் நர்ஸ் கண்டுபிடித்தார். இத்தகைய மரபணுக்கள் பாஸ்பேட் குழுக்களைச் சேர்ப்பது அல்லது நீக்குவதன் மூலம் இந்த  cyclin dependent kinase செயல்படவைக்கச் செய்யவும், செயல்பட விடாமல் நிறுத்தவும் செய்கின்றன.

நர்ஸ் தற்போது ராயல் சொசைட்டியின்  தலைவராகவும், பிரான்சிஸ் கிரிக் இன்ஸ்டிடூட்டின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் இயக்குநராகவும் இருக்கிறார். பொது நிகழ்ச்சிகளின் போது அறிவியலைப் பற்றி அறிவியலாளர்கள் பேச வேண்டும் என்று கூறும் இவர், ஜோதிடம், வாஸ்து போன்ற  போலி அறிவியல் கோட்பாடுகளை ஆதரிக்கும் அரசியல்வாதிகளை எதிர்த்து அறிவியலாளர்கள் சவால் விட வேண்டும் என்றும் வலியுறுத்துகிறார்.

ஆல்பர்ட்டன்  லியோன் பூங்கா பள்ளியிலும், பின்னர் மாணவர்களுக்கான ஹார்ரோ கவுன்டி பள்ளியிலும் நர்ஸ் கல்வி பயின்றார். பர்மிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை முடித்த இவர், கிழக்கு ஆங்கிலா பல்கலைக்கழகத்தின் உயிரியல் கல்வி நிறுவனத்தில் 1973இல் தனது ஆராய்ச்சி முனைவர்  PhD பட்டம் பெற்றார். 1973 முதல் 1979 வரை அடுத்த 6 ஆண்டு காலமும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தின்  முர்டோத் மிச்சிசன் (Laboratory of Murdoch Mitchison) சோதனைச் சாலையில் முனைவர் பட்ட ஆராய்ச்சிக்குப் பிறகான தனது ஆராய்ச்சிப் பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டார்.

ஈஸ்டில் இருக்கும் cdc2 என்ற மரபணுவை 1976 இல் நர்ஸ் அடையாளம் கண்டார். G1  நிலையிலிருந்து  S நிலைக்கும், G2 நிலையிலிருந்து M நிலைக்கும் மாறும் செல் சுழற்சி நடைமுறையை  இந்த மரபணு கட்டுப்படுத்துகிறது. மனித உடலில் இருக்கும்  Cdk1 என்ற ஒத்திசைவான    (homologous) மரபணுவை 1987இல் நர்ஸ் அடையாளம் கண்டார். இம்பீரியல் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் 1984இல் நர்ஸ் பணியில் சேர்ந்தார். ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழகத்தின்  மைக்ரோபயாலஜி துறையின்  இருக்கையை 1988இல் அவர் ஏற்றுக் கொண்டார். பின்னர் 1993இல் ஆராய்ச்சி இயக்குநர் பணிக்கு பழைய புற்று நோய் ஆய்வு நிறுவனத்துக்கே அவர் திரும்பினார். 1996 இல் அந்நிறுவனத்தின் டைரக்டர் ஜெனரல் என்ற நிலைக்கு அவர் உயர்த்தப்பட்டார்.

2002இல் இந்நிறுவனத்தின் பெயர் இங்கிலாந்து புற்றுநோய் ஆய்வு நிறுவனம் என்று மாற்றம் பெற்றது. 2003இல் நியூயார்க் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தின் தலைவராக ஆன இவர் தனது செல் சுழற்சி ஆய்வினைத் தொடர்ந்து செய்து வந்தார். இங்கிலாந்து நாட்டின் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்பு மய்யத்தின் இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலராக நர்ஸ் 2010 ஜூலை 15 அன்று அறிவிக்கப்பட்டார். மார்டின் ரீசுக்குப் பிறகு 2010இல் ராயல் சொசைட்டியின் தலைவர் பொறுப்புக்கு நர்ஸ் வந்தார்.

இயற்கைத் தேர்வு, மனிதக் கருவில் இருந்து எடுத்து மேற்கொள்ளப்படும் ஸ்டெம் செல் ஆராய்ச்சி, மனிதத் தோற்ற வளர்ச்சி பருவமாற்றம் ஆகியவைகளைப் பள்ளிகளில் போதிப்பதை எதிர்த்து வந்த, அமெரிக்க அதிபர் தேர்தல் ரிபப்ளிகன் கட்சி வேட்பாளரை நர்ஸ் கண்டித்து விமர்சித்தார். உண்மை நிலையையும், தங்கள் கருத்துகளையும்  முழுமையாக வெளிப்படுத்தாமல் இருப்பதற்காக அறிவியலாளர்கள் மீதும் அவர் குற்றம் சாட்டினார். அமெரிக்காவில் இவ்வாறு நடப்பதைக் கண்டு தான் பேரதிர்ச்சி அடைந்ததாக அவர் கூறினார்.

கோட்பாட்டை விட்டுவிட்டு, வெற்றுக் கூச்சல் மூலம் அறிவியல் விவாதத்தை அரசியல் விவாதம் போலக் கருதி மேற்கொள்வது முதல் பிரச்சினை; பள்ளிகளில் அறிவியல் கற்பிக்கும் நிலை அடுத்த பிரச்சினை. இங்கிலாந்து நாட்டுப் பள்ளிகளில், குறிப்பாக மதப் பள்ளிகளில் அறிவியல் பற்றி எவ்வாறு விவாதிப்பது என்பது கற்பிக்கப்படுவதில்லை என்று அவர் கூறுகிறார்.

ஆதாரங்கள், சோதனைகள், அணுகுமுறையில் நிலைத்தன்மை, கோட்பாடுகளைப் பற்றி அடிக்கடி சோதனைகளை மேற்கொள்வது ஆகியவற்றுக்கு முக்கியத்துவமும், மரியாதையும் தருவதால்,   நம்பத்தகுந்த முறையில் அறிவை உருவாக்க இயன்றது அறிவியல் நடைமுறை மட்டுமே என்பதை நாம் வலியுறுத்தவேண்டும் என்று அவர் எழுதுகிறார்.

குறுகிய மனப்பான்மை, மூடநம்பிக்கை, போலி அறிவியல்கள் ஆகியவற்றைத் தோலுரித்துக் காட்டும் பொறுப்பும் கடமையும் அறிவியல் தலைவர்களுக்கு உள்ளன என்று நர்ஸ் கூறுகிறார். தேர்தல் காலங்களில் அரசியல்வாதிகளின் மடமையை வெளிப்படுத்தி எதிர்க்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். தனது தன்வரலாற்றில் நர்ஸ் கூறுகிறார்: பல ஆண்டு காலத்தில்  சிறிது சிறிதாக மதநம்பிக்கையிலிருந்து விடுபட்டு வந்துவிட்ட நான் இன்று ஒரு நாத்திகனாக, மிகச் சரியாகக் கூறுவதானால், கடவுள் கருத்து மறுப்பாளனாக இருக்கிறேன்.

நோபல் பரிசு மட்டுமன்றி நர்ஸ் பல்வேறுபட்ட விருதுகளையும், கவுரவத்தையும் பெற்றவர் ஆவார். 1998 இல் அடிப்படை மருத்துவ ஆராய்ச்சிக்கு இவர் ஆல்பர்ட் லாஸ்கர் விருதும்,  1999 இல் நைட் பட்டமும், 2002 இல் பிரஞ்சு லெஜியன் ஆஃப் ஹானர் பட்டமும், 2005 இல் கோப்லி பதக்கமும் இவருக்கு அளிக்கப்பட்டன. அமெரிக்க கலை மற்றும் கல்வி அகடமியின் அயல்நாட்டு மதிப்புறு உறுப்பினர் என்ற உயரிய மரியாதை 2006 இல் இவருக்கு வழங்கப்பட்டது.

அறிவியல், பொறியியல் பிரச்சார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராகவும் அவர் இருந்தார். அவரது அடிப்படை ஆராய்ச்சிக்காக ஹோப் பண்ட்ஸ் அவார்ட் ஆஃப் எக்சலன்ஸ் 2007 இல் இவருக்கு வழங்கப்பட்டது. உலக கலாச்சார கவுன்சில் இவருக்கு 2013 ஆம் ஆண்டில் அறிவியலுக்கான ஆல்பர்ட் அய்ன்ஸ்டீன் உலக விருது வழங்கி பெருமைப்படுத்தியது. இவர் பல பல்கலைக்கழகங்களிலிருந்தும் பல மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

 

– தமிழில்: த.க.பாலகிருட்டிணன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *