புதுப்பா : நிஜ முகம் பெற்றுத் திமிறுவோம்

மார்ச் 16-31

நெடிய இருள் கப்பியறை
முகங்கள்தான்
நூற்றாண்டுகளில்
எங்களுடையது.

எச்சில்துப்பிக் கொள்ள
மொந்தையும்
தெருப்பெருக்கி தீட்டுக்கழிக்க
கந்தையும் தவிர
எம்முண்ணோருக்கு
மறுக்கப்பட்டன உடைகள்.

மாராப்பு பறிக்கப்பட்ட
மார்புகளோடு
அலைந்து எம்பெண்களின்
யோனிகளைத்தவிர
மற்றெல்லாமே தீட்டாய்தெரிந்தன
நூற்றாண்டுகளுக்கு.

செவிகளில் ஊற்றப்பட்டது
உறைந்த ஈயத்தை எடுத்து
ஆயதம் தயாரிக்கத் தெரியாத எம்மவர்க்கு
நூற்றாண்டுகளில் கடைசி நிமிடங்களில் கூட
சரஸ்வதி பாய்விரிக்கவில்லை.

ஊர்களுக்கு ஓர வெளியில்
மாடறுத்து பறைசெய்த எம்மவர்
கத்திகளுக்கு கழுத்தறுக்கத் தெரியாதபோது
நூற்றாண்டுகள் தோறும்
கட்டுகளே கைகள்.

உழுதலுக்கு வந்தபோது
ஆண்டைகளால் விசறியடிக்கப்பட்ட
பருக்கைக் கூலிகளைப் பொறுக்க
குனிந்து
மோத தெரியாத எம்மனோர் தலைகளில்
நூற்றாண்டுகள் பாரங்கள் கவிழ்ந்தன
எழ முடியாமல்.

அடுத்தடுத்த நூற்றாண்டுகளில்
சில திமிறல்கள் ஒளிக்கீறல்களாக
உருவெடுத்தப்போது-அதையும்
அபகரித்தனர் அவர்கள்

சேரிகள் காலனிகளாயின
எம்மக்கள் அரிஜனங்களாக்கப்பட்டோர்கள்.

சைவம் நந்தனையும்
வைணவம் சம்பூகனையும்

ஆரியமும்
காந்தியமும்
எம்மையும் எடுத்து தின்று செரித்து
சாம்பலாக்கின.

முந்தின நூற்றாண்டுகளில்
ஆரியப் பார்ப்பான
இந்துத்துவ நெருப்பில்
தன்விலாவினை எரித்து
கிடைத்த
வெம்மையில்
மனிதம் செய்தார்கள்
எமது
அண்ணல் அம்பேத்காரும்
அய்யா தந்தைபெரியாரும்.

முடியவில்லை ஆனாலும்
நூற்றாண்டுகளின் சதி.

வெண்மணி
விழுப்புரம்
முதுகளத்தூர்
கொடியான்குளம்
மேலவளவு………..
……………
……….
தாமிரபரணி
சிதம்பரம்

……………
……….தரும்புரி……
……

இன்னும்….
இருபதாம் நூற்றாண்டும்
இணையற்றதே எம்மக்களின்
உயிர்குடிப்பதில்.

எம்முகங்களின் மீது படிவுற்ற
ஒவ்வோரு நூற்றாண்டின்
இருள் படிமங்களையும்

எமது தமிழ்தேசத்தந்தை
பெரியாரின்
கொள்கை ஏற்பதோலுடும்..
மாமேதை அண்ணலின்
அறிவொளியோடும்

அறுத்தெடுத்து
அறுத்தெடுத்து
நிஜ முகம் பெற்றுத் திமிறுவோம்
வரும் ஆண்டிலிருந்து….!!!!

– செந்தில்நாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *