இலங்கைக்கு எதிரான அமெரிக்கத் தீர்மானம்: உலகத் தமிழர்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகும்!
வலிமையான தீர்மானத்தைக் கொண்டு வந்தாவது காங்கிரஸ் தனது கட்சியைக் காப்பாற்றிக்கொள்ள முயலட்டும்!
இலங்கையில் நடைபெற்ற இராஜபக்சே அரசின் இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் இவைகளைக் கண்டித்தும், விசாரணையும், நடவடிக்கையும் தேவை என்பதுபற்றியும், உலகம் முழுவதிலுமுள்ள தமிழர்கள் மட்டுமல்லாமல், மனித உரிமை ஆர்வலர்கள், காப்பாளர்கள், அமைப்புகள் வற்புறுத்தி வருகின்றன.
அய்.நா.வின் மனித உரிமை ஆணையத் தலைவர் நவநீதம்பிள்ளை அவர்களிடம் நேரிலேயே டெசோவின் சார்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தி.மு.க. பொருளாளர் தளபதி மு.க.ஸ்டாலின், தி.மு.க. நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு ஆகியோர் நேரில் சந்தித்து வற்புறுத்தி மனு கொடுத்தனர்.
உலகம் முழுவதிலும் இத்தகைய வற்புறுத்தலின் குரல் _ – நீதியின் குரலாக ஓங்கி ஒலித்தது.
இலங்கைப் போர்க் குற்றங்களுக்கு எதிராகக் கண்டனத் தீர்மானம் ஒன்றை அமெரிக்கா கொண்டு வந்திருப்பது வரவேற்கத்தக்கது என்றாலும், அத்தீர்மானம் ஏதோ ஒப்புக்குச் சப்பாணி என்பதுபோல் அமைந்திருப்பது நமக்கு மட்டுமல்லாமல், உலகத் தமிழர்களுக்கே மிகப்பெரும் ஏமாற்றத்தை அளிக்கிறது.
விசாரணையை இலங்கை அரசே மீண்டும் விசாரித்து முடிவுகளைக் கூறவேண்டும் என்று அத்தீர்மானம் கூறுகிறது.
இதனால் ஒரு பயனும் ஏற்படாது; சுதந்திரமான விசாரணையும், தொடர் நடவடிக்கையும் தேவை!
குற்றவாளியையே காவல் துறை விசாரணை அதிகாரியாக நியமித்தால், எங்காவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமோ, நீதியோ கிடைக்குமா? ஒருபோதும் கிடைக்காது!
சர்வதேச விசாரணை _- சுதந்திரமான வெளிநாட்டு விசாரணைக் குழுவினால் நடத்தப்பட்டு, உலக அரங்கில் இதற்குமுன் போர்க்குற்றம் நிகழ்ந்த பற்பல நாடுகள் தண்டிக்கப்பட்டதுபோல, ஆக்கப்பூர்வ நடவடிக்கைகள் அமையவேண்டும். இனப்படுகொலை என்பது தீர்மானத்தில் வலியுறுத்தப்பட வேண்டும்.
உலகின் மனித உரிமையைக் காக்கும் கடமை உணர்வுடைய அனைவரும் இதில் தயவு தாட்சண்யம் பாராமல் ஒருமித்துக் குரல் கொடுக்க வேண்டும்.
இந்தியாவின் மத்திய அரசுக்கு இதுதான் ஒரு கடைசி வாய்ப்பு -_ ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமை மீது ராஜபக்சே அரசுக்குத் துணைபோன நிலைப்பாட்டினால் ஏற்பட்ட கறைகளைத் துடைத்துக் கொள்ள.
தனியாகவே தீர்மானம் கொண்டு வருவதற்கு இந்தியா, ஏற்கெனவே கலைஞர் தலைமையிலான டெசோ கேட்டுக் கொண்டபடி செய்திருக்க வேண்டும்;
இப்போதாவது ‘‘Better late than never’’ என்ற பழமொழிக்கேற்ப காலந்தாழ்ந்தாவது, வலிமையான திருத்தத்தைக் கொண்டு வந்தாவது, தங்களது ஆட்சி, கட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவாவது முயற்சிக்கட்டும்!
ஈழத் தமிழர்களைக் காப்பாற்றுவதைவிட, இவர்களை (காங்கிரஸ் கட்சி)க் காப்பாற்றிக் கொள்ளவாவது அது ஓரளவு உதவக்கூடும்!
– கி.வீரமணி,
ஆசிரியர்