நம்மால் முடியாதது யாராலும் முடியாது
யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும் எனும் தமிழர் தலைவர் சொல் வாக்குக்கேற்ப மிக எழுச்சியுடன் சிறப்பாக நடந்தேறியது மன்றல் 2014.
தந்தை பெரியார் 95 ஆண்டுகள் வாழ்ந்து தொண்டாற்றும் வாய்ப்பு அமைய தன்னை மெழுகுவர்த்தியாய் ஆக்கிக்கொண்ட அன்னை மணியம்மையாரால் தொடங்கப்பட்ட பெரியார் சுயமரியாதைத் திருமண நிலையம்
ஏறத்தாழ 40 ஆண்டுகளாக வெற்றிகரமாக தன் பணியை விளம்பரமின்றி செய்து கொண்டிருக்கிறது. எதையும் நவீன காலத்திற்கேற்ப மாற்றி இன்னும் வெகு மக்களைக் கவரும் விதத்தில் தந்தை பெரியாரின் இலட்சியங்களைக் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் செயலாற்றும் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களின் ஆக்கத்தில் விளைந்த மன்றல் எனும் மாபெரும் ஜாதி மறுப்பு இணைதேடல் பெருவிழா மீண்டும் சென்னை பெரியார் திடல் நடிகவேள் இராதா மன்றத்தில் 23.2.2014 அன்று நடைபெற்றது.
குறுகிய கால ஏற்பாட்டிலும் மக்கள் ஆர்வத்துடன் பங்கெடுத்தது அய்யாவின் குறிக்கோளாகிய ஜாதி ஒழிந்து மனிதர்கள் அனைவரும் சமம் என்னும் நிலை உருவாகும் நாள் வெகு காலத்தில் இல்லை என்பதை உணர்த்தியது.
ஜாதி மறுப்பு, மதமறுப்பு, மாற்றுத் திறனாளிகள், மணமுறிவு பெற்றோர், துணையை இழந்தவர்கள் என அனைத்துப் பிரிவிலும் ஜாதியை மறுத்த நிகழ்வில் பங்கெடுத்தோர் மொத்தம் 172 பேர். இது மட்டுமல்லாமல் போனமுறை நடந்த சென்னை மன்றலில் கலந்து கொண்டோரும் (62 பேர்) இதில் கலந்து கொண்டனர். வந்திருந்த மணமுறிவு பெற்றோர் பலரிடம் பேசியபோது ஜாதகம், நேரம், காலம் பார்த்து எங்களுக்குத் திருமணம் செய்தார்களே தவிர எங்களுக்கு ஏற்றவர்களா என்று நாங்கள் தேர்ந்தெடுக்க உரிமையில்லாமல் குடும்பத்தினரால் முடிவு செய்யப்பட்டும், அவர்களுடைய அன்புக்கும், அதிகாரத்திற்கும் கட்டுப்பட்டு _ வாழ்க்கையைத் தொலைத்துவிட்டு இன்று மீண்டும் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சோகத்துடன் சொல்லியபோது, 20, 25, 30 ஆண்டுகளுக்குப் பிறகு வாழ்கின்ற காலமெல்லாம் இணக்கமாக வாழவேண்டிய இணையரைத் தெரிவு செய்யும் பொறுப்பை, சம்பந்தப்பட்டவர்களிடம் கொடுக்காமல் காலங்காலமாய் பழமை உணர்வு மாறாமல் இருக்கும் குடும்பத்தினரின் பாச உணர்வால் பிடித்துக்கொடுக்கும் பொருளாக பெண்கள் இருக்கும் நிலையை உணரும்பொழுது, மன்றலின் அவசியமும் இன்னும் அதிக வேகத்துடன் செயல்படுத்த வேண்டிய தேவையும் பெரியார் தொண்டர்களுக்கு இருக்கிறது என்பதை மனதில் ஏற்க வேண்டியிருக்கிறது.
காலை 11 மணிக்குத் தொடங்கிய மன்றல் நிகழ்ச்சிக்கு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய அமைப்பாளர் திருமகள் தலைமையேற்றார். கி.தளபதிராஜ் வரவேற்புரையாற்றிட முனைவர் அதிரடி அன்பழகன் அறிமுகவுரை நிகழ்த்திய பிறகு வழக்குரைஞர் தமிழன் பிரசன்னா அவர்கள் தந்திட்ட தொடக்க உரையில், தமிழ்நாட்டுக்கு இது தேவையான நிகழ்ச்சியாகும். தந்தை பெரியார் சிந்தித்த ஜாதி ஒழிப்பு, பெண்ணுரிமை, மனிதநேயச் சிந்தனைகளையெல்லாம் இந்த மன்றல் நிகழ்ச்சிகள் மூலம் நடத்திக் காட்டும் சமுதாயத்துக்கு ஏற்றம் தரும் புரட்சி இது என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார்.
தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிய மூடர்கூடம் என்கிற சிறந்த திரைப்படத்தை வழங்கிய இயக்குநர் நவீன் அவர்கள், நான் ஜாதி, மதங்களை மறுத்துத் திருமணம் செய்து, குழந்தைக்குத் தமிழில் (தமிழ்நாட்டில் தமிழில் பெயர் வைப்பது என்பதையே சிறப்பு என்று சொல்லும் அளவில் இருக்கிறது.) பெயர் வைத்துள்ளேன். ஜாதி, மத மறுப்புத் திருமணம் செய்ய நினைக்கும் எங்கெங்கோ உள்ளவர்களுக்கெல்லாம் சரியான வழியைக் காட்டும் உற்ற துணையாகவும் ஊக்கம் அளிப்பதுமாகவும் மன்றல் சிறப்பாகப் பணியாற்றுகிறது என்று மகிழ்வுரை நிகழ்த்தினார்.
அதன்பின் அரங்கில் அமர்ந்திருந்த இணைதேடும் பெண்களும், ஆண்களும் தங்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்திக் கொள்ளத் தொடங்கினர். அவர்களைத் தேர்ந்தெடுத்து மேடைக்கு அழைக்கும் பணியை முனைவர் அதிரடி அன்பழகன் எப்பொழுதும் போலவே கலகலப்பாக அனைவரும் இரசிக்கும்வண்ணம் கி.தளபதிராஜ் அவர்கள் உதவியுடன் செய்தார்.
மேடைக்கு வந்த ஒவ்வொருவரையும் பெரியார் களத்தின் தலைவர் இறைவி அவர்கள் அரங்கில் உள்ள அனைவரும் தெளிவாகக் கேட்டு உணரும்படி நேர்காணலைச் சிறப்பாக நடத்தினார்.
நேர்காணலுக்கு இடையே அரங்கிற்கு வந்த திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள், ஒரு ஜாதி மறுப்புத் திருமணத்தை நடத்தி வைத்தார். இது காதல் திருமணம் என்பது கூடுதல் செய்தி. விருதுநகர் நடுவப்பட்டியைச் சேர்ந்த பார்த்திபனும், காளியம்மாளும் அடுத்தடுத்த தெருவை, வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். இருவரும் தெருக்களில் பார்வையால் பேசி, படபடக்கும் மனங்களோடு பேசி பிறகு துணிவு பெற்று வாய்மொழியால் பேசி மனங்கள் புரிந்துகொண்ட மணம் புரிவதற்கு ஜாதி தடையாக இருப்பதால் தயங்கியவர்கள் மன்றல் விளம்பரத்தைப் பார்த்து இந்த மன்றத்திற்குள் வந்துவிட்டார்கள்.
திருமணத் தகுதிகள் அனைத்தும் உள்ள உங்களை அரவணைப்பது எங்கள் கடமை என்ற முறையில் ஜாதி மறுப்பு காதல் திருமணத்தை திராவிடர் கழகத் தலைவர் மணமக்களை உறுதிமொழி கூறச்சொல்லி மாலைகள் போடவைத்து மிகச் சிறப்பாக சிக்கனமாக அரங்கு நிறைந்த மக்கள் வாழ்த்துகளோடு நடத்தி வைத்தார். ஜாதி என்பது ஒரு கற்பனை. மூளையில் மாட்டப்பட்ட விலங்கு. நிறையப் பேர் அதிலிருந்து வெளியேற முடியாமல் தவிக்கிறார்கள். இங்கு பலரும் தங்களுக்கான தேவையை மேடையில் அறிவிக்கும்பொழுது மகிழ்ச்சியாக இருந்தது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் இருந்து வந்த ஒரு பெண், தான் எம்.இ. படித்துள்ளதாகவும், கடவுள் மறுப்பாளராக எனக்குத் துணை வேண்டும் என அறிவித்தாரே, இதுதான் பெரியாருக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி. ஜாதி, மதம், ஜாதகம் என வாழ்க்கையைச் சோகமாக்குகிற எந்த ஒன்றையும் அனுமதிக்காதீர்கள். ஜாதி பார்ப்பது குறைந்து நல்ல மனிதராக இருந்தால் போதும் என்ற நிலை வந்துள்ளது. இது அதிகரிக்க வேண்டும். செவ்வாயில் குடியேறும் நிலையில் இன்னும் செவ்வாய் தோசம் என்கிறார்கள். உடற்கூறு பொருத்தம்தான் தேவையானது என்று கூறி, கிராமத்தில் இருந்து வந்து திருமணம் செய்த நீங்கள் எளிமையாக, சிக்கனமாக, விட்டுக்கொடுத்து வாழவேண்டும் என அறிவுரை கூறி வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற நேர்காணல் மாலைவரை தொடர்ந்தது. இடையிடையே இதற்கு முன் நடந்த மன்றல் நிகழ்ச்சியில் பங்குபெற்று அதன் பயனாய் திருமணம் முடித்தவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியான மண வாழ்க்கையையும் இதற்கான முயற்சியை எடுப்பதற்கு மன்றல்தான் தங்களுக்கு மிகவும் உதவியாக இருந்தது என்றும் தங்களுடைய அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.
அவர்கள் தங்களுடைய தற்போதைய வாழ்க்கை அனுபவங்களைச் சொன்ன விதம், மண வாழ்க்கையைத் தேடிவந்த அனைவருக்கும் நெகிழ்ச்சியூட்டுவதாகவும், ஊக்கமளிப்பதாகவும் நம்பிக்கையூட்டும் விதமாகவும் இருந்தது.
இவர்களுக்கு பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் திருமகள் இறையன் அவர்கள் தனது குடும்பத்தின் சார்பாக ஊக்கப்பரிசாக குக்கர்களை வழங்கினார்.
இந்த மன்றலில் கலந்துகொண்ட 14 பேர் (7+7) தங்கள் இணையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாக அறிவித்தார்கள். அவர்களில் ஒரு இணை மாற்றுத் திறனாளிகளாவர். அவர்கள் நிகழ்ச்சி அமைப்பாளர்களின் கையைப் பிடித்து கண்ணீர் மல்க நன்றி சொன்னது தந்தை பெரியாரின் மனிதநேயத் தொண்டுக்குக் கிடைத்த வெற்றி என்றால் அது மிகையாகாது.
– இசையின்பன்