வட மாநில கிராமங்களில் ஆண் தலைவர்களைக் கொண்டு நடத்தப்படும் காப் பஞ்சாயத்து அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பின் உத்தரவை குறிப்பிட்ட ஜாதியின் அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும். மதிக்காதவர் தாக்கப்படுவர்.
உத்தர பிரதேசத்தில் காப் பஞ்சாயத்துக்குப் பிரபலமானவர் மகேந்திர சிங் தியாகத். இவரது சிலை முசாபர் மாவட்டத்தில் உள்ள முண்ட்பார் என்ற இடத்தில் அவரது மகன் நரேஷ் தியாகத்தால் திறக்கப்பட்டுள்ளது. சிலையினைத் திறந்து வைத்த நரேஷ்,
காப் பஞ்சாயத்துகளின் முடிவுகளில் உச்ச நீதிமன்றம் தலையிடக் கூடாது. எங்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்கும்போது மிகவும் கவனமாக நீதிமன்றம் இருக்க வேண்டும். இருக்கின்ற பிரச்சினையை அதிகப்படுத்தக் கூடாது. ஒரே கோத்திர திருமணத்தை நாங்கள் அனுமதிக்க மாட்டோம். காதல், கத்திரிக்காய் எல்லாம் கூடாது. பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்ய நினைக்கும் ஜோடிகள் எங்களின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்றும் எச்சரிக்கிறோம் என்று பேசியுள்ளார்.
வடமாநில அரசாங்கங்கள் காப் பஞ்சாயத்துகளை ஆதரிக்கின்றன. அண்மையில், காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்ய வேண்டும் என்ற உச்ச நீதிமன்றம் வெளியிட்ட கருத்துக்கு, அரியானா மாநில முதல் அமைச்சர் பூபிந்தர் சிங், காப் பஞ்சாயத்துகள் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்றும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், காப் பஞ்சாயத்துகளைத் தடை செய்யக் கூடாது. அவை சமூக சேவையாற்றி வருகின்றன என்றும் கூறியது நினைவுகூரத்தக்கது.