– கவிஞர் கலி.பூங்குன்றன்
கேள்வி: மதச்சார்பற்ற அரசியல் கட்சிகளுடன்தான் கூட்டுச் சேர்வோம் என்று சில அரசியல் கட்சிகள் கூறுகின்றன. அப்படி ஒரு அரசியல் கட்சி உள்ளதா? அதன் பெயர் என்ன?
பதில்: இருக்கிறதே என் கற்பனையில்! அதன் பெயர் உன்னத இந்தியர் கட்சி! எல்லா மதங்களையும் சார்ந்த மக்களை அரவணைத்து மதிப்பளிக்கும் பண்பைத்தான் மதச்சார்பற்ற என்கிறோம். அப்படி தாங்கள் —இருப்பதாகத்தான் எல்லாக் கட்சிகளும் சொல்கின்றன. ஆனால் வோட்டு வங்கி அரசியல் இதைப் பொய்யாக்கிவிடுகிறது. பலவித நாடகங்கள் அரங்கேறுகின்றன. அதில் ஒன்றுதான் உங்கள் கவனத்தைக் கவர்ந்துள்ள அறிக்கை.
– (கல்கி 16.2.2014 பக்கம் 44)
எல்லா மதங்களையும் சார்ந்த மக்களை அரவணைத்து மதிப்பளிக்கும் பண்புதான் மதச்சார்பின்மை – என்று கூறும் விளக்கமே தவறானது.
மதச்சார்பின்மை என்றால் அரசுக்கு மதம் கிடையாது என்பதுதான். செக்குலர் என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வார்த்தைக்குத்தான் தமிழில் மதச்சார்பின்மை என்று கூறப்படுகிறது.
செக்குலர் என்ற சொல் ஆங்கில மொழியிலிருந்து வந்ததுதானே _ அப்படி இருக்கும் ஆங்கில மூலச் சொல்லின் பொருளை அந்த ஆங்கில மொழியில்தானே காண வேண்டும், தேட வேண்டும்.
இதுகுறித்துத் தந்தை பெரியார் கூறும் கருத்து விவேகமானது.
செக்குலர் _ மதச்சார்பற்ற என்ற சொல்லுக்கு என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால் ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால் அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அல்ல; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி, கூப்பிட்டவனிடமெல்லாம் கலவி செய்ய வேண்டும் என்பதுதான் கன்னி என்பதற்குப் பொருள் என்பதுபோல் பொருள் சொல்கிறார்கள். எல்லா மதங்களையும் சமமாகப் பார்க்க வேண்டும் என்கின்ற கொள்கை மத விஷயத்தில் காலம் காணாததற்கு முன்பு இருந்தே இருந்து வருகிறபோது, அதைப் புதிதாக வலியுறுத்த வேண்டிய அவசியம் ஏன் வரும்?
செக்குலர் என்ற சொல்லை ஆங்கிலச் சொல்லாகத்தான் சட்டத்தில் புகுத்தினார்களே ஒழிய, வேறு மொழிச் சொல்லாகப் புகுத்தவில்லை. ஆங்கிலச் சொல்லுக்கு வியாக்யானம் அந்தச் சொல்லை உற்பத்தி செய்தவர்கள் சொல்லுவதைப் பொறுத்ததே ஒழிய, அதன் கருத்துக்கு விரோதிகளான பார்ப்பனர்களும் காங்கிரஸ்காரர்களும் சொல்லுவது பொருத்தமாக முடியுமா?
அந்தச் சொல்லும்கூட அரசாங்கக் காரியத்திற்குத்தான் பொருந்தும் என்று இன்றைய ஆட்சியாளர்கள் சொல்லுகிறார்களே ஒழிய அது எல்லா மக்களுக்கும் வலியுறுத்தும் பொருள் என்று சொல்லவில்லையே! என்றார் தந்தை பெரியார்.
செக்குலரிசம் குறித்த தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்து தனித்தன்மையானது. உண்மையின் தன்மையை ஆராதிப்பதாகும்.
அரசுக்கும் மதத்துக்கும் தொடர்பில்லை என்பதுதான் இந்திய உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும்.
ஒரு மதத்தைப் பற்றியோ அல்லது மதக் கிளைகள் பற்றியோ ஆட்சியின் கண்ணோட்டம் எப்படி இருந்தாலும் அரசின் மதச்சார்பற்ற நடவடிக்கைகளில் மதத்தைக் கலக்கக் கூடாது. அரசுப் பிரச்சினையில் மதத்துக்கு இடம் இல்லை.
எந்த ஒரு மாநில அரசும் மதச்சார்பின்மைக்கு எதிரான கொள்கைகளைக் கொண்டிருப்பதோ மதச்சார்பின்மைக்கு எதிரான செயல்களில் ஈடுபடுவதோ அரசியல் சட்டத்துக்கு எதிரானது. அத்தகைய மாநில ஆட்சிகளை அரசியல் சட்டத்தின் 356ஆவது பிரிவின்கீழ் கலைக்க _ குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு.
ஆறு நீதிபதிகள் தனித்தனியே அளித்துள்ள தீர்ப்புகளில் _ அரசியலமைப்புச் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளை எடுத்துக்காட்டியுள்ளனர்.
ஓர் ஆட்சி _ மதச் சகிப்புத்தன்மையை மேற்கொள்வதாலோ _ ஒரு குடிமகனுக்கு மதத்தைப் பின்பற்றவோ அல்லது பிரச்சாரம் செய்யவோ அனுமதிப்பதாலோ அந்த அரசு மதச்சார்பு ஆகிவிட முடியாது. அரசின் மதத்தோடு தொடர்பில்லாத மற்றும் மதச்சார்பின்மை தொடர்புடைய எந்த ஒரு செயலிலும் மதத்தின் குறுக்கீட்டுக்கு இடமே கிடையாது என்றும் நீதிபதிகள் திட்டவட்டமாகக் கூறியுள்ளனர். நீதிபதி பி.பி.ஜீவன் (ரெட்டி) தெரிவித்துள்ள கீழ்க்கண்ட கருத்தை ஏனைய நீதிபதிகளும் ஏற்றுக் கொண்டுள்ளனர்.
அரசியல் கட்சிகள் அரசு அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கோ அல்லது அதிகாரத்தில் பங்கு கொள்வதற்கோதான் உருவாகின்றன. அதுதான் அக்கட்சிகளின் நோக்கம்.
சில தனி மனிதர்களைக் கொண்ட அமைப்பு மதப் பிரச்சாரத்தில் ஈடுபடலாம். அப்படியானால் அது ஒரு மத அமைப்பு. மற்றொரு அமைப்பு _ கலாச்சார மேம்பாட்டுக்குப் பிரச்சாரம் செய்யலாம்.
அப்படியானால் அது ஒரு கலாச்சார அமைப்பு. இந்த அமைப்புகளின் நோக்கம் _ அரசின் அதிகாரத்தைக் கைப்பற்றுவதல்ல. ஆனால் அரசியல் கட்சிகளின் நோக்கம் அதிகாரத்தைக் கைப்பற்றுவதுதான். ஒரு ஜனநாயக ஆட்சி அமைப்பு _ அரசியல் கட்சிகள் இல்லாமல் செயல்பட்டுவிட முடியாது.
அரசியல் கட்சிகள் என்பவை அரசியல் சட்டத்தின் அங்கங்கள்; அரசியல் சட்டம் மதச்சார்பின்மையை அடிப்படையாகக் கொண்டிருக்கும்போது அரசியல் கட்சிகளுக்கும் அதுவே அடிப்படை அம்சமாகிவிடுகிறது.
அரசியல் சட்டம் மதத்தையும் அரசியலையும் ஒன்றாகக் கலப்பதை அனுமதிக்கவில்லை. இரண்டும் தனித்தனியாக பிரிக்கப்பட வேண்டும். இந்திய அரசியல் சட்டம் இந்த நாட்டை ஆண்டு கொண்டிருக்கும் காலம் வரை_ இதை யாரும் மாற்றிவிட முடியாது _ இவ்வாறு ஆறு நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு திட்டவட்டமாக, தெளிவாக தீர்ப்பாகவே கூறிவிட்டது. (14.3.1994)
உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கூறிய கருத்தை தீக்கதிர் தமிழில் வெளியிட்டு இருந்தது. (7.10.2012)
மதச்சார்பின்மை என்பதன் பொருள் ஒருவர் தன் மதத்தைப் பின்பற்றக் கூடாது என்பதல்ல. மதச்சார்பின்மை என்பதன் பொருள், மதம் ஒருவரின் தனிப்பட்ட விவகாரம். இதற்கும் அரசுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசுக்கு மதம் கிடையாது என்று கூறினாரே.
மதத்துக்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்பதுதான் மதச்சார்பின்மை என்பதன் பொருள் என்று உச்ச நீதிமன்ற நீதிபதியின் அறிக்கை தெரிவித்துள்ளது.
கல்கி கூட்டங்கள், சங்பரிவார் கூட்டங்கள் அரசு என்பது எல்லா மதங்களையும் அரவணைத்துச் செல்வது என்று பாடப் பேதம் செய்வதன் விஷமத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.
பி.ஜே.பி.யின் பிரதமருக்கான வேட்பாளர் மதச்சார்பின்மைக்குப் புது விளக்கத்தையே அருள்வாக்காகக் கூறியுள்ளார்.
என்னைப் பொறுத்தவரை அனைத்துத் தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றுவதுதான் மதச்சார்பின்மை என்று விளக்கம் கொடுத்தாரே பார்க்கலாம். (சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்ற துக்ளக் ஆண்டுவிழாவில் மோடி) _ இது மோடியின் அறியாமைக்கான முகவரியே!
மோடியை விட்டுத் தள்ளுவோம். ஜென்டில்மேன் வாஜ்பேயி இருக்கிறாரே _ அவர் மட்டும் என்ன வாழுகிறதாம்?
பூனாவில் நடைபெற்ற சத்ரபதி சிவாஜியின் 325ஆவது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட பிரதமர் வாஜ்பேயி என்ன பேசினார்?
MR. VAJPAYEE SAID, CHATRAPATHI WAS SECULAR TO THE TRUE SENSE AS AGAINST TODAY’S “DISTORTED SECULARISM” FOR HE PAID EQUAL RESPECT TO ALL RELIGIONS AND NEVER DISCRIMINATED ON THE GROUND OF RELIGION. – (The Hindu 27.6.1998 page 8)
சத்ரபதி சிவாஜி இப்போதுள்ள உருக்குலைக்கப்பட்ட மதச்சார்பின்மைக் கொள்கையைப் போன்ற ஒன்றைக் கடைப்பிடிக்கவில்லை, எல்லா மதத்தினரையும் மரியாதையாக நடத்தினார் என்றவர்தானே வாஜ்பேயி. உண்மை என்னவென்றால், பார்ப்பனர்களுக்குப் பாதம் பணிந்து சொத்தையெல்லாம் இழந்து பரதேசி ஆனவர்தான் சிவாஜி. அதனால்தான் சிவாஜியை மதச்சார்பற்றவர் என்று தூக்கி உச்சி மோந்துள்ளார் என்பதைக் கவனிக்கத் தவறக்கூடாது.
இப்பொழுது கூறப்பட்டு வரும் மதச் சார்பின்மை என்பது உருக்குலைக்கப்பட்ட (DISTORTED) ஒன்றாம். (இந்தச் சட்டத்துக்கு உண்மையாக நடந்து கொள்வேன் என்று சத்தியம் செய்துதான் பதவிப் பிரமாணம் எடுக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.) பிரதமராக இருக்கக்கூடியவர் உள்ளத்தில் அரசமைப்புச் சட்டத்துக்குப் பதிலாக மனுதர்ம வேர் அல்லவா குடிகொண்டு இருக்கிறது.
காரணம், வாஜ்பேயியாக இருந்தாலும் அவர் இந்துத்துவ மத அடிப்படைவாதி என்பதுதான்.
மும்பையில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.ஜே.பி உறுப்பினர் ராம் கட்சே.
1991 மே 21 அன்று விசுவ ஹிந்து பரிசத் ஏற்பாடு செய்திருந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பி.ஜே.பி.யைச் சேர்ந்த மகாஜன், விசுவஹிந்து பரிஷத் என்ற அமைப்பைச் சேர்ந்த சாத்வி ரித்தாம்ப்ரா ஆகியோர் இந்துமத அடிப்படையில் வாக்குக் கேட்டனர். அந்த மேடையில் பி.ஜே.பி. வேட்பாளர் ராம் கட்சே இருந்தார் என்பதால் அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது. (15.4.1994). அத்தீர்ப்பை வழங்கியவர் அகர்வால் ஆவார்.
2004இல் நடைபெற்ற கேரள மாநிலம் மூவாட்டுபுழா மக்களவைத் தேர்தலில் இந்தியப் பெடரல் ஜனநாயகக் கட்சி (அய்.எஃப்.டி.பி.) சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் பி.சி.தாமஸ். பின்னர் இவர் காங்கிரஸ் (ஜே)உடன் தம் கட்சியை இணைத்துக் கொண்டவர். இவர் முன்னாள் மத்திய சட்டத்துறை இணை அமைச்சரும்கூட. தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி (மார்க்சிஸ்ட்) உறுப்பினர் பி.எம்.இஸ்மாயிலைவிட வெறும் 529 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றவர்.
இவரது வெற்றியை எதிர்த்து சி.பி.எம். வேட்பாளர் பி.எம்.இஸ்மாயில், ஜோஸ் கே.மணி உள்ளிட்ட சிலர் கேரள உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தொடுத்தனர்.
மக்களவைத் தேர்தலில் கத்தோலிக்கக் கிறித்தவ மக்களின் வாக்குகளைக் கவருவதற்காக போப் மற்றும் தெரசா ஆகியோரின் படங்களுடன் தன்னுடைய படத்தையும் இணைத்து காலண்டர் அச்சிட்டு மக்களிடம் வழங்கினார்.
இந்த வழக்கில் நீதிபதி சி.என்.இராமச்சந்திரன் தீர்ப்பை அளித்தார். (31.10.2006) அந்தத் தீர்ப்பில், மதத்தின் அடிப்படையில் வாக்குகளைக் கோரியதால் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 123(3)இன்படி தவறானது. இந்த முறைகேடுகள் இல்லாவிட்டால் தோல்வி அடைந்த வேட்பாளர் வெற்றி பெற்று இருப்பார்; எனவே நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்த மனுதாரர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுகிறார் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தேர்தலில்கூட போட்டியிடும் வேட்பாளர்கள் மதச் சார்பின்மையைக் கடைபிடிக்க வேண்டியவர்கள். எந்த மதத்தைச் சார்ந்ததாகவும் கூறிப் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றுள்ள நிலையில், மதச்சார்பின்மைக்கு கல்கிகளும், பி.ஜே.பி., சங்பரிவார்க் கூட்டமும் கூறும் விளக்கம் தவறானது – தந்தை பெரியார் கூறும் கருத்தே சரியானது என்பதும் விளங்கவில்லையா?
அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது அரசின் நடவடிக்கையை அமல்படுத்த சென்னை உயர் நீதிமன்றம் (மதுரை கிளை) ஆணை
அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்ற அரசின் நடவடிக்கையை அமல்படுத்த வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்றம் (கிளை) உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டம் தாழையூத்து சங்கர் நகரைச் சேர்ந்தவர் முத்துராமன். இவர் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்தார். அதில் கூறி இருந்ததாவது:
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் அலுவலகம், அரசு மருத்துவமனை மற்றும் வட்டார அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் இருக்கின்றன.
இந்தக் கோவில்களில் தினமும் பூஜையும் நடத்தப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் பிரதோஷம் போன்ற விசேஷ நாட்களில் சிறப்பு பூஜையும் நடத்தப்படுகிறது. அரசு அலுவலகங்களில் எல்லா மதத்தினரும் பணியாற்றுகின்றனர். எல்லா மதத்தினரும் தங்களது பணிகளுக்காக அரசு அலுவலகங்களுக்கு வந்து செல்கின்றனர்.
இதுபோன்ற சூழ்நிலையில் அரசு அலுவலகங்களில் இந்துக் கோவில்கள் மட்டும் அமைக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படுவது பிற மதத்தினரைப் புண்படுத்துவது போன்றதாகும். அரசு அலுவலக வளாகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று அரசு ஏற்கெனவே ஆணை பிறப்பித்துள்ளது.
இந்த ஆணை அரசு அலுவலகங்களில் அமல்படுத்தப்படுவது இல்லை. எனவே, இந்த ஆணையை அமல்படுத்த அரசுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இந்த ஆணை பின்பற்றப்படுவதைக் கண்காணிக்க மாவட்ட அளவில் குழு அமைக்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் எஃப்.எம்.இப்ராகிம் கலிபுல்லா, கே.பி.கே. வாசுகி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் தீர்ப்பில் கூறி இருப்பதாவது:
அரசு அலுவலகங்களில் மத வழிபாட்டுத் தலங்களை அமைக்கக்கூடாது என்று ஏற்கெனவே அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை அமல்படுத்த வேண்டியது அரசின் கடமை. ஏற்கெனவே உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் அதை அமல்படுத்த அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அரசு அலுவலக வளாகங்களில் மத நல்லிணக்கம் பாதுகாக்கப்பட வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர். – (தீர்ப்பு 17.3.2010)