– பேராசிரியர் அ.மார்க்ஸ்
கர்நாடகாவில் அமைச்சர்களுக்கு வழங்கப்படும் அரசு குடியிருப்புகளை வாஸ்து முறைப்படி மாற்றிக் கட்டக் கூடாது என அரசு உத்தரவிட்டுள்ளது. வாஸ்து உள்ளிட்ட மூட நம்பிக்கைகளை எதிர்த்து உத்தரவிட்டது நல்ல செய்திதான். ஆனால், இப்படியொரு உத்தரவு போட்டுத் தடுக்க வேண்டிய அளவுக்கு பிரதிநிதிகளே பின்பற்றி வருகின்றனர் என்பது வருத்தத்திற்குரிய விஷயம்.
கர்நாடகாவில் குறிப்பாக விதான் சௌதா, கர்நாடகாவின் தலைமைச் செயலகமாக இயங்கி வரும் புராதனச் சிறப்பு மிக்க கட்டிடம். சமீபத்தில் ஒரு அமைச்சர் விதான் சௌதாவில் இரண்டு அறைகளுக்கு நடுவில் இருக்கும் சுவரை அரசின் முன்அனுமதி பெறாமல் இடித்துவிட்டார். அவர் வாஸ்துவை தான் நம்புவதில்லை என்று கூறியிருந்தாலும், இடித்ததற்கான சரியான விளக்கத்தை இன்னும் தர இயலவில்லை.
இட நெருக்கடி காரணமாக விதான் சௌதாவையொட்டி விகாஸ் சௌதா என்ற கட்டிடம் கட்டப்பட்டது. ஆனால், அதனைக் கட்டியதால்தான், கர்நாடக அரசியல் ஸ்திரத்தன்மை இழந்து விட்டதாகவும் அதனால் அதிலிருந்து வேலை பார்க்க மறுத்த அமைச்சர்கள் உண்டு.
இத்தனை மோசமான மூடத்தனங்கள் தொடர்கிற நிலையில், மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சட்டத்தைக் கொண்டு வர பா.ஜ.க. வினர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இந்தச் சட்டம் அடிப்படை நம்பிக்கைகளை எதிர்ப்பதாக அவர்கள் வாதத்தை முன்வைக்கின்றனர். ஜாதியக் கட்டமைப்பும் பெண்ணடிமைத்தனமும் பல ஆயிரம் ஆண்டுகளாக நம் சமூகத்தில் வேரூன்றி இருப்பதாலேயே – அவற்றை ஏற்றுக் கொள்ள முடியுமா என்ன?
பெண்களுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று அவர்களை அடிப்பதும், ஊருக்கு மழை பெய்ய வேண்டுமென்றால் நிர்வாணமாக ஊரைச் சுற்றி வர வேண்டும் என்பதும் வெறும் மூடநம்பிக்கைகள் மட்டுமல்ல, அவை ஆணாதிக்கத்தின் இன்னொரு முகமே.
இச்சட்டத்தை எதிர்ப்பவர்கள் கூறும் மற்றொரு கருத்து, மூட நம்பிக்கைகளில் ஈடுபடும் மக்களே அதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காத போது சட்டம் அதைக் குற்றம் என்று சொல்வது தனி மனித உரிமையைப் பறிப்பதாகும். எவ்வளவு சாமர்த்தியமான பேச்சு அல்லவா?
அறிவியல்பூர்வமற்ற ஒரு விஷயத்தை, சரி என்று நம்பிக் கொண்டிருப்பதைத் தானே மூடநம்பிக்கை என்று கூறுகிறோம். அப்படியான நம்பிக்கையில் தன் தலையில் தானே தேங்காய் உடைத்துக் கொள்பவர்கள், உடலின் அங்கங்களைத் துளையிட்டுக் கொள்பவர்கள் எப்படி தாங்களே முன் வந்து இவற்றுக்கு எதிராக புகார் அளிப்பார்கள்?
குழந்தைத் திருமணத்தைச் சரியென்று நம்பி, அதைச் செய்பவர்கள் அதற்கு எதிராகப் புகார் கொடுப்பார்களா? ஆனால் அவைகளைத் தடுக்க வேண்டியது அரசின் கடமையல்லவா? இதற்காக இந்தியச் சமூகத்தில் நடைபெற்ற மக்கள் இயக்கங்களின் தொடர்ச்சியாகத்தான் இக்கொடுமைகளுக்கு எதிரான சட்டங்கள் நிறைவேறின.
இதே போன்றதொரு அனுபவத்தை மஹாராஷ்ட்ராவில் காண முடியும். அங்கு மூடநம்பிக்கைகளுக்கு எதிரான சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், பிற்போக்குவாதிகள் அந்தச் சட்டத்தை எதிர்த்ததன் காரணமாக சம்பந்தப்பட்டவர்களே புகார் அளித்தால் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும் என்ற திருத்தத்துடன் அந்தச் சட்டம் இயற்றப்பட்டது. இதற்காக பல ஆண்டுகளாகப் போராடி வந்த நரேந்திர தபோல்கர், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் மத வெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். அவரின் உயிர்த் தியாகத்திற்குப் பிறகும் இச்சட்டம் வலுவான முறையில் இயற்றப்படவில்லை என்பது ஆட்சியாளர்களின் பண்படாத நிலையைக் காட்டுகிறது.
இந்த விவாதங்களில் கவனிக்க வேண்டிய மற்றொரு விஷயம், மூட நம்பிக்கை எதிர்ப்பே, இந்து மதத்தை எதிர்ப்பது என திரித்துப் பிரச்சாரம் செய்வதாகும். மற்ற மதங்களிலும் மூடத்தனம் உள்ளது என்ற வாதத்தை முன்வைத்து, இந்து மதத்திலும் அந்த நம்பிக்கைகள் தொடர்வது தவறில்லை என வாய் கூசாமல் வாதம் வைக்கிறார்கள். ஆனால், இந்த வாதம் அப்பாவிகளின் ஏமாற்றத்தைத் தடுக்க எந்த விதத்திலும் பயன்படாது என்பதே உண்மை.
சட்டத்தினால் மூட நம்பிக்கைகளிலிருந்து மக்களைக் காப்பாற்றுவது ஒரு புறமிருக்க, சட்டம் இயற்றும் இடத்தில் இருக்கும் மக்கள் பிரதிநிதிகளே இந்தப் பழக்கங்களின் விளம்பரப் பலகைகளாக இருக்கிறார்கள் என்ற உண்மை, நாம் அடிப்படையிலான மாற்றத்துக்குக் கடுமையாகப் போராட வேண்டும் என்பதை உணர்த்துகிறது.
குழந்தைப் பருவத்திலிருந்தே ஏன் எதற்கு எப்படி என்ற கேள்விகளைக் கேட்டு விஷயங்களைப் புரிந்து கொள்ளும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். தண்ணீர் ஊற்றுவதால் தான் செடி வளர்கிறது என்பது நமக்குத் தெரியும், ஆனால், குழந்தை அதனை ஆர்வத்துடன் கேட்கும் போது, அதன் ஆர்வத்தைக் குறைத்து விடாமல், இது இப்படித்தான் என்று மட்டும் கூறாமல், அதற்கான சரியான விளக்கத்தையும் அளிக்க வேண்டும்.
நமது குடும்பங்களும் பள்ளிக்கூடங்களும் குழந்தைகளைக் கேள்வி கேட்கத் தூண்டக்கூடிய இடங்களாக மாற வேண்டும். பாடப் புத்தகங்களிலேயே மூட நம்பிக்கைகள் எவை என்று கூறப்பட்டிருக்க வேண்டும். பள்ளியில் கேள்வி கேட்காத மாணவர்களை உருவாக்கிவிட்டால், பிற்காலத்தில் அது தன்னம்பிக்கையுள்ள மனிதர்களை விளைவிக்காது.
பள்ளிக்குச் செல்வதற்கு முன்பே கடவுள், பூஜை, ஸ்லோகம், ஆகியவற்றைக் குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்துகிறோம். உண்மையில் கேள்வி கேட்பதையும் பழக்கமாக மாற்ற வேண்டும். அப்போதுதான் அறிவார்ந்த ஒரு சமூகத்தை உருவாக்க முடியும்.